நிலவும் மழையும்- 3

இந்தமுறை பயணங்களை எழுதவேண்டாமென எண்ணியிருந்தேன். ஆகவே முறையாக குறிப்புகள் என எதையும் வைத்துக் கொள்ளவில்லை. முன்னிரவில் வெறும் உளப்பதிவை நம்பியே எழுதினேன். ஆகவே நாள் முறை குழம்பிவிட்டது. குதிரேமுக் செல்வதற்கு முன்பு நாங்கள் சென்ற இடங்கள் நினைவிலிருந்து வழுவி விட்டன. உடன் வந்த நண்பர்கள் சுட்டிக்காட்டினர்.

அதற்கு முதன்மைக்காரணம், குதிரேமுக் மலையேற்றம்தான். சிலபோது அவ்வண்ணம் அமையும். ஒரு பயணத்தில் ஒரு நிகழ்வு மிகமிக முக்கியமானதாக ஆகி அனைத்தையும் கீழிறக்கி விடும். இந்தப்பயணத்தில் குதிரேமுக் மலையேற்றம் கடுந்துன்பமும் அதன் விளைவான பரவசமும் நிறைந்தது. உள்ளம் நேரடியாக அங்கே சென்றுவிட்டது. அப்பயணத்தையே முதன்மையாக எண்ணிக்கொண்டுமிருக்கிறது.

பிஸ்லே மலைமுடி, மழைமூட்டம் இல்லாமலிருந்த போது. இணையத்தில் இருந்து

பயணக்குறிப்புகளை எழுதியாகவேண்டும் என்று தோன்றுவது எழுதாதவை நினைவில் இருந்து எப்படி மறைகின்றன என்னும் வியப்பால்தான். அழிந்துவிடுவதில்லை. ஆனால் அவை புறவயமாக நினைவில் தங்காமல் அப்படியே கனவுக்குள் சென்றுவிடுகின்றன. எங்கோ இருக்கின்றன. ஒரு நாவலில் எழுந்து வரவும்கூடும். ஆனால் அவை எழுதப்பட்டால் முகமும் அடையாளமும் கொள்கின்றன

மலாலி அருவியில் இருந்து நாங்கள் பிஸ்லே கட் என்னும் மலைமுடிக்கு காரிலேயே சென்றோம். அங்கிருந்து கர்நாடகத்தின் கீழ்க்கடலோர பெருநிலத்தை பார்க்கமுடியும். ஆனால் நாங்கள் சென்றபோது விண்ணில் நிற்பதாக உணர்ந்தோம். முழுக்க வெண்முகில். வெறும் கண்ணாடிப்பரப்பு போல. அதில் ஈக்கள்போல மனிதர்கள் ஒட்டியிருப்பதாகத் தோன்றியது.

சுற்றுலாப்பயணிகளாக சில இளைஞர்கள் இருந்தனர். சிலருடன் இளம்பெண்களும். ஒருவர் விந்தையான ஒரு பைக் வைத்திருந்தார். அந்த பைக்குக்கு உரிய இளைஞரை பெங்களூர் கிருஷ்ணன் உடனே கண்டுபிடித்துவிட்டார். எப்படி என்று வியப்புடன் கேட்டேன். கிருஷ்ணனும் பைக்கர். அவர்களுக்கென ஒரு தனி உடல்மொழி இருக்கிறது.

பெரும்பாலும் இளைஞர்கள் ஐடி ஊழியர்கள் என்று தெரிந்தது. அவர்களின் வேலையில்தான் இப்படிச் சுற்ற வாய்ப்பு இருக்கிறது. தேவையும் உள்ளது என நினைக்கிறேன். இதனூடாக அவர்கள் அலுவலகத்தில் அமர்ந்திருப்பதன் பெருஞ்சலிப்பை வெல்கிறார்கள் போல.

சக்லேஸ்வர் தாலுகாவில் உள்ள பிஸ்லே மலையேற்றத்திற்கான இடமாக கருதப்படுகிறது. ஆனால் மழைக்காலத்தில் அல்ல. இந்தப் பள்ளத்தாக்கு வண்ணத்துப்பூச்சிகளின் படுகை என அழைக்கப்படுகிறது.இந்தியாவெங்கிலுமிருந்து மழைக்காடுகளின் பட்டாம்பூச்சிகளை ஆராய்பவர்கள் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

திரும்பும்போது துர்க்கா ஓட்டல் என்ற சிறிய விடுதியைக் கண்டோம். அங்கே டீ குடிக்கத்தான் சென்றமர்ந்தோம். ஆனால் நீர்த்தோசை இருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே கொண்டுவரச்சொன்னோம். இட்லியும் இருந்தது. மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டோம்

நீர்த்தோசை என்பது அரிசிமாவில் இளநீர் ஊற்றி நொதிக்கவைத்துச் செய்யும் ஆப்பம் போன்ற தோசை. இட்லியும் வழக்கமான கர்நாடக அரிசிநொய் இட்லியாக இல்லாமல் நன்றாக இருந்தது. இப்பயணத்தில் சாப்பிட்ட மிகச்சுவையான உணவு இந்த சிறிய கடையில்தான்.

சக்களேஸ்வரில் உள்ள திப்புசுல்தானின் நட்சத்திரமுனைகள் கொண்ட கோட்டை முக்கியமான சுற்றுலாக்கவற்சி. மஞ்சராபாத் என்னும் பெயர் கொண்ட இந்தக்கோட்டைக்கு திப்புசுல்தான் இதன்மேல் பெரும்பாலும் மஞ்சு- மழைமுகில்- படர்ந்திருப்பதனால் அப்பெயரைச் சூட்டினார் என்பது கதை. 1792ல் கட்டப்பட்டது. மைசூரின் மேல் திப்பு முழுமையாக ஆதிக்கம் செலுத்தி நிலையாக தன் கட்டுப்பாட்டின்கீழ் வைக்க விரும்பியதன் விளைவு

பிரெஞ்சு பொறியாளர்களால் கட்டப்பட்டது இக்கோட்டை. கோட்டைக் கட்டுமானக்கலையின் கடைசிக்கட்ட பரிசோதனை இது. தமிழகத்தில் இருந்த ஆரம்பகாலக் கோட்டைகள் மண்ணாலானவை. மண்ணை இரண்டு ஆளுயரத்திற்கு வெறுமே குவித்து வைத்து அதன்மேல் முள்மரங்களை நட்டு சேர்த்து கட்டி உருவாக்கப்பட்டவை. பின்னர் குழைத்த களிமண்ணாலான கோட்டைகள் வந்தன. பத்மநாபபுரம் கோட்டை அப்படித்தான் பதினாறாம் நூற்றாண்டுவரை இருந்துள்ளது. மழையில் கரையாமலிருக்க மேலே ஓலை அடுக்கி கூரையிட்டிருந்தனர்.

அதன்பின் செங்கல்கோட்டைகள் வந்தன. யானைகளால் தள்ளப்பட்ட பெரிய மரத்தடிகளின் தாக்குதலை சமாளிக்கும் பொருட்டு கல்லால் ஆன கோட்டைகள் உருவாயின. கற்சுவர் அரைவட்ட வளைவுகளால் ஆனதாகவும், மேலே காவல்கோபுரங்கள் கொண்டதாகவும் ஆக்கப்பட்டது. மேலிருந்து ஒளிந்து அம்புகளை எய்வதற்கான மடிப்புகளும் பிளவுகளும் வந்தன. பீரங்கிகளின் கல்லுருண்டைகளை தாங்கும்பொருட்டு சுவர்களை அலையலையான மடிப்பாக அமைத்திருப்பதை ராஜஸ்தானின் கும்பல்கர் கோட்டையில் காணலாம்.

பீரங்கிகளின் திறன் அதிகரிக்கும்தோறும் கோட்டைகளின் அமைப்பை மாற்றவேண்டியிருந்தது. அதிகவெடித்திறன் கொண்ட பீரங்கிகள் வந்தபோது கோட்டைகள் தாக்குபிடிக்க முடியாமலாயின. ஆகவேதான் இப்படி நட்சத்திர வடிவமான கோட்டைகளை ஐரோப்பியர் உருவாக்கினர். இதன் எல்லா பகுதியுமே கூம்பு வடிவில் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். ஆனால் அது கூம்பு அல்ல. உண்மையில் சதுரம். அதன் மறுமுக்கோணக் கூம்பு கோட்டைக்குள் இருக்கும்.

கோட்டைக்குள் சென்று பார்த்தால் கோட்டைச்சுவர் என நாம் எண்ணுவது சாதாரணமாகவே இருபதடி முப்பதடி தடிமன் கொண்ட சதுரங்களாலானது என்று தெரியும். பீரங்கிக்குண்டுகளின் அறைதலை அந்த தடிமனும் முக்கோணவடிவமும் தாங்கிக்கொள்ளும். ஆனால் அபப்டி தாங்கியதாகத் தெரியவில்லை. எளிதாக பிரிட்டிஷார் இந்தக்கோட்டையை பிடித்திருக்கின்றனர்.

அக்கால ஐரோப்பிய பொறியாளர்கள் அரசர்களை பேசி மயக்கி இத்தகைய கோட்டைகளைக் கட்டச்செய்திருக்கின்றனர். இவ்வாறு கோட்டைகளை கட்ட முயன்ற பல நாடுகள் திவாலாகியிருக்கின்றன. கையில் காசு ஓட்டமிருந்த உற்சாகத்தில் கட்ட ஆரம்பித்த திப்புவும் விழி பிதுங்கியிருக்கவேண்டும். கோட்டை என்றால் உள்ளே பெரிய கட்டிடங்களுடன் ஒரு குட்டி நகர் இருந்தது என்று பொருள் இல்லை. இது ஓர் ஒளிந்துகொள்ளும் இடம் அவ்வளவுதான். அதிகம்போனால் ஆயிரம் பேர் இருபது பீரங்கிகளுடன் ஒளிந்துகொள்ளலாம்

மிகப்பெரிய நுழைவாயில். அதையொட்டி காவலர்கள் அமரும் சிறு அறைகள். தலைக்குமேல் மசூதி மினாரத்தின் வாங்குக்கூண்டு போல காவல்கூண்டு. உள்ளே நட்சத்திரவடிவ வெளி. நடுவே ஒரு ஆழமான கிணறு. நிலவறைக்குள் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. ஒரு சுரங்கப்பாதை இருந்து அதை மூடியிருக்கிறார்கள்.

உள்ளே வெட்டுகல்லால் ஆன கட்டுமானம். அது மழையில் பசும்புல் படர்ந்து காற்றில் சிலுசிலுத்துக்கொண்டிருந்தது.எட்டு கூர்முனைகளுடன் கரையில் பிடித்து போடப்பட்ட பிரம்மாண்டமான நட்சத்திரமீன் போல கிடந்தது. இந்த கட்டுமானத்துக்கு Vaubanesque பாணி என்று பெயர். இந்தியாவில் இந்தவகையான கட்டுமானம் கொண்ட முழுமையான கோட்டை இதுதான் என்று சொல்லப்பட்டிருந்தது.

கோட்டையின் வழியாகச் சுற்றிவந்தோம். இந்தவகையான பழைய கட்டுமானங்களை காணும்போது நம் அகம் ஏன் திகைப்பை அடைகிறது? இவற்றின் பயன்பாடு நமக்கு தெரிகிறது. ஆனால் பொருள் புரிவதில்லை. இவை அச்சத்தை காட்டுகின்றனவா, ஆணவத்தையா? ஆலயங்களும் மசூதிகளும் திட்டவட்டமான பொருள்கொண்டவை. இக்கோட்டை திப்புவின் புகழின் சின்னமா, அவருடைய அறியாமையின் அடையாளமா?

[மேலும்]

முந்தைய கட்டுரைபாமர வாசகர் என்பவர்…
அடுத்த கட்டுரைஇருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்