யானை – புதிய சிறுகதை
அன்புள்ள ஜெ.,
நீங்கள் வல்லினத்தில் எழுதிய ‘யானை’ கதை குறித்து ஏதும் கடிதம் வந்திருக்குமா என்று தேடினேன். ‘யானை, கடிதம் ‘ என்று தளத்தில் தேடினால் ‘யானை டாக்டர்’ குறித்துதான் கிடைக்கிறது. சரிதான், உச்சவழு, தீவண்டி வரிசையில் ‘உங்களுக்கு நீங்களே எழுதிப்பார்த்துக்கொண்ட கதை’ போல என்று நினைத்துக்கொண்டேன்.
‘யானை’, அனந்தன் என்கிற, பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கிற சிறுவனைப் பற்றிய கதை. எந்த அளவிற்கென்றால், காலையில் அம்மாவிடம் ‘இன்னைக்கி என்ன கிழமை?’ என்று கேட்கிறான். ‘திங்கட்கிழமை’ என்றவுடன் ‘ஞாயித்துக்கிழமைனு சொல்லு…ஊஊ.. ‘ என்று ஒரே அழுகை. ‘கெட்ட பசங்க, கெட்ட டீச்சர்’ என்று தினம் ஒரு புகார். ‘அங்க ஒரு ஆனை இருக்கு’ என்று அடிக்கடி வீட்டில் புகார் சொல்கிறான். டீச்சரும் ‘எதைக்கேட்டாலும் சரியா பதில் சொல்றதில்ல, ஒரு டாக்டர்ட்ட காட்டிருங்க’ என்கிறார். வீட்டில் மிருகங்களை, தன் மனம்போன போக்கில் வரைந்துகொண்டு தனக்கென ஒரு உலகத்தில் இருக்கிறான். எது குறித்தாவது சத்தம்போட்டால் ‘ஓ’ வென்று அழுது, உச்சத்தில் சென்று, மயக்கநிலைக்குச் செல்லும் ஒரு அழுகை. ஒருநாள் பள்ளியிலிருந்து திரும்ப வந்தவுடன் ‘ஸ்கூல்ல என்னடா நடந்துச்சு?’ என்று கேட்கிறாள். ‘கருப்பு யானை, நூறு பிள்ளைகளை குத்திக்கொன்னுருச்சு, ஒரே ரத்தம், கொடுங்கையூர்ல கொண்டுபோய் போட்டாங்க’ என்கிறான். அவள் பதற்றத்தோடு அவனை எடுத்துக்கொண்டு வெளியே ஓடுகிறாள். ‘யானை உள்ள நின்னுட்டிருக்கு, வெள்ளையா இருக்கு’ என்கிறான். அதோடு கதை முடிகிறது.
என் தம்பிக்கு சிறுவயதில் இதுபோல பிரச்சினை இருந்தது. ஏதாவது கேட்டு கொடுக்கவில்லையென்றால், அழுகை உச்சத்தில்போய், மூச்சு நின்று, உடல் நீலம் பாரித்து, மயக்கமாகி விடுவான். டாக்டரிடம் எடுத்துக்கொண்டு ஓடுவோம். அன்னையரால் பள்ளிக்குக் கொண்டுவிட்டு, அழைத்துச் செல்லப்படும் குழந்தைகள் கொடுத்துவைத்தவை. சிறுபிள்ளைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துவரும் காலங்கள் எனக்கு உவப்பானவை. நீண்ட நான்கு மணிநேரப் பிரிவுக்குப் பிறகான அந்த ‘ரீயூனிய’னைப் பார்க்க வேண்டுமே? ஒரே முத்தா மழைதான். எல்லா அம்மாக்களும் அழகாகிவிடும் தருணமது. ஆனால் இந்தக் கதையில் அனந்தனின் அம்மாவேகூட அவனிடம் கடுமையாகத்தான் நடந்து கொள்கிறாள். தனியாய் இருப்பதன் பதற்றத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறாள். இத்தனைக்கும் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இந்தத் தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டவள் அவள். அவன் அப்பாவோ ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று எளிதாக இருக்கிறார். இந்தக் கதைக்கு வந்த பின்னூட்டங்களைப் படிக்க சுவாரசியமாக இருந்தது. ‘வகுப்பறைகள் கொட்டிலாக மாறாது இருக்க வேண்டும் எனில் ஆசிரியர் அன்னையாக இருக்க வேண்டும்’ ‘அருமையான கதை. குழந்தைகளை உணர்வதற்கு அவர்களாக நாம் மாற வேண்டும் அப்போதுதான் அவர்கள் பிரச்சனைகளை நாம் நன்கு அறிந்து தீர்வு காண முடியும்’.போன்ற அறிவுரைகள். ஒற்றை வரிப் புளகங்கள் தனி. ‘அது பெரிய கதை….ஆனை கதை…நல்லா இனிப்பா புளிப்பு முட்டாய் மாறி… பெருசா வீட்ட விட பெருசா….அந்த காக்கா தான் வரல…நான் பாத்தேன்…சிருச்சேன் படிச்சட்டே…ஆனை காக்கா கதை….(அய்யா கடைசில என்னையும் இப்படி ஆக்கிட்டீங்களே?)’ என்ற ‘கமெண்ட்’ ரசிக்கும்படியும், நேர்மையாகவும் இருந்தது.
நீங்கள் ‘நூறு குழந்தைகள்’ என்றவுடன், உடனே நினைவுக்கு வந்தது 2004ல் கும்பகோணத்தில் நடந்த தீவிபத்து. அனந்தன் பார்த்த கருப்புயானை பள்ளியேதானா? எனில் வீட்டில் பார்த்த வெள்ளையானை எது? அம்மாவை கடைசியில் அப்படி திடுக்கிட்டு ஓடச்செய்தது எது? ‘ஆழ்ந்து படித்து உரையாட வேண்டிய கதை’ என்று ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். உரையாடலின் துவக்கப் புள்ளி எது? என்றுதான் புரியவில்லை.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்