சின்னக்குழந்தைகளுக்கு இனிப்பு ஏன் தெவிட்டுவதில்லை? மருத்துவர்கள் சொல்லும் காரணம், அவர்களுக்கு தீராத கார்போஹைட்ரேட் தேவை இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் விழித்திருக்கும் நேரமெல்லாம் ஓடிக்கொண்டும் துள்ளிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் மூளை எப்போதும் அதிவிழிப்பு நிலையில் உள்ளது. அத்தனை கார்போஹைட்ரேட்டையும் எரிக்கும் அமிலம் அவர்களின் வயிற்றில் உள்ளது. இனிப்பு என்பது செறிவான மாவுச்சத்து. ஒவ்வொன்றும் செறிவாகத் தேவைப்படும் காலம் அது.
அந்த இனிமை பிறகெப்போதும் நம் நாவில் வந்தமைவதில்லை. அத்தனை இனிமை நமக்குத் தேவைப்படுவதில்லை. அதன்பிறகு நிகர் இனிமைகளை தேட ஆரம்பிக்கிறோம். கலைகளில், சொல்லில், உணர்வுகளில்…