சதீஷ்குமார் சீனிவாசனின் இக்கவிதைகள் அனைத்திலுமே ஓர் இலையுதிர்காலத்து உளச்சித்திரத்தை அடைந்துகொண்டிருந்தேன். உண்மையில் இந்தியச்சூழலில் இலையுதிர்காலம் என்பது இல்லை. சில மரங்கள் ஆடிமாதத்து காற்றில் இலையுதிர்க்கும். ஏராளமானவை ஏப்ரல் மாதத்தில் காய்ந்து இலையுதிர்க்கும். இலையுதிர்காலம் என்பது பனிபொழியும் நிலங்களுக்கு உரிய ஒரு நிகழ்வு. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குளிர்காலத்திற்கு முன் மெல்ல உருவாகும் இலையுதிர்காலம் ஒரு சிம்பனியின் முடிவு போல மெல்லமெல்ல அடங்குவது.
ஒவ்வொரு இலையாக உதிரத்தொடங்குகின்றது. பின்னர் இலைமழை. காற்றில் இலைச்சுழல். மெல்ல இலைகள் மண்ணாக அமைகின்றன. எஞ்சும் ஓரிரு இலைகளுடன் துயரத்தில் மூழ்கியென நின்றிருக்கின்றன வெறுங்கிளை மரங்கள். எஞ்சித்தயங்கி நின்றிருக்கும் இலைகளைப் பார்க்கையில் மரம் அவற்றையும் உதிர்க்க எண்ணுகிறதா, அவற்றையேனும் தக்கவைக்க முயல்கிறதா என்ற எண்ணம் ஏற்படும். இறுதி இலை ஒரு முடிவெடுத்தது போல சட்டென்று உதிர்வதைப் பார்ப்பது அளிக்கும் துணுக்குறல் ஓர் ஆழ்ந்த அகஅனுபவம்.
இப்போதெல்லாம் பறவைகளை யாரும் கனவு காண்பதில்லை
ஒரு புகைப்படம்போல அசையாதிருக்கின்றன உணர்ச்சிகள்
இரண்டு நாட்களாக நானொருவரை
விரும்புவதை விட்டுவிட்டேன்
அவரும் எப்போதோ அந்த
நிபந்தனைகளிலிருந்து
வெளியேறி இருந்தார்
குறைந்தபட்சமாய் உயிரோடிருப்பது மாதிரி
குறைந்தபட்ச நிபந்தனைகளோடு
இருக்கலாம் என இனி யாரிடமும் கேட்க முடியாது
நான் மட்டுமே இருக்கும் சுதந்திரம்
தனிமையில் இறந்துகொண்டிருக்கிறது
இப்போதெல்லாம் பறவைகளை யாரும் கனவு காண்பதில்லை
ஒரு புகைப்படம்போல அசையாதிருக்கின்றன உணர்ச்சிகள்
இவ்வரிகள் வெறுமே உணர்ச்சிகளை முன்வைக்கின்றன. கவிதையாக முயல்வதில்லை. ஆனால் இரு கூறுகளால் இவை கவிதையாகின்றன. ஒன்று, இயல்பாக வந்தமையும் படிமங்கள். இரண்டு வரிகளுக்கு நடுவே உள்ள இடைவெளி. அங்கே நம் உள்ளம் தாவிச்செல்வதனால் கவிதை நிகழ்கிறது.
இப்போதெல்லாம் பறவைகளை யாரும் கனவு காண்பதில்லை என்ற வரிக்கும் ஒரு புகைப்படம்போல அசையாதிருக்கின்றன உணர்ச்சிகள் என்ற வரிக்கும் அர்த்தபூர்வமான தொடர்பு ஏதுமில்லை. ஆனால் உணர்வுநிலை இன்று. இரண்டு வரிகளையும் இணைக்கும் உணர்வுநிலைக்கு செல்லும் வாசகன் கவிதையை அடைகிறான்
அத்துடன் விந்தையான ஒரு வரி “நான் மட்டுமே இருக்கும் சுதந்திரம் தனிமையில் இறந்துகொண்டிருக்கிறது” வந்து ஒரு தசைத்துண்டு போல உயிருடன், குருதியுடன் நம் முன் கிடக்கிறது. இவைதான் கவிதையின் தொடுமுனைகள். அவ்வரிகளை ஏந்தியிருக்கும் ஓர் அனுபவ மண்டலத்தை சாதாரணமாகச் சொல்ல முயல்கின்றன நடுவே உள்ள வரிகள். அவை கவிதை அமர்ந்திருக்கும் பீடம்போல
பழக்கப்பட்ட இலைகள் காத்திருக்கின்றன
தீவிரம் புனலென பாயத்தொடங்கி
கரையின் ஈரமாக கொஞ்சம்தான் மிச்சமிருந்தது
காற்றிலைசைந்து பழக்கப்பட்ட இலைகள்
காற்றுக்காக காத்திருக்கின்றன
சலனமற்று
நாளை என்றும்
விடியலென்றும்
அற்புதங்கள் நிகழும் என்றும்
அப்படி ஒரு
வீம்புபிடித்த வீணான நம்பிக்கைகள்
அசைவிலா இலைகளின் மரம். அது வானைநோக்கிக் காத்திருக்கும் தவம். மீண்டும் மீண்டும் எழுதப்பட்ட பின்னரும் அந்த படிமம் புதியதென நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பலசமயம் கவிதை என்பதே வாழ்க்கையில் இருந்து பெற்ற உணர்வுகளை இயற்கை நோக்கி எய்துவிடுவதுதானோ என்று படுகிறது.
உயரமான கட்டிடங்களின் நிழலைத் தாளமுடியாமல் ஏந்தி நின்றிருக்கும் அசையமுடியாத இலையை அசைக்கும் காற்று போல சிலசொற்கள் எழுந்து கவிதையாகின்றன.
ஞாபகம் பிளந்துகொண்டது
எரியும் வெயில் பொழுதில்
ஒரு இருளை சுமந்தபடி நடப்பது
பிரத்யேகமான விசயமாகப்படவில்லை
ஹாரன் ஒலியில்
ஞாபகம் பிளந்துகொள்கிறது
வாழ்க்கைபற்றிய உபந்நியாசங்கள்
உயரமான கட்டிடங்களின் நிழல்
ஒரு தனித்த இலைமீது விழுவது மாதிரி
விழுகிறது
எந்தப் பக்கமும் தானே
நகரமுடியாத இலையை
அவ்வப்போது வீசும் காற்று
நான்கு திக்குகளிலும் சற்றே
புரட்டிப் போடுகிறது
இருளிலிருந்து இருளுக்காய்
இருளில் பறப்பதில்
ஒரு அற்ப சந்தோசம்
பிளந்துகொண்ட ஞாபகம்
வழியவோ என ததும்பி நிற்கிறது
யதார்த்தத்தின் ஒரு சிறு கல்லை
அதில் விட்டெறிந்தேன்
இப்போது
குருதியாய் வழிகிறது
வழியாது என்று நினைத்த
சொந்தக் குருதி.
***
இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்
சதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்