நுரைக்குமிழி- சிறுகதை

பர்ஸை எடுக்க ஹாண்ட்பேகில் கைவிட்டாள். என்னவோ குறைவது போல் தோன்றியது. இனம்புரியாத படபடப்புடன் விரல்களால் துழாவினாள். ஒரு மின்னல் போல அது என்னவென்று அவளுக்குப்புரிய அவள் உடம்பு அதிர்ந்து குலுங்கியது. ஒருகணம் மூச்சே நின்று போய்விட்டது.

“என்னம்மா என்ன ஆச்சு?” கண்டக்டர் சில்லறைக்காக நீட்டி கை அப்படியே நிற்கக்கேட்டான்.

“பர்ஸ்…” என்று மூச்சுத்திணறலுக்கு இடையே சொன்னாள். உடம்பெங்கும் வியர்வை ஆறாக ஓடியது.

“பர்ஸ் எடுக்க மறந்துட்டியா? வீட்டிலெ வெச்சிருப்ப… எறங்கணுமா?” என்றான்

“ம்”

“உய்”

பஸ் நின்றது. இறங்கிக்கொண்டாள். வியர்வையில் ஈரமான உடம்பு குளிர ஆரம்பித்தது. ஹாண்ட் பேக்கைத்திறந்து தேடினாள். உள்ளே டிபன்பாக்ஸ் இருந்தது, பர்ஸ் இருந்தது ,கர்சீஃப் இருந்தது…

மூச்சிரைக்க வீட்டுப்படி ஏறினாள். ஓசைப்படாமல் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே போனாள். ஹாலில் ஹாண்ட் பேக்கை முன்னம் வைத்திருந்த மேஜைமேல் புத்தகங்கள் குவிந்து கிடந்தன. படபடவென்று தேடினாள். ஓரத்து அறையின் கதவு லேசாக ஒருக்களித்திருந்தது. சிகரெட் மணம் வந்தது.

மணிகண்டன் உள்ளே இருக்கிறான். இந்த வாரக்கடைசியில் அவன் விடுமுறை முடிகிறது. ராணுவத்தில் கேப்டனாக இருக்கிறான். அவள் விரல்கள் கட்டுப்பாடின்றி நடுங்கின. புத்தகங்களில் தேடுவது மிகவும் சிரமாக இருந்தது. எங்கே வைத்தேன் அதை? ஞாபகமில்லை. கைத்தவறுதலாக ரவியின் புத்தகங்களில் எதிலாவது வைத்துவிட்டேனா? அந்தப்பெண் மீனா ஹாண்ட்பேக்கை திறந்து பார்க்குமே அது எங்காவது எடுத்திருக்குமோ? முருகா…!

“என்னது திரும்பி வந்துட்ட?”

அடிபட்டதுபோல் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அறைவாசலில் கதவில் கைஊன்றியபடி மணிகண்டன் நின்றிருந்தான். அவன் கண்கள் அவள் மேல் ஊன்றியிருந்தன.

”ஒண்ணுமில்ல.. நான்…”

“என்ன தேடறே?” அவன் குரல் இறுக்கமாக இருந்தது. அவள் தன் கால்கள் நடுங்குவதை உணர்ந்தாள். ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் அவளை உற்றுப்பார்த்தான்.

“என்னமோ ரொம்ப அவசரமாத் தேடற மாதிரி இருக்கு. என்னது?”

“அதுவந்து…”

“ஏதாவது கடுதாசா?”

பளீரென்று நெற்றிப்பொட்டில் ஒரு ஒளி வெடித்து போல் தோன்றியது அவளுக்கு. ஒருகணம் அவன் விழிகளை அவள் விழிகள் வெட்டின. அவளுக்குப்புரிந்தது. அவன் எல்லாவற்றையும் அறிந்தாகிவிட்டது. கடித்தை அவன் பார்த்துவிட்டான்.

விழுந்துவிடுவோம் என்று தோன்றியது அவளுக்கு.

”உள்ளே வா, உன்கூட கொஞ்சம் பேசணும்” அவன் உள்ளே போனான்.

ஹாலிலிருந்து அறைவரை நடக்க அவளால் முடியவில்லை. உடம்பே அவள் பிடியிலிருந்து நழுவிப்போவது போல் இருந்தது. விழாமலிருக்க கதவை இறுகப் பிடித்துக்கொண்டாள். அவன் தன் வழக்கமான நாற்காலியில் காலை நீட்டி அமர்ந்து, ஜன்னலுக்கு வெளியே வெறித்துப்பார்த்தபடி இருந்தான். ஆனால் அவன் பார்வை தன் மேல் கூர்மையாகப் பதிந்திருப்பது போன்ற உணர்வுதான் அவளுக்கு இருந்தது.

சட்டென்று திரும்பி அவளைப்பார்த்தான்.

“எத்தனை நாளா நடந்திட்டிருக்கு இது?”

என்னென்னவோ பதில்கள் அவளுக்குள் பொங்கின. ஆனால் மொழியே மறந்துவிட்டது போலிருந்தது.

“சொல்லுடி, யார் இவன்?”

தன் இதயத்துடிப்பைத்தவிர வேறெதையும் கேட்க முடியவில்லை அவளால்.

“யாருடி இந்த ராஜகோபால்…?”

“இல்லை…. இல்லை…” என்று சம்பந்தமின்றி உளறியபடி விம்மினாள்.

மணிகண்டன் மிகுந்த சிரமப்பட்டுத்தன் ஆவேசத்தை விழுங்கிக்கொண்டான். முடிந்தவரை தாழ்ந்த குரலில் “நான் இப்ப என்ன பண்ணணும்? டிவோர்ஸ் வேணுமா உனக்கு? இல்லை, தீர்த்துக்கட்டிடறதா தீர்மானிச்சிருக்கிங்களா?” என்றான்.

அடிவயிற்றிலிருந்து பீறிட்டு ஒரு கேவலாய் வெடித்த அழுகையுடன், பிடித்துத் தள்ளப்பட்டவளைப்போல அவள் ஓடி அவன் கால்களில் மடங்கி விழுந்தாள். எல்லா உணர்வுகளையும் வெளிக்கொட்டுபவளைப்போல பொங்கிப் பொங்கி அழுதாள்.

அவள் அழுகை ஒருகணம் அவனை இளக வைத்தது. மறுநிமிடம் ஆவேசத்தை வரவழைத்துக் கொண்டவனாக அவன் அவளை நெட்டித்தள்ளிவிட்டு எழுந்தான். நாற்காலி கிரீச்சென்று பின்னால் நகர்ந்தது.

“ச்சீ முப்பது வயசில, ரெண்டு பெத்துக்கு அப்புறம் உனக்குக் கள்ளக்காதல்… அல்ப ஜென்மம், உன்னை…. உன்கூட.…”

எந்த வார்த்தையும் வெளிவராமல் சிவந்த முகத்துடன் நின்று திக்கித் திணறித்துடித்தான். சட்டென்று கொடியிலிருந்து சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டான். செருப்பில் கால் நுழைத்து, லுங்கியை மடித்துக்கட்டியபடி அவளைப் பார்த்துப் பதறிய குரலில் சொன்னான்.

“போயிடு, உன் காதலன் கூட. என் கொழந்தைங்களை நான் பார்த்துக்கறேன். நான் திரும்பி வர்றதுக்குள்ள பெட்டியைக் கட்டிட்டு அவன்கூடவே போயிடு…”

தடதடவென்று இறங்கி அவன் போனபின் அவள் வெறும் தரையில் குப்புறப்படுத்து விம்மி, குலுங்கி அழுதாள். வெகுநேரம் அழுது முடித்து விம்மல்கள் ஓய்ந்தபிறகு அவள் மனத்தில் பயங்கரமான சூன்ய உணர்வு குடியேறியது.

கதகதப்பான ஓர் உறவு முடிந்துவிட்டது போலவும், இனி ஒருபோதும் அவனது அன்பும் அணைப்பும் தனக்குக் கிடைக்கப்போவதில்லை என்றும் அவளுக்குத் தோன்றியது. ஒருவேளை அவன் இனி திரும்பி வரவேமாட்டானோ என்று தோன்றியபோது வயிறு சில்லிட்டது.

அந்தப்பீதியிலும் விரக்தியிலும் கூட ஓர் ஓரத்தில் ஒரு நம்பிக்கை மின்னியது அவளுக்கு. தான் தப்பு செய்யாத வரைக்கும் பயப்பட வேண்டியதில்லை என்று நினைத்தாள். அத்தனை அநியாயமாகத் தன்னைக் கடவுள் தண்டித்துவிடமாட்டார் என்று சொல்லிக்கொண்டாள். அதையே மீண்டும் மீண்டும் நினைத்து நம்பிக்கையைப் பெருக்கிக் கொள்ளப் பாடுபட்டான். அவள் சொன்னால் அவன் புரிந்துகொள்வான். அவனை அத்தனை எளிதாக வெறுத்துவிட அவனால் முடியாது. பீதியும் விரக்தியும் நம்பிக்கையுமாய் அவள் மனம் அலைபாய்ந்தது.

மதியம் அவள் சாப்பிடவில்லை. அவன் வரமாட்டான் என்று தான் நினைத்தாள். மாலையில் குழந்தைகள் திரும்பி வந்தன. மாலை சரியச் சரிய அவள் மனம் மீண்டும் கொந்தளிக்க ஆரம்பித்தது. வருவானா? முருகா! வராமலே இருந்துவிட்டால்… யோசிக்கும்போதே ‘பகீர்’ என்றது. வாசலில் அசையும் ஒவ்வொரு நிழலும் நம்பிக்கை அளித்து, பின்பு ஏமாற்றியது. இருள் கனக்கக் கனக்க அவள் மனம் பீதியில் நிறைந்தது.

ஒன்பது மணிக்கு அவன் வந்தான். அந்தப் பழக்கமான காலடியோசை அவள் உடலைப் புல்லரிக்க வைத்தது. அவள் நெஞ்சைக் கையால் அழுத்தியபடி “முருகா!” என்றாள். அவளைக் கவனிக்காத மாதிரி அவன் நடந்து அறைக்குள் புக முயன்றான்.

“சாதம் போடவா?” என்றாள்.

“ச்சீ” என்று அவன் சீறினான்.

அவன் அறைக்குள் நுழைந்தபின் கதவைத் தடாலென்று மூடிக்கொண்டான். அவள் தரையில் அமர்ந்தாள். அவளை அறியாமலேயே அழுகை வந்தது. இருளில் தனிமையில் அழுதாள். அந்த ஓசையற்ற அழுகை – தேற்ற ஆளில்லாத நிராதரவான அந்த அழுகை, அது அவளுக்கு வினோதமான ஒரு சுகத்தைக்கூட அளித்தது.

கதவைத்தட்டி அவனை எழுப்பி எல்லாவற்றையும் கூறிவிடவா? தன்னால் முடியாது. அப்போதும் தன்னால் அழமட்டும் தான் முடியும். அந்த எண்ணமே அவளுக்கு மூச்சுத்திணற வைத்தது. மெல்லத் தூங்கிப்போனாள். தூக்கமல்ல, அரை மயக்கம்… காற்றின் ஒலியும் கடிகார டிக்டிக்கும் கேட்டுக்கொண்டிருந்தன. — கிரீச். கதவு திறந்தது.

திடுக்கிட்டு எழுந்து அவள் நிதானிப்பதற்குள் மணிகண்டன் அவளைக் கடந்து சென்றிருந்தான். இரவு வெகு நேரமாகியிருக்கக்கூடும்.

பாத்ரூம் போய்விட்டு அவன் திரும்பி வந்தபோது அவள் அறைவாசலில் நின்றிருந்தாள். அவன் அவளை உற்றுப் பார்த்தான். அவன் முகம் இப்போது அத்தனை இறுக்கமானதாக இல்லை.

அவள் மூக்கு துடிக்க அழ ஆரம்பித்தாள்.

“வழியை விடு” என்றான்.

அவள் விலகினாள். அவன் அவளைக் கடந்து சென்று அறைக்குள் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

“பானு” என்றான்.

அவன் குரலில் ஒரு மென்மை இருந்தது. அவன் மனம் மெல்ல அமைதி அடைந்தது.

“வா, இங்கே”

அவனருகே சென்றாள். அவன் காலடியில் அமர்ந்தாள். அவன் கால்களில் முகம் புதைக்க மனம் திமிறியது. ஆனால் அவனைத் தொட அவளுக்குத் துணிச்சல் வரவில்லை.

அவன் அவள் தலையில் கை வைத்தான். அவளது காதோர மயிர் இழைகளில் அவன் கைகள் மெல்லத் துழாவின. சுற்றி இறுக்கின.

அந்த ஸ்பரிசமும் – வலியும் அவளை அப்படியே நெகிழ வைத்தன. தன் முதுகின் மேலிருந்த ஒரு பெரிய பாரத்தை யாரோ இறக்கி வைத்தது போல் அத்தனை எளிதாக உணர்ந்தாள்.

“பானு”

”ம்”

“யார் அந்த ராஜகோபால்?”

அவள் தொண்டை அடைத்தது. “அவன் எங்க ஆபீஸ்ல…”

“உன்கூட வேலை செய்றவனா?”

“ம்”

”ரொம்பச் சின்னப்பையனா இருப்பான் போல இருக்கு. அத்தனை அசட்டுத்தனமா எழுதியிருக்கான். எத்தனை வயசிருக்கும் அவனுக்கு? ஒரு இருபத்தஞ்சு இருக்குமா?”

“ம்”

”அவனுக்கு ஏன் இப்படித் தோணுச்சு? நீ அவன்கூடக் கொஞ்சம் ஃப்ரீயா பழகுவியா?”

“இல்லை, சத்தியமா இல்லை. எல்லார்கிட்டயும் பேசறமாதிரிதான் பேசுவேன்.”

“அவன் உன்கிட்டே கொஞ்சம் உரிமை எடுத்துப்பானா?”

”ம்”

”உரிமைன்னா ட்ரெஸ் பண்ணிட்டு வந்தால் பாராட்டாக ஏதாவது சொல்றது, அழகைப்பற்றி முகஸ்துதி செய்யறது…”

அவள் உதட்டைக் கடித்தாள். கண்கள் மறுபடியும் நிறைந்தன.

”பரவாயில்லை. இதெல்லாம் எந்தப்பொண்ணுக்கும் பிடிக்கிற விஷயம் தான். நீ சந்தோஷப் படறதை அவனுக்குக் குடுக்குற அனுமதியா அவன் நெனச்சிருப்பான். உன்னை வளைச்சிட்டதா தப்பா கற்பனை பண்ணியிருப்பான்.”

”என்னை மன்னிடுங்க. நான் தப்புப்பண்ணிட்டேன். என்னை என்ன வேணும்னாலும் செய்ங்க”

”நான் உன்னை இப்ப விசாரணை பண்ணலை. இந்த விஷயத்தைக் கிளியராகப் பேசிடறது நல்லது. இந்த லெட்டரை எப்பக்குடுத்தான்?”

“போன திங்கட்கிழமை”

“நேரில் குடுத்தானா?”

”இல்லை மேஜை டிராயரில் கிடந்தது.”

“படிச்சிட்டு நீ புகார் எதுவும் பண்ணலையா? பண்ணத் தோணலியா உனக்கு?”

”நான் அவனைக் காண்டீனுக்குக் கூப்பிட்டுப் பேசினேன். இந்த மாதிரி எண்ணத்தோட என்கிட்டே இனிமேல் பழகவேண்டாம்னு சொன்னேன். இந்த ஒரு தடவை விட்டுடறேன். இனிமேல் இப்படி செஞ்சா மானேஜர்கிட்டே கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன் அப்படீன்னேன்.”

“அவன் ரொம்ப ஆடிப்போயிருப்பானே?”

“ரொம்ப… கண்ணீர்விட்டு அழவே ஆரம்பிச்சிட்டான். ‘என்னமோ ஒரு வேகத்துல எழுதிட்டேன் ஸிஸ்டர். இப்ப அதை நெனச்சு வருத்தப்படறேன் ஸிஸ்டர். எழுதினதுக்கு அப்புறம் தூங்கவே இல்லை ஸிஸ்டர்’ அப்படீன்னு ஆயிரம் ஸிஸ்டர் போட்டான்.”

“அது நடிப்பில்லை பானு. அந்த வயசில ஒரு தடவையாவது புத்தி அப்படிப்போகும். நான் எம்.ஏ படிக்கிறப்ப இப்படி ஒரு லவ் லெட்டர் எழுதினேன். யாருக்குத்தெரியுமா? கூடப்படிக்கிற ஸ்டூடண்டுக்கு இல்லை, புரொபசருக்கு. ஒரு வயசான அம்மாள். அப்பவே என்னைவிடப் பெரிய பையன் இருந்தான். அவங்களுக்கு” மணிகண்டன் ‘ஹஹஹஹா’ வென்று சிரித்தான்.

“ஸ்ஸ்… மெள்ள குழந்தைங்க பயந்துக்கப்போவுது”

“சரி, அந்தக் கடிதாசை நீ ஏன் கிழிச்சுப்போடலை?”

அவள் கண்கள் தாழ்ந்தன.

“நான் சொல்லட்டுமா? அந்தப்பயல் சகட்டுமேனிக்கு உன்னைப் புகழ்ந்திருக்கான். அதை வாசிக்கிறதுல உனக்கொரு ‘த்ரில்’-என்ன? சரி சரி மறுபடியும் அழ ஆரம்பிச்சிடாதே. இதுக்காக உன்னை யாரும் தூக்கில் போடப்போறதில்லை.”

அவள் அவன் கால்களின் மேல் முகம் புதைத்துக்கொண்டாள். அவன் அவளை தலைமயிரில் முத்தமிட்டான்.

“இதோ பார் பானு, நமக்குக் கல்யாணமாகி ஏழெட்டு வருஷங்களாகுது. நமக்குள்ளே இருந்த வேகமெல்லாம் தணிஞ்சாச்சு. லைஃப் இப்ப ஒருமாதிரி போர்தான். உனக்கு என்மேலயோ எனக்கு உன்மேலயோ அலுப்புக்கூடத் தட்ட ஆரம்பிக்கலாம்…”

“அய்யோ… நான்…”

”சரி சரி, இல்லைங்கலை. ஆனால் இருபது வயசில் நம் உறவில் இருந்த வேகம் இப்ப இல்லை, இருக்க முடியாது. மறுபடியும் அதைக் கொண்டுவரவும் முடியாது. இப்ப மனசு கொஞ்சம் பரபரப்பா ஒரு விஷயத்துக்கு ஆசைப்படலாம். மனசைப்படபடக்க வைக்கிறதா, ராத்திரி தூக்கத்தைக் கெடுக்கறதா ஒரு அனுபவத்துக்கு மனசு ஏங்கலாம். மனசு அப்படித்தான். அதுக்கு தர்மம் நியாயமெல்லாம் தெரியாது. ஆனால் மனசை மனசின் போக்குக்கு விட்டுட்டா என்ன ஆகும்? உன் பேரில் ஒரு சின்னக் களங்கம் வந்தால் அது என்னை எப்படிப்பாதிக்கும்? நம்ம தாம்பத்யமே குலைந்து போகும். அதனால் பாதிக்கப்படறது நம்ம குழந்தைங்க. நம்ம சந்தோஷத்துக்கு அவங்களை பலி கொடுக்கலாமா? ஆணும் பெண்ணும் சுகமா இருக்கிறதுக்காக மட்டுமே பெரியவங்க குடும்பம்னு ஒண்ணை ஏற்படுத்தலை. புதிய தலைமுறையோட பாதுகாப்புக்காகவும் இப்படி ஒரு ஏற்பாட்ட செய்தாங்க…”

தன் பேச்சு நீண்டுவிட்டது என்று உணர்ந்து ஹாஸ்யமாகச்சிரித்தபடி “என்ன பரவால்லயா? நம்ம சொற்பெருக்கு…?” என்றான்

அவள் “என்னை மன்னிச்சிடுங்க” என்றாள்.

“சரி, மன்னிச்சாச்சு நம்ம அந்த சம்பவத்தையே மறந்துடலாம் என்ன?”

ஒரு வேகத்துடன் அவள் அவன் முகத்தைப் பார்த்தாள். “மறந்துடுவிங்களா? எல்லாத்தையும் மறந்துடுவீங்களா?”

அவள் தலைமேல் முத்தமிட்டபடி அவன் சொன்னான். “சத்தியமா…”

அவள் அவனுடன் ஒட்டிக்கொண்டாள். பரிச்சயமான இழைதல், வெப்பம் மிகவும் அறிமுகமான அந்த மணம். அரைமயக்கத்திலும் ‘மறந்துடுவிங்களா? மறந்துடுவிங்களா?’ என்றுதான் கேட்டுக்கொண்டிருந்தாள்.

துயில் கலைந்த ஒரு நிமிடம் அவள் திகைத்தாள். அவளருகே அவன் இல்லை. அறை இருட்டாக இருந்தது. ஹாலில் இருந்து வெளிச்சம் உள்ளே வந்தது. உடைகளை உடுத்திக் கொண்டு எழுந்து மெல்ல நடந்து ஹாலில் எட்டிப்பார்த்தாள். விளக்கு மிகப்பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது. சோபாவில் சாய்ந்து இருளை வெறித்தபடி மணிகண்டன் அமர்ந்திருந்தான். அவன் கையில் சிகரெட் அனாதையாய்ப் புகைந்தது.

தரையில் சிகரெட் சாம்பலும் மிச்சங்களும் கிடந்தன. அவன் முகத்தில் மனப்போராட்டம் தெரிந்தது. நெற்றியிலும் கன்னத்திலும் கவலையின் கோடுகள். இனி ஒருபோதும் திரும்பி வராதபடி எதுவோ ஒன்று தன்னை விட்டு விலகிப்போய்விட்டதை அவள் உணர்ந்தாள். அவள் மனம் எல்லையற்ற சூனிய வெளியில் திசை தவறியது.

(1987 ஜுலை 12, கல்கியில் வெளிவந்த சிறுகதை)

 

1986-ல் நான் காசர்கோட்டில் இருந்தபோது எழுதிய இந்தக்கதை 1987ல் வெளியாகியது. 1987ல் கணையாழியில் எழுதிய நதி என்ற கதையைத்தான் நான் என் முதல் கதையாக கொண்டிருக்கிறேன். அதைத்தான் சிறுகதைத் தொகுதியில் சேர்த்திருக்கிறேன். அதற்குமுன் பிரபல வணிக இதழ்களில் எழுதிய கதைகளை தொகுப்புகளில் சேர்க்கவில்லை. என்னிடம் அவற்றின் பிரதிகளும் இல்லை. இது சமீபத்தில் அழிசி ஸ்ரீநிவாசனால் கண்டெடுக்கப்பட்ட கதை. பரவாயில்லை, 1986 ல் என் 24 ஆவது வயதிலேயே தாம்பத்தியப் பிரச்சினைகளை எல்லாம் எழுதியிருக்கிறேன் 

முந்தைய கட்டுரைதுளிக்கும்போதே அது துயர்
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் போர்ட்லாண்ட் திரையிடல்