சோழர்களும் மாமாங்கமும்

பழமைச்சரிதம்

அன்புள்ள ஜெ,

வணக்கம். நலந்தானே?

சமீபத்தில் எழுதிய ‘பழமைச்சரிதம்’ [https://www.jeyamohan.in/149037/] என்னும் குறிப்பில் திருநாவாயில் நிகழ்ந்த மாமாங்கம் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் எழுதிய ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்னும் கட்டுரையிலும் சேரமான் பெருமாள் மன்னரைத் தேர்ந்தெடுப்பதற்காக வள்ளுவநாட்டு திருநாவாயில் நடைபெற்ற மாமங்கம் பற்றி எழுதப்பட்டுள்ளது.

இராமச்சந்திரன் அவர்கள் திருநாவாய்க்கு அருகிலுள்ள காந்தளூர் என்னும் ஊரையே சோழ மெய்க்கீர்த்திகளில் காணப்படும் காந்தளூராகக் கொள்கிறார். ‘கலம்’ என்னும் சொல்லை வில்லங்கம் என்னும் பொருள் கூறி ‘இவ்வூர்க்கு எவ்வித கலனுமில்லை’ என்னும் கல்வெட்டு வாசகத்தைச் சான்றாகக் காட்டுகிறார். அதே சொல்லுக்கு இன்னொரு பொருளாக, வேதம் மூலம் நீதிநுட்பங்களை விளக்கும் போட்டியில் வெல்லும் மாணவரைக் குறிக்க சுந்தரசோழர் காலத்துக் கல்வெட்டொன்றில் பயன்படுத்தப்பட்ட சொல்லாட்சியான ‘கலமறுத்து நல்லாரானர்’ என்னும் பதத்தைக்கூறி போட்டிகளில் வெல்வதையும் கருதலாம் என்கிறார்.

தனது ஊகத்திற்கு சான்றுகளாக ராஜேந்திரச்சோழனும் அவனது மகன் ராஜாதிராஜனும் தங்களது மெய்க்கீர்த்திகளில் காந்தளூர்ச்சாலை கலமறுத்ததைப் பதிவுசெய்துள்ளதையும் கூறுகிறார். [வேலைகெழு காந்தளூர்ச்சாலை என பொதுவாகச் சொல்லப்படும் ராஜாதிராஜனின் மெய்க்கீர்த்திகளுள் ஒன்றில் மட்டும் வேலைகொள் காந்தளூர்ச்சாலை எனவும் குறிக்கப்பட்டுள்ளது]. குலோத்துங்கனுக்குக் கீழிருந்து படைநடத்திய சடையவர்ம பராந்தகப் பாண்டியனின் மெய்க்கீர்த்திகளிலும் ‘விழிஞம் கொண்டு கன்னிப்போர் செய்தருளி காந்தளூர்ச்சாலை கலமறுத்து’ என்னும் வாசகமும் இடம்பெற்றுள்ளதை எழுதியுள்ளார்.

காந்தளூர்ச்சாலை படையெடுப்பின் மூலமாக அழிக்கப்பட்டது என்பதாகக் கருதும் இராமச்சந்திரன் அவர்கள், சான்றுகளாக இலக்கிய ஆதாரங்களை முன்வைக்கிறார். “வேலை கொண்டதும் விழிஞம் கொண்டதும் சாலை கொண்டதும் தண்டு கொண்டல்லவா” என்று கலிங்கத்துப்பரணியிலும் “சாலைக் கலமறுத்த தண்டினான்” என்று மூவருலாவிலும் குறிப்பிடப்படுவதையும் காட்டி, நூறாண்டுகளாக வந்தமன்னர்கள் அனைவரும் படையெடுத்தும் முழுவதுமாக அழியாததாக காந்தளூர்ச்சாலை இருந்ததைக் காட்டுகிறார்.

  • ராஜேந்திரனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் ராஜராஜரின் முதல் படையெடுப்பாக பாண்டியன் அமரபுயங்கனை வென்று மேலும் தெற்கே சென்று சேரநாட்டின் உதகை நகரில் சிறையிருந்த தூதனை விடுவித்து, அந்நகரில் சதய திருநாளைக் கொண்டாடிய தென்னக படையெடுப்பையே கூறுகின்றன. உதகைப்போர் வெற்றி முதன்முதலில் சொல்லப்படும் கல்வெட்டுகளுக்கு முந்தைய ஆண்டுகளில் எழுதப்பட்ட ராஜராஜரின் மெய்க்கீர்த்திகளிலேயே காந்தளூர்ச்சாலையையும் தண்டால் கொண்டு மும்முடிச்சோழனானது எழுதப்பட்டுள்ளது. எனவே, ராஜராஜனின் காந்தளூர்ச்சாலையைக் கொண்ட ‘தண்டு’ என்பது அங்கசேவகர்களின் படைக்குழு எனக்கொள்ள வாய்ப்புள்ளதா?
  • அங்கச்சேவகர்களுக்கு கடுமையான நெறிகள் ஏதேனும் உண்டா? கேரளம் தவிர்த்த பிறநில மன்னர்களுக்காகப் பொரிடக்கூடாது என்பது போல.
  • சேரர்கள் மீதான சோழ படைவெற்றிக்கு முன்பே அல்லது நிகராக ஒரு கருத்தியல்வெற்றியும் மாமாங்கம் மூலம் ஏற்பட்டதா? சோழர்களின் ஆதிக்கம் முழுமைபெற்ற பின்னரே மாமங்கம் சாமூதிரி மன்னர், கொச்சி மன்னர், கொடுங்கல்லூர் மன்னர் முதலியோருள் முதன்மை கொண்டவரை முடிவு செய்வதாய் மாறியிருக்க வாய்ப்புள்ளதா?

அன்புடன்

யஸோ

அன்புள்ள யசோ

இதுகுறித்த ஆய்வுகளை எல்லா தரப்பும் வாசித்துத்தான் நாம் ஏற்கவேண்டும். நான் ஆய்வாளன் அல்ல. காய்தல் உவத்தல் இன்றி, சரியான தரவுகளைச் சேர்த்து வரலாற்றை எழுதியெடுப்பது ஒரு பொறுமை தேவையாகக்கூடிய, நுணுக்கமான, நெடுங்காலப் பணி. அதை நான் செய்யமுடியாது.

காந்தளூர்ச்சாலைக் கலம் என்பதைப் பற்றி கவிமணி முதலானோரின் ஊகம் அது கேரளத்தில் திகழ்ந்த தாந்த்ரீக – அதர்வவேத பூசனைமுறைகளை நிறுத்தி, அவற்றை பாதுகாக்கும்பொருட்டு இங்கே இருந்த போர்க்குழுக்களை ராஜராஜசோழன் அழித்ததைக் குறிக்கிறது என்பதுதான். அதுவே சிறந்த ஊகமாக இப்போதும் தோன்றுகிறது.

ஏனென்றால் கேரளம் தன் தாந்திரிக வழிபாட்டு முறைமையை தக்கவைத்துக்கொள்ளவே தலைமுறை தலைமுறையாக்ப் போராடியிருக்கிறது. ராஜராஜன், ராஜேந்திரசோழன் முதல் சோழர் கால இறுதிவரை. சோழர் ஆட்சி முடிந்ததுமே தாந்த்ரீக பூஜைமுறைகள் மீண்டும் வந்தமைந்து இன்றும் தொடர்கின்றன.

இது குறியீட்டுரீதியான போர். சடங்குகள் சார்ந்தது மட்டுமல்ல. கேரள ஆலயங்கள் மீதான உரிமைக்கான போரும்கூட. கேரளத்தின் நிலங்களில் மிகப்பெரும்பாலானவை கோயில்களுக்கு உரியவையாக இருந்தன. பின்னரும்கூட அந்நிலை பெரிதாக மாறுபடவில்லை. ஆகவே இது நேரடியாக நாட்டுரிமைதான்

கேரளத்தில் சோழர் ஆட்சிக்காலம் முடிந்தபின்னர் மீண்டும் நாநூறாண்டுக்காலம் அந்த உரிமைப் போர் நடந்தது. கேரள அரசர்கள் முடியுரிமையை அடைந்தபின்னரும்கூட கோயில்கள்மேல் அதிகாரத்தை அடையவில்லை. ஆகவே நாட்டின் பெரும்பகுதி நிலம் அவர்களின் ஆட்சியின்கீழ் வரவில்லை. கோயில்களை ஆட்சிசெய்தவர்கள் தனி நாடுகளின் அரசர்களாகவே திகழ்ந்தனர்

கோயிகளை உரிமைகொண்டிருந்த எட்டுவீட்டுப் பிள்ளைகள், கோயிலதிகாரிகள் போன்றவர்களுக்கும் சேரநாட்டு அரசர்களுக்குமான போர் மேலும் நாநூறாண்டுகள் நடந்தது. அதன் பின்னர் கோயிலை கைப்பற்றிக்கொண்டிருந்த வைதிகர்களுக்கும் அரசர்களுக்குமான அதிகாரப் போராட்டம் நடந்தது. மார்த்தாண்டவர்மா கோயில்சார்ந்த அனைத்து உரிமைகளையும் முற்றாக கைப்பற்றுவது வரை கேரளத்தின் முக்கியமான அதிகாரபோராட்டம் கோயில்களை கைப்பற்ற்றுவதும் தக்கவைத்துக்கொள்வதுமாகவே இருந்துள்ளது.

இப்படிப் பார்க்கையில் காந்தளூர்ச்சாலைக் கலமறுத்தல் என்பது கோயில்கள்மீதான வைதிக அதிகாரத்தை மாற்றுதல் என்ற கோணத்திலேயே சரியாக இருக்கமுடியும். கேரள அரசியல், பண்பாடு ஆகியவற்றில் ஆழ்ந்த புரிதல்கொண்டிருந்த கவிமணி தேசிகவினாயகம்பிள்ளையின் ஊகமே ஏற்கத்தக்கது. ராமச்சந்திரன் அவர்களுக்கு கேரள பண்பாட்டு- அரசியல் சூழல் சரிவரத் தெரியாது. அவருடையது கல்வெட்டிலுள்ள சொற்களை கொண்டு மட்டும் செய்யப்படும் ஊகம். இப்போதைக்கு அது நிறைவளிப்பதாக இல்லை. ஆய்வாளர்களால்  பொதுவாக அது ஏற்கப்பட்டால் பரிசீலிக்கலாம். அதுவரை அது ஒரு தனிப்பட்ட ஊகம் மட்டுமே.

வரலாற்று ஊகங்கள் முன்பிருந்த வரலாற்றுச் சித்திரத்துடன் பொருந்தக்கூடியவையாக இருக்கவேண்டும். அதேபோல பிற்கால வரலாற்றுச் சித்திரத்திற்கும் பொருந்தவேண்டும். வரலாற்றிலுள்ள இடைவெளிகளை நிரப்பவேண்டும். கவிமணியின் ஊகமே அதைச் செய்கிறது.

மாமாங்கம் நெடுங்காலமாக கேரளத்தில் நடந்துகொண்டிருந்த ஒரு சடங்கு, திருவிழா என்பதில் ஐயமில்லை. அப்படி இருந்தாலொழிய அந்த முக்கியத்துவம் அதற்கு அமையாது. அடிப்படையில் அது நீத்தாருக்கு நீர்க்கடன் செலுத்தும் ஒரு சடங்காக இருந்திருக்கலாம். அந்நீர்க்கடனைச் செலுத்துபவரே சேரவழித்தோன்றல் என்பதனால் அப்போர் நடந்திருக்கலாம். அந்நிகழ்வைச் சோழர்கள் தலையிட்டு நிறுத்தினார்கள் என்பதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை. அந்நிகழ்வு இன்றும் தொடர்கிறது. அந்நிகழ்வு பற்றிய பழைய குறிப்புகளும் உள்ளன. காந்தளூர்ச்சாலையை அந்நிகழ்வுடன் தர்க்கபூர்வமாக பிணைக்கமுடியவில்லை. அது சற்று ’எகிறிச்செல்லும்’ ஊகமாகவே பொதுவாக கேரளப் பண்பாட்டை அறிந்தவனாகிய எனக்குப் படுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைசதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள்
அடுத்த கட்டுரைகடலைமொழிகள்