வணக்கம், நலமே விரும்புகிறேன். மதுரையில் நடைபெற்ற கல்லெழும் விதை நிகழ்வில் உங்களிடம் நினைவு பரிசு வாங்கியவர்களில் நானும் ஒருவன். வாழ்வின் மகிழ்வான தருணம். இரண்டாவது முறையாக நேரில் உங்கள் உரையை கேட்டேன். உங்களிடம் கேட்பதற்கு நிறைய சந்தேகங்களை மனதளவில் தொகுத்து வைத்திருந்தேன். உங்கள் அருகாமையில் இருந்ததே பெரும்நிறைவு. Idealism மற்றும் Ideology க்கான விளக்க உரையால் தமிழ்நாட்டின் அரசியல் செய்திகளை கவனிக்க தொடங்கினேன். அப்போது தேர்தல் சமயம் வேறு. எங்கிலும் அரசியல் பேச்சு. தொடர்ந்து காந்தியம் தொடர்பான உங்கள் கட்டுரைகளை வாசித்தும் வருகிறேன்.
என்னளவில் சிறு விளக்கத்திற்காக கேட்கிறேன் ஐயா, தவறிருந்தால் மன்னிக்கவும். உங்களின் ஒரு கட்டுரையில் இலங்கை போன்ற சிறிய நில பரப்பில் சிறிய வாசிப்பு தளத்தில் அதிகமான எண்ணிக்கையில் எழுத்தாளர்கள் இருப்பது ஆபத்தானது என்று வாசித்த ஞாபகம். அதுபோல இந்தியாவின் ஒரு மாநிலம் தமிழ்நாடு. இங்குள்ள Ideology க்களின் எண்ணிக்கை. காந்தியம் அதில் பல பிரிவு அமைப்புகள், காங்கிரஸ் அதில் பல பிரிவு, திராவிடம் அதில் பல பிரிவு அமைப்புகள் கட்சிகள், இந்துத்துவ அதில் பல பிரிவு அமைப்புகள் கட்சிகள், பெரியரியம் அதில் பல அமைப்புகள், அம்பேத்கரியம்(தலித் அரசியல்) அதில் பல அமைப்புகள் கட்சிகள், தமிழ் தேசியம் அதில் பல அமைப்புகள் கட்சிகள்,கம்யூனிசம் அதில் பிரிவுகள், மேலும் பல மத சாதிய அமைப்புகள் வருங்காலத்தில் பல Ideology க்களை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன்.இந்த எண்ணிக்கை ஒன்றுபட்ட இந்தியாவிற்கு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா?மற்ற மாநிலங்களில் இதுதான் நிலமையா? Idealism சுருங்கி குறைந்ததற்கு இந்த எண்ணிக்கையும் காரணமா? சரியாகத்தான் கேட்டிருக்கிறேனா தெரியவில்லை. தவறிருந்தால் மன்னிக்கவும்.
இப்படிக்கு
மோகன்
***
அன்புள்ள மோகன்,
இலங்கையின் கவிஞர் எண்ணிக்கை பற்றி நான் சொன்னது பகடியாக. கவிஞர், எழுத்தாளர் போன்ற அடையாளங்களை எல்லாம் அத்தனை எளிதாக எவருக்கும் அளித்துவிடலாகாது என்பதையே அப்படிச் சொன்னேன். மதிப்பீடுகள் ஏதுமில்லாமல் அத்தனைபேரையும் உள்ளடக்கிப் பட்டியல் போடும்போது கவிதை என்றால் என்ன என்பதையே கைவிட்டுவிடுகிறோம், கவிதையின் தரம் என்ன என்பதையே எண்ண மறந்துவிடுகிறோம்.
அரசியலிலும் சரி, கருத்துக்களிலும் சரி, பன்மைத்தன்மையே ஜனநாயகத்துக்கு உகந்தது. வெவ்வேறு கருத்துக்கள் கட்சிகளாகப் பிரிந்து விவாதிப்பதும் மோதிக்கொள்வதும் ஜனநாயகத்தில் தவிர்க்கவே முடியாதது. அதன் வழியாகவே சிந்தனை வளர்கிறது. புதிய சிந்தனைகள் பிறக்கின்றன. எதிர்பாராத கோணங்கள் வெளிவருகின்றன. நுட்பமான மாறுபாடுகள்கூட முன்வைக்கப்படுகின்றன.
அவற்றில் எவை தகுதியானவையோ, எவை சரியானவையோ அவை வென்று வாழ்கின்றன. ஒரு கருத்து தனக்கு எதிரான பிற கருத்துக்களுடன் மோதி வெல்லும்போதே தகுதியை அடைகிறது. அதேபோல அக்கருத்துடன் சிறிய முரண்பாடு கொண்டவை கூட தங்கள் முரண்பாடுகளை முன்வைக்கும்போதே அக்கருத்தின் மெய்மை தெரியவருகிறது.
இயற்கை அப்படித்தான் இயங்குகிறது. கோடிக்கணக்கான விதைகள் முளைக்கின்றன. அவற்றில் ஆற்றல்கொண்டவை செடிகளாகி மரங்களாகி வளர்கின்றன. அதில் என்ன தவறு இருக்கிறது? ஏராளமான தரப்புகள் வரக்கூடாது என்று சொல்லி புதிய கருத்துக்களும், கருத்துமாறுபாடுகளும் வருவதை தடுத்துவிடலாமா? அது தேக்கநிலையை அல்லவா உருவாக்கும்? அவ்வாறு தடுப்பது சர்வாதிகாரம் அல்லவா? அப்படி பிற கருத்துக்கள் வரக்கூடாது என்று தடுக்கும் உரிமை எவருக்கு உண்டு?
அதேதான் கவிதையிலும். எல்லாரும் கவிதை எழுதலாம். ஏராளமானவர்கள் எழுதுவது மிகமிக நல்லது. நான் நிறையபேர் எழுதவேண்டும் என்றுதான் சொல்வேன். ஆனால் அத்தனைபேரையும் அங்கீகரிக்கக்கூடாது. தொலைபேசி அட்டவணை போல பட்டியல் போடக்கூடாது. தகுதியானவர்களைக் கண்டடைந்து அவர்களையே முன்வைக்கவேண்டும். அதுதான் இயற்கையான வழி.
ஜெ
***