கிரானடா நாவலும் அச்சங்களும்- கொள்ளு நதீம்

கிரானடா நாவல் வாங்க

இலத்தீன் அமெரிக்க, (ஒரிஜினல்) வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்ரிக்க, ருஷ்ய, சீனம் என்று உலகின் சகல நிலப் பரப்பின் மொழியும், பண்பாடும் இந்திய, தமிழ் செல்வாக்கிற்கு ஒப்புக் கொடுத்துள்ளதை இலக்கிய வரலாற்றோடு பரிச்சயமுள்ள அனைவரும் அறிந்த உண்மை. ஆயிரமாண்டுகால விடுபடாத தொடர்ச்சியுடன் கலந்திருக்கும் முஸ்லிம் வாழ்க்கையானது பிற பகுதியிலுள்ள மக்களுடன் கொண்டிருந்த உறவால் உணவு, உடை, உறைவிடம், மதம், பண்பாடு, மருத்துவம், கல்வி வாழ்வின் அத்தனை துறையிலும் இந்த மண்ணில் இஸ்லாமின் செல்வாக்கு மகத்தானது.

அப்படியிருந்தும் இந்திய, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏனைய சமூகங்கள் அறிமுகமாகியுள்ளதைப் போல ஏன் அரபு, இஸ்லாமிய வாழ்க்கை தமிழ் நாவலில் பதிவாகவில்லை என்று கேட்கத் தோன்றுகிறது. ஓரான் பாமுக் மட்டும் மூவாயிரம் பக்கங்களுக்கும் மேலாக துருக்கிய வாழ்க்கைச் சித்திரம் தமிழ் இலக்கியமாக வந்து சேர்ந்திருக்கிறாரே என்று கேட்கலாம். அரபுகளை ஓப்பிடும்போது துருக்கிய வாழ்க்கை என்பதே கிட்டத்தட்ட நவீனமானது.

மார்க்கோஸ் கார்சியாவுக்கென்று சிறப்பிதழை வெளியிட்ட சிற்றிதழ்களுக்கோ, இயக்கங்களுக்கோ முஸ்லிம் / அரபு உலகில் இலக்கியமாக எதுவுமே ஈர்க்கவில்லை என்று நம்புவது கடினமாக உள்ளது.

எகிப்திய (பெண்) எழுத்தாளர் Radwa Ashour (1946 – 2011) “கிரானடா” என்கிற முக்கதைகளை 1994-ல் எழுதினார்.  அரபியிலிருந்தே நேரடியாக தமிழுக்கு வந்துள்ள இதன் முதல் கதையை “சீர்மை பதிப்பகம்” வெளியிட்டுள்ளது. (அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2003-ஆம் ஆண்டு வந்துள்ளது என்பது தனிச் செய்தி). அமெரிக்க பல்கலைக் கழகமொன்றில் கலாநிதி பட்டம் பெற்ற ரத்வா ஆஷுர் அரபு பெண் கவிஞர்கள் என்கிற கலைக்களஞ்சியத்தையும் தொகுத்துள்ளார். இலக்கியப் பங்களிப்புக்காக அரபு மொழியில் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

அந்த கதைக்குள் போவதற்குள் ஸ்பானிய, போர்சுகீசிய பண்பாடு தமிழ் இலக்கிய உலகில் என்னவாக உள்ளது என்பதை பார்க்கலாம். Gabriel García Márquez (1927 – 2014)  “தனிமையின் நூறு ஆண்டுகள்” 2013-ல் காலச்சுவடு பதிப்பகமும்; José Saramago (1922 – 2010)  “பார்வையை தொலைத்தவர்கள்” 2016-ல் பாரதி புத்தகாலயமும்; MIGUEL DE CERVANTES 17-ம் நூற்றாண்டில் எழுதிய DON QUIXOTE  என்ற நாவல் 2013-ல் சந்தியா பதிப்பகமும் கொண்டு வந்துள்ளது) மார்க்கோஸ்-சும் யோசா சரமாகோவும் நோபல் பரிசு பெற்றவர்கள்.

“கிரானடா” என்கிற சொல்லுக்கு மாதுளம் பழமும் “அல்ஹம்ரா” என்பதற்கு செங்கோட்டை என்றும் பொருள். நபிகள் நாயகத்தின் இறப்புக்குப் பிறகான அடுத்த நூற்றாண்டுக்குள் ஆப்ரிக்காவின் வடபகுதியை தொட்டபிறகு அந்தக்கால கடற் தொழிநுட்பத்தின்படி மூவாயிரம் கி.மீ. அகலம் கொண்ட அட்லாண்டிக் பெருங்கடல் தாண்ட முடியாததாக இருந்தது. எனினும் மத்திய தரைக்கடலை கடந்து ஸ்பெயினில் கி.பி.750 – 1500 வரை ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகள் ஆட்சியை நிறுவினர்.  கிட்டத்தட்ட அதே  காலகட்டத்தில் பழைய இந்தியாவின் சிந்துப் பகுதி (இன்றைய கராச்சி நகரம்) வரை கிழக்கு திசையில் இது நீடித்திருந்தது.

மேற்குப் பகுதியில் ஐரோப்பிய மண்ணில் நிலைகொண்டிருந்த அரசு 1492-ஆம் ஆண்டு முழுமையாக துடைத்தெறியப்பட்டது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம் 1400; ஆட்டொமன் பேரரசு (1453 – 1922); முகலாய பேரரசு (1526 – 1857); அறிவொளிகாலம் 1700; அந்த நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி என உலக வரலாற்றின் பெரும்போக்கிற்கு முன்பே இந்த “கிரானடா” வீழ்ந்துவிட்டது. அதுவரை உச்சத்திலிருந்து வந்த ஸ்பெயின் அங்குள்ள உள்நாட்டு பிரச்சனைகளுக்கு காரணம் அரபுகளும், முஸ்லிம்களுமே என்று கூறி மீண்டும் சுதேச(?) ஆட்சியை நிறுவினர். அதன் பிற்பாடு கலை, அரசியல், பொருளாதாரம் என உச்சத்திலிருந்த ஸ்பானிய சமூகம் அன்று முதல் இன்றுவரை மீளெழவில்லை. ஸ்பெயின் ஐரோப்பாவின் நலிவுற்ற நாடுகளில் ஒன்றாகிப் போனதுதான் மிச்சம். எப்படியிருப்பினும் கி.பி.1492-ன் நிகழ்வுகளுடன் தொடங்கி நாவல் முன்னும் பின்னுமாக காலவெளியில் நகர்கிறது.

கிரிக்கெட் போட்டி, ஆப்கானிஸ்தானில் தாலிபான், அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், எங்கேனும் ஒரு தூர நாட்டில் நடக்கும் போர் என ஒவ்வொன்றிலும் – இல்லை எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று கூற வேண்டிய கட்டாயத்துக்கு இங்கு ஏதோவொரு குக்கிராமத்தில் வசிக்கும் சாதாரண முஸ்லிமும் உள்ளாகிறான். “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்கிற முழக்கத்தைப் போல நனவிலி மனதில் முஸ்லிம்களை உலகளாவிய (மதவழிப்பட்ட) பெருந்திரளின் நீட்சியென கருத வைக்கிறது.  சிறந்த பொற்காலமும், சின்னாபின்னமான பெருந்துயரின் துர்கனவும் ஒருசேர கொண்ட “கிரானடா” குறித்த ஏக்கம் (nostalgia) குறிப்பாக அரபுகளிடம் உண்டு.

கிரானடாவின் கடைசி முஸ்லிம் அரசர் போப்டில் சரணடைந்த பிறகு கப்பலேறச் செல்லும் முன் தாம் வாழ்ந்த அரண்மனையை நோக்கி கண்ணீருடன்பார்த்த இடம் Puerto del Suspiro del Moro என்று அழைக்கப்படுகிறது. தன் மனம் போன போக்கில் சல்மான் ருஷ்தி The Moor’s Last Sigh  என்ற நாவலை 1995–ல் எழுதியிருந்ததை கேள்விப்பட்டிருக்கலாம். அப்பொழுது உடன் இருந்த அரசனின் அம்மா “அழு!, அழு! நன்றாக அழு! ஒரு ஆண்மகனாக இருந்து தன் ஆட்சியை காப்பாற்ற முடியாத கையாலாகா தனத்துக்காக பெண்ணைப் போல அழு! என்று கூறினாராம். அதில் ஏதோவொரு வகையில் பாபர் மஸ்ஜித் இடிப்பும், 1993-ஆம் ஆண்டில் நடந்த கலவரம், தாவுத் இப்ராஹிம், சிவசேனை என்று மும்பையில் பாதி கதை நிகழ்கிறது.

அவரைவிட  இன்னொரு கோணத்தில் Noah Gordon (பிறப்பு 1926) நாவலான The Last Jew கூட இதே ஸ்பெயினிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட யூதர்களின் கதையாக எழுதியிருப்பார். தேவ மைந்தனென இயேசுவை ஏற்க மறுத்த முதல் நாளிலிருந்தே தொடங்கிய முரண், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருந்த ஸ்பானிய நிலத்திலிருந்து அகதியாக துரத்துகிறது. போதகர்களிலிருந்து தொடங்கி பிஷப்கள், கார்டினல்கள், இறுதியில் போப் வரை ஒருவர் விடாமல் திருச்சபையின் முழு இயந்திரமும் வெறுப்புணர்வை ஊதிப் பெருக்கி இன அழித்தொழிப்பில் ஈடுபடுகிறது. Yonah Toledano என்கிற யூதச் சிறுவன் மட்டும் பின்தங்கி விடுகிறான். அவனுடைய தந்தை மிகப் பிரபலமான வெள்ளி நகை செய்யும் ஆச்சாரி. தன் குடும்பத்தை கலவர சூழலில் பிரிந்து விடும் கதைச் சொல்லியுடன் ஒரு கழுதை மட்டும் இருக்கிறது. அதில் பயணித்தபடியே முழு ஸ்பெயினில் அலைந்து திரியும் பயணம் கண்ணீரை வரவழைக்கும்.

அரபுகளையும், யூதர்களையும் ஐரோப்பிய மண்ணிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற Reconquista மதக் குற்ற விசாரணை இயக்கம் நூற்றாண்டுகள் தொடர்ந்தது என்றாலும் அதன் பிரதான இலக்கில் வெற்றி கண்டவர் ஃபெர்டினாண்ட் – இஸபெல்லா அரச தம்பதி. (1499-1526) அதை Shadows of the Pomegranate Tree நாவலில் தாரிக் அலி விவாதித்திருப்பார்.

கிரானடாவில் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த ஸ்பானிய முஸ்லிம்களின் அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், கலைப்  பங்களிப்பு பிற அன்றைய காலத்தில் எவராலும் அருகில் நெருங்க முடியாத சாதனையின் உச்சங்கள். அதுவரை ஐரோப்பிய உலகம் அறிந்து வைத்திராத அறிவியல், மருத்துவ தகவல்கள் அடங்கிய நூலகங்கள் எரிக்கப்படுகின்றன. அரபு மொழி தடை செய்யப்படுகிறது, வானியல் ஆய்வகங்கள் அழிக்கப்படுகின்றன. பண்பாட்டு நினைவுகள், அறிவுக் கருவூலங்கள், வாழ்க்கை எதுவுமே எஞ்சுவதில்லை. அரசுகள் வரலாம், ஆட்சிகள் மாறலாம், அதுவொன்றும் புதியதல்ல, ஆனால் இது போன்ற பைத்தியகாரத்தனத்தை வரலாறு கண்டதில்லை.

டான்குயிக்ஸாட் நாவலின் கதாநாயகன் சாதாரண ஆளாக இருந்தாலும் வீரன். பல்வேறு சாகசங்களுக்கு காரணம் இவன் படித்து வைத்திருக்கும் நூல்களே என்று கருதி திருச்சபை சாமியாரோடு சேர்ந்து அவனை அடித்துப் போட்டு அந்த நூல்களை கொளுத்தி விடுகின்றனர். கிரானடாவில் நிகழ்ந்ததைப் போலத்தான்  யாழ்ப்பாண நூலக எரிப்பும் நடந்திருக்க வேண்டும். நூல்களை எரிக்கும் வன்மம், சூன்யக்காரிகள் என பெண்களை வேட்டையாடியவர்களின் குரூர மனதை ஸ்பானிஷ்காரரான  டான் குயிக்ஸாட் ஆசிரியர் Miguel de Cervantes (1547 – 1617) நேரில் கண்ட சாட்சிகளுடன் பேசிய தலைமுறையைச் சார்ந்தவர். நுண்ணுணர்வால் தன் கலகக் குரலை மாய எதார்த்தவாத முறையில் எழுதி மீறிச் சென்றிருக்கிறான் என்று கருதமுடிகிறது.

ரத்வா ஆஷுர் இந்த நாவலில் சொல்லியிருப்பதை நான் இங்கு எழுதப் போவதில்லை. அதன் கலை மதிப்பை வாசகர்களே உணர்ந்து கொள்ளட்டும். நவீன உலகத்தை நோக்கி புறப்பட்ட  கொலம்பஸ்-சும் (1451 – 1506); வாஸ்கோடகாமாவும் (1460 – 1524) மேற்கில் அமெரிக்க கண்டங்களையும், கிழக்கில் இந்தியாவுக்கான கடல் வழித் தடங்களையும் கண்டறிந்த காலகட்டம் இதுவே. இதனால் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தரை மார்க்கமாக நீடித்து, பலேறு பழைய துறைமுகங்களைக் கொண்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நான்காயிரம் கி.மீ. நீள பட்டுப்பாதையில் சீனர்கள், இந்தியர்கள், அரபுகள் கொண்டிருந்த மேலாதிக்கம் சட்டென கீழிறங்கியது.

அப்பொழுது ஸ்பெயினில் நிகழ்ந்த காதல், காமம், பிணக்கு என குடும்ப அமைப்பு, சமூக நிலவரம் வாழ்க்கையின் நிலையாமை புரிந்துகொள்ள ஒரு புனைவு சாட்சியம் இந்த நாவல். ஸ்பானிய நீரோட்டத்தில் கலந்து நீர்த்துபோதல், மதமாற்றம், கலகம், புலப்பெயர்வு என வலி கூடிய அந்த நிலக்காட்சி மனதை கரைக்கிறது. எழுநூற்றி ஐம்பதாண்டு பாரம்பரிய தொடர்ச்சியை அறுத்துப் போட்டு போய்விடுவதென்ன அவ்வளவு லேசுபட்ட ஒன்றா என்ன?

கிறிஸ்தவத்துக்குள் சேர்க்கப்பட்ட அரபுகளை Moriscos என்று அழைத்தனர். ஒரு நூறு ஆண்டுகள் அப்படி மதம் மாறி  ஸ்பெயின் அரசருக்கு விசுவாசமாக இருந்த இலட்சக் கணக்கானவர்களையும் 1609-ஆம் ஆண்டு நாடு கடத்த உத்தரவிட்டனர்.  ஒரு நூற்றாண்டு கழிந்த பின்பு அப்பொழுது இஸ்லாம் என்பது ஸ்பெய்னில் எங்குமே இல்லாத நிலையிலும் உள்நாட்டு பாதுகாப்பின் பெயரால் புறந்தள்ளிய கொடுமையெல்லாம் நடக்கிறது. நான்கு வயதுக்கு கீழே இருந்த குழந்தைகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு நல்லாத்துமாக்களாக மாற்றப்பட்டனர். முரண்டு பிடித்த 16 வயதுள்ள பிள்ளைகள் அடிமைகளாக, உடல் உழைப்புக்கும் பிறகு திருமுழுக்கு / ஞானஸ்நானம் செய்யப்பட்டனர்.

. விவசாய நிலங்கள் தரிசானது, செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த வெற்றிடத்தை அங்கிருந்த மக்களைக் கொண்டு சமாளிக்க முடியவில்லை. ஸ்பெயினிலிருந்த சில மாகாணங்களில் முப்பது சதவிகித மக்கள் வரை ஆப்ரிக்கா நோக்கி போக வைத்த காரணத்தால் முழு நாட்டின் பொருளாதார சங்கிலியே தொடர்பு அறுந்து முடமானது. சமுக கட்டமைப்பு சீர்குலைந்தது. பிரபு குலமும், பண்ணையார்களும் கடனாளிகளாயினர். முழு நாட்டை படுகுழியில் தள்ளியது

பின்னட்டை குறிப்பில் கூறியபடி அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன் வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிய மதக்குற்ற விசாரணைக் காலத்தின் மூச்சடைக்கும் சூழலின் மத்தியில் அரும்பும் அழகிய காதல்கள், அடக்குமுறைக்கு முன் பணிய மறுக்கும் பண்பாடு, பிழைத்து வாழ்ந்து விடுவதற்கான யத்தனங்கள் என வாழ்வின் பல்வேறு வண்ணங்களும் முயங்கி மாயம் நிகழ்த்தும் ஒரு நவீன கிளாசிக் இது. முக்கதைகளில் முதலாவது.

புதிய நிலப்பரப்பை தேடி போன சாகச பயணத்துக்கு இருந்த ஆதரவும், ஏற்பும் கட்டாயப்படுத்தியது உள்நாட்டு சூழலைக் கொண்டா? மதம் என்பதன் முக்கியத்துவம் அல்லது முக்கியத்துவமின்மையை என்பது என்ன? போன்ற கேள்விகள் எழுகின்றன. பெரும் மக்கள் திரளை தேவைக்கு மீறி துருவநிலையாக்கும் போது பேணப்பட்டு வந்த தனி மனித அறம், சமூக விழுமியங்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றனவா? அரசியல் சிந்தனையில் தனி மனிதவாதம் (humanism) செய்யும் குறுக்கீடுகள் என்ன? என பல்வேறு கேள்விகளை இந்த நாவல் விசாரணை செய்கிறது அல்லது அப்படி எனக்கு படுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் செய்த அட்டூழியத்துக்குப் பிறகு அவ்வளவு விரைவில் எழுந்து நின்றுவிட்ட ஜெர்மனி, உலகை கட்டியாண்ட இங்கிலாந்து, நெப்போலியனைத் தந்த பிரான்ஸ், அறிவியலின் ஊற்றுக்கண்ணாக பலரைத் தந்த இத்தாலியோடு ஒப்பிடும்போது 1500-க்கு பிந்தைய ஸ்பெயினின் இன்றைய நிலை ஏன் அவ்வளவு பாதாளத்தில் கிடக்கிறது? அவர்களை பீடித்திருந்த அரபு சனியன்களை விரட்டியடித்து ஐந்து நூற்றாண்டுகள் கழிந்தும் ஸ்பானிய தேசியவாதிகள் கற்பனை செய்த பெருமிதம் மீட்டெடுக்க முடிந்ததா?  இவ்வளவுக்கும் பிறகு ஸ்பெயினில் இன்றைக்கு இரண்டு கோடி முஸ்லிம்கள் எஞ்சியுள்ளனர்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எகிப்திய (அரபு) எழுத்தாளர் நாகிப் மஹ்பூஸ் (1911 – 2006). ஆங்கிலம் வழியாக அரேபிய இரவுகளும் பகல்களும் என்ற நூல் மொழிபெயர்ப்பை 2014-ஆம் ஆண்டு சா.தேவதாஸ் அவர்களும், அரபு நேரடி மொழிபெயர்ப்பாக நம் சேரிப் பிள்ளைகள் நாவலை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பஷீர் ஜமாலியும் 2019-ஆம் ஆண்டு செய்திருந்தனர் .

1933-ஆம் ஆண்டு வாணியம்பாடியில் பிறந்த அப்துர் ரஹீம் 1957-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் 1964-ஆம் ஆண்டு எகிப்தின் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அரபு (Philology) மொழியியல் கலாநிதி பட்டம் பெற்றார். மதினா பல்கலைக் கழகத்தில் 1969-ஆம் ஆண்டு பேராசிரியராக பணியில் சேர்ந்து 1990-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு இவரின் திறமையை வீணாக்க விரும்பாத சௌதி அரசாங்கம் திருக்குர்ஆன் அச்சக இயக்குனராக நியமித்துள்ளது. ஆக ஐம்பதாண்டுகளாக அரபு மொழியில் டாக்டர் அப்துர் ரஹீம் அவர்களின் பணி மகத்தானது. அவரை நான் எங்கள் சொந்த ஊரிலும், சென்னையிலும், அவர் இப்பொழுதிருக்கும் சௌதி அரேபிய மதினா நகரிலும் பலமுறை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. உள்ளபடியே சொன்னால் அவருடைய வீட்டின் பெயரே “கிரானடா” என்பதாகும்.

தமிழகத்தை ஒப்பிடும்போது கேரள மலையாளி, இலங்கை சோனக முஸ்லிம்கள் (அரபு நூல்களுடன்) அளவிலும், தரத்திலும் மிகைத்திருக்க காரணமென்னவென்று டாக்டர் வி.அப்துர் ரஹீம் அவர்களிடம் கேட்டேன்.  தமிழக முஸ்லிம்கள் மொழி தெரியாதபட்சத்தில் உருதுவை எப்படியோ மத்ரஸாவில் கற்றுக் கொள்கின்றனர், இதனால் அரபு மொழியை அணுகுவதற்கான முயற்சியில் பின் தங்கிவிடுகின்றனர். கேரள, இலங்கை முஸ்லிம்களுக்கு உருதுவில் கொட்டிக் கிடக்கும் இஸ்லாமிய இலக்கியத்தின் ஊடாகவே அடைய முடியும் என்கிற சமூகச் சூழல் இல்லாதபடியால் நேரடியாகவே சற்று கஷ்டப்பட்டாலும் அரபியை கற்றுக் கொள்கின்றனர் என்றார். அது உண்மைதான் போலிருக்கிறது.

இலங்கையின் இர்பான் நளீமி இப்பணியை செவ்வனே செய்து முடித்திருக்கிறார். பொதுவாக இப்பொழுதெல்லாம் நேரடி படைப்பிலக்கியத்தைத் தவிர (கட்டுரை, புனைவு எதுவாக இருந்தாலும் அதன் ஆங்கில பிரதியை கையில் வைத்துக் கொண்டே) ஏனைய தமிழ் மொழிபெயர்ப்புகளை ஒரு சேர இரண்டு மொழிகளிலும் படிக்கும் பழக்கம் சேர்ந்து கொண்டது. The valley of mask – Tarun Tejpal முன்பு படித்திருந்ததுதான், சென்னைப் புத்தக சந்தை பிப்ரவரியில் நடந்தபோது வாங்கியிருந்தேன். அதன் மொழிபெயர்ப்பான “முகமூடிகளின் பள்ளத்தாக்கு” கொரானா பெருந்தொற்றின் இரண்டாம் பேரலை உண்டாக்கிய வெறுமையின் காரணமாக படிக்காமல் வைத்திருந்ததை சற்று முன்பு படித்தபோது. இரண்டுக்குமே தொடர்புகள் இருப்பதைப் போல உணர்ந்தேன். அப்படியாக இந்த கிரானடாவின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கூட வைத்து படித்தபோது இர்பான் நளீமியின் மொழித்திறனும், சொல்வளமுடனும் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

இன்றிலிருந்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துக்கு பின்னோக்கி பயணிக்கும் இந்த நூலை மொழிபெயர்த்த இர்பான் நளீமி இலங்கையைச் சேர்ந்தவர். அறபு மொழி கற்பித்தல் மற்றும் மொழிபெயர்ப்பியல் துறைகளில் இரு முதுகலைப் பட்டங்களும், பயனாக்க மொழியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். பல்கலைக் கழகம் உட்பட பல்வேறு மட்டங்களில் அறபு மொழி கற்பித்தலில் மட்டுமின்றி, அறபு-தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்புத் துறையிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஈடுபாட்டுடன் இயங்கி இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

பேரரசர் அவ்ரங்கசேப் (1618 – 1707) காலத்தில் தென்னகம் நிஜாம்களின் ஆளுகையின் கீழிருந்தபோது ஆற்காடு / கர்னாடகா நவாப் பதவியில் இருந்தவர் அன்வருத்தீன் கான் (1672 – 1749); சென்னை ஜானிஜான் கான் தெரு இவரின் நினைவால் வைக்கப்பட்டதே. அதன் பின்னர் அவருடைய மகன் முஹம்மத் அலி வாலாஜா (1717 – 1795) பொறுப்பேற்றார்.  அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரையிலுள்ள உழைப்பாளர் சிலையை தொடும் சாலைக்கு இவரின் பெயரே இன்றும் உள்ளது.

ராபர்ட் கிளைவ் (1725 – 1774); மைசூரின் திப்பு சுல்தான் (1751 – 1799); சென்னை பச்சையப்ப முதலியார் (1754 – 1794) ஆகியோர் முகலாய பேரரசு சிதைவுற்ற பிறகு கிழக்கு இந்திய கம்பெனி (1757 – 1858)  பின்னணியில் சென்னை வரலாற்றோடு தொடர்புடைய பெயர்கள். நவாப் அன்வர்தீன் கொல்லப்பட்டது எங்கள் ஊரில்தான், மலைக் கோட்டைகளும், பீரங்கியால் சுட்ட வடுக்களுடன் கைவிடப்பட்டிருந்த பழங்கால கட்டிடங்களைச் சுற்றி காட்டுச் செடிகள் வளர்ந்திருக்கின்றன. கொரனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது ஆறு மாதம் எந்த பணியுமின்றி வீட்டில் இருந்தபோது வாரக் கணக்கில் இப்பகுதியை அகழ்வாராய்ச்சிகாரனாக அலைந்து திரிந்திருக்கிறேன்.

இந்த ஆண்டு இரண்டாம் அலையின் போது என் தாயார் மூப்பின் காரணமாக இறந்து போனார். வீட்டிலிருக்கப் பிடிக்கவில்லை, ஜுன் மாதம் சென்னை வந்து திருவல்லிக்கேணியில் தங்கிவிட்டேன். கொரானா கெடுபிடி முடியவில்லை. கடைகள் பத்து மணிக்கு மேல்தான் திறக்கும். பஸ் இல்லை, சாதாரண டீக் கடையில்லை, ஐந்து மணிக்கு தெருவில் இரண்டு சக்கர வாகனத்தில்கூட போக முடியாது. ஒவ்வொரு கி.மீ.-க்கும் போலீஸ் செக் பாயிண்ட். இ.பாஸ் இல்லாமல் எங்குமே போக முடியாத நிலையில் நடமாட்டம் குறைந்த சாலைகளில் வெள்ளை யானை ஐஸ் ஹவுஸ்-சும் எய்டன், ப்ரெண்ணன், காத்தவராயன் என யோசித்தபோது மிர்சா பேட்டை மார்கெட் கடந்து, ரத்னா கஃபே பக்கம் திரும்பி, ஜாம் பஜாருக்குள் நுழைந்து அமீர் மஹால் போகும் வழியில் அப்படியே பார்த்தசாரதி கோயில், பாரதி வீடு என எங்குமே ஆட்களையே பார்க்க முடிந்ததில்லை. ஆரம்பக்கால சென்னை சினிமா வரலாற்றோடு தொடர்புடைய ஸ்டார் டாக்கிஸ்சும், வாலாஜா மசூதியும், ஆதம் மார்க்கெட்டும் வெறிச்சோடிக் கிடந்தது. இப்படியே ஒரு இரண்டு மாதங்கள் ஓடியிருக்கும். அப்படியே அமர்ந்து பின்னோக்கி காலவெளிப் பயணம் செய்தேன்.

கொரானா பெருந்தொற்று அறிவிக்கப்படுவதற்கு முன்பு Citizenship Amendment Act (CAA) National Register of Citizens (NRC) National Population Register (NPR) – சுருக்கமாக தேசிய மக்கள் பதிவேடு குறித்த அச்சம், புரளி சிறுபான்மை சமூகத்தில் பரவியிருந்தபோது மாதக்கணக்கில் ஷாஹின்பாக் போராட்டம் நடந்தது. இங்கு சென்னை வண்ணாரப்பேட்டையில் அப்படியொன்று நடந்ததை கேள்விப்பட்டிருக்கக் கூடும். கடைசியாக பிப்ரவரி 2020-ல் அண்ணாசாலையில் முஸ்லிம்கள் திரண்டிருந்தனர். பொதுவாக எந்தவொரு இடத்திலும் சார்பற்று இருக்கவும், சற்று விலகி நின்று பார்க்கவுமே பழகியிருக்கிறேன். அந்த மக்களின் கல்வி, படிப்பு, தொழில், வர்க்க, பொருளாதார, இனக்குழு பின்னணி அணுகுமுறை என்று துருவிக் கொண்டிருந்தேன். கிரானடாவில் நிகழ்ந்ததைப் போல இல்லாமல் தமிழக முஸ்லிம்கள் நன்கு assimilation ஆகியுள்ளனர். இங்கு, இந்த பண்பாட்டுடன்  உட்செறிந்துள்ளனர். இருந்தாலும் இந்த நாவலை படித்த போது சின்னதொரு அச்சம் எழுந்ததை தங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

என் பெற்றோர், முன்னோர், மூதாதைகள் புதைந்த இந்த மண்ணைவிட்டு எங்கு நான் போவேன்? காலம் கடந்து பிறந்து எட்டும், ஐந்திலுமாக இருக்கும் என் பிள்ளைகள் வாழ இவ்வளவு பெரிய நாட்டில் இடமில்லாமல் போகுமா? கொரானா மறைந்து காலம் எல்லோருக்கும் நல்லவிதமாக அமையட்டும்.

கொள்ளு நதீம், ஆம்பூர் – வேலூர் மாவட்டம்

முந்தைய கட்டுரை‘நீர்ச்சுடர்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
அடுத்த கட்டுரைஏசியாநெட் பேட்டி