சினிமாவில் எழுத்தாளன்

வரவிருக்கும் படங்கள்

அன்புள்ள ஜெ

ஆனந்தவிகடன் பேட்டியில் சொல்லியிருந்தீர்கள் ஒரு சினிமாவுக்கு நீங்கள் அளிப்பது கதைத் தொழில்நுட்பத்தை மட்டும்தான் என்று. உண்மையில் ஒரு சினிமாவில் இங்கே எழுத்தாளனின் பங்களிப்புதான் என்ன? இந்த சினிமாக்களை பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த சினிமாக்களில் எவை உங்கள் சினிமா என்று சொல்லமுடியும்?

ஆனந்த்

அன்புள்ள ஆனந்த்,

தமிழ்சினிமாவில் திரைக்கதை என்பது இயக்குநரின் கையில் இருக்கும் ஒரு முன்வடிவம் மட்டுமே. அது எடுக்க எடுக்க மாற்றி எழுதப்படும். படப்பிடிப்பு முதல் கடைசிக்கணம் வரை உருமாறிக்கொண்டும் இருக்கும். ஆகவே திரைக்கதையை ஒட்டி சினிமாக்கள் அமைவது மிக அரிது.

கதை -திரைக்கதையில் பணியாற்றும் எழுத்தாளன் ஒரு ‘சேவை வழங்குநர்’ மட்டுமே. அவன் தன் கதைக்கட்டுமான அறிவை இயக்குநருக்கு, அவருடைய தேவைக்கு ஏற்ப வழங்குகிறான். ஒளிப்பதிவாளர், அரங்க அமைப்பாளர் போல.

ஓர் அரங்க அமைப்பாளர் என்னதான் அரங்கம் அமைத்தாலும் இயக்குநர் வைக்கும் படச்சட்டத்திற்குள் வருவதே படத்தில் இருக்கும். படத்தொகுப்பாளர் கடைசியாக தெரிவுசெய்யும் படச்சட்டங்களே படத்தில் எஞ்சும். பலசமயம் அரங்குக்குச் சென்றுதான் என்னென்ன காட்சிகள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளவேண்டியிருக்கும். எழுத்தாளனும் அப்படித்தான்.

இருபதுநாட்கள் ஒரு சினிமாவில் நடித்துவிட்டு ஒரே ஒரு காட்சியில் மின்னிச்செல்லும் நடிகர்கள் இங்குண்டு. சினிமா அவர்களுக்குத் தெரியுமென்பதனால் அவர்கள் கவலைகொள்வதில்லை.

இது ஏன் நிகழ்கிறதென்றால் தமிழ் சினிமா ஒரு பெரும்கலவை. அதில் சாகசம், நகைச்சுவை, சோகம், அரசியல் என எல்லாமே இருக்கவேண்டும். இருபது நிமிடத்தில் பாட்டு வரவேண்டும். அரைமணிநேரத்திற்குள் செண்டிமெண்ட் வரவேண்டும். படத்தின் கதைக்கட்டமைப்பு என்ன என்பது இங்கே கடைசியில் எடிட்டிங்கில்தான் முடிவாகிறது.ஏனென்றால் இங்கே கலவையின் சரிவிகிதம் மிக முக்கியமானதாக இருக்கிறது.

ஆகவே இங்கே எந்த சினிமாவும் முழுக்க முழுக்க இயக்குநர் சினிமாதான். நான் பங்கேற்ற எந்த படமும் என்னுடைய படம் அல்ல. என் பங்களிப்பு என்பது எவ்வகையிலும் பெரியதென நான் எண்ணுவதில்லை. என் படம் என சொல்லிக்கொள்வதுமில்லை.

மிகக்கறாராக திரைக்கதையை ஒட்டியே எடுக்கப்படும் மலையாளப்படங்களில்கூட நடிகர்தேர்வு, நடிப்பு எல்லாம் இயக்குநர் கையில் உள்ளது. நன்றாக எழுதப்பட்ட ஒரு காட்சி ஒரு நடிகர் சரியாகச் செய்யவில்லை என்றால் எந்த விளைவையும் தராமலாகிவிடக்கூடும் என்பது சினிமாவின் விந்தை. அங்கும் நல்ல திரைக்கதை என்பது நல்ல சினிமாவுக்கான ஒரு சாத்தியக்கூறு மட்டுமே.

இங்கே இயக்குநர் என்பவர் கதைத் தெரிவில் இருந்து போஸ்டர் டிசைன் வரை செய்யவேண்டியவர். அவரே சினிமாவின் ‘ஆசிரியர்’. அவரே டிவியில் வந்து சினிமாவை விளம்பரமும் செய்தாகவேண்டும் என்பதே சூழல்.

சினிமாவில் நான் என்னிடம் கோரப்பட்டவற்றைச் செய்பவன், அதை மிகச்சிறப்பாகச் செய்து அளிப்பவன், அதற்கப்பால் எந்த உரிமையும் கோராதவன். அது என் தொழில், அவ்வளவுதான். ஆகவேதான் சினிமா பற்றி நான் பேசுவதில்லை. இதழ்களில், காட்சி ஊடகங்களில் கேட்டுக்கொண்டே இருப்பார்கள், மென்மையாக மறுத்துவிடுவேன். இங்கே நீங்கள் என் வாசகர் என்பதனால் சொல்கிறேன். ஆனால் இதையும் மீளமீளச் சொல்லிக்கொண்டிருக்க விரும்பவில்லை. நன்றி.

ஜெ

விகடன் பேட்டியின் நிறைவு

முந்தைய கட்டுரைஈரோடு ஜெயபாரதி – மாற்றுக்கல்விக்கென ஒரு வாழ்க்கை
அடுத்த கட்டுரைஞானி நினைவுகள் – மீனாம்பிகை