வரவிருக்கும் படங்கள்

பொன்னியும் கோதையும்

ஒரு சினிமாவின் அறிவிப்பு வந்ததுமே தமிழ்ரசிகர்கள் கொள்ளும் உற்சாகம் சினிமா மேல் மங்காத நம்பிக்கையை அளிப்பது. வெற்றிமாறனின் விடுதலை அறிவிப்பு வந்ததுமே என்னுடைய துணைவன் கதைக்கான விசாரிப்புகள் பெருகின. இப்போது பொன்னியின் செல்வன் பற்றிய செய்தியும் மறுநாளே வெந்து தணிந்தது காடு அறிவிப்பும் வந்துள்ளன. மின்னஞ்சல்பெட்டி நிறைய அதைப்பற்றிய கேள்விகள்தான். சம்பந்தமே இல்லாதவர்கள். எனக்கு இணையதளம் ஒன்று இருப்பதே பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

ஒரு சினிமா தயாரிக்கப்பட்டு அரங்குக்கு வர மாதக்கணக்கிலாகிறது. அதுவரை அது பற்றிய செய்திகள் ரகசியமாகவே இருக்கும். அப்போதுதான் சினிமா புதியதாக இருக்கும். ஆகவே சினிமா சார்ந்த எவருக்குமே ரகசியக்காப்பு உறுதிப்பாடு அளிக்கும் கடமை உண்டு. பெரும்பாலும் வாய்திறக்கவே மாட்டார்கள். இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆகவே கடிதங்கள் வழியாகச் செய்திகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.

பெரும்பாலானவர்கள் கேட்கும் கேள்விகளில் பதிலளிக்கத் தக்கவையாக சிலவே உள்ளன.

பொன்னியின்செல்வன் கல்கியின் நாவலை அடியொற்றியே எடுக்கப்படுகிறது. தேசிய அளவில் ராஜராஜ சோழன் என்ற ஆளுமையை, சோழப்பேரரசின் சித்திரத்தை கொண்டுசெல்வதே முதன்மை நோக்கம். இந்தியாவில் தமிழகத்திற்கு வெளியே, ராஜராஜசோழன் நேரடியாக ஆட்சி செய்த கேரளத்திலும் கர்நாடகத்திலும் கூட, அவர் பெயர் எவருக்கும் தெரியாது. ஆய்வாளர்கள்கூட மேலோட்டமாகவே தெரிந்துவைத்திருக்கிறார்கள். நாம் அசோகரையோ ஹர்ஷவர்த்தனரையோ தெரிந்து வைத்திருப்பது போல அவர்கள் நம்மை தெரிந்துவைத்திருக்கவில்லை. அதற்குரிய காரணங்கள் பல.

ஒரு வரலாற்று ஆய்வேடு அல்லது ஆவணப்படம் வழியாக ராஜராஜசோழனையும் சோழப்பேரரசையும் இந்தியாவெங்கும் மக்களிடையே கொண்டுசெல்லமுடியாது. ஓர் பண்பாட்டு அடையாளமாக நிலைநாட்டவும் முடியாது. பலகோடிப்பேர் பார்க்கும் ஒரு வணிகப்பெரும்சினிமாவாலேயே அதற்கு இயலும். பொன்னியின்செல்வன் அத்தகைய கதை. அது குழந்தைகளுக்குரிய உற்சாகமான சாகச உலகமும், மர்மங்களும், உணர்ச்சிகரமான நாடகத்தருணங்களும் வரலாற்றுப்பின்புலமும் கலந்த ஒரு கதை. அந்த கலவை வெகுஜனங்களுக்குரியது. ஆகவே பொன்னியின்செல்வன் எடுக்கப்படுகிறது. சோழர்காலம் மற்றும் ராஜராஜ சோழன் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும் ரசிக்கும்படியாக எடுக்கப்படுகிறது. இந்தியாவெங்கும் சென்றுசேரும்படியாக.

பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக, மூன்றும் மூன்றுமாக ஆறுமணிநேரம் அமையலாம். நாடகத்தனம், நிறைய அடுக்கு வசனங்கள் கொண்ட வழக்கமான சரித்திரசினிமா அல்ல. காட்சிவிரிவு மேலோங்கிய சினிமா. நாவலின் காட்சிப்படுத்தல் அல்ல சினிமா என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். சினிமா தனக்குரிய அழகியல் கொண்ட ஒரு தனிக்கலை. சினிமா எதையும் சுருக்கி, காட்சிவழியாகவே சொல்லும். பொன்னியின் செல்வன் பெரும் செலவில், பெரும் உழைப்பில் எடுக்கப்படுகிறது. இதுவரை இந்தியாவில் எடுக்கப்பட்ட சினிமாக்களிலேயே இதுதான் செலவில் மிகப்பெரிய படம். ஒவ்வொரு பைசாவாக எண்ணி எண்ணிச் செலவிட்டு எடுக்கும் மணிரத்னம் எடுக்கும்போதேகூட.

பொன்னியின் செல்வனின் நடிகர்கள் பற்றி வரும் செய்திகள் ஏறத்தாழ உண்மை. ஆனால் அவர்களின் தோற்றம் ஆனந்தவிகடனால் வரையப்பட்டது. அப்படி மிகையான ஆடையாபரணங்களுடன் இன்றைய சினிமா இருக்கமுடியாது. எந்த சினிமாவும் கதாபாத்திரங்களின் தோற்றத்தை இத்தனை முன்னரே வெளியிடாது.

பாடல்களை இளங்கோ கிருஷ்ணன் எழுதுகிறார். மணிரத்னம் புதிய சொற்சேர்க்கை தேவை என்று சொன்னதனால் நான் சிபாரிசு செய்தவர் அவர். மரபிலக்கியம் அறிந்த நவீனக்கவிஞர் தேவைப்பட்டார், இளங்கோவே தமிழில் என் முதல் தெரிவு. ஆனால் அவருடைய அத்தனை கவிதைகளையும் படித்து, பலமணிநேரம் காணொளிகளை பார்த்து, அவரை மதிப்பிட்டு அறுதி முடிவெடுத்தவர் மணிரத்னம். அதனாலேயே அவர்மேல் பெருமதிப்பு கொண்டவராகவும் ஆனார். இளங்கோ ஒரு கவிஞராக அவர் அடைந்த உச்சகட்ட மதிப்பை இந்த சினிமாக்களத்திலேயே பெற்றிருப்பார்.

என்னுடைய நீலம் நாவலின் சிலபகுதிகளை பாடலாக ஆக்க மணி ரத்னத்திற்கு எண்ணமிருந்தது. நீலம் நாவல் அவருக்கு மிக உவப்பான ஒன்று. அது வெளிவந்தகாலத்திலேயே அவருடைய கடிதம் வந்திருக்கிறது. ஆனால் அப்பகுதிகள் இசைக்குள் சரியாக அமையவில்லை. இசையுடன் அவற்றை இணைக்கும் பணி என்னால் இயல்வது அல்ல என்று . நீலம் நாவலை ஒட்டி வெண்பா கீதாயன் எழுதிய கவிதைக் குறிப்புகளின் அடிப்படையில் அவருடைய வரிகள் இசையமைக்கப்பட்டன.

பொன்னியின் செல்வன் சாதாரண சினிமா அல்ல. இத்தகைய படங்கள் பொழுதுபோக்கு என்பதைக் கடந்து பண்பாட்டு முகத்தை உருவாக்குகின்றன. மிகவிரிந்த காட்சியமைப்பு கொண்ட பெரிய படங்களே நம் இறந்தகாலம் பற்றிய சித்திரத்தை உருவாக்கி நம் இளைய தலைமுறையின் நினைவில் நிறுத்தமுடியும். நம் பெருமையை வெளியே கொண்டுசெல்லமுடியும் பாகுபலி வெறும் ஒரு ராஜாராணி கதை. பொன்னியின் செல்வன் வரலாறும்கூட. தமிழ்ப்பண்பாட்டின் உச்சக் காலகட்டத்தின் சித்திரம் அது.

எனக்கு பெரிய ‘செண்டிமெண்ட்’ எல்லாம் இருக்கவில்லை. ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை ’ரஷ்’ பார்த்தபோது ரத்தமும் புகையுமாக புலிக்கொடி மெல்ல ஏறி மேலே பறக்கும் காட்சியில் சட்டென்று உளம்பொங்கி மெய்சிலிர்ப்பு அடைந்து கண்கலங்கிவிட்டேன். இது நம்முள் நம் முன்னோர் பற்றி நாம் கொண்டுள்ள பெருமிதம். அந்தப்பெருமிதம் சற்றேனும் உள்ளவர்களையே பொன்னியின் செல்வன் தன் முதன்மைப் பார்வையாளர்களாகக் கொண்டுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ முதலில் நதிகளில் நீராடும் சூரியன் என்று பெயரிடப்பட்டிருந்த படம்தான். அந்தக்கதை மென்மையான நகர்ப்புறக் காதல்கதை. அதுவும் பின்னர் படமாகவே வாய்ப்பு. சிலம்பரசன் இப்போது உடல்மெலிந்து, மென்மீசையுடன் மிக இளைஞராக, கிட்டத்தட்ட சிறுவன் போல இருக்கிறார். அவருக்கு பொருந்தும் கதை என்பதனால் இந்தக்கதை தெரிவுசெய்யப்பட்டது. அவருக்காக கதை உருவாக்கப்படவில்லை, கதைக்காக அவரே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

அசுரன் அல்லது கர்ணன் போன்ற கிராமப்புறக் கதை அல்ல இது. கிராமப்புறமும் உண்டு. பரபரப்பான, ஆனால் மிகையான சாகசங்கள் ஏதும் இல்லாத நம்பகமான சினிமா. வேறு படங்களின் சாயல் ஏதும் இல்லாதது. கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்டைலான படமாக்கல் உடையது. ஆனால் rustic என்று சொல்ல்லப்படும் கரடுமுரடான அழகியல் கொண்டது.

இந்தப்படங்களில் என் பணி முடிந்தபின்னரே படங்கள் ஆரம்பிக்கின்றன. நான் கௌதம் வாசுதேவ் மேனனின் அடுத்தபடம், வசந்தபாலனின் அடுத்த திட்டம் என முன்னகர்ந்துவிட்டேன்.

நன்றி. மேற்கொண்டு சினிமா பற்றிய பேச்சுக்கள் இல்லை.

பொன்னி,கோதை – கடிதங்கள்

பொன்னியின் செல்வன், ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைமழைப்பயணம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுருகுலம் என்பது…