விளையாட்டு, கடிதம்

எங்கள் ஒலிம்பிக்ஸ்

அன்புள்ள ஜெ

எங்கள் ஒலிம்பிக்‌ஸ் பதிவை வாசித்தேன். நீங்கள் சொன்னது போலத் தான், உங்களுடைய வாசகர்கள் யாரும் அப்படி கேட்கமாட்டார்கள். இங்கு உள்ள ஒரு பொது வழக்கமே மற்றவர்கள் பேசுவதைத் தான் எழுத்தாளனும் பேச வேண்டும், போற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது.

சமூகக்கொண்டாட்டம் என்பதே இல்லாமலாகிவிட்டது. வாழ்க்கை என்பது வேலை மற்றும் வீட்டில் தனிமையில் ஓய்வு மட்டுமே என்பதாக மாறிவிட்டது. என் நினைவில் முன்பெல்லாம் ஆண்டில் நூறுநாட்கள் ஏதேனும் சமூகக் கொண்டாட்டங்கள் இருக்கும். அத்தனை பேரும் கொண்டாடும் விளையாட்டுக்கள், விழாக்கள். வறுமையிலும் அது மகிழ்ச்சியான வாழ்க்கையோ என்று இன்று தோன்றுகிறது. 

மேலுள்ள வரிகள் முற்றிலும் உண்மையானவை. சில வருடங்களாக என் மனதில் அருவமாக இருந்தவற்றிற்கு திட்டவட்டமாக உருவம் கொடுத்துவிட்டீர்கள். எங்கள் தலைமுறைக்கு பெரும்பாலும் வறுமை இருப்பதில்லை. ஆனால் நான் இந்த ஊருக்கு ஐந்தாறு வயதில் வருகையில் இருந்த விழா கொண்டாட்டம் இன்று முற்றாக இல்லை. சில ஆண்டுகளாகவே விழா நாட்களின் போது உணரும் வெறுமை ஒன்றுண்டு. முன்பெல்லாம் அந்நாட்களில் எல்லோரும் கூடி விளையாடி கொண்டாடுவோம். இப்போது விழாக்களுக்கு உண்டான அனைத்தும் நடந்தாலும் சாரமிழந்த சடங்குகளாகவே அவை உள்ளன. அந்த உயிர்த்துடிப்பு எங்கே போயிற்று என ஏங்கி எண்ணி வியக்கும் நாட்கள் உண்டு.

இந்த ஊரில் கபடியும் கில்லி தாண்டும் விளையாட்டு கொண்டாட்டங்களாக இருந்ததை அப்பாவின் மூலம் அறிவேன். கில்லி தாண்டு கிரிக்கெட் அலையில் அடித்து செல்லப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி இருக்கும் என்ற சித்திரத்தை என் அப்பாவைப் போல முந்தைய தலைமுறை ஆட்களிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். கபடி ஒப்புக்கு ஊருக்கு ஒரு மூலையில் உள்ளது.

விளையாட்டுகளை பார்த்து ரசிப்பதற்கு பெருங்கூட்டம் உள்ளதென்றால் அதை விட பப்ஜி போன்ற மெய்நிகர் விளையாட்டுகளுக்கு பிள்ளைகளிடையே பெருமளவு வரவேற்புள்ளது. நமக்குள் உறையும் கொலை விலங்கிற்கு அதுவே மிகப் பிடித்தமானதாக உள்ளது. என்ன இருந்தாலும் இவை எதுவுமே அந்த சமூக கொண்டாட்டங்கள் கொடுக்கும் நிறைவளிப்பதில்லை. இந்த விளையாட்டுகள் மிக எளிதில் வெறுமையை கொண்டு வருகின்றன. சிலர் அதிலிருந்து விலகி வேறொன்றில் விழுந்து அங்கிருந்து இன்னொன்றுக்கு தாவியபடியே உள்ளனர். மீள முடியாதவர்கள் அங்கேயே இருந்து பித்து பிடிக்கிறார்கள்.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள ஜெ

விளையாட்டு பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். எனக்கும் இந்த எண்ணம் வந்தது. விளையாட்டு என்பதில் ஒரு கொண்டாட்டம் இருக்கிறது. கடுமையான பயிற்சி, உடலையும் வாழ்க்கையையும் அதற்காகவே தயாரித்துக் கொள்வது, இதெல்லாம் விளையாட்டு அல்ல. போட்டி மட்டுமே. போட்டி இல்லாத விளையாட்டில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கமுடியும். அந்தவகையான விளையாட்டுக்கள்தான் முன்பு இருந்தன. விளையாட்டில் தேசியவெறி, கார்ப்பரேட் முதலீடு, ஊடக வியாபாரம் எல்லாம் கலந்ததும் அது விளையாட்டு அல்லாமலாகிவிடுகிறது.

உண்மைதான், அவையும் தேவையாக இருக்கலாம். குறியீட்டு ரீதியாக அவற்றுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கலாம். ஆனால் விளையாட்டு என்பது வேறு. பார்வையாளராக இருப்பது விளையாடுவது அல்ல. விளையாடுவது என்பது சகமனிதர்களிடம் நாம் கூடிக்களிப்பது. அதன் வழியாக சமூகவாழ்க்கையைக் கொண்டாடுவது.

எம்.பாஸ்கர்

***

முந்தைய கட்டுரைஇலட்சியவாதம்,கருத்தியல் -கடிதம்
அடுத்த கட்டுரைநாணயங்களுடன் ஓர் அந்தி