’அன்புள்ள ஜெ ,
நலம் தானே?.பயணத்தில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த ஊரடங்கு காலத்தில் என்னுடைய போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கிறேன். அந்த சலிப்பை கடக்க உங்கள் பயண கட்டுரைகள் தான் உதவுகின்றது.உங்கள் பயண அனுபவங்கள் என்றுமே நானும் அந்த பயணத்தின் உடன் வரும் அனுபவத்தை தரவல்லது. தங்களின் அருகர்களின் பாதை நூலை வாசிக்காமல் இத்தனை நாள் ஏன் மறந்தேன் என்று தெரியவில்லை. அதற்கான நேரத்திற்காக அது காத்து இருந்தது போல.
அருகர்களின் பாதை இந்திய நிலத்தில் நீங்கள் சென்ற ஒரு மிக அருமையான ஒரு பயண குறிப்பு நூல் .அந்த புத்தகத்தில் உள்ள புகைபடங்களையும் உங்கள் கருத்துகளையும் படிக்கும் போது தான் தெரிகிறது தமிழக கோவில்கள் மேல் நாம் கொண்டு இருக்கும் ஆதீத பெருமிதத்தை . அந்த பயண குறிப்புகளில் உள்ள கோவில்களின் சிற்பங்கள் , கோவில் அமைப்பு எல்லாம் வியக்கவைக்கிறது. நானும் இப்படி ஒரு பயணத்தை வரும் காலங்களில் மேற் கொள்ள வேண்டும் என்று ஒரு உந்துதல் இருக்கிறது. இந்திய நிலத்தின் மீது பல பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் கட்டுரைகளை படித்து கொண்டு இருக்கும் போது என் ஊரை சுற்றி ஏதாவது சமண இடம் இருக்கிறதா என்று தேடி பார்க்கும் போது . ஒரு சமண தீர்த்தங்கரின் சிலை மட்டும் மேச்சேரி அருகில் இருப்பதாக தெரிய வந்தது. சரி என்று அதை ஒரு பார்வை இடலாம் என்று சென்று வந்தேன் மேச்சேரியை அடுத்து பொட்டனேரி அருகில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் அருகில் ஒரு விலைநிலத்தில் அந்த சிலை இருந்தது. சிலை மிக மோசமான நிலையில் உள்ளது. பாதுகாக்க பட வேண்டிய சிலையை இப்படி திறந்த வெளியில் விட்டுவிட்டார்கள். கோவில் உள்ளும் ஒரு கல்வெட்டு உள்ளது இதுவும் பாதிக்கப்பட்ட நிலையில். அதன் படங்கள் இத்துடன் இணைத்துள்ளேன். நண்பர்களுடன் இந்திய நிலங்களை சுற்றி வர ஆவலாக இருக்கிறது. உங்கள் பயண அனுபவங்களுக்கு நன்றி ஜெ.
சுகதேவ் பாலன்