இலட்சியவாதம்,கருத்தியல் -கடிதம்

வணக்கம்,

நேற்றிரவு நான் அழுதேன். கடைசியாக  எப்போது என்று நினைவில்லை அந்த அளவுக்கு அழுகை மறந்திருந்தேன். நேற்றிரவின் அழுகைக்கு காரணம் நீங்கள். உங்கள் உரை – கல்லெழும் விதை.

நானும் என் உயர் அதிகாரியும் அடிக்கடி சில விவாதங்களில் ஈடுபடுவதுண்டு. பெரும்பாலும் வரலாறு மட்டுமே. அவரிடம் தமிழகம் குறித்த மிக தெளிவான வரலாற்று சித்திரம் உண்டு. மரபுகள் பற்றி நல்ல மதிப்பீட்டையும் கொண்டவர். ஒரு விவாதத்தின் போது 1800 களுக்கு முன்னாள் இயற்றப்பட்ட நூல்களுக்கென நான் வளர்ந்த  கிராமத்தில்  ஒரு சிறிய அளவிலான ஒரு நூலக சேவை தொடங்குவேன் என்று அவரிடம் சொன்னேன்.

அது உண்மையாக என் மனதின் ஆழத்தில் தோன்றிய எண்ணம். அவர் “காலச்சக்கரத்தின் ஆணைப்படியே எதுவும் நடக்கும்” என சிரித்தார். நான் அதை அப்போது எள்ளல் நினைத்தேன்.

சில தினங்களுக்கு முன்பு,  எனது கிராமத்தில் ஒரு இயக்கத்தின் அலுவலகம் திறக்க வேண்டும் என்றும், அதில் ஆள்சேர்த்து ஒரு தத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என்று எனது மனதில் தோன்றியது. நேற்று உங்கள் கல்லெழும் விதை உரை கேட்டேன். நான் அதிர்ந்து போனேன்.

இலக்கியத்தில் மட்டுமே இயங்க விரும்பினேன். அப்படிப்பட்ட நான் எவ்வாறு இந்த இடத்தை வந்து அடைந்தேன் என்று எனக்கு உரைத்தது. IDEALIST ஆக வாழ எண்ணம் கொண்ட வெகுளியான கிராமத்து இளைஞன் எவ்வாறு ideologist ஆக மாறினேன் அல்லது அதற்கான விளிம்பில் இப்போது உள்ளேன்? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. உங்கள் உரையின் முடிவில் நான் என்னை நினைத்து வெட்கினேன். உனது நேர்மறையான லட்சியவாதம் எப்படி உன்னை விட்டு விலகியது? என என்னை நானே கேட்டுக் கொண்டு இருந்தேன்.

இரவு  மணி 1. பதில் தெரியாமல் அழுதுவிட்டேன். நீங்கள் வேறு அத்தகையோருக்கு சிகிச்சை கூட பலன் தராது என்று சொன்னீர்கள்.  நான் அவ்ளோதான் என நினைத்து தூக்கம் வரவில்லை. பின்னர் உங்கள் மற்றொரு கட்டுரையில் கேரளம் தன் மரபை மிகச்சரியான நேரத்தில் மீட்டது என சொன்னது நினைவில் வந்தது. உங்கள் உரையின் நுகர்வு என் மீட்பின்  தருணம் என நான் சொல்லிக்கொண்டேன். கல்லை விதை உடைக்கும் தருணம். அப்படி ஒன்றும் நேரம் ஆகிவிடவில்லை என தோன்றியது. மணி 2.

மீள்வது சரி. ஆனால் ஆசானே, நான் எப்படி இந்த இடத்தை வந்து அடைத்து இருப்பேன்? என்னளவில் நான் Facebook – 4 ஆண்டுகளுக்கு முன்பே நான் கணக்கை அழித்து விட்டேன். ஒரு வேளை செய்திகள் மூலமாக இருக்கலாமோ? எது எப்படியோ உங்களிடம் கேட்டால் ஒரு தெளிவு பிறக்கும் என எழுதிவிட்டேன்.

குழப்பத்தினை முழுமையாக சொல்லிவிட்டேன் என் நினைக்கிறேன்.

அன்புடன்,
எல்

***

அன்புள்ள எல்

நீங்கள் எழுதியிருப்பது ஒரு குழப்பமான கடிதம். நீங்கள் தன்மீட்சி வாசிக்கலாமென நினைக்கிறேன். அதில் இந்தவகையான குழப்பங்களுக்கு தெளிவான விளக்கங்கள் உள்ளன

நான் ஐடியாலஜி என்று சொன்னது ஒருங்கிணைவுள்ள, திட்டவட்டமான விடைகளும் செயல்திட்டங்களும் கொண்ட, அதிகார இலக்குள்ள சிந்தனைகளை. அவை அந்தச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக நம்மை ஆக்குகின்றன. நாம் அதிகாரம் செய்ய ஆரம்பிக்கிறோம். நம் மீது அதிகாரம் செயல்படுகிறது.

ஐடியலிசம் என நான் சொன்னது ஒருவன் தன் இயல்பாகவே வெளிப்படுத்தும் இலட்சியங்களையும் அதையொட்டிய செயல்பாடுகளையும். அதில் அதிகார இலக்கு இல்லை. அறுதி விடைகளும் இல்லை.

கருத்தியல் நம்பிக்கையாளன் மூர்க்கமான ஒற்றைப்படைப் பார்வை கொண்டவன். ஆகவே பூசலிடுபவன். இலட்சியவாதி அர்ப்பணிப்பு மட்டும் கொண்டவன். அளிப்பவன்.

ஜெ

***

முந்தைய கட்டுரையோகம்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவிளையாட்டு, கடிதம்