இறகிதழ் தொடுகை

நம்பூதிரி

முன்பொருமுறை நான் கேரள ஓவியர் நம்பூதிரியை இன்னொரு ஓவியரான எம்.வி.தேவனின் இல்லத்தில் சந்தித்தேன். அவர்கள் இருவருமே எம்.கோவிந்தனின் மாணவர்கள். உடனிருந்தவர்கள் எல்லாமே எம்.கோவிந்தனின் வழித்தோன்றல்கள்

பேச்சின்போது நான் நம்பூதிரியிடம் அவருடைய கோட்டோவியங்கள் மங்கலான கோடுகளால், அவ்வப்போது உடைந்து விடுமளவுக்கு மெல்லிய தீற்றல்களாக இருப்பதைப் பற்றிக் கேட்டேன்.

”என் இயல்புக்கு தூரிகையின் மெல்லிய கூர்நுனியால் மட்டுமே காகிதத்தை தொடமுடியும்” என்று நம்பூதிரி பதில் சொன்னார்.

அதற்குமேல் உரையாடல் நிகழவில்லை. அந்த இடத்தில் அப்போது நான் அவ்வளவு முக்கியமானவன் அல்ல.

ஆனால் அந்த வரி என்னை விடாமல் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. மிகமெல்லிய தொடுகையால் உருவாகும் சித்திரங்கள். சிலசமயம் கவிதைகள் அவ்வண்ணம் எழுகையில் அரிதாக ஆகிவிடுகின்றன.

லக்ஷ்மி மணிவண்ணன் உழவன் மேழியை என முழு பலத்தைக்கொண்டும் தூரிகையை தாளில் அழுத்தி எழுதிக்கொண்டிருந்தவர். இப்போதைய கவிதைகள் இறகுத்தொடுகைகளாக ஆகிவிட்டிருக்கின்றன. இந்த மாற்றம் நவீனக்கவிதையில் கவனிக்கத்தக்க ஒன்று.

பிறந்த குழந்தை

மடியில்

கனவு காண்கிறது

தூங்கி விளையாடுகிறது

அசைத்து விடப்பட்ட ஊஞ்சல் போல

சுய நினைவற்று

மெல்ல ஆடுகின்றன தாய் மடியில்

தாயின் தொடைகள்

தாய் மடியாக

எவ்வளவு விரிகிறது

இந்த மடி

பிரபஞ்சம் அளவிற்கு

பிரபஞ்சம் அளவிற்கு விரிந்த மடி

ஆணிடம் வரும் போது

சுருங்கிச் சுருங்கி ; சுருங்கி

சிறு யோனியின் அளவிற்கு

ஒரு துளையாகிறது

அதை பிரபஞ்சம்

அளவிற்கு

பெரிதாக்குகிறது

பூமியில் பிறந்தவுடன்

குழந்தை .

பெண்ணின் விரிதலையும் சுருங்குதலையும் சொல்லும் கவிதை என முதலில் தோன்றலாம். எனக்கு பிரபஞ்சத்தின் விரிதலையும் சுருங்குதலையும் சொல்லும் கவிதையென பட்டது. பெறும்போது சுருங்கி அளிக்கையில் விரிவதன் அழகையே இப்புடவியின் தாய்மை என்கிறோம்.

விபத்தில் மண்டை நைய்ந்து

பிழைத்த நபர்

தெருவில் நுழைந்ததும்

புன்னகை

செய்கிறார்

அரவணைப்பு ததும்பும்

புன்னகை

வடு ஆழமாக தெரியும்

அதனை

அப்படியே

எடுத்துக் கொள்ளத்தயங்கி

பதில் புன்னகை செய்கிறார்கள்

பிறர்

ஒரு புன்னகையில் இவ்வளவு பாடங்கள்

இருக்குமானால்

எவரால்தான்

அப்படியே

எடுத்துக்கொள்ள

இயலும்?

ஒருவரிடமிருந்து பிதுக்கி எடுத்த

புன்னகை போலுமல்லவா

இருக்கிறது அது?

இத்தனை எழுதிய பின்னரும் கவிதையில் எழுதப்படாது எஞ்சும் அனுபவங்கள் எத்தனை உள்ளன என்னும் திகைப்பை உருவாக்கியது இக்கவிதை. பொதுவாகவே புன்னகை என்பது சீரான முகத்திற்குரிய ஒன்றென நம்மால் கருதப்படுகிறது. ஒரு விபத்துக்குப்பின் தன் தந்தையின் முகமும் புன்னகையும் மாறிவிட்டமையால் அவரிடமிருந்து தன் அகம் முற்றாக விலகிவிட்டதைப் பற்றி நித்யாவிடம் சொல்லி அரற்றிய ஓர் இளம்பெண்ணை நினைவுகூர்கிறேன்.

நம் புன்னகை என்பது இந்த தசைகளில் நிகழ்வதுதானா? அப்பாலிருந்து ஒரு புன்னகை எழுந்து கண்களில் ததும்புவதும் நிகழ்கிறதல்லவா?

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபார்ப்பான், பார்ப்பவன்- ஒரு திரிபு