வரலாறு என்னும் மொழி : ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் இணையதளம்

அன்புள்ள ஜெ,

கடந்த சனிக்கிழமை ஜூலை 31 அன்று ஸ்டாலின் ராஜாங்கத்தின் மூன்று புத்தகங்களை ஒட்டி “வரலாறு என்னும் மொழி” என்று ஒரு கலந்துரையாடலை ஒருங்கிணைத்திருந்தேன். ஸ்டாலினின் வரலாற்றுப் பார்வை, வரலாறு எப்படி கட்டமைக்கப்படுகிறது, ‘எழுத்து’ மட்டுமே வரலாறா என்று பல புள்ளிகளை விவாதம் தொட்டுச் சென்றது. “பெயரழிந்த வரலாறு: அயோத்தி தாசரும் அவர் கால ஆளுமைகளும்”, “எண்பதுகளின் தமிழ் சினிமா”, “எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்” ஆகிய மூன்று நூல்களும் மூன்று வெவ்வேறு தளத்துக்கானவை ஆனால் மையச் சரடாக எழுத்து சார்ந்த வரலாறும் மக்களிடையே புழங்கும் வழக்காறும் எப்படி ஒரு சித்திரத்தை அளிக்கிறது என்று இருக்கும்.

நிகழ்ச்சியை அறிவித்ததுமே பேஸ்புக்கில் விவாதம் சூடு பிடித்தது. அயோத்திதாசர் சிந்தனையாளரேயல்ல, எழுத்து மட்டுமே வரலாறு, வழக்காறு என்பது கட்டுக் கதை என்றெல்லாம் காழ்ப்புடனே சுடுசொற்கள் வந்து விழுந்தன. சுடு சொல் வீசிய பலரும் ஸ்டாலினின் எழுத்தை வாசிக்காதவர்கள் (பெரும்பாலும்) அல்லது வாசித்தாலும் தங்கள் முன் முடிவுகளோடு நிற்பவர்கள். தலித் எழுத்தாளர்களை ஒதுக்குவது குறித்து உங்கள் தளத்திலும் சமீபத்தில் ஒரு கடிதம் வெளியானது ஒரு ரசமான ‘coincidence’.

இரண்டு மணி நேரம் என்று திட்டமிட்ட நிகழ்ச்சி மூன்றரை மணி நேரம் நீண்டது. சில இடங்களில் உணர்ச்சி மேலிடவே ஸ்டாலின் பேசினார் ஆனால் எந்த இடத்திலும் அவர் நிதான குணத்தையோ, காழ்பாற்ற சம நிலையையோ தவறவிடவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் தலித் எழுத்தாளர்கள் சந்திக்கும் புறக்கணிப்பு பற்றி ஒன்றிரண்டு நிமிடம் பேசினார், அதுவும் தன்னை முன்னிலைப்படுத்தாமல்.

சிலரின் மனத்தை மாற்ற முடியாது. அது வீண் வேலை. ஆனால் நிகழ்ச்சிக்குப் பின் இது வரை ஸ்டாலினின் எழுத்துப் பற்றியோ அவர் கருத்தியல் பற்றியோ அதிகப் பரிச்சயம் இல்லாதவர்கள் ஸ்டாலினை படிக்கவும், அறியவும் முற்பட்டிருக்கிறார்கள். என் மனைவி உட்பட. நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது பேராசிரியர் உதயராஜ், ஆய்வாளர் ஆதவன் ஆகியோரின் உரைகள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் பேருதவிப் புரிந்தது நண்பர் ஏ.பி. ராஜசேகரன்.

அயோத்திதாசர், எம்.சி.ராஜா, ஸ்டாலின் ராஜாங்கம், ராஜ் கௌதமன் இவர்கள் எல்லோரையும் உங்கள் தளத்தின் மூலமாகத் தான் எனக்கும் பலருக்கும் அறிமுகம். அதேப் போல் தலித் வரலாறு பற்றி என்னிடம் இருக்கும் நிறைய புத்தகங்கள் காலச்சுவடு வெளியீடு தான்.

இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் போது நீங்கள் என்னை குறித்து சொல்லும் விமர்சனம் நினைவுக்கு வந்தது. எழுதியச் சான்றுகள் குறித்த என் ஆணித்தரமான நம்பகத்தன்மைப் பற்றி சில மாதங்கள் முன் கூட கடலூர் சீனுவுக்கு எழுதிய பதிலில் குறிப்பிட்டிருப்பீர்கள். ஸ்டாலினின் வரலாற்றுப் பார்வை மேற்சொன்னது போல் வேறு வகை. ஸ்டாலினின் எழுத்தும், தன் தரப்பை முன் வைக்கும் நேர்த்தி ஆகியவை தான்.

உங்கள் தளத்தின் மூலம் உங்கள் வாசகர்களையும் இந்நிகழ்வும், அதன் மூலம் ஸ்டாலினின் எழுத்தும் சென்று சேர்வதற்காக இக்கடிதம்.

அரவிந்தன் கண்ணையன்

அன்புள்ள அரவிந்தன்,

ஸ்டாலின் ராஜாங்கத்தை அமெரிக்கன் கல்லூரியில் அவர் மாணவராக இருந்த காலம் முதல் அறிவேன். நண்பர் அலெக்ஸ் வழியாக நட்பும் அணுக்கமும் உருவாகியது. என்னை அண்ணன் என அழைக்கும் சிலரில் ஒருவர். தமிழில் நான் அணுகி வாசிக்கும், பெருமை கொள்ளும் ஆய்வாளர்களில் ஒருவர். ஆனால் எந்தவகையிலும் முன்கூட்டிய பாராட்டுணர்வுடன் அல்லது ஏற்புடன் நான் அவரை வாசிப்பதில்லை. ஐயத்துடன், பலசமயம் மறுப்புடன் மட்டுமே வாசிக்கிறேன். அவருடைய புறவயமான ஆதாரங்கள், தெளிவான முறைமை, நிதானமான நடை ஆகியவற்றின் வழியாக அவர் என் தர்க்கபூர்வ அணுகுமுறையை நிறைவடையச் செய்வதனால் மட்டும்தான் அவரை தமிழகத்தின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவராக வைக்கிறேன். ஐயமே இல்லாமல் சொல்லமுடியும், அவர் தன் தலைமுறையின் தலைசிறந்த ஆய்வாளர். நிகர்வைக்க இன்னொருவர் இன்றில்லை.

நவீனத்துவக் காலகட்டத்திற்குப் பின் உலகமெங்குமே வரலாற்றாய்வு உருமாற்றம் அடைந்திருப்பதை சற்று கூர்நோக்கு செய்பவர்கள் உணரமுடியும். சுருக்கமாக இப்படிச் சொல்கிறேன். ஓர் அறிவுத்துறை அதன் நோக்கத்தையும் அதற்குரிய ஆய்வுநெறிகளையும் மாறிலியாக வைத்துக்கொண்டுதான் செயல்பட முடியும். ஆனால் இன்று வரலாற்றாய்வு என்பது ஒரு பக்கம் ஆய்வை நிகழ்த்திக்கொண்டே அத்துறையின் நோக்கம் மற்றும் நெறிகளை மறுபரிசீலனையும் செய்கிறது. ஏறத்தாழ தத்துவத்திலும் இதுவே நிகழ்கிறது. ’பறக்கும்போதே விமானத்தை பழுதுபார்ப்பதுபோல’ என்று வரலாற்றாசிரியர் திரிவிக்ரமன் தம்பி வேடிக்கையாகச் சொன்னார். அறிவியல்துறைகளுக்கும், சமூகவியல் போன்ற துணைஅறிவியல் துறைகளுக்கும் இச்சிக்கல் இல்லை.

ஆகவே இன்றைய ஆய்வாளன் இருவகைகளில் செயல்பட வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் செவ்வியல் வரலாற்றாய்வு  அணுகுமுறைக்குள் நின்றுகொண்டு தரவுகளை அடுக்கிச் செய்யும் ஆய்வுகளை முன்வைப்பவர்கள் ஒரு வகை. உதாரணம் அ.கா.பெருமாள், குடவாயில் பாலசுப்ரமணியம், செ.இராசு போல. இன்னொரு பக்கம் செவ்வியல் முறைமைப்படி ஆய்வுகளைச் செய்யும்போதே வரலாற்றாய்வுத்துறையின் இலக்கு, நெறி இரண்டையும் மறுபரிசீலனை செய்பவர்கள். ஸ்டாலின் ராஜாங்கம் இரண்டாம் வகையானவர்.

அவருடைய ஆய்வுகளில் பெரும்பகுதி செவ்வியல் வரலாற்றாய்வின் நெறிகளை கொண்டதுதான். தமிழக தலித் இயக்கம், தமிழக தலித் கல்வி இயக்கம் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய ஆய்வுகள் மூலத்தரவுகளை தேடிச்சேர்த்து , இன்றுள்ள புறவயத் தர்க்கப்படி சீராக அடுக்கி உருவாக்கப்படுபவை. இன்னொரு பக்கம் அவர் இங்குள்ள வரலாறாய்வின் நோக்கம், நெறி ஆகியவற்றை உடைத்து ஆராயவும் முயல்கிறார். அயோத்திதாசரில் இருந்து தொடங்குவது அந்த பார்வை. அதாவது வரலாறு [History] வரலாற்றெழுத்தியல் [Historiography] இரண்டையுமே ஒருவர் ஆய்வுசெய்வது இது.

அவருடைய இந்த இரண்டு வகை ஆய்வுகளையும் பிரித்துத்தான் நாம் அணுகவேண்டும். இன்று உலகம் எங்குமுள்ள வரலாற்று ஆய்வுப்போக்குகளில் ஒன்று இது. தமிழ்ச்சூழலில் வரலாற்றாய்வுகளே பொதுவாக கவனிக்கப்படுவதில்லை.அவை பொதுவாகப்பேசப்படும் அன்றாட அதிகார அரசியலை, அல்லது எளிய சமூகநம்பிக்கைகளை எங்கே சீண்டுகின்றனவோ அங்கே மட்டுமே அவற்றின்மேல் கவனம் விழுகிறது. அதுவும் அக்கப்போர் சார்ந்த கவனம் மட்டுமே. அது வரலாற்றாய்வுக்கே எதிரான மனநிலை கொண்டது. வரலாற்றாய்வாளர்கள் அஞ்சுவது அதைத்தான். அக்கப்போர் போல வரலாற்றாய்வை மலினப்படுத்தும் வேறொன்றில்லை. அதிலும் அக்கப்போரே அறிவுச்செயல்பாடாக ஆன சமூகவலைச்சூழலில், எதையுமே தெரியாமல் எவரும் எதையும் சொல்லலாம் என்னும் களம் அமைந்திருக்கையில் வரலாற்றாய்வை ரகசியமாக நிகழ்த்துவதே நல்லது என்று சொல்லத் தோன்றுகிறது.

வரலாற்றாய்வின் நோக்கமும் வழிமுறையும் கேள்விக்குரியதாக்கப் படுவதென்பது இந்திய- தமிழ்ச்சூழலில் மிகச் சிக்கலானது. இன்றைய வரலாற்றெழுத்தியல் ’யார் எழுதிய, எவருக்கான, எந்தக்கோணத்திலான வரலாறு?’ என்னும் கேள்வியை முதன்மையாக எழுப்பிக்கொள்ளும். ஒற்றை வரலாறு என்பதை மறுத்து பல வரலாறுகள் இருப்பதாக புரிந்துகொள்ளும். வரலாற்றுத் தரவுகள் என்பவையேகூட புறவயமானவை அல்ல, அவற்றின் அகவயத்தன்மை எவை வரலாற்றுத் தரவுகள் என்று தெரிவு செய்வதில் உள்ளது என்று கண்டடையும்.மிகச்சிக்கலான சமூக அடுக்குமுறைகளும், மொழிக்குள்ளேயே வராத பல்லாயிரம் சமூகக்குழுக்களும் கொண்ட இந்தியத் தமிழ்ச்சூழலில் வரலாறு என்பது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுச்சமரசப் புரிதலும், அதன் விளைவான ஆதிக்கமும் மட்டும்தான். ஒவ்வொரு எழுந்துவரும் புதிய சமூகமும் அந்த ஆதிக்கத்தை உடைத்துத்தான் தன் வரலாற்று இடத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

இந்த முயற்சியில் எழுதப்பட்ட வரலாற்றை மோதி உடைக்கையில் எரிச்சல்களும் ஏளனங்களும் எழுவது இயல்பே. இங்கிருக்கும் வைதிக மேலாதிக்க வரலாற்றெழுத்தும் சரி, அதற்கு எதிராக உருவாக்கப்பட்ட திராவிட, தமிழிய வரலாற்றெழுத்தும் சரி, அடிப்படையில் ஒரே வகையான வாழ்க்கைநோக்கும் தர்க்கமுறையும் கொண்டவை. மிகக் குறைவான தரவுகள், அவற்றை கற்பனையால் இணைத்து உருவாக்கப்படும் பொற்காலச் சித்திரம், அதையொட்டிய பெருமிதங்கள் ஆகியவை அவற்றின் பொதுக்கூறுகள். இனி எழுதப்படும் வரலாறுகள் அந்த இயங்குமுறை கொண்டிருக்க முடியாது. பல்லாயிரமாண்டுகளாக எழுதப்படாத வரலாறுள்ள மக்கள்குழுக்களே இங்கு எண்ணிக்கையில் பெரும்பகுதி. அவர்கள் வரலாறற்றவர்களாக நீடிக்க முடியாது. பிறர் எழுதும் வரலாற்றினுள் அவர்கள் தங்கள் வரலாற்றை எழுதிக்கொள்ள முடியாது. பிறர் உருவாக்கும் ஆட்டவிதிகளுக்குள் நிற்கவும் இயலாது.

இன்றும்கூட தமிழ் வரலாற்றில் மிகச்சிறிய பகுதியே எழுதப்பட்டுள்ளது. அதுவும்கூட மிகமிகச்சிறிய அளவிலான ஆதாரங்களின் அடிப்படையில் மிகப்பெரும்பாலும் ஊகங்களின் வழியாக உருவாக்கப்பட்டது. நான் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரனின் ஆய்வுகளை வாசிக்கும்போது எண்ணிக்கொள்வதுண்டு. அவர் தொல்லியல் சான்றுகளையும் தொல்நூல்களையும் தரவுகளாகக் கொண்டு செவ்வியல்நோக்கில் ஆய்வுசெய்பவர். ஆனால் எத்தனை தாவல்கள், எத்தனை மிகையூகங்கள். அவை சுவாரசியமான திறப்புகளை அளிப்பவை, மேதமை வெளிப்படுபவை, எதிர்கால ஆய்வாளர்களுக்குரியவை. ஆயினும் அவை மிகையூகங்களே. வேறு வழியே இல்லை, அவ்வாறுதான் தமிழ் வரலாறு எழுதப்படலாகும்.

அந்த வரலாற்றெழுத்தின் போதாமைகளில் இருந்து தொடங்கும் ஸ்டாலின் போன்றவர்களின் வரலாற்றெழுத்துமுறை முக்கியமானது. தமிழகத்தின் இன்னமும்கூட ‘மக்கள் வரலாறு’ என்பது எழுதப்படவே இல்லை. இங்கே மாபெரும் குடியேற்றங்களும் புலம்பெயர்வுகளும் நிகழ்ந்துள்ளன. சாதிப்படிநிலைகள் மாறி மாறி வந்துள்ளன. அவை உருவாக்கும் சமூகப்பரிணாமச் சித்திரம் எழுதப்படவில்லை. அவை கீழிருந்தே எழுதப்படலாகும். அதற்கான முதல்தொடக்கம் வெளிப்படும் ஆய்வுகள் ஸ்டாலின் எழுதுபவை. ஸ்டாலின் ராஜாங்கத்தின் நவீன பௌத்த மறுமலர்ச்சி காலம், எழுதாக்கிளவி, பெயரழிந்த வரலாறு போன்றவை அவ்வகையில் மிக முக்கியமான நூல்கள்.

இங்கே பொதுவரலாறு பேசுபவர்கள் கிடைக்கும் சிறு ஆதாரங்களைக்கொண்டு நுண்புனைவுகள் செய்து களமாடுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். வரலாற்றை அரசியலாதிக்கக் கருவியாகக் காண்பவர்கள் புதிய வரலாற்றெழுத்துக்களை பூசல்கள் வழியாக அணுகுகிறார்கள். இவ்விரு தரப்புமே எழுந்துவரும் மாற்றுவரலாறுக்கு மறுதரப்பாக அமையும் தகுதி அற்றவை. எளிய அக்கப்போர்களாக எஞ்சுபவை அவை. ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்கள் இன்றைய நவீனத்துவத்திற்குப் பிந்தைய வரலாற்றெழுத்தின் அடிப்படை வினாக்களை அறிந்தவர்களுடன் விவாதிக்கவேண்டிய இடத்திலேயே இருக்கிறார்கள்.

ஆகவே தமிழ்ச்சூழலில் அவரைப்போன்றவர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். இங்கே வரலாறும் பண்பாடும் பேசுபவர்களின் இயல்பான உரையாடலில் ஸ்டாலின் ராஜாங்கம் மேற்கோளாக்கப்படுவது அனேகமாக நிகழ்வதே இல்லை. இச்சூழலில் நீங்கள் எடுத்துள்ள இம்முயற்சி மிகமிக முக்கியமானது. என்னைப்போன்றவர்கள் வரலாற்றாய்வை கூர்ந்து ஆராய்ந்து தேவையான பண்பாட்டுச்செய்திகளை, கொள்கைகளை எடுத்துக்கொள்பவர்கள் மட்டுமே. வரலாற்றாய்வில் விவாதத்தரப்பாக அமையுமளவுக்கு ஆய்வுத்தகுதி எனக்கில்லை. வாசகனாக மட்டுமே ஸ்டாலினின் எழுத்துக்களை அணுகிவருகிறேன். என் வாழ்த்துக்கள்

ஜெ  

நம் நாயகர்களின் கதைகள்

கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு

விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்

முந்தைய கட்டுரைசுவாமி ரமணகிரி- ஒரு முழுமை
அடுத்த கட்டுரைவெண்முரசு, கலிஃபோர்னியா