இயல் விருது சில விவாதங்கள்

இயல் விருது சில விவாதங்கள்
இயல் அமைப்பாளர்களில் ஒருவருக்கு எழுதிய முதல் கடிதம்

அன்புள்ள …..

நாஞ்சில்நாடன் நிகழ்ச்சி நல்லவிதமாக நடந்தது.

லட்சுமி ஹாம்ஸ்டமுக்கு விருது கிடைத்தது எனக்கு ஆழமான அதிர்ச்சியை அளித்தது. மிக மேலோட்டமான மொழிபெயர்ப்பாளர். நல்ல மொழிபெயர்ப்பாளராக இருந்தால்கூட ஒரு படைப்பாளிக்கு பரிசுக்கு தகுதியில்லாமல் மொழிபெயர்ப்பாளருக்கு தகுதி வந்துவிட்டதா என்ன? நாளைக்கு புரூஃப் பார்ப்பவர்களுக்கு விருதளிப்பீர்களா?  அவர் தமிழ் பண்பாட்டு நுட்பங்களை அறியாதவர். என்ன செய்தார் என ‘வாழ்நாள் சாதனை’ விருது அளிக்கப்படுகிறது என எனக்குப்புரியவில்லை. என் நோக்கில் ஜார்ஜ் எல் ஹார்ட்டுக்கு கொடுக்கப்பட்டபோதே இவ்விருது மதிப்பிழந்துவிட்டது. தமிழின் பெரும் முன்னோடிகள் இவ்விருதுக்குழுவுக்கு ஒரு பொருட்டாகவே  படவில்லை என்பதை ஒரு அவமதிப்பாகவே எடுத்துக் கொண்டேன். இப்போது இது ஒரு கேலி போல படுகிறது. வெறுமே பல்கலை தொடர்புகளுக்காக இவ்விருது தங்களுக்குள்ளேயே கொடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆரம்பத்தில் சுந்தர ராமசாமிக்கு வழங்கப்பட்டபோது ஒரு நம்பிக்கை இருந்தது. இப்போது முற்றாக இல்லை. ஆம்,இயல் விருது செத்துவிட்டது. இனி அது இங்குள்ள எல்லா அரசியல் விருதுகளைப்போல ஒன்றுமட்டுமே.

என் கடுமையான கண்டனத்தை பதிவுசெய்வதாக இருக்கிறேன். என் நாளெல்லாம் சிற்றிதழ் சார்ந்து தங்கள் வாழ்க்கையை அர்பணித்து எழுதும் இலக்கிய முன்னோடிகளை முன்னிறுத்துவதையே என் கடமையாகக் கொண்டிருக்கிறேன். என் சார்பு அது. அவர்கள் சகல அரசியல் அமைப்புகளாலும் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்படுகிறவர்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களுக்கு பணம் இல்லை. தொடர்புகள் இல்லை. நீங்கள் ஒன்றைக் கொடுத்தால் திருப்பித்தர ஏதுமில்லை.

இதோ என் ஒருமாத ஊதியத்தை செலவிட்டு நாஞ்சில்நாடனுக்கு ஒரு விழா எடுத்திருக்கிறேன். என் குழந்தைகளுக்கு ஒருவருடத்திற்குரிய உடைகளை அதனால் எடுத்திருப்பேன். ஆனால் மீண்டும் கடன் வாங்கியாவது நீலபத்மநாபனுக்கு ஒரு விழா எடுக்கவிருக்கிறேன். என் நெஞ்சில் இவர்கள்தான் இலக்கியவாதிகள். எனது முன்னோடிகள். என் கடமை இது

என் உணர்வுகளை புரிந்துகொள்வீர்கள் என்றும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.

ஜெயமோகன்

****

இரண்டாவது கடிதம்
தங்களை வருத்தப்படச்செய்ததில் எனது வருத்தம் மிக அதிகம். உண்மையில் தூக்கம் கூட இல்லாமல் தொடர்ந்து நண்பர்களிடம் இதையே பேசிக் கொண்டிருக்கிறேன். எனது ஆதங்கம் ஒரு அங்கீகாரம் என வரும்போது தமிழ் எழுத்தாளர்கள்  நமது பேராசிரியர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் ஏன் ஏற்புடையவர்களாக அல்லாமல் போகிறார்கள் என்பதே. உள்ளூர அவர்களுக்கு இலக்கியவாதிகள் மேல் மரியாதை இல்லை. இவனுக்கு என்ன பரிசு, நாலெழுத்து இங்கிலீஷ் பேச தெரியவில்லை, கூலிக்காரன் போல இருக்கிறான் என்ற நினைப்பு. இயல் விருது ஒட்டகத்து மீது கடைசி வைக்கோல். சமீபத்தில் பல நிகழ்ச்சிகள். ஒரு விருது ஆலோசனைக்கூட்டம். விருதுக்கு தேவதேவன் பெயர் சொல்லப்பட்டபோது ஒரு பேராசிரியர் சொன்னாராம், ‘தேவதேவனுக்கு எதுக்கு அம்பதாயிரம் ரூபா? அவரு அவ்வளவுதொகையை வாழ்க்கையிலே சேத்து பாத்திருக்கமாட்டார். இன்னாருக்குக் கொடுப்போம்’ என. நேற்று முந்தினம் பப்பாஸி விருது தேர்வு. நாஞ்சில்நாடன் பெயர் சொல்லப்பட்டதுமே ஒட்டுமொத்தமான எதிர்ப்பு. ஏன்? அவர் தீவிரமாக எழுதுகிறார். இதுதான் இயல் விருதிலும் நடந்திருக்கிறது. இது தமிழின் தலையெழுத்து.

ஆனால் இந்த இலக்கிய சாதனையாளர்களுக்கு என்னாலோ நண்பர்களாலோ பணமும் பரிசும் கொடுக்க முடியாமல் போகலாம். அவர்களை வரலாற்றில் நிலைநிறுத்துவோம். நாஞ்சில்நாடன் பற்றிய நூலை எழுதும்போது அதைத்தான் சொல்லிக் கொண்டேன். இந்தப் பெரியமனிதர்கள் எல்லாம் நினைவாக ஆகி கனவாக மறைந்த பின்னும் என் மொழியின் முன்னோடிகளாக இவர்கள் வாழ்வார்கள்.

ஜெயமோகன்

**

கேள்வி: இவ்விருது இலக்கியத்துக்கு நேரடி தொடர்பே இல்லாத பத்மநாப அய்யருக்கு அவ்ழங்கப்பட்டபோது நீங்கள் என்ன எண்ணினீர்கள் ?
பதில்: விருது குறித்த விஷயங்களில் நான் எப்போதுமே மூர்க்கமான பிடிவாதங்கள் கொண்டவனல்ல. ஓர் அமைப்பு பலவகையான சமரசங்கள் வழியாகவே இயங்க முடியும். அதுவே ஜனநாயகப்பண்புக்கு அடிப்படை. ஏதேனும் ஒரு வகையில் பரிசில் சமரசமோ குறையோ இருக்கலாம். மிகப்பெரும்பாலான இலக்கிய விருதுக்களை நான் வரவேற்றுத்தான் எழுதியிருக்கிறேன். அல்லது சும்மா இருந்திருப்பேன். கண்டிப்பது, ஒரு மதிப்பீடு அழிக்கப்படுகையில்தான். அதுவே ஒரு வழக்கமாக நிறுவப்படும்போதுதான். ஆகவே மிகமிக அபூர்வமாகவே எதிர்வினையாற்றியிருக்கிறேன்

பத்மநாப அய்யரின் பங்களிப்பு பற்றி நான் நிறையவே அறிவேன். இன்று அதைப்பற்றி சொல்லி புரியவைப்பது கடினம். 70களில் இலங்கையின் எந்த ஒரு எழுத்தாளரைப்பற்றியும் தமிழில் எவருக்குமே தெரியாது. தமிழ் தீவிர இலக்கியம் பற்றி – புதுமைப்பித்தனைப்பற்றிக்கூட- அங்கே பொதுவாகத் தெரியாது. இருநாடுகள் கடலாலும் பண்பாட்டாலும் பிரிந்துகிடந்தன. தனி ஒருமனிதனாக கைப்பொருள் இழந்து பலகாலம் மனம் தளராமல் முயன்று ஒரு பிணைப்பை உருவாக்கினார் அய்யர். ஒரு மனிதர் இரு இலக்கிய மரபுகள் நடுவே ஓர் உரையாடலை உருவாக்குகிறார் என்பதை கற்பனைசெய்து கொள்ளுங்கள். நாகர்கோயிலுக்கு வந்து சுந்தர ராமசாமியைக் கண்டு ஈழ நூல்களை அளித்து வாசிக்கவைத்தார். அசோகமித்திரனை கநாசுவை செல்லப்பாவை சென்று கண்டார். திருவனந்தபுரமும் மதுரையும் வந்தார். பலவருடங்கள். அங்கே நவீன தமிழிலக்கியம் சார்ந்த பூரணி, அலை போன்ற இதழ்கள் உருவாயின. தமிழ் இலக்கிய உரையாடலில் ஈழ இலக்கியம் பேசப்பட்டது. ஒரு மறுமலர்ச்சியே உருவானது என்று சொல்லலாம். அது ஒரு வாழ்நாள் பங்களிப்பே. அதற்கு எந்த ஒரு அங்கீகாரமும் இல்லை. ஒரு எளிய நூலாசிரியனுக்கு உரிய புகழ்கூட. இம்மாதிரி தியாகங்களை அடையாளம் காணும்போதுதான் ஒரு பண்பாடு வலிமை பெறுகிறது

ஈழத்தமிழர் மனதில் அய்யர் ஒரு முக்கியமான முன்னோடியாகத் தோன்றுவது இயல்பே. அந்த உழைப்புக்கு அவர்கள் அங்கீகாரமளிப்பதும் இயல்பே. புறவயமான பங்களிப்பு என்ன என்று கேட்பதில் தவறில்லை. ஆனால் அதற்கு பதில் இது.

அத்துடன் எனக்கு இன்னொன்றும் இருந்தது. ஈழப்பண்பாட்டுக்கு யார் முக்கியம் என நாம் சொல்லக்கூடாது. எனக்கு கெ.கணேஷ்,தாசிசியஸ் அளித்த பங்களிப்பு புரியவில்லை; ஆனால் அவர்களின் உணர்வு அது. நமக்கு ஈழ இலக்கியம் பற்றி தெரிவது எல்லைக்குட்பட்டதே. பலரை நாம் வாசித்ததே இல்லை. ஆகவே அங்கே சொல்ல ஏதுமில்லை.

அனைத்துக்கும் மேலாக ஒன்று உண்டு பரிசுக்கு பின்னால் உள்ள மனநிலை. பத்மநாப அய்யர் ஒரு தனி மனிதர். பரிசளிப்பவருக்கு திருப்பியளிக்க ஒன்றுமில்லாதவர். அவரை கௌரவிப்பதற்கு பின்னால் உள்ள ஒரே நோக்கம் அவரது பங்களிப்பு மீதுள்ள மரியாதையாகவே இருக்க முடியும். லட்சுமியும் , ஹார்ட்டும் அப்படி அல்ல. அது ஒரு கொடுக்கல் வாங்கல்.

எனது கோபம் இதுதான். இலக்கிய விமரிசனம் சார்ந்தது அல்ல அது. இலக்கியம் என்ற மதிப்பீடு சார்ந்தது. அதை முன்னால் நிறுத்தி செயல்படுபவன் அவமதிப்ப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாவதும் பதவியும் பணமும் கொண்டவர்கள் அவனுக்குரிய சிறு அங்கீகாரத்தைக்கூட பறித்துக் கொள்வதும் சார்ந்தது.
***
வினா: ஒரு விருது நடைமுறைத்தவறுகளினால் தவறாகக் கொடுக்கப்பட்டுவிட்டால் அவ்விருது செத்துவிட்டது என்று முழுமையாக நிராகரிப்பது சரியாகுமா?

பதில்:

இப்பகுதியில் முன்னரே எழுதியிருக்கிறேன். ஒரு விருதின் நடைமுறைச்சிக்கல்கள் எனக்குத்தெரியும். அவசரப்பட்டோ அத்துமீறியோ ஏதும் சொல்ல முனைபவனல்ல. ஓர் எல்லைக்குப் பின்னரே மறுப்பை எழுதினேன். இயல் விருது பற்றி எனக்கு  முன்னரே மனவருத்தங்கள் உண்டு. சொல்லாமல் இருந்திக்கிறேன். பிறகு சம்பந்தபப்ட்டவர்களிடம் சொன்னேன். ஜார்ஜ் எல் ஹார்ட் பற்றிக் கூட இப்போதுதான் கருத்து சொல்கிறேன்.

ஏனென்றால் இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு விருதைவைத்து அப்பரிசை மதிப்பிடவில்லை. இவ்விருதுமூலம் தெரியும் மனப்போக்கு மெல்லமெல்ல வலுப்பெற்று வந்திருக்கிறது. என் கசப்புக்குக் காரணம் உறுதியான மனநிலையாக இப்போது அது வேரூன்றிவிட்டது என்ற எண்ணம்தான். இனி அதில் மாற்றம் நிகழுமென நான் எண்ணவில்லை. நிகழவேண்டுமென்றால் கடுமையான இடித்துரையும்  அதன் மூலம் அவர்கள் இழப்பது பெரிது என்ற எண்ணமும் வந்தாகவேண்டும். அமைப்புசார்ந்த ருசிகள் அடைந்தவர்களுக்கு எளிய எதிர்வினைகள் பொருட்டாக இருக்காது. எல்லாவற்றுக்கும் பதிலையும் விளக்கத்தையும் சொல்லிவிடமுடியும். எதையுமே விவாதித்து ஏற்கச்செய்வது சாத்தியமல்ல. அனைத்துக்கும் மேலாக என் குரல் ஒர் ஆழமான ஏமாற்றம், அதன் விளைவான அறச்சீற்றம் கொண்டது.

அந்த மனநிலையைத்தான் சுட்டிக்காட்டியிருந்தேன். அது இதுதான்: படைப்பாளிகளான எளிய மனிதர்களுக்கு விருது கொடுத்து என்ன ஆகப்போகிறது என்ற எண்ணம். மொத்த விருதுச்செயல்பாட்டையும் ‘பெரிய மனிதர்கள் சார்ந்த’ விஷயமாக அமைத்துக் கொள்ளும் ஆர்வம். அதன் மூலம் உருவாகும் தொடர்புகள், பயன்கள் சார்ந்த நாட்டம். அவ்வெண்ணம் வலிமை பெறும்போதே விருது கொடுக்கும் தகுதியை அவ்வமைப்பு இழந்துவிடுகிறது என்று எண்ணுகிறேன். படைப்பாளிகளான முன்னோடிகளை அங்கீகரித்து கௌரவிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நேர்மையான, உணர்ச்சிகரமான, ஆன்மீகமான ஓர் அம்சம் உள்ளது. அவ்வம்சம் முற்றாக இல்லாமலாகிவிட்டிருக்கிறது. இதுவே சிக்கல். இனி அப்பரிசு கொடுக்கபப்ட்டாலும்கூட அது ஒரு வெளிவேஷமே.

ஒரு விருதுக்கு நடுவர்களாக பாமரன், சுப வீரபாண்டியன்,  இயக்குநர் சீமான் ஆகியோரை நியமிக்கிறீர்கள். அவர்கள் விருதை கவிஞர் அறிவுமதிக்குக் கொடுக்கிறார்கள் என்று வைப்போம். எங்கே இருக்கிறது தவறு? அறிவுமதி என்ன எழுதியிருக்கிறார், தமிழின் நவீனக்கவிஞர்களை புறக்கணித்து எப்படி அவரை கவிஞர் என்று சொல்லலாம் என்று நான்கேட்டால் நடுவர் குழுவின் தேர்வு, எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று சொல்லமுடியுமா என்ன? நடுவர்களாக உள்ளவர்களுக்கு இலக்கியம் மீது உண்மையான ஈடுபாடும் பயிற்சியும் உண்டா, அவர்கள் சென்றகாலங்களில் இலக்கியத்துக்காக என்ன செய்தார்கள் என்ற கேள்வி வாசகன் மனதில் வருமா இல்லையா? பரிசுக்குழுவின் நோக்கம் ஐயத்துக்கு உள்ளாகுமா இல்லையா?

இயல் விருதில் யார் யார் நடுவர்கள்? ஆ.இரா வெங்கடாசலபதிக்க்கு நவீன இலக்கியத்துடன் என்ன உறவு? கடந்தகாலங்களில் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி தவிர ஏதேனும் இலக்கியவாதியைப்பற்றி அவர் ஏதேனும் ஒரு நல்ல கருத்து சொல்லியிருக்கிறாரா? அவருக்கு இலக்கிய வாசிப்பு பழக்கமோ அடிப்படை ரசனையோ உண்டா?  எம்.ஏ.நு·மான் நவீன இலக்கியத்துடன் எவ்வகையில் தொடர்புள்ளவர்? தமிழக இலக்கியம் போகட்டும் ஈழ இலக்கியம் பற்றியாவது குறிப்பிடும்படியாக ஏதேனும் சொல்லியிருக்கிறாரா? வெறும் கல்வித்துறை சதுரங்கமாடிகள். இவர்களை மட்டும் கொண்டு ஒரு குழுவை அமைக்கும் எண்ணம் எவருக்கு வந்தது? இக்குழுவை அமைக்கும்போதே விருது ஒரு கல்வித்துறையாளருக்கு அல்லது அப்படிப்பட்ட செல்வாக்கு உடைய ஒருவருக்கு மட்டுமே கொடுக்கப்படும் என்பது நிர்ணயமாகிவிடுகிறது அல்லவா? யாரைக் குறை சொல்வது பிறகு?

நண்பர்களே, சாகித்ய அக்காதமி, கலைஞர் விருது,பப்பாஸி விருது,தினத்தந்தி விருது, ராஜா முத்தையா செட்டியார் விருது உள்ளிட்ட எல்லா விருதும் இயல்விருதுக்குரிய அதே பரிந்துரை தொகுத்தல், இறுதிப்பட்டியல், வெளிப்படையான நடுவர் தேர்வு, நடுவர் ஆய்வு மற்றும் முடிவு என்ற தளத்தில்தான் நடைபெறுகின்றன. யாரிடம் விருது பற்றி கேட்டாலும் இதே பதில்களைத்தான் சொல்வார்கள். ஆனால் ஒவ்வொரு விருதுக்கும் ஒரு ‘முன்திட்டம்’ அல்லது ‘நோக்கம்’ உள்ளது. அது அவ்விருதுகளை அளிப்பவர்களின் அகத்தில் உள்ளது. அதுதான் விருதுகளை தீர்மானிக்கிறது. இயல் விருதைப்பொறுத்தவரை அந்த திட்டம் முற்றாக மாறிவிட்டிருக்கிறது. அதுவே எனது குற்றச்சாட்டு.

இத்தகைய நிலையில் அக்குழுவுக்கே கடிதம் எழுதி ‘நீங்கள் இபப்டிச் செய்திருக்கலாம்’ என்றெல்லாம் சொல்வது அபத்தம். அவர்களுக்கு தெரியாதா என்ன?அக்குழுவின் உள்ளுறையை வாசகர் முன் வைப்பது மட்டுமெ ஒரே வழி.  விளக்கங்கள் விவாதங்கள் வசைகள் எல்லாம் வந்தாலும் அவ்விருதின் அகம் என்ன என்பது தெளிவாகிவிடும். பிறகு பிரச்சினையே இல்லை. பணத்தை வைத்துப் பார்த்தால் தமிழகத்தில் வழங்கப்படும் மிகப்பெரிய இலக்கிய விருதுக்கள் தினத்தந்தி ஆதித்தனார் விருது, ராஜா சர் முத்தையா செட்டியார் விருது , கலைஞர் விருது போன்றவை. அவற்றின் அகம், அதன் விளைவான தேர்வுமுறை வாசகர்களுக்குத்தெரியும். ஆகவே எவருக்குமே சிக்கல் இல்லை. இன்றுவரை அவ்விருதுக்களை பற்றி எவரேனும் மனக்குறைப்பட்டோ மாறுபட்டோ ஏதும் சொல்லிக் கேள்விப்பட்டதில்லை. யாரோ கொடுக்கிறார்கள் யாரோ பெறுகிறார்கள். அவ்விருதுக்கள் ஒருவித இலக்கிய மதிப்பீடையும் உருவாக்கவில்லை.

அப்படிப்பட்ட ஒன்றுதான் இயல்விருது, அதற்குப்பின்னால் இலக்கிய மதிப்பீடு இல்லை குழு அரசியல் மட்டுமே உள்ளது, ஆகவே அவ்விருதை ஓர் இலக்கியச் செயல்பாடாக இனிமேல் கருதவேண்டியது இல்லை என்பதே அது ‘செத்துவிட்டது’ என்று நான் சொன்னதற்குப் பொருள்.

**

கேள்வி: லட்சுமி ஹாம்ஸ்டம் ஒரு பங்களிப்பை ஆற்றத்தானே செய்திருக்கிறார்கள். அந்தப் பங்களிப்பை நிராகரிக்கலாமா என்ன?

பதில்: பங்களிப்பு அல்ல பிரச்சினை. ஒப்பீடுதான் பிரச்சினை. அந்த ஒப்பிடுதலுக்குப் பின்னர் ஒன்று தெரிவுசெய்யப்படுவதன் பின்னால் உள்ள மதிப்பீடு.

ஓர் நிகழ்ச்சியைச் சொல்கிறேன். ரோஜா முத்தையாச் செட்டியார் எம்.வேதசகாயகுமாருக்கு நெருக்கமானவர். அவருக்கு பல நூல்களை கொடுத்தவர். தன் முனைவர் ஆய்வுநாட்களில் வேதசகாயகுமார் பெரும்பாலும் செட்டியார் வீட்டில்தங்கி ஆய்வுசெய்திருக்கிறார். கையில் காசு இல்லாத குமாருக்கு செட்டியார் சாப்பாடு போட்டு உதவியிருக்கிறார். தன்னைத்தேடிவந்தவர்களை எல்லாம் உபசரிப்பவர் அவர்.

ரோஜா முத்தையாச் செட்டியார் வாழ்நாளெல்லாம் சேர்த்த நூல்கள் அவர் மரணத்துக்குப் பின்னர் சிகாகோ பல்கலை உதவியுடன் சென்னையில் ஒரு நூலகமாக அமைக்கப்பட்டது. ஒரு கதைக்காக எனக்கு சில பழைய கிறித்தவ வெளியீடுகள் தேவைப்பட்டன. அவற்றை வேதசகாயகுமார் சேர்த்து செட்டியாருக்குக் கொடுத்ததாகச் சொன்னார். ஆகவே நான் ரோஜா முத்தையா செட்டியார் நூலகத்துக்குச் சென்றேன்.’பொதுமக்களுக்கு’ அனுமதி இல்லை என்றார்கள். அங்கே இருந்த நூலகர் சங்கரலிங்கம் என்பவரைச் சந்தித்தேன். அவர் என் முகம் பார்த்தே பேசவில்லை. ஒரு ·பைலை புரட்டியபடி ஏதாவது கல்வி நிறுவன அடையாள அட்டை தேவை என்றார் அவர். நான் ஓர் எழுத்தாளன் என்றேன் – அப்போது விஷ்ணுபுரம் வந்துவிட்டது. ”ஆமா, அப்டி சொல்லிட்டு தினம் ஒருத்தன் வாறான்…”என்று சொல்லி வெளியேபோகும்படி கைகாட்டினார். இந்த ஆசாமி ஒரு புகழ்பெற்ற நூலகர் என்று பிற்பாடு கேள்விப்பட்டேன்.

இன்னொரு பக்கம் வேறுவகையான நூலகர்கள். நாகர்கோயிலில் ஓய்வுபெற்ற பேராசிரியர் தியாகசாமி ஐம்பது வருடத்திய செய்தித்தாள்களை முறைப்படுத்தி சேர்த்து வைத்திருக்கிறார்.செல்பவர்களுக்கெல்லாம் உதவுவார். புதுக்கோட்டை டோரதி கிருஷ்ணமூர்த்தி தம்பதிகள் நூலகம், திருச்சி டி.என்.ராமச்சந்திரனின் நூலகம் போல அரிய சேமிப்புகள் தமிழ்நாட்டில் பல உள்ளன. மிகச்சிறப்பாக பேணப்படும் நூலகங்கள். பல வருடங்கள் ஆத்மார்த்தமான உழைப்பும் தியாகமும் இவற்றின் பின்னால் உள்ளன. எந்தவிதமான அங்கீகாரமும் லாபமும் இருப்பதில்லை. செல்பவர்களுக்கெல்லாம் அன்புள்ள உபசரிப்பும் உதவியும் கிடைக்கின்றன.

ஆனால் இங்கே நூலகம் சார்ந்த எந்த ஒரு அங்கீகாரம் என்றாலும் அது சங்கரலிங்கத்துக்குத்தான் கிடைக்கும். பிறர் பொருட்படுத்தபடவே மாட்டார்கள். அவர்களின் பெயர்கள் சொல்லப்பட்டதுமே நிராகரிக்கப்பட்டுவிடும். காரணம் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதனால் கொடுப்பவர்களுக்குப் பயன் இல்லை. ‘சங்கரலிங்கம் பெரிய நூலகர். அமெரிக்காகூட போய் வந்தார்’ என்றெல்லாம் சொல்லி அதை நியாயப்படுத்தலாம். ஆனால் என் மனம் பல லட்சங்கள் சம்பளம் வாங்கி அவ்வேலையைச் செய்த ஒருவனைவிடவும் தியாகம் மூலம் அர்ப்பணிப்பு மூலம் அப்பணியை நிகழ்த்திய ஒருவரையே தேர்வுசெய்யும். அந்த மதிப்பீடே எனக்கு முக்கியமானது.

லட்சுமி ஹாம்ஸ்டம் நாலு புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறார் என்கிறார்கள். துளசி ஜெயராமன் என்பவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என் ‘கண்ணீரைப் பின் தொடர்தல்’ நூலில் அவரைப்பற்றி குறிப்பிட்டு நன்றி சொல்லியிருக்கிறேன். ஏறத்தாழ நாற்பதுவருடம் இந்தி நாவல்களையும் இந்திவழியாக அஸ்ஸாமி, குஜராத்தி, ஒரிய நாவல்களையும் தொடர்ந்து மொழியக்கம் செய்து தமிழை வளப்படுத்தியவர் அவர். பன்னலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒருநாடகம்’ போன்ற பல ‘கிளாசிக்கு’களை தமிழாக்கம் செய்தவர். தமிழிலிருந்து  இந்திக்கும் அதேபோல தொடர்ந்து மொழியாக்கம்செய்தவர். பெரிய பணம் இல்லை. புகழ் அறவே இல்லை. நீங்கள் பெயரைக்கூட கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.ஆனால் இலக்கியம் என்ற மதிப்பீடு அவரை இயங்கச் செய்திருக்கிறது. அதுதான் ‘வாழ்நாள் சாதனை’ . மொழிபெயர்ப்பாளருக்கான ஒரு விருதுக்கு நான் அவரையே பரிந்துரைசெய்வேன்.

என் பிரச்சினை ஒப்பீடு பற்றியது. துளசி ஜெயராமனை கேள்வியே பட்டிராதவர்கள் லட்சுமி தமிழுக்கு உயிரைக்கொடுத்தார் என்று சொல்வதைப்பற்றியது. இந்த ஒப்பீடு மூலம் ஓர் இலக்கிய மதிப்பீடு அழிக்கப்படுகிறது. ஆத்மார்த்தமும் அர்ப்பணிப்பும் எள்ளி நகையாடப்படுகிறது. அதற்கு எதிரான சீற்றம் இது. காதுள்ளவர்கள் கேட்கட்டும்.

முந்தைய கட்டுரைஅச்சுபிழை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇயல் விருது – ஒரு பதில்