சாக்ரமண்டோ வெண்முரசு விழா

அன்பின் ஜெ,

வணக்கம்!

வெண்முரசு ஆவணப் படம் Aug 1 சாக்ரமென்டோ (ரோஸ்வில் ) நகரில் திரையிடப் பட்டது. முதன்முறையாக வெண்முரசு குறித்த ஒரு கூடுகைக்கு செல்கிறேன் என்ற படபடப்பும் எதிர்பார்ப்பும் கலந்த ஒரு மகிழ்ச்சி.

இனிய அண்ணன் திரு . அண்ணாதுரை அவர்களின் ஒருங்கிணைப்புடன், அவர்தம் நண்பர்களின் பங்களிப்புடனும்  திரையிடல் மிகச் சிறப்பாக நடந்தேறியது. தமிழ்த் தாய் வாழ்த்து, ராலே ராஜன் அவர்கள் இசையமைத்த யாதும் ஊரே பாடலுடன் தொடங்கியது நிகழ்ச்சி.

பிரபலங்களின் அறிமுக உரையோடு ஆரம்பித்த படம் , பின்னர் இலக்கிய எழுத்தாளுமைகளின் உரைகளோடு மிகச் சிறப்பான பின்னணி இசையோடும் , ஷண்முகவேல் அவர்களின் ஓவியங்களுடனும் அடுத்த ஒன்றரை மணி நேரமும் ஒரு இனிய சுகானுபவம். ஒவ்வொரு நாளும் படித்து, வெண்முரசு காலத்தில் வாழ்ந்த காலத்தை மீண்டும் இலக்கிய ஆளுமைகளின் வாயிலாக கேட்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

நீலம் தாலாட்டு பாடல் – நீலப் பித்தை மீண்டுமெழ செய்தது. மறுவாசிப்புக்கொரு தூண்டுகோல். பின் அத்தனைக்கும் சிகரமாய் வெண்முரசு theme song. Back to back musical treat .ராலே ராஜன் , ஆஸ்டின் சௌந்தர்,US விஷ்ணுபுரம் இலக்கிய  வட்டம் ஆகியோரின் பெருமுயற்சிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

நான் நாள்தோறும் உங்கள் தளத்தில் வாசிக்கும் நண்பர்களின் வெண்முரசு குறித்த அறிமுகம் இது வரை வெண்முரசு வாசிக்காத நண்பர்களுக்கு மிகத் தேவையான ஒன்றாக இருந்தது.

நிகழ்ச்சி முடிந்து பேசிய அனைவரும் ஒருவித excitement ல் இருந்தார்கள். வெண்முரசு குறித்து நிறைய கேள்விகள் –  எதில்  தொடங்குவது, எப்படி அணுகி படிப்பது, எங்குபுத்தகங்களை வாங்குவது, எப்படி ஒருவரால் இவ்ளோ எழுத முடியும் என்று .அதிமுக்கியமாக- செம்பதிப்பு நூல்களை எங்கு, எப்படி வாங்குவது.. (செம்பதிப்பின் தரமும், ஓவியங்களும் அனைவருக்கும் பிடித்திருந்தது)

‘கண்ணானாய்! காண்பதானாய்! கருத்தானாய்! காலமானாய்! கடுவெளியானாய்! கடந்தோய்!  கருநீலத் தழல்மணியே!’

– நீலக் கண்ணனை இவ்விதம் எனக்கு மறு அறிமுகம் செய்த பேராசிரியருக்கு பெருவணக்கம்

லக்ஷ்மிநாராயணன்

வணக்கத்திற்குரிய ஜெ,

நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களுக்கு நினைவிருக்கும்-  2009 ல் சாக்ரமெண்டோவுக்கு   வந்திருந்தீர்கள்.  சாக்ரமெண்டோ தமிழ் மன்றத்தின் சார்பில் intel,Folsom அரங்கில்  ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு  நிகழ்வில் கலந்து கொண்டு  (https://www.jeyamohan.in/3662/) பேசினீர்கள். 12 வருடங்கள் கழித்து , ஆகஸ்ட் 1 அன்று மறுபடியும் வந்தீர்கள் –  உங்கள் வாசகர்கள் வடிவில். உங்களது இன்றைய வீச்சும், சமூகத்தின் மீதான உங்கள் பாதிப்பும், உங்கள் தொடர் உழைப்பின், செயல்பாடுகளின் வெளிப்பாடு.

சில விஷயங்களில் விமரிசனங்கள் இருப்பினும்,  இதற்காக நாங்கள் பேருவகை கொள்கின்றோம் அறிவுத் தளத்தில் இயங்குகிறவர்கள்  மீதான எங்கள் கரிசனை இது. வெண்முரசு ஆவணப்படம் நிகழ்வுக்காக கடும் கோடை, கொடு வெப்பம்,  கொள்ளை நோய்  போன்ற இடர்ப்பாடுகளை எல்லாம் மீறி நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்று கூடியிருந்தனர் Roseville அரங்கில்.

தொடக்கவுரை – விஷ்ணுபுர வாசகர்  வட்ட பொறுப்பாளர்  அண்ணாதுரை  வழங்கினார். அன்றைய நிகழ்ச்சியில் என்னென்ன இருக்கும் என்று கோடி காட்டிய அவர் உரைக்குப் பின்,   மறைந்த கரிசல் எழுத்தாளர் திரு கி ரா  அவர்களுக்கு  ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினோம். பிறகு  செல்வி   அமிர்தா பாலகிருஷ்ணன் எழுத்தாளர் பற்றிய  முன்னுரை வழங்கினார் ”ஜெமொவின் வெண்முரசு யானை பிழைத்த வேல் அல்ல.. மத்தகம் பிளந்த வேல்”  என்று சொல்லி உள்ளம் அள்ளிச் சென்றார் .

பிறகு ”யாதும் ஊரே” என்ற ராஜன் சோமசுந்தரத்தின்  யூடியூப் பாடல் திரையிடலுக்குப் பிறகு புத்தகத்தை பற்றிய ஆவணப்படம் துவங்கியது.  வாசகர்கள், சக எழுத்தாளர்கள், கலை ஆளுமைகள், ஜெ.மொவின் அணுக்கத் தொண்டர்கள் போன்ற பலரின் பார்வையில் வெண்முரசு. நடு நடுவே பாடல்கள் மற்றும்  ஜெயமோகன் செவ்வியுடன் தொய்வில்லாமல் சென்றது.  அமரர் ஜெயகாந்தனின் ஆவணப் படத்திலிருந்து அவர் மகாபாரதம் பற்றி உற்சாகத் தொனியுடன் பேசுவது போல  சில காட்சிகள்.  புலரும் நினைவுகள்

மொத்தத்தில் எல்லா வகை வாசகர்களையும் கவர்கிறார் போல ஒரு உள்ளடக்கம். நிகழ்ச்சியின் முடிவில் அண்ணாதுரை நன்றி நவின்றார்.  வாசகர்கள் அரங்கிலிருந்து கருத்தை பரிமாற விரும்பினால் பேசலாம். என்றார்.  சாக்ரமெண்டோ தமிழ் மன்ற பொறுப்பாளர்கள் ஜான், கோபி  மற்றும் முருகேஷ் பேசினார்கள். நடக்கவியலாத 83 வயது முதிய பெண்மணி ஒருவர்,  இந்தக் கூட்டத்துக்கு எப்படியாவது வர வேண்டும் என இரவல் வாகனத்தில் வந்த கதை சொன்னார். Walnut Creek ல் இருந்து நூறு  மைல் காரோட்டி வந்த லக்‌ஷ்மி நாராயணன் இந்த படைப்பை எப்படி அணுகலாம் என்று சொன்னார்.

என் பங்குக்கு நானும் உங்கள்  படைப்புகளுடனான என் பரிச்சயத்தை பகிர்ந்து கொண்டேன். வந்திருந்தவர்கள் கூட்டாக சேர்ந்து  நிழற்படம் எடுத்த பிறகு கலைந்தோம். வாசகர்கள் சிலர் இந்த புத்தகங்களுக்கு ஒலிப் பேழை ( audio book) கிடைத்தால் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருக்கும் என்றனர். இது படிக்கச் சோம்பல் படுபவர்களின் கோரிக்கை அல்ல… பிழைக்க ஒரு வேலை பார்த்துக் கொண்டு, அன்றாட இருப்பியல் ,  சங்கடங்களோடு,   “வாழவும்”  விழையும் வாசக மனத்தின் இறைஞ்சல்.

என்றென்றும் அன்புடன்

சுந்தர் பசுபதி

முந்தைய கட்டுரைநிலவும் மழையும்-2
அடுத்த கட்டுரைவிகடன் பேட்டியின் நிறைவு