லாலேட்டனோ இக்காவோ?

மூன்றுநாட்களாக சினிமாக் கதாநாயகனின் வாழ்க்கை. வழக்கமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையாளத் தொலைக்காட்சிகள் என்னைப்பற்றி ஓர் ஆவணப்படம் வெளியிடுவதுண்டு. இதுவரை நான்கு ஆவணப்படங்கள் வந்துள்ளன. என் வீடு, எழுத்தறை, முகப்பு, என் சூழல், வேளிமலை, ஏரிகள் எல்லாமே காட்சிப்படுத்தப்படும். என் கருத்துக்கள், உணர்ச்சிகள் எல்லாமே பதிவாகும்.

இம்முறை மீண்டும் ஆசியானெட் டிவியில் இருந்து கேட்டார்கள். வெண்முரசு முடிந்ததை ஒட்டி ஓர் ஆவணப்படம் செய்ய கேட்டிருந்தனர். நடுவே கோவிட் தொற்று. ஆகவே கொஞ்சம் பிந்திவிட்டது. இங்கே ஒருவாரமே இருப்பேன் என்பதனால் நெருக்கமாக தேதி கொடுத்திருந்தேன். ஆகவே ஏழாம் தேதி முழுக்க ஆசியாநெட்டுக்காக நடித்தேன். ஒன்பதாம் தேதி நானா பத்திரிகையின் நிருபருக்கு நீண்டபேட்டி. இன்று, பத்தாம்தேதி கைரளி டிவிக்காக.

எழுத்தாளனாக நடிப்பது என்று கேலியாகச் சொல்லிக்கொண்டாலும் இது செயற்கையான அனுபவமாக இருக்கவில்லை. சொல்லப்போனால் ஓராண்டு முழுக்க நான் வாழும் வாழ்க்கையைச் சிலமணி நேரங்களில் மீண்டும் நிகழ்த்துவதுதான். உண்மையில் மிக நிறைவாகவே உணர்ந்தேன். என் உள்ளத்திற்கு இனிய வேளிமலை அடிவாரம், என் அகத்தில் என்றும் தித்திக்கும் என் இல்லமும், அறையும்.

கேரளத் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை எழுத்தாளர்களை ஸ்டுடியோவுக்கு வரவழைத்து பேட்டி எடுப்பதைவிட அவர்களின் எழுத்துக்குப் பின்புலமாகும் இடத்தில் எடுப்பதையே விரும்புவார்கள். அரிதாக ஓர் ஆழமான உரையாடல் மட்டுமே வேண்டும் என்றால் மட்டுமே ஸ்டுடியோ. நானும் கல்பற்றா நாராயணனும் கவிதையின் அழகியலை பற்றி மட்டுமே உரையாடிய ஒருமணிநேரப் பேட்டி முன்பு அமிர்தா டிவியில் வந்திருக்கிறது. மிக கவனிக்கப்பட்ட, பேசப்பட்ட, ஓர் உரையாடல் அது.

மலையாளத் தொலைக்காட்சிகளில் எப்போதும் ஒவ்வொன்றுக்கும் அதற்கான தேர்ச்சிகொண்ட நிருபர்கள் இருப்பார்கள். இதழ்களிலும் அவ்வாறே. அரசியல் பேட்டி என்றால் ஒருவர் செல்வார். கதகளி போன்ற மரபுக்கலைகள் என்றால் இன்னொருவர் செல்வார். நவீன ஓவியத்திற்கு ஒருவர் இருப்பார். சினிமாவுக்கு ஒருவர் இருப்பார். இலக்கியத்திற்கென்றே ஒருவராவது இருப்பார்கள். அவர்களே இலக்கியவாதிகளைப் பேட்டி எடுக்க வருவார்கள்.

அவர்கள் பேட்டிக்கென்றே தயாரித்துக் கொள்வதில்லை. இயல்பாகவே நல்ல வாசகர்களாக இருப்பார்கள். அவர்களே இலக்கியவாதிகளாக இருப்பதும் உண்டு.  அவர்களில் இருந்து ஆர்.உண்ணி போன்ற பெரிய இலக்கியவாதிகள் பின்னாளில் எழுந்து வந்திருக்கிறார்கள். ஆகவே பேட்டி எப்போதுமே உற்சாகமானது. பேட்டிக்குப் வெளியே நிகழும் உரையாடல் மேலும் இனியது.

கைரளி டிவியின் எம்.பிஜு வடகேரளத்தின் பையன்னூர்க்காரர். எனக்குப் பிரியமான மலபார். பையன்னூரின் என் நண்பர்கள் பலரும் அவருக்குத் தெரிந்தவர்கள்தான். மலையாளத்தில் நான் எழுதிய எல்லாவற்றையும் அப்போதே படித்திருந்தார். அவற்றைப் பற்றிய கருத்துக்களையும் சொன்னார்

வெயில் இருந்தாலும் ஆடிக்காற்று வீசிக்கொண்டிருந்தமையால் தெரியவில்லை. காற்றுக்கு எதிராக நின்று மைக்கில் முழக்கம் இல்லாமல் பேசவேண்டியிருந்தது. வேட்டியை தூக்கிக்கொண்டு நடந்தபோது கதாநாயகனாக உணர்ந்தேன்.

திரும்பி வந்தபோது அருண்மொழி கேட்டாள். “எப்படி இருந்தது பேட்டி?”

நான் சொன்னேன். “ஹீரோவா ஆஃப் டே கால்ஷீட் குடுத்தது மாதிரி…”

உடனே மெல்லிய நையாண்டி. “ஆரா தான்? லாலேட்டனோ இக்காவோ?”

மீமி – இரம்யா

ஆமாம் யார்? குழப்பமாக இருந்தது. “ஏஷியானெட்டில் லாலேட்டன். கைரளியில் மம்முக்கா” என்றேன்.

“ரொம்பதான்” என்றாள்.

முந்தைய கட்டுரைகுக்கூவில் சில நாட்கள்…
அடுத்த கட்டுரைதுளிக்கும்போதே அது துயர்