மூன்றாவது தனிமை

வயதடைதல்

வனம்புகுதல்

நான்கு வேடங்கள்

அன்பு ஜெ, வணக்கம்.

எனக்கு 60 வயதாகிறது. 33 வருட குடும்பவாழ்க்கை. தற்பொழுது சில காரணங்களால் அடிக்கடி தனிமையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

என் மகள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். ஒன்றரை வயதில் பேத்தி இருக்கிறாள். மகளையும், பேத்தியையும் கவனித்துக்கொள்ள,  என் மனைவி மாதத்தின் பல நாட்கள் மகள் வீட்டிலேயே இருக்கவேண்டிய நிலை. (எனக்கு பெண் மட்டுமே, மகன் இல்லை) இதனால் நான் மட்டும் தனியாக வீட்டில் இருக்க வேண்டி உள்ளது. ஓரளவு சமைப்பேன். வீட்டை பராமரிப்பதிலும் எந்த சிரமும் இல்லை.

புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது, prime video, zee5, hotstar போன்ற OTT தளங்களுக்கு subscribe செய்து சீரியல்கள் – திரைப்படங்கள் பார்ப்பது, ஒவ்வொரு நாளும் உங்கள் தளத்தை படிப்பது, மாலை நேரங்களில் ஒரு இரண்டு மணி நேரம் வெளியே செல்வது, இதுதான் தற்போது என் தினசரி நடப்புகள். (உத்தியோக பூர்வமான பணி இல்லாததால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வேலை இல்லை) சொந்த வீடு என்பதால், குடும்பச் செலவிற்கும் தற்போதுவரை எந்த சிரமமும் இல்லை.

எனினும், ஒரு வெறுமை அவ்வப்போது கவ்வுகிறது. சமூகபணிகள் மற்றும் நண்பர்களுடனான வெற்று அரட்டையிலும் மனம் கொள்ளவில்லை. உளச்சோர்வில்லாமல், விதி என்னை கைவிட்டு விட்டதோ என்கிற சுயபரிதாபமும் இல்லாமல், வாழ்வின் இந்த பிற்பகுதி தனிமையை எப்படி எதிர்கொள்வது என்று புரியவில்லை. இந்நிலையில் உங்களின் ஆலோசனையையும், வழிகாட்டலையும் எதிர்நோக்குகிறேன்.

அன்புடன்,

“ஆர்”

***

அன்புள்ள ஆர்,

ஒவ்வொரு அகவையிலும் அதற்கான தனிமை உண்டு. ஒவ்வொரு தனிமையும் ஒவ்வொரு வகை. தனிமை மானுடனின் இயல்பான நிலை எனப் புரிந்துகொண்டால் இந்த வினாவின் அடிப்படை தெளிவாகிவிடும்.

நாம் நம் வாழ்க்கையை வைத்து யோசித்துப் பார்ப்போம். நமக்கு தனிமை இல்லாமலிருப்பது சிறுவர்களாக இருக்கும்போது மட்டும்தான். நோய், குடும்பச்சிக்கல்கள் போன்ற காரணங்களால் அப்போதும் தனிமையை உணரும் சிறுவர்களும் உண்டு. அவர்கள் விதிவிலக்கானவர்கள். நான் பொதுமையை பற்றி மட்டுமே பேசுகிறேன்.

இளைஞர்களாக உணரும்போது நாம் ஓர் ஆழ்ந்த தனிமையை உணர்கிறோம். நண்பர்கள் சூழ இருக்கும்போதும் அந்தத் தனிமை கூடவே இருக்கிறது. காலத்தின் முன், சமூகத்தின் முன் தன்னந்தனியாக நிற்கிறோம். ஆகவே நாம் எப்போதுமே ‘நான், எனது’ என்றே யோசித்துக் கொண்டிருக்கிறோம். உள்ளம் பகற்கனவுகளால் நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் காலம் அது.

எண்ணிப்பாருங்கள், எத்தனை பகற்கனவுகள். உள்ளம் கொள்ளாத கற்பனைகள். அப்பகற்கனவுகளை பெருக்கிக்கொள்ளவே நாம் புனைவிலக்கியம் வாசிக்க வருகிறோம். அதன் கதைநாயகர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அது அளிக்கும் வெவ்வேறு உலகங்களில் மானசீகமாக வாழ்கிறோம்.

அந்தப் பகற்கனவுகள் இருவகை. ஒன்று, காமம் மற்றும் உறவுகள் சார்ந்த களம். இன்னொன்று, இலட்சியவாதம் மற்றும் வாழ்க்கைச் சாதனைகள் பற்றிய களம். இரண்டும் மாறிமாறி நம்மை அலைக்கழிக்கின்றன. ஓர் இலட்சியத்துணைவி, இலட்சியக் குடும்பவாழ்க்கை, குறையாத காமமும் காதலும். இன்னொரு பக்கம் மாபெரும் இலட்சியவாழ்க்கை, தொழிலிலோ அரசியலிலோ வெற்றிகள், புகழ், செல்வம், உலகை ஆட்கொள்ளுதல். அப்படியே திளைத்துக் கொண்டிருக்கிறோம்.

அன்றிருக்கும் நம் தனிமையை முழுக்க அந்தப் பகற்கனவுகளைக் கொண்டு நிறைக்கிறோம். அந்தத்தனிமையை நாம் பகிர்ந்து கொள்வதில்லை. நம் பகற்கனவுகளை எவரும் அறிவதில்லை. அக்கனவுகளை தொடர்ந்து ஓடுவதில் பத்துப்பதினைந்து ஆண்டுகள் செல்கின்றன.

அதன்பின் நாற்பதை ஒட்டிய ஆண்டுகளில் மீண்டும் ஒரு தனிமை வந்தமைகிறது. முதலில், புறவுலகில் நாம் செல்லக்கூடுவது எதுவரை என நமக்கே தெரிகிறது. நமது திறனின் எல்லைகள் தெரிகின்றன. நம் சூழலின் வரையறைகளும் தெரிகின்றன. இவ்வளவுதான் என ஆகிவிடுகிறது. நாம் எந்த களத்தில் செயல்படுகிறோமோ அதில் திறனாளராக ஆகிவிட்டிருப்போம். கூடவே சலிப்பும் கொண்டிருப்போம்.

அதேபோல குடும்ப வாழ்க்கையில் காதல், காமம் என்பதன் மெய்யான அளவுகள் தெளிவாகியிருக்கும். அதில் கலந்திருந்த ‘ரொமாண்டிக்’ கற்பனைகள் கொஞ்சம் அகன்றிருக்கும். மண்ணில் நின்று பார்க்க ஆரம்பித்திருப்போம். காதல், காமம் என இருந்த குடும்ப வாழ்க்கை குழந்தைகள், பொறுப்பு என்று ஆகியிருக்கும்.

இந்த இரண்டாவது தனிமையில் நாம் எஞ்சிய முழு ஆற்றலையும் திரட்டி புதிய கற்பனைகளை உருவாக்க ஆரம்பிப்போம். சிலர் வேலையை விட்டு சுயதொழில் ஆரம்பிக்கிறார்கள். தங்கள் அகத்தே திகழ்ந்த கனவை தேடிச்செல்ல சிலர் முயல்கிறார்கள். ஆகவே இயற்கை வேளாண்மை, கிராமத்திற்குத் திரும்புதல், இசைப்பயிற்சி என எதையாவது தொடங்குகிறார்கள்.

அதாவது இளைஞனாக இருந்தபோது எப்படி கனவுகளுடன் வாழ்க்கையை தொடங்கினோமோ அதையே திரும்பவும் செய்ய விரும்புகிறோம். புதிய வாழ்க்கையை தொடங்க முயல்கிறோம். உண்மையில் கவனமாகச் செய்தால் இது நல்ல விஷயம்தான். அந்த அகவைக்குரிய தனிமையை இது இல்லாமலாக்கும். அத்தனிமையின் விளைவான சோர்வை அழித்து ஊக்கம் கொண்டவர்களாக ஆக்கும்.

ஆனால் நாம் அதுவரை அடைந்த அனைத்தையும் துறந்து செல்லக்கூடாது. நாம் உருவாக்கிக் கொண்ட சமூக, பொருளியல் அடித்தளத்தை இழந்து அபாயகரமாகச் செல்லக்கூடாது. நம்முடைய விழைவுகளை பிறர்மேல் சுமத்தலாகாது. அதன்பொருட்டு பிறர் விலைகொடுக்கும்படி ஆகக்கூடாது. அப்படி நிகழ்த்திக்கொள்ள முடியும் என்றால் அந்த புதிய முயற்சிகள் வாழ்க்கைக்கு முக்கியமானவையே.

அந்த இரண்டாவது கனவுப்பருவம், அல்லது இரண்டாவது மாற்றம் இல்லாதவர்கள் அத்தனிமையை என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். அன்றாடத்தில் சலிப்புறுகிறார்கள். துணை தேடுகிறார்கள். குடி உட்பட பல்வேறு சிக்கல்களில் சென்று சிக்கிக்கொள்கிறார்கள்.

மூன்றாவது தனிமை இப்போது நீங்கள் வந்தடைந்திருப்பது. இது வேலையில் இருந்து ஓய்வுபெற்றபின் உருவாவது. அப்போது உலகியல் கடமைகள் அனேகமாக முடிந்துவிட்டிருக்கின்றன. உலகியல் சவால்களிலும் ஆர்வம் இல்லாமலாகி விட்டிருக்கிறது. குடும்பம் என்னும் பொறுப்பு இல்லாமலாகி உறவுகள் சற்று சம்பிரதாயமானவையாக ஆகிவிட்டிருக்கின்றன. ஏனென்றால் அடுத்த தலைமுறை வாழும் உலகம் நாம் புரிந்துகொள்ள முடியாததாக, அயலானதாக உள்ளது. நாம் ஒதுங்கிவிடுகிறோம்.

மூன்றாவது தனிமை முன்பெல்லாம் அவ்வளவு பெரிதாக இருந்ததில்லை. ஏனென்றால் அன்று அது முதுமை. இன்று அது இன்னொரு இருபத்தைந்தாண்டுக்கால வாழ்வின் தொடக்கம். இலக்கு இல்லாமல், செயற்களம் இல்லாமல் இருப்பதன் சலிப்பு அந்த தனிமையை நிறைக்கிறது.

பலர் எதிர்மறை உணர்வுகளால் அந்தத் தனிமையை நிறைத்துக் கொள்வதை காண்கிறேன். அரசியல், மதவெறிச் செயல்பாடுகள், சாதிச்சங்க நடவடிக்கைகள் என சிலர் தீவிரமாகிறார்கள். சிலர் குடும்பச் சிக்கல்களில் ஈடுபட்டு தங்களை மூழ்கடித்துக் கொள்கிறார்கள்.

உண்மையில் எந்த நேர்நிலைச் செயல்பாடுகளைவிட இந்த எதிர்மறைச் செயல்பாடுகள் மிகத்தீவிரமாக உள்ளிழுத்துக் கொள்பவை. நாம் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. சொல்லுக்குச் சொல் எதிர்வினை வரும். செய்வதெல்லாம் எதிர்ச்செயலுக்கு ஆளாகும். ஆகவே நம்மை முழுக்க உள்ளேயே பிடித்து வைத்திருக்கும்.

எதிர்மறைச் செயல்பாட்டில்  நம்மிடமிருந்து நாமே அறியாத ஆற்றல் வெளியாகிறது. நாம் மிகுந்த ஆவேசத்துடன் செயல்படுகிறோம். காழ்ப்பைக் கக்குகிறோம். சலிக்காமல் வாதிடுகிறோம். தகவல்களை நினைவில் வைத்திருக்கிறோம். அவற்றைத் திரிக்கிறோம். கற்பனையை பெருக்கிக்கொண்டே செல்கிறோம். எதிரிகளையும் நண்பர்களையும் உருவாக்கிக் கொள்கிறோம். வெறுப்பும் கோபமும் நம் மூளையை உச்சகட்ட செயல்பாட்டில் வைத்திருக்கின்றன. அது மிகப்பெரிய போதை.

பொழுதுபோக்கு என்றால் எதிர்மறைச் செயல்பாடு போல் வேறில்லை. ஆனால் அது நம்மை உள்ளூர அமைதியற்றவர்களாக ஆக்குகிறது. கசப்பை நம்முள் நிறைக்கிறது. அது நம்மை நோயுற்றவர்களாக்குகிறது. சலிப்பை வெல்லத் துன்பத்தை தேடிக்கொள்வதுதான் அது.

நாம் என்ன கற்பனை செய்துகொள்கிறோம் என்றால் அந்த எதிர்மறைத் தன்மையை நாம் வெளிப்படுத்தும் களத்தில் மட்டும் எதிர்மறையாக இருக்கிறோம், அதற்கு வெளியே வந்து நாம் இயல்பாகவும் இனிதாகவும் இருக்கிறோம் என்று. அது உண்மை அல்ல. நீங்கள் முகநூலில் காழ்ப்பரசியலில் களமாடினீர்கள் என்றால் அதற்கு வெளியே அன்றாட வாழ்க்கையிலும் அதே காழ்ப்பியல்பு கொண்டவர்களாக மாறிவிட்டிருப்பீர்கள். இயல்பாகவே உங்கள் ஆளுமை அப்படி திரிபடைந்துவிட்டிருக்கும். உங்களை அறியாமலேயே. அன்றாட வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நுட்பமாக அந்த எதிர்மறைத்தன்மை வெளிப்படும்.

எதிர்மறைத்தன்மைக்கு உள்ள இயல்புகளில் ஒன்று அது நேர்நிலை மனப்பான்மை கொண்டவர்களை உங்களிடமிருந்து விலக்கிவிடும். எதிர்மறைப் பண்பு கொண்டவர்களை உங்களை நோக்கி ஈர்க்கும். உங்கள் வட்டமே நீங்கள் கொண்ட அதே காழ்ப்பையும் கசப்பையும் கொண்டவர்களால் ஆனதாக மாறிவிடும். நேர்நிலையான இனியவையே நிகழா உலகமாக ஆகிவிடும். எவரையாவது மட்டம்தட்டுவது, வசைபாடுவது ஆகியவை மட்டுமே இனிமையென உங்களால் உணரப்படும். அதை பங்கிடவே ஆளிருக்கும்.

ஆனால் உங்கள் ஆழம் தவித்துக் கொண்டிருக்கும். ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்யவில்லை என நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகவே அந்த எதிர்மறைக் களத்தைவிட்டு விலகவும் நினைப்பீர்கள். அதற்காக அவ்வப்போது முயல்வீர்கள். ஆனால் எந்தப்போதையை விட்டும் எளிதில் விலகமுடியாது. ஏனென்றால் போதை என்பது நம்மை ஆட்கொண்டு நம் உடல், உள்ளம். சுற்றம் எல்லாவற்றையும் அதுவே வடிவமைத்திருக்கிறது. போதையை விட்டால் நாம் அனைத்தையும் விட்டுவிட வேண்டியிருக்கும்.    ஒரு போதையை விடுவதென்பது செத்து மீண்டும் பிறப்பதுதான். அது எளிதல்ல. போன சுருக்கிலேயே திரும்பி வந்துகொண்டே இருப்போம்.

மூன்றாவது தனிமையை எதிர்கொள்ள நாம் அதைப் புரிந்து கொள்ளவேண்டும். நாம் உலகியல் பொறுப்புகளையும் சவால்களையும் கடந்துவிட்டோம். உலகியலில் மெய்யாகவே நாம் ஆற்றவேண்டியது ஏதுமில்லை. பொய்யாக உலகியலை பாவனை செய்துகொள்ளலாம், ஆனால் அது ஏமாற்றத்தையே அளிக்கும். இங்கே நாம் நாடுவது எதை என நாமே அறிந்துகொள்ளவேண்டும்.

முதலில் ஒன்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். பலரும் எண்ணுவதுபோல கேளிக்கைகள், பொழுதுபோக்குகள் எவருக்கும் தனிமையை நிறைப்பதில்லை. அவை உண்மையில் தனிமையை வளர்க்கின்றன. நாளுக்கொரு சினிமா, சங்கீதம் ஆகியவை எந்தவகையிலும் போதுமானவை அல்ல.

நாம் வாழ்நாள் முழுக்க ஓய்வு, கேளிக்கைக்காக ஏங்கியிருப்போம். ஆகவே முதிய வயதில் முழுநேரமும் ஓய்வும் கேளிக்கையுமாக வாழவேண்டும் என்று கற்பனை செய்வோம். ஆனால் அதிகம்போனால் ஓராண்டு அவ்வண்ணம் ஈடுபட முடியும், அதன்பின் சலிப்பே எஞ்சும்.

ஏனென்றால் கேளிக்கைகளில் நாம் ‘பார்வையாளர்கள்’. எந்தவகையிலும் ‘பங்கேற்பாளர்கள்’ அல்ல. வெறும் பார்வையாளர்களாக இருப்பதில் செயலின்மை உள்ளது. மானுட உடலும் உள்ளமும் செயலுக்காக வடிவமைக்கப்பட்டவை. செயலின்மையில் சோர்வும் சலிப்பும் அடைபவை.

மற்றவற்றுடன் ஒப்பிட வாசிப்பு மேல். ஏனென்றால் அதில் நம் பங்கேற்பு இல்லாமல் இருக்க முடியாது. வாசிப்பை ஒட்டி எழுதவும் ஆரம்பித்தால் அது செயற்களமே. ஆனால் அது அனைவராலும் செய்யக்கூடுவது அல்ல. அதற்கு ஓர் எல்லையும் உள்ளது. அதற்குமேல் நாம் செயலாற்றக்கூடிய களங்கள் தேவை.

ஏன் நாம் செயல்படவேண்டும்? இரண்டு விஷயங்களை நாம் நாடுகிறோம். ஒன்று ஆணவ நிலைப்பேறு. நாம் இங்கிருக்கிறோம், இவ்வாறாக வெளிப்படுகிறோம் என நாம் நமக்கே சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. விட்டுவிடுதலையாவது வரை ஆணவம் நிறைவடைந்தே ஆகவேண்டியிருக்கிறது. நம்மை பிறருக்கு தெரிவதும், அவர்கள் நம்மை மதிப்பதும் இன்றியமையாததாக உள்ளது. நாம் சிலவற்றைச் சிறப்புறச் செய்து கொண்டிருக்கிறோம் என்று நாமே உணரவும் வேண்டியிருக்கிறது.

இரண்டாவது, இந்த ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமான ஒரு நிறைவு. நம் வாழ்க்கையை நாம் தொகுத்துக் கொண்டே இருக்கிறோம். அதன் நோக்கமென்ன, அதன் நெறி என்ன என்று பார்க்கிறோம். நமக்கு நிறைவடையும்படி அது சென்று முடியவேண்டுமென நம் உள்ளம் எதிர்பார்க்கிறது.

சுருக்கமாக, அங்கீகாரம் மற்றும் ஆன்மநிறைவு இரண்டும் நம் மூன்றாவது தனிமையை நிரப்புவன. நமக்குத் தேவையாக இருப்பவை அவையே.

பழங்காலத்தில் இவை ஒவ்வொன்றையும் கணித்தே மூன்றாவது தனிமையை வெல்ல வானப்பிரஸ்தம் என்னும் வழிமுறையை உருவாக்கினர். உள்ளம் உலகியல் கடமைகளில் சலிப்புறும் காலம். அவற்றை முழுக்க விலக்கி தன் இருப்புக்கான அங்கீகாரம், தன் வாழ்க்கைக்கான நிறைவு ஆகியவற்றை மட்டும் செய்யும் வாழ்க்கையை தெரிவுசெய்வதுதான் அது. பழங்காலத்தில் அறச்செயல்களும் தவமும் அவ்வாறு அங்கீகாரம் ஆன்மநிறைவுக்கான வழிகளாகக் குறிப்பிடப்பட்டன.

இன்றும் அதே உளச்சூழல் உள்ளது. அறுபதை ஒட்டிய அகவைகளில் அது தேவையாகிறது. அப்போது உருவாகும் மூன்றாவது தனிமையை வெல்ல எவை நம்மை அடையாளம்கொள்ள, அகநிறைவுகொள்ளச் செய்பவை என்பதைப் பார்க்கவேண்டும். எவை நம்மை ஆன்மிகமாக முழுமை செய்பவை என்பதை பார்க்கவேண்டும்.

நான் பார்த்தவரை பொதுவான அறப்பணிகளில் பிறருடன் இணைந்து கூட்டாகச் செயல்படுபவர்கள் அந்த அகநிறைவை அடைகிறார்கள். இருத்தலின் நிறைவை. அடையாளம் கொள்ளுவதன் மகிழ்ச்சியை. நான் சாதிச்சங்கத்தில் ஈடுபடுவதையோ அறக்கட்டளைகளில் ஊடுருவுவதையோ சொல்லவில்லை. மெய்யான அறப்பணிகளைச் சொல்கிறேன். அப்படிப் பலரை நான் அறிவேன். அவரவர் இயல்புக்கும் திறனுக்கும் ஏற்ப அவை வேறுபடும்.

ஓர் உதாரணம் என்றால் நானறிந்த ஒருவர் ஓர் அறநிறுவனத்துடன் இணைந்து பழங்குடிப் பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உதவிசெய்யும் பணியைச் செய்கிறார். ஓய்வு பெற்றபின் தொடங்கி இப்போது இருபத்திரண்டு ஆண்டுகளாக அப்பணியைச் செய்கிறார். அவரை நிறைவும் கனிவும் கொள்ளச்செய்கிறது அப்பணி.

அத்துடன் ஆன்மிக நிறைவுக்கானவற்றையும் செய்தாகவேண்டும். அது பக்தியானாலும் சரி, தியானமானாலும் சரி. அவரவர் இயல்புப்படி. அதிலும் இணையுள்ளம் கொண்டவர்களுடன் சேர்ந்து புனித பயணங்கள் செய்வது, உழவாரப் பணிகள் செய்வது, முகாம்களுக்குச் செல்வது என கூட்டுச்செயல்பாடுகளே உதவுகின்றன.

தனியாக ஈடுபடலாமா? செய்யலாம். ஆனால் அச்செயல்பாடுகளில் விரைவிலேயே நாம் ஆர்வமிழப்போம். ஏனென்றால் நம் வாழ்க்கையின் ஒழுங்கை நம்மால் எளிதில் மாற்றிக்கொள்ள முடியாது. கூட்டாக ஈடுபட்டால் அந்த ஒழுக்கு நம்மையும் இழுத்துச் செல்லும். கூட்டாகச் செய்யத் தேவையில்லாதபடி நாம் நம்மில் நிறைவுற்றோமென்றால் தனியாகவும் செய்யலாம்.

மூன்றாவது தனிமையை  அவ்வண்ணம் வெல்லலாம். நான்காவது தனிமை? காலமும் வெளியும் நம்மைச் சூழ்ந்திருக்க நாம் கொள்ளும் முதல்முடிவான தனிமை? அது ஒவ்வொரு உயிருக்கும் உள்ளது. எல்லா உயிர்களும் தன்னந்தனிமையிலேயே உயிர்விடுகின்றன. மூன்றாவது தனிமையை கடந்தவர்களுக்கு நான்காவது தனிமை துயரமானது அல்ல, இனிய நிறைவு அது.

ஜெ

விடுதல்

வானப்பிரஸ்தம் – கடிதம்

முந்தைய கட்டுரைதெவிட்டாதவை
அடுத்த கட்டுரைகர்ணனும் பீஷ்மரும்- கடிதம்