எழுத்தாளன் என்னும் நிமிர்வு

அன்புள்ள ஜெ

நேரடியாக இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு தயங்குகிறேன். இருந்தாலும் என் நட்புவட்டாரத்தில் கேலியும் கிண்டலுமாக பலர் பேசுவதனாலும், இலக்கியரீதியாக பொருட்படுத்தத்தகாத சிலர் முகநூலில் வம்பு பேசுவதனாலும் இதைக் கேட்கிறேன்.

நீங்கள் ஓர் இலக்கியவாதியாக உங்களுடைய இடத்தையும் தகுதியையும் முன்வைத்துப் பேசுகிறீர்கள். தயங்காமல் உங்களை உயர்த்திச் சொல்கிறீர்கள். இப்படி இலக்கியவாதிகள் சொல்வதில்லை என்று சொல்கிறார்கள். தமிழில் மட்டுமே இப்படிச் சொல்வதுண்டு என்கிறார்கள். இப்படிச் சொல்லலாமா? இதற்கு முன்னுதாரணங்கள் உண்டா?

எஸ்.திவ்யா

***

அன்புள்ள திவ்யா,

இந்தக் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் என் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவர் என்றால் என் சாயல்கொண்ட ஒரு நல்ல மொழிநடை உருவாகியிருக்கும். இக்கேள்வியை என்னைப் படிக்க ஆரம்பிக்கும் ஒருவரின் மொழிநடை என்று எடுத்துக்கொள்கிறேன்.

பொதுவாக ஓர் ஆலோசனை, ஒருபோதும் தன்னளவில் எதையாவது பொருட்படுத்தும்படி எழுதாத ஒருவரின் கருத்துக்களை கருத்தில்கொள்ள வேண்டியதில்லை. இன்று சமூகவலைத்தளம் எந்த முட்டாளும் கருத்து உதிர்க்க வாய்ப்பை அளிக்கிறது. முக்கியமானவர்கள் மேல் அவன் கசப்பை கக்கினான் என்றால் அவனை கவனித்து ‘ஆகா’ போட ஒரு கூட்டம் உள்ளது. அது அவனுக்கு ஒரு மேம்போக்கான முக்கியத்துவத்தை அளிக்கிறது.

தமிழ்ச்சமூகத்தில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே சமூக ஊடகத்தளத்திலும் வாசகர்கள் மிகமிக அரிதானவர்கள். எஞ்சியவர்கள் வெறுமே பெயர் தெரிந்து வைத்திருப்பவர்கள். பண்பாட்டுப்பயிற்சி அற்ற சமூகம் எப்போதுமே அதிகாரத்தையே அஞ்சி வழிபடும். அரசியலாளர், செல்வந்தர்களை மிதமிஞ்சி வணங்கும். ஆனால் அறிவுச்செயல்பாடுகளை அஞ்சும், அருவருக்கும்.

ஓர் அறிவியக்கவாதி என்ன செய்கிறான் என பாமரனுக்கு தெரியாது. ஆகவே அவர்களையும் தன்னைப்போன்ற ஒரு சாமானியனாக நினைத்துக்கொள்கிறான். தன்னைப்போன்ற ஒரு சாமானியனுக்கு தன்னைவிட அதிக கவனம் ஏன் கிடைக்கிறது என்று அவனுக்குப் புரிவதில்லை. ஆகவே அறிவியக்கவாதிமேல் காழ்ப்பும் கசப்பும் ஏளனமும் கொண்டிருக்கிறான்.

இங்கே எழுத்தாளனைப் பற்றிப்பேசும் எந்த ஒரு பாமரனும் அவனை தன்னைப்போல நினைத்து, தன் நிலையில் வைத்து பேசுவதை, எள்ளிநகையாடுவதை காணலாம். ஓர் அறிவியக்கவாதியின் படிப்பும் உழைப்பும்கூட அவனுக்கு ஒரு பொருட்டாக தோன்றுவதில்லை. ஆனால் ஓர் அரசியல்வாதியை, செல்வந்தரை கும்பிட்டுத்தான் பேசுவான். ஆகவே எழுத்தாளனை ஏகடியம் செய்தோ வசைபாடியோ ஏதாவது சொன்னால் உடனே பலநூறுபேர் வந்து கூடி கும்மியடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இச்சூழலில் எழுத்தாளர்கள் பற்றி வரும் எதிர்மறைக்கருத்துக்கள், அசட்டு விமர்சனங்கள், நகையாடல்களுக்கு இலக்கிய ஆர்வமோ அறிவியக்க ஈடுபாடோ கொண்டவர்கள் செவிகொடுக்கலாகாது. அதைப்போல அறிவையும் பொழுதையும் வீணடிப்பது பிறிதில்லை.

*

உலகமெங்கும் எழுத்தாளர்கள் தங்கள் இடமென்ன, தகுதி என்ன என்று தேவையான இடங்களில் சொல்லாமலிருந்தது இல்லை. அப்படிச் சொல்லாத ஒரேயொரு இலக்கியமேதையைக்கூட சுட்டிக்காட்டமுடியாது.

தன் பெருமையை உணராமல் அளிக்கப்பட்ட பரிசை பெற மறுத்த பெருங்கவிஞர்களின் வரிசையை நாம் சங்கப்பாடல்களில் காணலாம். என்னை விரைந்தேற்றுக்கொள்ளாத வேந்துண்டோ என்று பாடியவனும், கவிராஜன் தமிழ்நாட்டுக்கு இல்லை என்னும் வசை என்னால் கழிந்தது என்று பாடியவனும் தமிழ்க்கவிஞர்கள்தான்.

தன் தகுதியையும் இடத்தையும் அதை உணர்ந்தாகவேண்டியவர்கள் முன் தெளிவாக எடுத்துச் சொல்வது எழுத்தாளனின் கடமை. அதிலும் இலக்கியரசனையோ, மெய்யான வாசிப்போ இல்லாத பாமரர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் நம் பொதுச்சூழலில், அவர்களின் அசட்டு அரசியல்க் காழ்ப்புகள் எழுத்தாளர்கள் அனைவரையுமே சிறுமை செய்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றுக்கு மேல் எழுந்து நின்று, தருக்கி தலைநிமிர்ந்து, நான் இன்னார் என்றும் எனக்குரிய இடம் இது என்றும் சொல்வது அவன் ஆற்றும் சமூகக்கடமை. மெய்யான இலக்கியம், மெய்யான அறிவியக்கம் நோக்கி மக்களை ஆற்றுப்படுத்தும் செயல் அது.

ஒரு நல்ல படைப்பை எழுதியதுமே எழுத்தாளனுக்கு தெரிந்துவிடுகிறது அவன் வெற்றியடைந்துவிட்டான் என. அவ்வாறு அவன் அடைந்த வெற்றிகளை கொண்டு அவன் தன் தகுதியையும் மதிப்பிட்டிருப்பான். அவன் பிற இலக்கியப்படைப்புகளையும் வாசிப்பவன் என்பதனால் தன் இடத்தையும் ஐயமற அறிந்தவனாகவே இருப்பான். அந்த அறிதலே எழுத்தின் வழியாக அவன் அடையும் பயன். அவனுடைய நிமிர்வின் ரகசியம் அது. எழுத்தையும் இலக்கியத்தையும் அறியாப் பாமரர்களின் புறக்கணிப்பு ,எள்ளல் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் காலத்தின்முன் நிற்கும் நிமிர்வை அவனுக்கு அளிப்பது அது.

அவ்வண்ணம் தன்னுணர்வுடன் பேசிய தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி. பால்ஸாக், தாமஸ் மன் என நூற்றுக்கணக்கான இலக்கியமேதைகளின் வரிகளை எடுத்துச் சொல்லமுடியும். அவர்களில் பலர் உலகப்புகழ் பெற்றவர்கள். உலகமறியாத மேதைகளிடும் நாம் அதே நிமிர்வை காணமுடியும்.

ஆனால் இன்னொரு பக்கமும் உண்டு. அது எழுத்தாளன் தன்னிரக்கத்தில், சோர்வில் மூழ்கும் தருணங்களால் ஆனது. எந்த எழுத்தாளனும் அவன் எண்ணியதை எழுதியிருக்கமாட்டான். எய்தியதை விட மிகமிக அப்பால்தான் அவன் கனவு இருந்துகொண்டிருக்கும். அது ஓரு சோர்வலையென எழுந்து அவனை மூடும். அப்போது தன்னைத்தானே நிராகரித்து அவனே பேசவும்கூடும்.

அதேபோல தான் எழுதியவற்றிலிருந்து விடுபடுவதும் எழுத்தாளனுக்கு பெரும் சவால். எழுதியநூல்கள் ஒரு பெரிய வேலியென அவனைச் சூழ்ந்து முன்னகர்வை தடுக்கின்றன. குறிப்பாக அவை பெரும்புகழ் பெற்றுவிடுமென்றால் அவன் அவற்றை நிராகரித்தேயாகவேண்டும். மேலைச்சூழலில் வெற்றிபெற்ற எழுத்தாளனைச் சுற்றி அவன் எழுதிய பழைய நூல்களைப் பற்றி பேசுபவர்கள் நிறைந்திருப்பார்கள். அவன் அவர்களை, அந்நூல்களை மூர்க்கமாக உதறிப்பேசுவது அடிக்கடி நிகழ்வது.

இலக்கியப் படைப்பாளியின் உள்ளம் செயல்படுவதற்கு இலக்கணம் வகுக்க எவராலும் முடியாது. அவன் எங்கே எப்படித் தன்னை முன்வைக்கிறான் என அவனே உணர்வதில்லை. ஒருசமயம் காலத்தின் குழந்தையாக, மறுசமயம் உலகால் புறக்கணிக்கப்பட்டனவனாக அவன் உணரக்கூடும். இலக்கிய அறிமுகம் சற்றேனும் உள்ள எவரும் இலக்கியவாதி இப்படித்தான் பேசவேண்டும், இதுதான் நாகரீகம் அல்லது மரபு என்றெல்லாம் சொல்ல முன்வரமாட்டார்கள்.

எனக்கு என் எழுத்தைப் பற்றிய தன்னம்பிக்கை என்றும் உண்டு. என் முதல்நாவல் ரப்பர் வெளியீட்டு விழாவிலேயே அதைச் சொன்னேன். ‘தமிழின் முதன்மையான நாவல்களை நான் எழுதுவேன்’ என. விருதுபெற்ற அந்நாவலை நிராகரித்து மேலே செல்வேன் என்று சொன்னேன். விஷ்ணுபுரம், அதன்பின் பின்தொடரும் நிழலின் குரல், அதன்பின் கொற்றவை, அதன்பின் வெண்முரசு என என் உச்சங்களை அடைந்து அதன்மேல் ஏறிச் சென்றுகொண்டிருக்கிறேன்.

அதை வாசகர்களிடம் சொல்கிறேன். அதற்கு ஒரு துணிவுவேண்டும். வாசிக்காதவர்களிடம் ’வாசித்துப்பார், உனக்கே தெரியும்’ என்று சொல்வதற்கான துணிவு. வாசித்தவர்களின் முகம் நோக்கி அதைச் சொல்லும் துணிவு. அத்துணிவுள்ளவர் சொல்லவும் தகுதிபெற்றவர்.

எழுத்தாளனின் தகுதி, அவன் செயல்படும் விதம், அவனுடைய இடம் ஆகியவற்றைப்பற்றி தமிழில் பேசப்படும் இத்தகைய கருத்துக்கள் எவற்றையும் வேறெந்த உலகமொழிகளிலும் பேசவேண்டிய தேவை இல்லை. மலையாளத்தில் இந்த எந்தக் கட்டுரையையும் எழுதவேண்டியதில்லை. அங்கே இவை அனைவரும் அறிந்த பொதுக்கருத்துக்கள்.

ஆனால் தமிழ்ச்சூழலில் எழுத்தாளன் என்னும் ஆளுமையையே மிகப்பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. பண்பாட்டில் அவன் இடமென்ன என்றே தெளிவில்லை. வாசிப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குக் கூட அந்த எளிமையான அடிப்படைகள் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இன்னும் ஒரு தலைமுறைக்காலம் அதைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கவேண்டும்.

தெளிவாக உதாரணம் சொல்கிறேன். வெண்முரசின் சில பகுதிகளை மலையாள இதழாளர், விமர்சகர் சிலர் தமிழிலேயே படித்திருக்கிறார்கள். ஆனால் வெண்முரசு எழுதப்படுவது, முடிவடைந்தது பற்றி மாத்ருபூமி இரண்டு அட்டைப்படக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளது. பாஷாபோஷிணி இரண்டு அட்டைக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளது. மூன்று தொலைக்காட்சி நிகழ்வுகள் வந்துள்ளன. வரவிருக்கின்றன.

தமிழில் எந்த ஊடகமும் வெண்முரசு முடிந்தது பற்றி ஒரு வரிச் செய்தி வெளியிடவில்லை. இங்குள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் வெண்முரசு என்ன என்றே அறியாதவர்கள். பலர் செவிச்செய்திகளாகவே வெண்முரசை அறிந்தவர்கள். அது இயல்பு, தமிழில் அவ்வளவுதான் எதிர்பார்க்கமுடியும். நானறிந்த இதழாளர்கள் எவருக்கும் அன்றாட அரசியல் வம்பு, சினிமாவுக்கு அப்பால் ஏதும் தெரியாது. விமர்சகர்களுக்கும் அன்றாட அரசியலும், சில எழுத்தாளர்களின் பெயர்களும் அன்றி ஒன்றும் தெரியாது.

இச்சூழல் என்னிடம் மறைமுகமாகச் சொல்வதென்ன?  ‘எழுதிவிட்டு பேசாமல் இரு, நாங்களும் கவனிக்கமாட்டோம்’ என்றுதானே? ஆகவே நான் என் எழுத்தைப்பற்றிச் சொல்லியாகவேண்டும். ஏன் பாரதி “நவகவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை” என தன் கவிதைபற்றிச் சொல்லவேண்டியிருந்ததோ அதே காரணம்தான்.

அதைக்கேட்டு தமிழகப் பெருந்திரளில் நூறுபேர் குழம்புவார்கள், பத்து அசடுகள் நையாண்டி செய்வார்கள், ஒருவர் என்னை அறிந்து வாசிக்க வருவார். அவரையே நான் சென்றடையவேண்டும். அவ்வாறே என்னுடைய வாசகர்வட்டத்தை அடைந்திருக்கிறேன். எந்த ஊடகத்தாலும் அல்ல. என் ஊடகத்தை நானே உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் இருந்த அதே நிலைதான் இது. இந்நிலை மலையாளத்தில் இல்லை, உலகமொழிகள் எதிலும் நானறிந்து இல்லை. ஆகவே இக்குரல்.

*

ஆனால் என்னை வேறு களங்களில் அப்படிச் சொல்லிக்கொள்ள மாட்டேன். நான் ஆன்மிகமான தேடலும் பயணங்களும் கொண்டவன். ஆனால் ஆன்மிகமான தகுதி கொண்டவன் என்று ஒரு கணமும், ஒரு மேடையிலும் சொல்ல மாட்டேன். அவ்வண்ணம் என்னை கருதுபவர்களிடம் அதை உறுதியாக மறுப்பேன்.

ஏனென்றால் வெண்முரசு எழுதும் நாட்களில் நான் கொண்ட கொந்தளிப்பை நானே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மாபெரும் உளச்சோர்வுக்குள் சென்றிருக்கிறேன். என்னுடைய காம குரோத மோகங்கள் கொந்தளித்து எழுவதைக் கண்டேன். அடித்தட்டின் சேறு அனைத்தையும் கிளறிவிட்டுவிட்டேன் என உணர்ந்தேன். தன்னிரக்கம் மிகுந்து தற்கொலையின் விளிம்பில் பலநாட்கள் அலைந்திருக்கிறேன்.

அன்று வேண்டுமென்றே உலகியலை அழுந்தப் பற்றிக்கொள்ள முயன்றேன். இங்கே என்னை பிடித்து வைத்திருக்கும் விஷயங்களை தேடினேன். மாதக்கணக்கில் வெறிகொண்டு போர்ன் சைட்கள் பார்த்திருக்கிறேன். படுகொலை வீடியோக்களை மனநிலை பிசகியவன்போல பார்த்திருக்கிறேன். அத்துடன் பலவகைச் சண்டைகள், பூசல்கள். முழுமையான தூக்கமின்மை பலநாட்கள் தொடர்ந்திருக்கிறது. என்னென்னவோ உளச்சிக்கல்கள். வேண்டுமென்றே, ஓர் இழப்பு ஏற்பட்டால் நான் அதைப்பற்றி கொஞ்சநாள் கவலைப்பட்டு உலகியலில் இருப்பேன் என்று எண்ணியே, கொஞ்சம் பணத்தை தப்பாக முதலீடு செய்து அழித்திருக்கிறேன்.

அந்நாட்கள் இன்றும் அச்சமூட்டுகின்றன. அர்த்தமில்லாத சொற்பெருக்கு பொங்கி நிறைந்து சட்டென்று ஒரு சொல்கூட இன்றி அப்படியே அணைந்துவிடும். மண்டையால் முட்டித் திறக்க வேண்டியிருக்கும். திறந்தால் அதுவாகவே வழிந்து படைப்பாக ஆகிவிடும். ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்து ஒன்று வருமா என்ற திகைப்பிலேயே முடியும். ஒரு நாவல் வந்த சில நாட்களிலேயே அது பின்னகர்ந்து மறைய ,வெறுமையும் கசப்பும் எஞ்சியிருக்கும்.

அதைவிட மோசமானவை உச்சநிலைகள். Bliss என ஆங்கிலத்தில் சொல்லும் பெரும் பரவசத்தருணங்கள். அவை தற்செயலாக உருவாகும் பேரொளி போன்றவை. ஏன் வருகிறதென தெரியாது, ஏன் அணைகிறதென்றும் தெரியாது. அணைந்தபின் வரும் கடும்இருட்டை கையாளவும் முடியாது. அதன்பொருட்டு இசை. நாட்கணக்கில். இடைவெளியே இல்லாமல் 36 மணிநேரம் இசைகேட்ட நாட்களுண்டு.

என் அகத்திறனால் அல்ல, என் நல்லியல்பாலும் அல்ல, என் குருவருளாலேயே கடந்துவந்தேன் என உணர்கிறேன். ஆகவே நான் என்னை அறிந்தவிந்தவனாக, அடங்கியவனாக நினைக்கவில்லை. வெண்முரசு முடிந்தபின் விடுதலை பெற்றுவிட்டேன். இன்று உள்ளம் அமைதி கொண்டிருக்கிறது. தெளிவடைந்திருக்கிறது. ஆனால் என் ஆழத்தின் இருளை எல்லாம் நன்கு அறிந்துவிட்டேன். அதைக்கடந்து செல்ல நெடுநாட்களாகும். கடக்காமலும் போகலாம்.

எனவே ஒருபோதும் வெண்முரசை வைத்து எனக்கு வரும் வணக்கங்களை ஏற்றுக்கொள்வதில்லை. என் குருவின் பெயரால் அன்றி என் பெயரால் எவரையும் வாழ்த்துவதுமில்லை. ஒருவேளை என் எழுத்தை மொத்தமாக நான் நிராகரித்துக் கடந்துசெல்லவும்கூடும். இதுவும் ஒரு தன்னுணர்வே. இது செயற்கையான எளிமை அல்ல. எழுத்தாளன் என்னும் நிமிர்வின் மறுபக்கம். எழுத்தின் இருவேறு பேறுகள்.

இதை என் வாசகர்களிடம் மட்டுமே பகிர்ந்துகொள்கிறேன். என் வாசகர்களன்றி எவரும் இவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியாது.

ஜெ

எழுத்தாளனின் மதிப்பு
எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்
எழுத்தாளனின் ஞானம்
எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2
எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?
முந்தைய கட்டுரைஎங்கள் ஒலிம்பிக்ஸ்
அடுத்த கட்டுரைபிரயாகையின் துருவன் – இரம்யா