ஏசியாநெட் பேட்டி

அன்புள்ள ஆசிரியருக்கு

இவ்வளவு அழகியலாக எழில் சூழ்ந்த பின்னணியில் உங்களை பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சி.ஓரளவிற்கு நீங்கள் பேசுவது புரிந்தது. இசைக்கோர்ப்பும், காட்சிகள் அடுக்கிய விதமும் ஒரு கம்பீரத்தை தோற்றுவித்தது. உங்களை இப்படி பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும். இன்றும் அவ்வாறே …

நன்றிகள்
குமார் சண்முகம்

***

தமிழ் ஊடகங்களின்  வாசகனாக பெரும் அவமானமே எழுகிறது. நியாயப்படி தமிழக ஊடகங்கள் இதை செய்திருக்க வேண்டும். குறைந்தது இந்த தளத்துக்கு என சொல்லும் படியாகவாவது..

மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்க கூடாது என்ற போதும்….

தன்மொழியில் எழுதிக்குவித்த பக்கங்களுக்கு எந்த ஒரு நியாயமும் செய்யாமல் வம்பை மட்டுமே  பேசும்  தமிழக ஊடகங்களும், ஆளுமைகள் குறித்த எந்தவொரு அறிதலும் இன்றி யாராக இருந்தாலும் தன் அரசியல் புரிதலுக்கு ஏற்ப மட்டுமே  கேள்விகள் கேட்கும் தமிழ் ஊடக நிருபர்களும்தான் நினைவுக்கு வருகிறார்கள்..

காளிப்பிரசாத்

***

 ஐயா வணக்கம்..!

நான் உதகமண்டலம் வானொலி நிலைய தற்காலிக நிகழ்ச்சி அறிவிப்பாளர் அப்துல் காதர். சற்று முன்பு தான் பசுமைமிகு மலைகள் மற்றும் விவசாய நிலங்களின் பின்னணியில் தங்களின் நேர்முக உரையாடல் ஒன்று ஏஷியாநெட் தொலைக் காட்சியில் பார்த்தேன். மிக நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். ஏனெனில் ஏதோ ஓரிடத்தில் எங்களது கூடலூர் பந்தலூர் பகுதிகளின் வரலாற்றுப் பின்னணியுடன் அது ஒத்துப் போவதாக இருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் விஷ்ணு பிரசாத் மூலமாக அறிமுகமான தங்களை கடந்த உதகை குறும்பட விழாவில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் நடைபெறவில்லை. ஐயாவின் எண் என நினைத்து ‘சொல் புதிது’ எண்ணில் அழைத்தேன். அழைப்பை ஏற்ற நண்பர் மின்னஞ்சல் முகவரி தந்தார். ஐயா பயணத்தில் இருப்பதாக தெரிவித்தார். வரலாறும் புவி அமைப்பும் இலக்கியமும் சமுதாயச் சூழலும் அடிப்படையாக கொண்ட மலையாள நேர்முகம் சிறப்பாக அமைந்தது. ஓணம் வாழ்த்துகள்.

ஐயாவை நேரடியாக தொடர்புகொள்ளும் விதமான கைபேசி எண் கிடைத்தால் மகிழ்ச்சி

நன்றி

 

அன்புடன்

அப்துல் காதர்

***

அன்புள்ள ஜெ

ஆசியாநெட் பேட்டியை பார்த்தேன். பல பேட்டிகள் இணையத்தில் இருக்கின்றன. ஆனால் இது உங்கள் இடத்தில், உங்கள் சூழலில் எடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் உலகத்தை காட்ட முயல்கிறது. உங்கள் புனைவுலகின் பின்னணியாக அமைந்த நிலமும் வாழ்க்கையும் காட்டப்படுகிறது. பேட்டி கண்டவர் உங்களை ஆழமாக வாசித்துவிட்டு வந்திருக்கிறார். இத்தனைக்கும் நீங்கள் மலையாளத்தில் மிகமிகக்குறைவாகவே எழுதியிருக்கிறீர்கள்.

தமிழில் எந்த எழுத்தாளருக்கும் ஊடகங்கள் இந்த மரியாதையைச் செய்ததில்லை. கி.ராவின் இடைச்செவல் ஊடகங்களில் பதிவானதில்லை. வண்ணதாசனின் நெல்லையை அவரைப்பற்றி விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் எடுத்த ஆவணப்படத்தில் மட்டுமே காணமுடிகிறது. மிகவும் ஏக்கமாகவும் வருத்தமாகவும் உள்ளது.

ஆர்.சிவக்குமார்

அன்புள்ள சிவக்குமார் மற்றும் நண்பர்களுக்கு,

தமிழ் ஊடகங்களில் பணியாற்றும் பலரை எனக்கு நேரடியாகவே தெரியும். அவர்களுக்கும் மலையாள ஊடகவியலாளர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு. உதாரணமாக இந்தப்பேட்டியை எடுத்த எம்.ஜி.அனீஷ் இலக்கியம் படித்து, அதன்பின் ஊடகவியலில் பட்டம் பெற்று, இதழியலாளர் ஆனவர். பலதுறைகளில் பரவலான வாசிப்பு கொண்டவர். பேட்டி காண வந்தபோது அவர் இலக்கியம் பற்றி பேசியவை மிக ஆழமான விமர்சனப் பார்வையை வெளிப்படுத்தின. அனைத்துக்கும் மேலாக அந்த ஊடகம் அவருக்கு அளிக்கும் ஊதியம் என்பது இங்கே ஓர் ஊடகத்தின் தலைவராக இருப்பவர்கூட நினைத்துப் பார்க்க முடியாதது. அந்த ஊதியமே அவருக்கு ஒரு தன்னம்பிக்கையை அளிக்கிறது. ஆகவே அவர் பிணராய் விஜயனையே நிகராக நிறுத்தி கேள்வி கேட்க முடியும்.

மாறாக, தமிழ் ஊடகவியலாளர்களில் முறைப்படி இலக்கியமோ மொழியோ கற்றவர்கள் அரிதினும் அரிதானவர்கள். இதழியலிலும் அனுபவ அறிவு மட்டுமே இருக்கும். மிகப்பெரும்பாலானவர்கள் சினிமாவில் நுழையும் ஆசையுடன், தற்காலிகமாக, இதழியலில் நுழைந்திருப்பவர்கள். சினிமாவில் நுழைந்து சாதித்த சிலர் உண்டு என்றாலும் மிகப்பெரும்பாலானவர்களுக்கு சினிமாவும் எட்டாக்கனிதான். ஆகவே அவர்களின் முதன்மை ஆர்வமே தமிழ் சினிமாதான். அவர்களுக்கு மிகமிகக்குறைவான ஊதியம் அளிக்கப்படுகிறது. அதுவே தன்னம்பிக்கையின்மையை அளித்துவிடும். தன்னை ஒருவகை அடித்தளப் பாமரராகவே வைத்துக் கொள்வார்கள்.

அவர்களில் ஓரிருவர் தவிர எவருக்கும் இலக்கிய அறிமுகமே இருக்காது. கணிசமான தமிழ் இதழியலாளர்களுக்கு நான் சினிமாவுக்கு வெளியே நாவல்கள், கதைகள் எல்லாம் எழுதியிருக்கிறேன் என்பதே தெரியாது என்பதை கவனித்திருக்கிறேன். நான் அதைச் சொல்லி அவர்களைக் குழப்புவதுமில்லை. சமீபமாகச் சிலர் சமூக ஊடகங்களை மட்டும் மேலோட்டமாகத் தொடர்கிறார்கள். ஆகவே எழுத்தாளர்களின் பெயர்கள், வம்புகள் மட்டும் தெரிந்திருக்கும். இங்குள்ள இதழியல் சூழலே வேறு. இங்கே முதிர்ச்சியான இதழியலை எதிர்பார்க்கக் கூடாது.

நாம் எச்சூழலில் இருக்கிறோம் என்பதை உணர்வது அதற்கு எதிரான போராட்டமாக நம் செயல்களை அமைத்துக்கொள்ள மிக உதவியான ஒன்று. விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் அந்த தன்னுணர்வில் இருந்து உருவாகின்றன. ஓர் எழுத்தாளனை எப்படி பதிவுசெய்யவேண்டுமென அவை காட்டுகின்றன. அவற்றை என்றேனும் தமிழ் ஊடகச்சூழல் முன்னுதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் இன்று வாய்ப்பில்லை.

ஓர் உதாரணம் சொல்கிறேன், ஞானக்கூத்தன் மறைவின்போது அவரைப்பற்றிய செய்தி வெளியிட சில ஊடகங்கள் விரும்பின. ஆனால் அவர்களிடம் ஒரு அடிகூட அவரைப்பற்றிய  காட்சி இல்லை. எங்கள் ஆவணப்படம் தரமான ஒளிப்பதிவு கொண்டது. ஆகவே அதை அளிக்கமுடியுமா என்று கேட்டனர். இலவசமாகவே அளிக்க முன்வந்தோம். ஆனால் சில துணுக்குகளே வெளியாயின. ஏன் என்று விசாரித்தோம். ஊடகத்தலைமையினர் அதை வெளியிட மறுத்துவிட்டனர் என்று பதில் வந்தது. ஒரு தனிநபரை பற்றி அவ்வாறு ’செய்தி’ வெளியிடவேண்டும் என்றால் அவர்தரப்பில் இருந்து விளம்பரக்கட்டணம் அளிக்கப்படவேண்டும் என்று சொல்லிவிட்டனர். இச்சூழலில் இருந்துகொண்டுதான் நாம் இலக்கிய இயக்கங்களை முன்னெடுக்கிறோம்.

ஜெ

முந்தைய கட்டுரைகிரானடா நாவலும் அச்சங்களும்- கொள்ளு நதீம்
அடுத்த கட்டுரைகேள்விகள், விடைகள்