ஆரம்பக் கல்விக்கு ஓர் இயக்கம்- கடிதம்

ஆரம்பக் கல்விக்காக ஓர் இயக்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

’’ஆரம்பக்கல்விக்காக ஓர் இயக்கம் ’’குறித்த கேள்வியும், அதற்கு நீங்கள் அளித்திருக்கும் பதிலும் மிக மிக முக்கியமானது. இக்கட்டுரை அரசின் கவனத்துக்கு போக வேண்டுமே என்று ஆதங்கமாக இருந்தது. சின்னஞ்சிறிய குழந்தைகளை கணினித்திரை முன்பு அமர வைத்து சொல்லிகொடுப்பதெல்லாமே முற்றிலும் வீண், கல்லூரி மாணவர்களுக்கே அப்படி கற்று தருவது தோல்வியடைந்திருக்கையில் ஆரம்பக்கல்வியை  ஒருபோதும் இப்படி கற்றுக்கொடுக்க முடியாது. ஆனால் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கும் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மிக இளம் வயதிலேயே ஆசிரியர்களை எப்படி இணையவழிக்கல்வியின போது ஏமற்றுவதென்றும் குழந்தைகள் கற்றுக்கொண்டு விடுவதையும் கவனிக்கிறேன்.

அக்கம் பக்கம் நிறைய குழந்தைகளிப்படி வீணாக போய்க் கொண்டிருப்பதை மிகுந்த  வருத்தத்துடன்  பார்த்துக்கொண்டிருக்கிறேன்

சில நாட்களுக்கு முன்னால் மதிலுக்கு பின்னால் விளையாடிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவன் எதோ அவர்களுக்குள் சண்டை வந்தபோது மிக மோசமான நினைக்கவே கூசும் ஒரு வசவை சாதாரணமாக சொன்னான். என் காதில் அது விழுந்த போது அதிர்ந்துபோனேன்.அவன் அப்படி பேசக்கூடியவன் இல்லை, இப்போது அவனை கவனிக்கவும், நெறிப்படுத்தவும் அவன் இளமையின் ஆற்றலை கல்வியில் திசை திருப்பவும் ஆசிரியர்களோ பெற்றோர்களோ அருகிலில்லை. நோய்த்தொற்றினால் கல்லூரிகள் மூடப்பட்டதும் அவன் அப்பாவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர் வேலை போனது எனவே தாயும் தகப்பனும் தினசரி கிடைக்கும் வேலைகளுக்கு சென்று விடுகிறார்கள்,சிறுவன் தெருவிலெயே எந்நேரமும் இருக்கிறான். வழிதவறும் வாய்ப்புகள் கல்விக்கூடங்களுக்கு செல்லாத சிறுவர்களுக்கு இப்போது சுலபமாக கிடைக்கின்றன.

இன்னுமொரு சின்ன குழந்தை, அவன் 2 வயதை கடந்த போது  நோய் தொற்றுக்காலம் வந்தது இப்போது 4 வயது தாண்டியும் அவன் பள்ளிக்கு செல்லவில்லை. உண்மையில் நல்ல புத்திசாலி குழந்தை அவன், உங்களின் கதைகள் அவனுக்கு நான் சொல்லி நன்றாக  நினைவு வைத்திருக்கிறான்.ஆனால் ஒரு நேர்கோடு போடு என்றோ ஓர் எழுத்தை எழுது என்றோ சொன்னால் அவன் செய்வதில்லை. பள்ளிச்சூழலை திறன்பேசியோ கணினியோ, எதன் துணைகொண்டும் வீட்டில் உருவாக்கிவிட முடியாது,

நீங்கள் பரிந்துரைத்திருப்பவை அனைத்தும் எளிதாக நிறைவேற கூடியவைகள்தான். இயக்கம் என்னும் சொல்லுக்கு மிகச்சரியான பொருள்தருமொன்றைத்தான் இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.. இந்தக்கேள்வியை வாசித்ததும் மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்தேன். இவற்றை குறித்தும் கவலைப்படுபவர்கள் இருக்கிறார்கள் என்று .உங்கள் பதிலை வாசித்ததும் மிகுந்த நிம்மதி அடைந்தேன், ஆம் எத்தனை சரியான, முழுமையான தீர்வு இது.

இவை அனைத்தும் நிச்சயம் சாத்தியப்படும் ஏனெனில் நான் இதுபோன்ற ஒரு இயக்கத்தில் முழுமனதாக தொடர்ந்து பல ஆண்டுகள் பங்கெடுத்திருக்கிறேன்.

நான் முனைவர் பட்ட ஆய்வு செய்த கோவை பல்கலையில்  தினசரி  MLP , Mass Literacy Programme    என்னும் ஒரு இயக்கம் நடந்துகொண்டிருந்தது. இதற்கென பல்கலைக்கழக மானிய குழுவின் நிதி உதவியும் தொடர்ந்து  கிடைத்துக்கொண்டிருந்தது. தினசரி பாடத்திட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 1 மணி நேரம் இதற்கென வரையறுக்கப்பட்டு கட்டாயம் பின்பற்ற பட்டது.

தினமும் கல்லூரி பேருந்துகளில் வெவ்வேறு நேரங்களில் இளங்கலை, முதுகலை, ஆய்வு மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கோவையின் புறநகர் பகுதிகளில் இருக்கும் ஊர்களுக்கு பேருந்துகளில் செல்வோம். 1 மணி நேரம் அங்கிருக்கும் வீடுகளில் எழுதப்படிக்க தெரியாத பெண்களுக்கும் பள்ளிக்கல்வியை தொடராமல் ஆடுமாடு மேய்த்து கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் நாங்கள்  கையோடு கொண்டு போயிருக்கும் சிலேட்டுக்களில் அடிப்படையான எழுத்துக்களையும் சொற்களையும் எழுதவும் உச்சரிக்கவும் சொல்லி கொடுப்போம். பல இல்லத்தரசிகள்  கையெழுத்து போட எங்களால் கற்றுக்கொண்டார்கள். பலர் ஆர்வமாக சமையல் வீட்டு வேலைகளையெல்லாம்  முடித்துவிட்டு எங்களுக்காக காத்திருப்பார்கள். நான் எனக்கான ஒரு மணி நேரமும் என் ஆய்வு நெறியாளருக்கான இன்னொரு மணிநேரமுமாக தினசரி 2 மணி நேரங்கள் இதில் பங்கெடுத்து கொண்டிருந்தேன்

பல சிறுவர்களை கூட்டமாக ஒரு அரசமரத்தடியில் அமரவைத்து எழுத கற்றுக் கொடுப்பதுதுடன் கதைகளும் சொல்லுவேன். ஒரு கட்டத்தில் கதைகள் தீர்ந்து போய் நானே சுயமாக கதைகள் உருவாக்கியும் சொல்லிக்கொண்டிருந்தேன்.  அங்கிருந்து பல்கலைக்கழகத்துக்கு திரும்பி பேருந்தை விட்டு இறங்கியதும் மாணவிகளுக்கு ஆளுக்கொரு  பட்டை சாக்லேட் கொடுப்பார்கள் ஊதியம் போல. மகிழ்வுடன் வாங்கி கொள்வோம்.

இப்பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு மட்டுமானது என்பதால் விடுதியில் இருக்கும் ஒரு சில மாணவிகள் தங்கள் காதலர்களை சந்திக்க இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டதைத் தவிர,  பெரும்பாலும் வெற்றிகரமாக இவ்வியக்கம் நடந்தது. நானங்கிருந்த 5 வருடங்கள் தொடர்ந்து இதில் மகிழ்வுடன் ஈடுபட்டிருந்தேன். இப்போதும் அந்த இயக்கம் தொடர்கிறதா  என தெரியவில்லை

இதுபோலவே அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அரசு இப்படியான இயக்கங்களை துவங்கி முறைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருந்தால் இது சாத்தியப்படும்.

இப்படி கல்விக்கூடங்கள்  அரசின் கீழ் இந்த அடிப்படைக் கல்வி அளிக்கும் இயக்கத்தில் ஒருங்கிணைந்து நேர்மையாகவும் முழு ஈடுபாட்டுடனும் செயலாற்றினால் நிச்சயம் இந்த பெரும் குறைபாட்டை சீராக்க முடியும்.   கல்லூரிகளில் நடைபெறும் நாட்டு நலப்பணி திட்டத்தில்  மாணவர்கள் இரண்டு வருடங்களுக்காவது கோவில் சுவர்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும்  வெள்ளையடிப்பது, கல்லூரி வளாகத்தில்,குப்பை பொறுக்குவது போன்ற  நலப்பணிகளுக்கு பதிலாக எழுத்தறிவித்தலை அருகிலிருக்கும் பள்ளிகளில்  தொடர்ந்து செய்யலாம்

என்னைப் போன்ற அரசுப் பணியில் இருக்கும் லட்சக்கணக்கான ஆசிரியர்களும் வார இறுதிகளில் முழுநாளும் அருகிலிருக்கும் பள்ளிகளில் தொடர்ந்து இந்த பணியை செய்யலாம்

இந்த பதிவை வாசித்ததில் இருந்து இதை எத்தனை விரைவாக செய்கிறோமோ அத்தனைக்கு நல்லதென்று  மனம் பொங்கிக் கொண்டே இருக்கிறது.

நன்றியுடன்

லோகமாதேவி 

முந்தைய கட்டுரைவெண்முரசு, கலிஃபோர்னியா
அடுத்த கட்டுரைகால்களுக்குக் கீழே…