வெண்முரசு ஆவணப்படம் போர்ட்லாண்ட் திரையிடல்

இனிய ஜெ,

வணக்கங்கள்!

அமெரிக்க நகரங்களின் வெண்முரசு ஆவணப் படத்தின் பத்தாவது திரையிடல் போர்ட்லாண்டில் இனிதே நடந்தது. வெண்முரசு குறித்த ஆவணப் படம் ஒன்றை அமெரிக்காவில் உள்ள விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் தயாரித்திருப்பதை முதலில் கலிப்போர்னியாவில் வசிக்கும் நண்பர் விசு ஜூன் மாதம் கூறக் கேட்டேன். அப்போது ஆவணப்படத்தை கலிப்போர்னியாவின் வளை குடா பகுதியில் திரையிடும் முயற்சியில் அவர் இருந்தார்.  நான் போர்ட்லாண்டிலும் திரையிட முயற்சி செய்கின்றேன் என்றதும் ஆஸ்டினில் வசிக்கும் நண்பர் செளந்தருடன் எனக்கு தொடர்பு ஏற்படுத்தி தந்தார்.

செளந்தருடன் பேசுகையில் தான் ஆவணப் படத்தின் தயாரிப்பிற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தெரிந்தது. கோவிட் தொற்றின் ஊரடங்கு காலத்தில் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள். அதுவும் அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவிலும், பிற நாடுகளிலும் உள்ள வெண்முரசு வாசகர்களின் நேர்காணல்களை ஒருங்கினைத்து சேகரித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அதற்கு உதவிய ஆனந்த் மற்றும் பிற நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

செளந்தர் ஆவணப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர் இராஜன் சோமசுந்தரத்துடன் அறிமுகம் செய்து வைத்தார். இராஜன் அவர் அமைத்திருந்த, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலுக்கான இசை மற்றும் இன்னும்  பிற சங்கப்பாடல்களுக்கு அவர் அமைத்திருந்த இசைகளின் வாயில்களாக அறிமுகமாகி இருந்தார்.அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவர்கள் இருவரும் திரையரங்குகளை அணுகுவதற்கான வழிமுறைகளை பகிர்ந்து உதவினர்.

சான் பிரான்ஸிஸ்கோ, நியு ஜெர்சி போன்ற நகர்களுடன் ஒப்பிடுகையில் போர்ட்லாண்ட் சிறிய நகரம். வெறும் இருபது நிமிடத்தில் நகரின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லைக்குச் சென்று விடலாம். நான் வசிப்பது நகர் எல்லைக்குள். இங்கு இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். பெரும்பாலான இந்தியர்களும், தமிழர்களும் புறநகர் பகுதிகளில் தான் வசிக்கின்றனர். அது இயல்பானதே. புறநகர்களில் தான் தொழில் நுட்ப பணியிடங்கள் பெரும்பாலும் இருக்கின்றன. வெண்முரசு ஆவணப்படத்தின் திரையிடலை எங்கு ஏற்பாடு செய்வது என்ற கேள்வி எனக்கு இருந்தது.

நான் அறிந்தவரை ஏதேனும் பெரிய பல்கலைக் கழகங்கள் இருந்தால் அன்றி அமெரிக்காவின் புறநகர்கள் பெரும்பாலும் தனித்து உறங்கும் இடங்கள் தான். வருடத்திற்கு ஓரிரு கலாச்சார நிகழ்வுகளே அவற்றில் நடைபெறும். இலக்கிய நிகழ்வுகள் எல்லாம் வாய்ப்பே இல்லை. கலாச்சார நிகழ்வுகளும் கூட அந்த குழுக்களுக்குள்ளே நடந்து முடிந்து விடும். நம் கலாச்சார நிகழ்வுகளில் பிறரை பெரும்பாலும் அரிதாகவே பார்த்திருக்கின்றேன். இதே போல் தான் பிற இனத்தவர்களின் மரபார்ந்த கலச்சார நிகழ்வுகளிலும்.

இதற்கு விதி விலக்கென்றாள் ஹாலிவுட் திரைப்படங்களையும், பாலிவுட் திரைப்படங்களையும் தான் கூற வேண்டும். அவற்றைப் பற்றி பெரும்பாலானவர்களுக்கு பரிச்சயம்  உண்டு . மேலும் புறநகர் பகுதியில் இருக்கும் திரையரங்குகள் முற்றிலும் பெறு நிறுவனங்களின் தொடர் அரங்குகள். நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அவை ஒன்று போலத் தெரியும். அவற்றில் திரையிடப்படும் படங்களும் தான்.

மாறாக போர்ட்லாண்டின் நகர் பகுதிகளில் பல சிறிய திரையரங்குகள் உள்ளன.  அவற்றின் உரிமையாளர்கள் இந் நகரைச் சேர்ந்த சிறு தொழிலாளர்கள். பலருக்கு இந்த திரையரங்குகள் மட்டும் தான் தொழில். அத்திரையங்குகளில் கலைத் திரைப்படங்களையும், சுயாதீனத் திரைப்படங்களையும் தொடர்ந்து திரையிட்டு வருகின்றனர். அவற்றில் சத்திய ஜித் ரேயின் சாரு லதா, தி மியூசிக் ரூம்,  தார்காவ்ஸ்கியின் ஆண்டரே ரூப்லாவ், தி சாக்கிரிபைஸ், இங்கமர் பெர்க்மனின் பெர்சோனா போன்ற படங்களில் இருந்து தெரன்ஸ் மாலிக்கின் பேட் லாண்ட்ஸ், நயிட் ஆப் கப்ஸ் போன்ற திரைப் படங்கள் வரை பார்த்திருக்கின்றேன். இங்கு வரும் பார்வையாளர்கள் படம் முடிந்த நிமிடம் எழுந்து செல்பவர்கள் அல்ல. அப்படத்தை பற்றி சிறிதேனும் விவாதித்த பின்னரே செல்வர். ஒருமுறை தெரன்ஸ் மாலிக் படங்களில் வரும் ஹைடிகரின் தத்துவப் போக்குகளையும், அவரது திரைப்படங்களில் வரும் இயற்கை குறித்த கருத்துக்களை ரூசோவின் சிந்தனையுடனும் ஒப்பிட்டும் மறுத்தும் விவாதித்திருப்பதைக் கண்டு வியந்திருக்கின்றேன்.

ஆவணப்படத்தின் திரையிடலை நகர் பகுதியில் இருக்கும் திரையரங்கம் ஒன்றில் அமைப்பது தான் சரி எனத் தோன்றியது. ஆர்வமுள்ள தமிழ் மக்கள் பதினைந்து நிமிடம் பயணிப்பதை பெரிய பொருட்டாக கருத மாட்டார்கள். போர்ட்லாண்டில் வசிக்கும் நண்பர் ஜானி ஸ்டாலிங்க்சை அழைத்து ஆவணப்பட திரையிடல் குறித்து பேசினேன். ஜானி சேக்ஸ்பியர் நாடக இயக்குனரும், நடிகரும். இப்போது ஓய்வு பெற்று விட்டார்.  எழுபதுகளின் தொடக்கத்தில் முதலாம் ஆண்டிலேயே கல்லூரியில் இருந்து drop out ஆகி வியட்னாம் போர் எதிர்ப்பு, சூழலியல் பாதுகாப்பு போன்ற செயல்களில் ஈடுபாடு கொண்டு ஹிப்பியாக வாழ்ந்தவர் குரு நித்யாவின் பகவத் கீதை வகுப்பகளைக் கேட்ட பின் இந்தியா கிளம்பி வந்து வர்கலையில் நடராஜ குருவை சந்தித்திருக்கிறார். குருகுலத்தில் ஒரு வருடம் நடராஜ குருவுடன் தங்கி இந்தியத் தத்துவங்கள் பயின்றிருக்கிறார். நடராஜ குரு The Integrated Science of the Absolute புத்தகத்தை முடித்து விட்டு சௌந்தர்ய லஹரிக்கான உரையை தொடங்கிவிட்டிருந்த காலம் அது. ஜானி குருகுலத்தில் தங்கி இருந்த முதல் ஆறு மாத காலத்தில்  நடராஜ குருவின்  செளந்தர்யலஹரிக்கான உரை  நிறைவுற்றதாக குறிப்பிடுகிறார். அப்போது நடராஜ குரு காளிதாசரையும் தினம் வாசித்திருக்கின்றார். தொடர்ந்து நடராஜ குருவின் சமாதிக்கு முந்தைய ஓரிரு மாதக் காலம் வரை குருவின் அறையிலேயே தங்கி உதவியாளராக இருந்தவர் ஜானி. பிறகு, நெடுங்காலம் குரு நித்யாவின் மாணவராக பயின்றவர்.

(ஜானி ஸ்டாலிங்க்ஸ், சேக்ஷ்பியர் நாடக இயக்குனர்)

வெண்முரசு குறித்து முன்பே அவரிடம் பேசியிருக்கின்றேன். ஜானி ஆவணப்பட திரையிடலை போர்ட்லாண்டிலேயே ஏற்பாடு செய்யலாம் என்றார். அவர் தான் கிளிண்டன் திரையரங்கை பரிந்துரைத்தது. கிளிண்டன் திரையரங்கம் 1915 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, நூறு வருடங்களாக தொடர்ந்து செயல் பாட்டில் உள்ள திரையரங்கம். அமெரிக்காவில் உள்ள பழமையான திரையரங்குகளில் ஒன்று. எழுபதுகளில் ஹிப்பிக்கள் போர்ட்லாண்ட் நகரில் அவர்களது கலை நிகழ்வுகளுக்கு பயன்படுத்திய இடம். அவற்றைத் தொடர்ந்து கலைப் படங்களும், சுயாதீனப் படங்களுக்குமான திரையரங்கமாக செயல்பட்டு வருகின்றது. சென்ற ஆண்டு கோவிட் தொடங்கியதும் தான் முதல் முறையாக சில மாதங்கள் மூடப்பட்டது. இந்த ஆண்டின் துவக்கத்தில் பரவலாக வாக்சின் வந்த பிறகு மீண்டும் அரங்கை திறந்திருந்தனர்.

கிளிண்டன் திரையரங்கின் உரிமையாளர்கள் தொடர்பு கொண்டதுமே திரையிடலுக்கு ஒப்புக் கொண்டனர். ஆனால், ஆகஸ்டில் தான் தேதி கிடைத்தது. நான் உடனே பதிவு செய்து விட்டேன். சில நாட்களிலேயே விசு செளந்தர் அனுப்பிய Blu-Ray disk ஐ எனக்கு அனுப்பி வைத்தார்.  Blu-Ray வேலை செய்கின்றதா, குறிப்பாக Subtitles சரியாக வருகின்றதா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக ஜூலை மாத ஆரம்பத்தில் திரையரங்கம் சென்றேன். அதன் உரிமையாளர் லானி ஜோ வாசலில் வந்து என்னை திரையரங்கிற்குள் அழைத்துச் சென்றார். மொத்த திரையரங்கும் காலியாக இருந்தது. ஆவணப்படத்தின் முதல் அரைமணி நேரத்தையும், இராஜன் இசை அமைத்திருந்த நீலத்தீன் கவிகளையும் இரு நூறு பேர் வரை அமரும் வசதி கொண்ட திரையரங்கின் மத்தியில் நான் மட்டும் தனியாக அமர்ந்து ரசித்தேன்.

திரையரங்கத்தின் உள் நுழைந்ததுமே டிக்கட் விற்கும் மேசையில் “Unfit”  என்று தலைப்பிட்ட புத்தகம் ஒன்று வைக்கப்பட்டிருப்பதை கவனித்திருந்தேன். அட்டையில் ஒரு பதின் பெண்ணின் படம் இருந்தது. அவள் இளவயது லானியைப் போல் தெரிந்தாள். அரங்கை விட்டு  வெளி வருகையில் லானியிடம்,  ‘அது நீங்கள் தானா? நீங்கள் எழுதிய புத்தகமா?’ என்று விசாரித்தேன். அந்த புத்தகம் லானியின் ‘memoir’.  நாற்பது ஆண்டுகளாக எனக்குள் நானே புதைத்து வைத்திருந்த நிகழ்வுகள். இப்போது தான் எழுத முடிந்தது என்றார்.

லானி ஓக்லஹாமா மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவின் தெற்கில் இருக்கும் மாகாணமது. கிறிஸ்துவம் சார்ந்த பழமைவாத விழுமியங்களை தீவிரமாக பின்பற்றும் மாகாணங்களில் ஒன்று. லானி ஜானியை விட சற்றே இளையவர். அவர்களது கால கட்ட அமெரிக்காவைப் பற்றி பொதுவாக வெளி உலகிற்கு தெரிந்தது, அது ஹிப்பிக்களின் காலகட்டம் என்பது தான்.  பீட்டில்சின் இசை, Psychedelics, மகரிஷி மகா யோகியின் Transcendental meditation, பகவான் ரஜினிஷ், பாலியல் சுதந்திரம் என மேற்குக் கடற்கரை நகர்களில் வசிக்கும் ஹிப்பிக்கள் அன்றைய அமெரிக்காவின் பழமைவாத விழுமியங்களுக்கு எதிராக பயணிக்கத் தொடங்கிய தலைமுறை. இவற்றில் முக்கியமானது பெண்களுக்கான பாலியல் சுதந்திரம். 1962 ஆம் ஆண்டு Birth Pill அமெரிக்காவில் புழக்கத்திற்கு வருகின்றது. அது பாலுறவிற்கும், கர்பத்திற்கும் இடையே ஆன பினைப்பை மானுட வரலாற்றிலேயே முதல் முறையாக அறுக்கின்றது. அதன் பின்புலத்தில் இளமையை வாழத்துவங்கும் முதல் தலைமுறைப் பெண்கள். அவர்கள் கட்டுடைத்து உணரத் தொடங்கும் சுதந்திரம்.

அதே தலைமுறையைச் சேர்ந்த லானியின் இளமையோ இதற்கு நேர் எதிரானது. தனது பதினாறாவது வயதில் கர்ப்பம் அடைகின்றாள் இளம் லானி ஜோ. அவள் குடும்பத்தார்கள் கருக்கலைப்பிற்கு எதிரானாவர்கள். கருக்கலைப்பு அமெரிக்காவில் மதம் சார்ந்த பெரிய விவாதத்துக்குரிய விஷயம். இன்று அது அரசியலாக்கப்பட்டு விட்டது. அவள் கர்பமாக இருப்பதை அறிந்த உடனே குடும்பத்தார்கள் அவளை பக்கத்து மாகாணமான லூசியானாவில் உள்ள தேவாலயத்தைச் சேர்ந்த மகப்பேறு இல்லம் ஒன்றிற்கு அனுப்பி வைக்கின்றார்கள்.  திருமணம் ஆகா பெண்களுக்கு மட்டுமே ஆன மகப்பேறு நிலையம்.  பெற்றோர்கள் கைவிட்ட வருத்தத்தில் இருக்கும்  லானி தன்னை ஒத்த வயதுடைய இளம் கர்பினிகளிடம் தோழமையை உணர்ந்து மகிழ்வுடன் வாழத் தொடங்குகின்றாள். அன்னையாக உணரும் நொடிக்கான ஆவல் நிறைந்த நாட்கள் விரைந்து கரைகின்றன.

லானி மகனுக்கு பிறப்பளிக்கின்றாள். மகன் பிறந்த வாரத்தில் குடும்பத்தார்களிடம் இருந்து மகப்பேறு இல்லத்திற்கு செய்தி வருகின்றது. அதை அறிந்தவள் மேலும் மகிழ்வுறுகின்றாள். ஆனால், அவர்களோ லானி ஜோவை அவ்வாரத்திலேயே மகனைத் தத்துக் கொடுக்கச் சொல்லி செய்தி அனுப்புகின்றனர். வேறு வழியறியாது மகனை தத்துக் கொடுக்கும் இல்லம் ஒன்றில் ஒப்படைத்து விட்டு தனியளாக வீடு திரும்புகின்றாள் லானி. அவளை ஒன்றும் நிகழாதது போல இயல்பான வாழ்க்கையை வாழச் செய்கின்றனர். மகனைப் பிரிவுற்ற அவ்வன்னையின் பெருவலியின், நாற்பது வருடங்களாக அவனைக் கண்டு கொள்ள விழையும் அனையா தவிப்பின் நினைவுக்குறிப்புகள் தான் ‘Unfit’.  நான் குந்தியின், கர்ணனின் கதைகளை லானியிடம் கூறினேன்.

அவருடனான இந்த உரையாடல் வெண்முரசு திரையிடலுக்கான சரியான அரங்கம் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்கின்றேன் என்ற உறுதியை அளித்தது.  சமீபத்தில் தன் மகனை கண்டடைந்து விட்டதாக லானி மகிழ்வுடன் சொன்னார். மனம் சற்று எளிதாக உணரத் தொடங்கியது. லானியிடம் திரையிடலன்று சந்திக்கிறேன் என்று விடைபெற்றுக் கொண்டேன்.

நான் ஒருங்கிணைக்கும் முதல் இலக்கிய நிகழ்வு இது. வெண்முரசிற்கான நிகழ்வாக அமைந்ததில் மகிழ்வு. போர்ட்லாண்டு  திரையிடல் குறித்த செய்தி உங்கள் தளத்தில் வெளி வந்ததும் வெண்முரசு வாசகர்கள் சிலர் தொடர்பு கொண்டிருந்தனர். ஜானியின் நண்பர்களும், குரு நித்யாவின் மாணவர்களுமான தெபோரா புக்கானன், ஸ்காட் டைட்ஸ்வொர்த், ஆண்டி லார்க்கின் ஆகியோரும்,  மகாபாரதம் என்ற பெயரையே முதல் முறையாக கேள்விப்படும் நண்பர்கள் சிலரும் வெண்முரசு ஆவணப்படத்தைக் காண விருப்பம் தெரிவித்திருந்தனர். வாசகர் முத்தையா இராஜ கோபாலன் அவர்களும், அவரது மகள் சஹானாவும் நிச்சயம் வருவதாகச் சொன்னார்கள். சஹானா பனிமனிதன், யானை டாக்டர் போன்ற கதைகளின் வாயில்களாக உங்கள் படைப்புலகை அறிமுகம் செய்து கொண்டிருந்தார். முத்தையா அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைக்க இறுதிவரை உதவியாக இருந்தார்.

அனைவருக்கும் ஏற்றார் போல மகாபாரதம் குறித்தும், உங்களது எழுத்துலகம் குறித்தும்,வெண்முரசு குறித்தும் மூன்று நிமிடங்களுக்குள் அடங்கும்  சிறிய அறிமுக உரை ஒன்றை அளித்தபின் ஆவணப் படத்தை தொடங்குவதாக திட்டம். உரையைத் தயாரிக்க கடலூர் சீனு உதவினார். சென்னை விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர் இராஜகோபாலனும், தோழி கரினாவும் ஆங்கில உரையின் பிழைத்திருத்தங்கள் செய்யவும், நிகழ்வை சீராக ஒருங்கிணைக்கும் வழிமுறைகளையும் அளித்து உதவினர்.  இலக்கிய நண்பர்கள் பாசிலும், ஜேக்கப்பும் நிகழ்வன்று உதவினார்கள்.

(ஶ்ரீனிவாசன் சடகோபன், சுப்பு தியாகராஜன்,ஶ்ரீனிவாசன் சங்கரன், சஹானா)

விருப்பம் தெரிவித்திருந்த அனைவரும் இன்ன பிற நண்பர்களும் திரையிடலுக்கு வந்திருந்தனர்.  வெண்முரசு வாசகர்கள் ஶ்ரீனிவாசன் சங்கரன், சுப்பு தியாகராஜன் மற்றும் ஶ்ரீனிவாசன் சடகோபன் ஆகியோர் சியாட்டலில் இருந்து கிட்டதட்ட இரு நூறு மைல்கள், நான்கு மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. அனைவருக்கும் ஆவணப் படம் பிடித்திருந்தது.

‘கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்? ‘  இன் இசை அமைப்பு ஆவணப் படத்தின் உச்சம். மகாபாரதத்திற்கான theme music சிறப்பாக இருந்தது. நண்பர்கள் நிச்சயம் திரையரங்கங்களில் சென்று அவற்றைக் கண்டும் கேட்டும் ரசிக்க  வேண்டும்.

புதியவர்களுக்கு மகாபாரதத்தையும், காப்பியத் தன்மை கொண்ட ஒரு மாபெரும் சமகால இலக்கியப் படைப்பையும் அறிமுகம் செய்து கொண்டதில் பேர் உவகை. இது உலகின் நீளமான நாவல் என்பது மட்டும் அல்லாது அதன் பிற முக்கியத்துவங்களை குறித்தும் கலந்துரையாடினோம்.

உலக இலக்கிய வரலாற்றை எடுத்துக் கொண்டோம் என்றால் சார்லஸ் டிக்கின்ஸ், தாஸ்தாவெஸ்கி போன்றவர்களின் நாவல்கள் வார இதழ்களில் தொடர் பிரசுரமாக வெளி வந்துள்ளன. ஆனால், தினம் ஒரு அத்தியாயம் என ஆசிரியர் எழுதுவதை ஒட்டியே வாசகர்களும் பின் தொடர்ந்து வாசித்தல், அதுவும் இணையதளத்தில் இலவசமாக, என்பது உலக இலக்கிய வரலாற்றில்  வெண்முரசிற்கு முன் நிகழ்ந்தது இல்லை என்பதை அமெரிக்க நண்பர்கள் கூறினர்.

மேற்குலகம் ஒற்றை ஆண் கடவுளே போதும் என்றும் பெண் தெய்வங்களே வேண்டாம் என்றும் என்றோ முடிவு செய்து விட்டதன் விளைவுகள் குறித்தும், இந்தியப் பண்பாடு பல்வகைத் தெய்வங்களை இன்றும் வழிபட்டு வருவதன் முக்கியத்துவத்தையும்  பேசினார்கள்.

உலகிற்கு இந்திய மரபின் மிக முக்கியமான கொடைகள் என்றால் புத்தரும், போதிசத்வரும், கிருஷ்ணனும் தான் என்று ஜானி கூறினார்.  அவர், ‘எங்கள் கடவுள்  சிலுவையில் அரையப்பட்டு நிற்கின்றான். உங்களவன் புல்லாங்குழல் இசைத்து, கோபிகைகள் சூழ வாழ்வை ரசித்தவாறு நிற்கின்றான். கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்’ என்றவாறு புன்னகைத்தார். தொடர்ந்து, ‘கிருஷ்ணனின் குறியீட்டிற்கு சற்றேனும் அருகில் வரும் மேற்கின் ஒரு ஆளுமை என்றாள் அது வால்ட் விட்மென் மட்டும் தான். உண்மையில் அவரை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று எங்களவர்களுக்கு நீண்ட காலம் விளங்கவில்லை. இப்போது தான் சிறிதேனும் விட்மனை புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளோம்’ என்றார்.

திரையிடல் முடிந்த பின் குறைந்தது அரை மணி நேரமாவது உரையாடி பிறகு தான் கலைந்து சென்றனர். நிறைவான மாலை.

பிரபு போர்ட்லண்ட்

முந்தைய கட்டுரைநுரைக்குமிழி- சிறுகதை
அடுத்த கட்டுரைஅறிவதும் அறியப்படுவதும்