கால்களுக்குக் கீழே…

ஓசூர் போனபோது எடுத்த படம். நண்பர் ஒருவரின் விளைநிலத்திற்குள் இருக்கும் கற்பதுக்கை இது. ஆனால் வரலாற்றுக்கு முந்தைய காலத்தையது அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கலாம். யாரோ ஓர் அரசனுக்குரிய பள்ளிப்படை. அவன் இரு மனைவிகளுடன் இருக்கிறான். கொற்றக்குடையும் குதிரையும் அவனை அரசன் என்று காட்டுகின்றன.

மீண்டும் இப்புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அரங்கசாமி எடுத்தவை. தற்செயலாக விழுந்ததா அல்லது இயல்பாக அமைந்ததா தெரியவில்லை. இந்தப்படம் அபாரமான ஒரு குறியீடு போலத் தெரிந்தது. இன்றைய எளிய சிமிண்ட் வீடு ஒன்றுக்கு அடியில் அக்காலத்தைய பதுக்கை ஒன்று அமர்ந்திருக்கிறது.

காலம் என்று தலைப்பு வைக்கலாம். அல்லது வரலாறு என்று. விஷ்ணுபுரத்தின் முதல்வரி நினைவுக்கு வருகிறது. “என் காலடிக்குக் கீழே நான் அறிந்ததெல்லாம் மணல்தான்” ஆனால் நான் அந்நாவலை எழுத முதல்மந்திரமாக அமைந்தது என் காலடிக்குக் கீழ் என்னும் மூன்று சொற்கள்தான்.

முந்தைய கட்டுரைஆரம்பக் கல்விக்கு ஓர் இயக்கம்- கடிதம்
அடுத்த கட்டுரைநுரையின் ஒளி