வெண்முரசை வாசித்தல், கடிதம்

 அன்பு ஜெயமோகன்,

வெண்முரசு முதற்கனல் குறித்த இராஜகோபால் அவர்களின் உரையையும், அவருடனான வாசகர்களின் உரையாடலையும் பல அமர்வுகளில் செவிமடுத்தேன். இதிகாசம் துவங்கி நவீன இலக்கியம் வரையிலான பின்புலத்தெளிவைச் சான்றுகளுடன் அளிக்க அவர் தொடர்ந்து முயன்றார்; அம்முயற்சி போற்றுதலுக்குரியது.

விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், கொற்றவை, வெண்முரசு போன்றவை நவீன இலக்கியங்கள்தாம். எனினும், அவற்றை வாசிக்க சில அடிப்படைத் தகுதிகள் அவசியம். அவை இல்லாமல் அவற்றை வாசிக்க முற்படுதல் வாசகனுக்குப் பெருந்துன்பத்தையே அளிக்கும்.

ஒரு படைப்பாளனுக்கு இருப்பது போன்றே வாசகனுக்கும் தகுதிகள் இருக்கின்றன. படைப்பை வழங்கப் படைப்பாளி மெனக்கெடுவதைப் போல, வாசகனின் மெனக்கெடலும் முக்கியம். மம்மதுவைத் தேடி மலை வராது, மம்மதுதான் மலையைத் தேடிப்போக வேண்டும். ஆக, வாசகன் படைப்பை வாசிப்பதற்கான தகுதிகளை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்; அவற்றை நடைமுறை வாழ்வில் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, அவற்றைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியத்தத்துவ அடிப்படை தெரியாத ஒருவர் விஷ்ணுபுரத்தை நெருங்கவே முடியாது. சிலப்பதிகாரப் பின்புலத்தை உள்வாங்காத ஒருவருக்கு கொற்றவை தனித்தமிழ்ச் சொற்சேர்க்கைகளாகவே புலப்படும். மார்க்சிய இயங்கியல் மற்றும் தொழிற்சங்க நடைமுறைகள் தொடர்பான குறைந்தபட்ச அறிமுகம் இல்லாதவர்க்கு பின் தொடரும் நிழலின் குரலின் ஆன்மா சென்று சேராது. அதைப் போன்றே வெண்முரசு நாவல்களை வாசிக்க நிச்சயம் மகாபாரதக் கதைச்சுருக்கமாகவாவது தெரிந்திருக்க வேண்டும்.

நவீன இலக்கியம் குறித்து அழுத்தமான விளக்கங்களை இராஜகோபால் அளித்தார். அவ்விளக்கங்களைத் திரும்பத் திரும்பச் சிலமுறைகளாவது கேட்காமல் அவற்றைப் புரிந்து கொள்வது சிரமமே. வாசகர்கள் அவரோடு உரையாடும்போது முன்வைத்த கேள்விகளில் அத்தடுமாற்றத்தைக் காண முடிந்தது. வெண்முரசு என்றில்லை.. எந்த ஒரு இலக்கியப்படைப்பையும் வாசிப்பதற்கான குறைந்தபட்சத் தகுதியைத் தெளிவாகவே அவர் சுட்டிக்காட்டி இருந்தார். ஆக, அவ்வுரையை வெண்முரசுக்கானது மட்டும் என நான் கருதவில்லை. தவறவிட்டவர்கள் அவ்வுரையைச் சென்று கேளுங்கள்.

மகாபாரதக் கதைமாந்தர்கள் யதார்த்த வாழ்வில் உதாரணங்களாய்க் காட்டப்படும் போது புராணத்தன்மையிலேயே இருக்கின்றனர்; இலக்கியத்தளத்திலேயே அவர்கள் காப்பியத்தன்மை பெறுகின்றனர். இராஜகோபாலின் இக்கூற்று கூர்ந்து கவனிக்கவும், மேலதிகமாய் யோசிக்கவும் தூண்டுவது.

புராணத்தன்மையில் ஒரு கதைமாந்தரின் படைப்பு ஒற்றைத்தன்மையில் நிறுவபபட்டிருக்கும். அதாவது அவர் நல்லவர் அல்லது கெட்டவர். காப்பியத்தன்மையில் கதைமாந்தர் நல்லவரா அல்லது கெட்டவரா எனத் தடுமாற வேண்டி இருக்கும். புராணத்தன்மை கொண்ட ஆக்கங்களைப் புராணங்கள்    என்றும், காப்பியத்தன்மை உள்ளடங்கி இருக்கும் படைப்புகளைக் காப்பியங்கள் என்றும் கொள்ளலாம். இப்படி ஒரு விளக்கத்தை இராஜகோபால் அளிக்கிறார் அல்லது அப்படியாக நான் புரிந்து கொண்டேன். அப்புரிதலில் இருந்து மேலதிகமாய்ச் சிந்திக்கவும் நினைக்கிறேன்.

கந்தபுராணத்தை எடுத்துக் கொள்வோம். சூரபன்மன் கெட்டவன் மட்டுமே எனக் கொள்வதற்கான சாத்தியங்கள் இல்லை. புராணத்துவக்கமே தந்தை காஷ்யப முனிவர் சூரபன்மன் உள்ளிட்டோருக்கு அறம் போதிப்பதிலேதான் துவங்குகிறது. தாய் மாயை அறத்தை விட அதிகாரமும் செல்வமும் முக்கியம் என அவர்களைத் திசைதிருப்பி விடுகிறாள். இங்கு சூரபன்மனின் பங்கு குறித்து யோசித்துப் பார்த்தால் அவன் பாத்திரப்படைப்பின் தன்மை நுட்பமாகும் அல்லது காப்பியத்தன்மை பெற்றிருப்பது தெரிய வரும்.     பெரியபுராண மனுநீதிச் சோழன் கதையும் அவ்வாறே. பெரும்பாலான பிற புராணங்களின் மாந்தர்களுக்கும் அதைப் பொருத்திப் பார்க்கலாம்.

நடைமுறை வாழ்வில் புராணங்களைப் பிரசங்கம் செய்பவர்களால் அப்படியான தொனி உருவாகிறது. அதைக் கொண்டே புராணத்தன்மை என நாம் சொல்கிறோம். உண்மையில், ஒரு இலக்கியப்படைப்பு புராணத்தன்மையைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. அது சொல்லப்படுபவர்களாலேயே அப்படியான தொனியைப் பெறுகிறது. சமீபமாய்ப் பெருகி இருக்கும் கதைசொல்லிகளால் இலக்கியப்படைப்புகள் புராணத்தன்மை பெற்றிருப்பதை நாம் எளிதாய்க் கண்டுகொள்ள முடியும்.

ஒரு பிரசங்கி அல்லது கதைசொல்லி வாசிப்புச் சாத்தியங்களை விரிவடையச் செய்யாமல் சுருங்கச் செய்து விடுகிறார். ஒரு நல்ல விமர்சகரே வாசிப்பின் விசாலத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். சமீபத்தில் புதுமைப்பித்தனின் சில்பியின் நகரம் சிறுகதையை ஒலிவடிவில் கதையாடலாகச் செவிமடுத்தேன். பிறகு, அதே கதை பற்றிய பிரமிளின் விமர்சனக்கட்டுரை ஒன்றையும் வாசித்தேன். கதைசொல்லி அக்கதையின் ஆன்மாவைத் தட்டையாக்கி இருக்க, பிரமிளோ அதை அலாதி நுட்பமாக்கி இருப்பார்.

என்னளவில், ஒரு தேர்ந்த படைப்பு அதன் இயல்புத்தன்மையில் புராணத்தன்மையோடு இருப்பதில்லை. அது வெளிப்படுத்தப்படும் முறையிலேயே புராணத்தன்மை கொள்கிறது. அப்புராணத்தன்மை அப்படைப்பைப் பெரும்பாலும் அதன் ஆன்மாவில் இருந்து பிரித்து விடுகிறது. அதனாலேயே, இலக்கிய ஆக்கங்கள் ஒலிவடிவில் தங்கள் சுயத்தை இழந்தவை ஆகின்றன.

ஒலிவடிவில் இணையத்தில் உலவும் சிறுகதைகளை பல்லாயிரக்கணக்கானவர்கள் கேட்கின்றனர். என்றாலும், அவர்களால் அப்படைப்பின் ஆன்மாவை நெருங்க இயலவில்லை. இலக்கிய ஆக்கங்களால் உந்தப்படும் ஒருவர் அது குறித்த தனது வாசிப்பனுபவத்தை அல்லது விமர்சனத்தைப் பகிர்ந்து கொள்தலே இணக்கமானதாக இருக்கும்.

தத்துவத்தில் அறிவைச் சாமானிய அறிவு, விசேஷ அறிவு எனப்பிரிப்பார்கள். அப்படி பிரிப்பதாலேயே இரண்டு அறிவு இருப்பதாக புரிந்து கொண்டால் குழப்பம்தான். அறிவின் புற மற்றும் அக வடிவங்களாக அவ்விரண்டையும் சொல்லலாம். சாமானிய அறிவு எதிர் விசேஷ அறிவு என்றில்லாமல் சாமானிய அறிவு > விசேஷ அறிவு என்பதாக நாம் அணுக வேண்டும். கொஞ்சம் எளிமையாக்கப் பார்க்கலாம். சூரியன் உதிக்கிறான் மறைகிறான் என்பது சாமானிய அறிவு; சூரியன் அவ்வாறில்லை, அவை தோற்றங்களே என்பது விசேஷ அறிவு. சாமானிய அறிவின் வழியாகவே விசேஷ அறிவை வந்தடைய இயலும். சாமானிய அறிவு திரிபடைந்து விட்டால் அது சாத்தியமே இல்லை. சாமானிய அறிவு என்பதைப் சமூகத்தளத்திலான அறிதல் என்பதாகவும், விசேஷ அறிவைத் தனிமனித அளவிலான புரிதல் என்பதாகவும் கொள்ளலாம். சமூகப்புரிதல் தட்டையாகிவிடும்போது, அது தனிமனிதனைத் தவிக்க வைத்து விடுகிறது. அதுவே தனிமனிதனான வாசகனை அ;ல்லாடச் செய்வதாகவும் ஆகிறது.

ஒரு கதையைச் சொல்பவர்கள் அக்கதையைப் புராணத்தன்மை கொள்ளச் செய்கிறார்கள்; அது தவறில்லை, ஆனால், அப்புராணத்தன்மையிலேயே அக்கதையை உறைய வைக்கும்படியான அபத்தமே பெரிதும் நிகழ்கிறது. கேட்பவர்கள் தன்னளவிலான வாசிப்புக்கு நகர்ந்தால் மட்டுமே கதைசொல்லியின் பங்கு போற்றுதலுக்குரியது. அப்படி இன்றி, கேட்டலிலேயே தேங்கி விடும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரிப்பது படைப்பின் ஆன்மாவைத் தேய வைத்து மழுங்கடித்து விடும். என்னளவில், கதைசொல்லிகள் தங்களைக் கதைவிமர்சகர்களாகக் கொள்ள வேண்டும்.

இராஜகோபால் வெண்முரசின் முதற்கனலை விமர்சனம் செய்தார்; கதையாடலாக எடுத்து வரவில்லை. அருண்மொழி நங்கை அக்காவும்(வெண்முரசு அறிமுக உரைகளில்) வெண்முரசு நாவல்களின் கதைகளைச் சொல்லவில்லை; அவற்றைக் குறித்த விமர்சனங்கள் அல்லது தனது அனுபவங்களையே பகிர்ந்து கொண்டார்.

ஒரு படைப்பின் புராணத்தன்மை வழியாக காப்பியத்தன்மையை வந்தடையும் ஒருவன், அப்படைப்பை ஒருமுறை வாசிப்பதோடு நிற்க மாட்டான். வாய்ப்பு அமையும்போதெல்லாம் வாசிப்பான். ஒவ்வொரு வாசிப்பின்போதும் அவனில் படைப்பின் புதிர்த்தன்மை மேலும் ஒளிர்ந்தது என்றால் அது செம்படைப்பு; அவ்வாசிப்பு நல்வாசிப்பு. அது நாட்டார் அல்லது செவ்வியல் என எவ்வடிவில் இருந்தாலும் படைப்பின் ஆன்மாவே அதன் சாரம்.

படைப்பிலக்கியத்தை நவீன ஆய்வுப்புலத்தில் கோட்பாடுகளாக்கிக் கூறுபோடும் கசாப்புகடைக்காரர்கள் மிகுந்திருக்கும் காலம் இது. இலக்கியம் சமூகத்துக்காகவே என்று சொல்லிக்கொள்ளும் கோட்பாட்டாளர்களே பெரும்பாலும் கதைசொல்லிகளாக நம்மிடம் வருகிறார்கள். ஒரு வாசகன் வெகு கவனத்தோடு இருக்க வேண்டிய இடம் இது. இலக்கியம் சமூகத்துக்காக இல்லையா என வினவினால்.. சமூகத்துக்காகவும்தான், அதற்காக சமூகத்துக்காக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கோட்பாட்டாளர்கள் சமூகத்தை வரையரைகளால் சுருக்கி தனிமனிதனை அழுத்தத்தில் தள்ள, படைப்பாளர்களோ சமூகத்தின் பன்முக விசாலத்தை அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றனர்.

பலமாய்ச் சொல்கிறேன், வாசகர்கள் வெகுகவனமாக இருக்க வேண்டிய சமயம் இது. சமூக ஊடகங்கள் மிகுந்திருக்கும் சூழலில் கதைசொல்லிகள் பெருகி இருக்கின்றனர். ஒரு கதையை ஒரேவித புராணத்தன்மையோடு பல கதைசொல்லிகளும் சொல்லும்போது அக்கதை உயிர்ப்பற்று விடுகிறது. வாசகனுக்கு அதன் எலும்புக்கூட்டின் அறிமுகம் மட்டுமே வாய்க்கிறது. அதனால்தான் சொல்கிறேன், வாசகர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது
அடுத்த கட்டுரைஅர்ச்சகர் சட்டம் – காளிப்பிரஸாத்