இளம் முகங்கள், கடிதம்

வரலாறு என்னும் மொழி : ஸ்டாலின் ராஜாங்கம்

அன்புள்ள ஜெ

ஸ்டாலின் ராஜாங்கம் பற்றிய உங்கள் குறிப்பை வாசித்தேன். இந்தத் தளத்தின் வழியாக நான் அறிமுகம் செய்துகொண்ட இளைஞர்களைப் பற்றி ஒரு பட்டியல் போடலாம் என்று தோன்றியது. நான் அவ்வப்போது ஒரு டைரியில் குறிப்புகளாக எடுத்து வைப்பதுண்டு.

இசை, இளங்கோ கிருஷ்ணன், சுனீல்கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப், ம.நவீன், அகரமுதல்வன், சதீஷ்குமார் சீனிவாசன், ஆனந்த்குமார், சுசித்ரா, பா.திருச்செந்தாழை, மதார், கிரிதரன் ராஜகோபாலன், சரவணக் கார்த்திகேயன், தெய்வீகன், மயிலன் சின்னப்பன்,சுஷீல்குமார், விஷால்ராஜா   என்று ஏராளமான இளம் படைப்பாளர்கள். ஸ்டாலின் ராஜாங்கம், அருட்பா ப.சரவணன் போன்ற ஆய்வாளர்கள், குக்கூ ஸ்டாலின், சிவகுருநாதன் போன்ற களச்சேவை செய்பவர்கள்  சட்டென்று நினைவுக்கு வரும் பெயர்கள்.

இவர்கள் பொதுவான அம்சம் கொண்டவர்கள் அல்ல. ஒரே தரப்பைச் சேர்ந்தவர்களும் அல்ல. விதவிதமான எழுத்துமுறை கொண்டவர்கள். இவர்களின் படைப்புகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். இவர்களில் உள்ள பொதுவான அம்சம் நேர்மையும் தீவிரமும்தான். நீங்கள் பரிந்துரைப்பவர்களில் தகுதியற்றவர்கள் என்று எவரையுமே நான் காணவில்லை. சிலர் இன்னும் கொஞ்சம் மேலே வரவேண்டும் என்று தோன்றியிருக்கிறது.

இப்படி சீராகத் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையினரை அறிமுகம் செய்துகொண்டிருப்பவர்கள் எவருமில்லை. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நிற்காமல் பரவலான வாசிப்பு இருந்தால்தான் இது சாத்தியம். இந்தப்படைப்பாளிகளைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளும் விவாதங்களும் வேறெங்கும் இல்லை. இன்று எழுதிக் கொண்டிருப்பவர்களில் இருந்து சாராம்சமான ஒரு தரப்பை திரட்டி முன்வைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் பெரும்பணிகளில் இது முக்கியமானது என்று நினைக்கிறேன். விஷ்ணுபுரம் விழாக்களிலும் தொடர்ச்சியாக இளம்படைப்பாளிகளை அடையாளம் காட்டி அவர்களை வாசிக்க வைக்கிறீர்கள்.

ஆனால் மிகையான பாராட்டுக்கள் இல்லை. பெரும்பாலும் ஒரு வார்த்தை குறைவாகவே சொல்கிறீர்கள். ஆகவே உங்கள் கருத்துக்களுக்கான மதிப்பு மிக அதிகம். எனக்கு வயது அறுபது. தமிழில் வாசிப்பது நின்று பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு இணையம் வழியாக மீண்டும் ஆரம்பித்தேன். நானெல்லாம் பழைய கணையாழி, தீபம் கோஷ்டி. தமிழில் இத்தனை தரமான எழுத்துக்கள் தொடர்ச்சியாக வெளிவருவதும், ஓர் இலக்கிய அலை நிகழ்ந்துகொண்டிருப்பதும் மனநிறைவை அளிக்கிறது. சீராக அவற்றை அறிமுகம் செய்துகொண்டிருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

ஜி.சங்கரநாராயணன்

முந்தைய கட்டுரைபதிமூன்று விதங்களில் சொல்லப்பட வேண்டிய கதை
அடுத்த கட்டுரைகிரானடா நாவலும் அச்சமும், கடிதங்கள்