தன் உருவத்தில் இருந்து மேலெழுதல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தன்மீட்சி நூல் வாசிக்க கிடைத்தது. தங்களுடனான உரையாடலுக்குப் பிறகு அந்த நூலை வாசித்தேன். இந்த கடிதத்தை என்னை தொகுத்துக்கொள்ள எழுதுகிறேன்.

தன்மீட்சி  ஒரு தலைப்பின் கீழ் நடைபெற்ற விவாதத்தின் கேள்வி பதில் தொகுப்பு நூல். இந்த நூலில் பல அடிப்படை சிக்கல்களும் அதற்கான விடையும் உள்ளன. கேள்விகள் அனைத்தும் தற்கால அடிப்படை ஐயங்களைப் பற்றியும் சிக்கல்களை பற்றியும் இருந்தன, அதற்கு நீங்கள் தங்கள் மரபில் நின்று அளித்த பதில்களின் தொகுதி இந்த நூல்.

இந்த நூல் எந்த ஒரு கேள்விக்கு அல்லது ஐயதிற்கோ அறுதியான conclusive ஆன பதில்கள் தரவில்லை. நீங்கள் உங்கள் மரபில் இருந்தோ அல்லது தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து ஒரு பார்வையை, ஒரு திறப்பையோ காட்டுகிறீர்கள். அந்த திறப்பு ஒரு பார்வை, ஒரு கோணம். இந்த நூலை படிப்பவர்கள் அதை மறுக்கலாம் அல்லது அதை ஏற்கலாம்.

நீங்கள் உங்கள் பதில் மூலமாக ஒரு உரையாடலைத் தேடலை தொடங்கி வைக்கிறீர்கள். வாசகனின் தேடல் பொருத்து அவன் அடைவது மாறும்.

இந்த நூலின் சிறப்பு அதுவே.

நாம் வாழும் சூழல் பல சமயம் நம் பார்வையைக் குறுக்கி நம்மை செயலாற்றாது செய்துவிடுகிறது.  எதை விடுவது எதை தேர்வு செய்வது என்ற அடிப்படை ஐயம் அனைவரிடமும் உண்டு. அவரவரின் தன்னறம் எதுவோ அதை நோக்கி முழு விசையுடன் செயல் புரிதல் வேண்டும்.

ஒருவனின் தன்னறம் – அவன் ஆற்ற வேண்டிய கடமை, அதை அவனே தேடி கண்டடைய வேண்டும். அவன் மீட்சி அதில் உள்ளது. தன்னை பகுத்து முடிந்த வரை தன் செயலை ஆற்ற வேண்டும. அவனுக்கு அனைத்தும் முக்கியம் எதை பொருத்தும் எதையும் இழக்கக் கூடாது.

இன்று “தட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும்”, “ஆண்மையின் தனிமை” ஆகிய பதிவுகளை படித்தேன். அந்த இருபதிவுகளும் என்னை சற்று அலைக்கழித்தன. ஏன்? நான் என்னை கேட்டேன், ஒரு அச்சம் என்னுள் படர்ந்தது. – இரண்டு பதிவும் என்னை தன் மீட்சிக்கு கொண்டு சென்றது. அந்த இரு ஆளுமைகளும் தங்களை இழந்த தருணம் எது, அவர்களை கட்டற்றவர்களாக ஆக்கியது எது? அவர்களை நிலை கொள்ளாமல் செய்தது எது? அவர்கள் அடைந்திருக்க வேண்டிய நிலையில இருந்து விலக்கியது எது?

என் வாழ்விலும் சில மனிதர்கள் உள்ளனர். என் தந்தை வழி பாட்டனார், தாத்தா மற்றும் அப்பா. அவர்களின் சொல்லும் செயலும் என் வாழ்வை இந்தக் கணம் வரை தீர்மானிக்கிறது. என் பாட்டனார், பெரிய வணிகர், பெரிய முருக பக்தர் அதே அளவு கோபமும் சொல் மீதோ குணத்தின் மீதோ கட்டுப்பாடுகள் அற்றவர், கட்டற்றவர். பெண் தொடர்புகள் பல உண்டு. ஏதோ வாய்ச் சண்டையில் பாட்டி  தற்கொலை செய்து கொண்டார். படிப்படியாக வணிகம் முற்றும் நின்றது.

அவரது மகன் (என் தாத்தா) தாயற்றவராக, கட்டற்று வளர்ந்தார், வருடம் ஒரு பள்ளி, ஒரு கல்லூரி என படித்தார், மிகுந்த ஆடம்பரமாக இருந்தார், இந்தியா முழுவதும்  சுற்றித் திரிந்துள்ளார்.  அவர் வக்கீலாக இருந்தார். மிகவும் அறிவாளி, குண்டூசி முதல் குதுப்மினார் வரை எதைப் பற்றியும் உரை நிகழ்த்துவார்.  சட்டத்தை  நன்கு கற்றவர். தீவிர வாசகர். அவரது கட்டற்ற தன்மை இல்லறத்தில் பல சிக்கல்களை உண்டாக்கியது. பல முடிவுகளை தகுந்த நேரத்தில் எடுக்கத் தவறிவிட்டார்.

என் தந்தையும் வக்கீலே. பல கடமைகள் இளமையிலேயே அவர் மீது வந்தது, நேர்நிலையில நின்று குடும்பத்தை வழிநடத்தினார். சுயம்பு.

நான் பிறந்த பிறகு, எனக்காகக் குடும்பத்தை எதிர்த்து வந்தார். மேலும் பல இன்னல்கள் என்னால் ஏற்பட்டுள்ளது, என் செயலால் அல்ல என் பிறப்பால். அவரின் மொத்த உழைப்பும் வாழ்வும், நானே, என் முகமே. அவருக்கு ஒரு துளியும் ஐயம் இல்லை, தவற விட்டதை எண்ணவில்லை.

நான் சிறுவயது முதல் தனியாக வளர்ந்தவன், தம்பி வரும்வரை. கேலி, கிண்டல், சீண்டல், வலி, என நினைவு தெரிந்த முதல் என் வாழ்வு உள்ளது. பிறர் என்னை பார்த்த பார்வையில், ஒரு எச்சரிக்கை உணர்வு, ஏளனம்,  இரக்கம் இருக்கும். சக மனிதனாக அந்த விழிகள் பார்க்காது. பல இரவுகள் தருணங்கள் அழுது கழித்துள்ளேன்.

ஒருவரின் உருவம் பேச்சு பிறப்பு அவர் சார்ந்ததல்ல, ஆனால், அந்த ஒரு காரணம் அவரையும் அவரை நேசிக்கும் உள்ளங்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றுவது என்று தெரிந்தால நிகழ்வது யாது? சுயவதை, எதைத் தொட்டாலும்  தன் மீதே குற்றம் சுமத்துதல் என நீளும். என்னுடைய early Teenage அத்தகையது.

ஒரு கட்டத்தில் ஒன்றை உணர்ந்தேன் பிறப்பு தன்னை சார்ந்தது அல்ல என்று. முதல் முதலாக நான் என்னை மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன். எனக்காக உலகை எதிர்க்கும் ஒருவர் உள்ளார், அன்பை பகிர உள்ளங்கள் உள்ளன. என் உலகம் விரிவானது, இலக்கியம், ஓவியம் கல்வி என என்னை நானே பகுத்துக் கொண்டு செயல் ஆற்றினேன், ஆற்றுகிறேன்.

என் பாட்டரும், தாத்தாவும் தவறவிட்டது அவர்களது தன்னறத்தை. என் தந்தை அவரது தன்னறத்தை ஆற்றினார். அவரால் ஆற்றப்பட வேண்டிய, ஆற்றக்கூடிய, தன் ஆற்றலை மீறி ஆற்றுகிறார். ஏன் ஆற்ற வேண்டும், தன்னலமாக இருக்கலாமே என்ற கேள்வி அவரிடம் எழுத்திருக்கலாம், ஆம் எழுந்து இருக்கும், அதை அந்த ஒரு கணத்தை கடந்து வந்து தான் அனைதையும் செய்திருப்பார்.

என் சுதர்மம் நேர்பட எழுவதும், சிந்திப்பதும் மட்டுமே, ஆம் அது மட்டுமே. என் பாட்டரும் தாத்தாவும் கருப்பண்ணசாமியாக சந்நதம் கொண்டு ஆடிவிட்டனர். என் தந்தை  தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து உள்ளார். நான் அவரின் கருப்பண்ணசாமி ரூபம்.

இந்த எண்ணம் ஒரு புறம் ஊக்கமளித்தாலும், மறுபுறம் ஐயம் கொள்ள செய்கிறது. தன்மீட்சி, இந்த ஐயத்திற்கான ஒரு திறவுகோலை எனக்கு அளித்துள்ளது, பகுத்து, விடுத்து, எல்லைக்கு உட்பட்டு செயல்படுதல் வேண்டும். அந்தந்த பாத்திரத்திற்கான செயலை செய்ய வேண்டும். தன்மீட்சி constructive thought and action பற்றி விவரிக்கிறது. இப்பொழுது நான் மாணவன், கல்வி கற்பது என் செயல்.  அதில் நான் தெளிவாக இருக்கவேண்டும். இனிவரும் காலங்களில் வாழ்வின் அடுத்த அடுத்த நிலைகளில் எனக்குழப்பங்கள், ஐயங்கள் வரலாம், அப்பொழுது தன்மீட்சி எனக்கு துணை நிற்கும்.  அதில் எந்த ஐயமும் இல்லை.

கடிதம் சற்று நீண்டு விட்டது, மன்னிக்கவும். இந்த கேள்விகள் நான் வளர வளர என்னுடன் வளர்கிறது. முடிந்த வரை தொகுத்துக்கொள்ள முயன்றுள்ளேன். நான் என்னுடைய வாசிப்பை தேடலை இதை ஒட்டி ஆரம்பித்து தன்மீட்சி வரை வந்துள்ளேன். என் புரிதலில் தவறு இருப்பின் சுட்டிகாட்டவும் திருத்திக் கொள்கிறேன்.

இப்படிக்கு

சோழராஜா

***

அன்புள்ள சோழராஜா,

இதற்கெல்ல்லாம் அப்பால் உள்ளது ஊழ். ஒருவரின் பிறப்பை தீர்மானிப்பது அது. உங்கள் மூதாதையரின் செயல்களால் அவ்வாறு அமைந்தது என்று எளிமையாகச் சொல்வார்கள். நான் அது அவ்வளவும் நேர்கோடு என நினைக்கவில்லை. ஆனால் அடிப்படைகள் நம் தெரிவில் இல்லை என்றே நினைக்கிறேன்.

நேற்று ஒரு மருத்துவ நண்பர் சொன்னார். இந்தியாவில் பிறந்த ஒருவர் இயல்பாகவே காசநோய் தொற்றுக்கு ஆளாகிறார். இங்குள்ள துப்பும் பழக்கம் காரணம். விளைவாக இளம்பிள்ளைக் காசம் வருகிறது. அதற்கான தடுப்புமருந்துகள் அளிக்கப்படுகின்றன. அவருடைய முதுமையின் பல உடல்நிலைச் சிக்கல்களை அவை உருவாக்கிவிடுகின்றன. தப்பவே முடியாது. இந்தியாவில் பிறப்பது நம் கையில் இல்லை அல்லவா?

உருவம் அளிக்கும் சவால்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அவை அறிவார்ந்த செயல்கள் வழியாக, அதில்நிகழும் சாதனைகள் வழியாக கடந்து செல்லத்தக்கவை. ஒருவன் தன்னை பயனுள்ளவனாக, வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவனாக உண்மையாக உணர்ந்தானென்றால் அவன் உலகை வென்றவனே. அவனுக்கு பிறர் பொருட்டே அல்ல. அதற்கான எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு உள்ளன. அவ்வகையில் நீங்கள் நல்லூழ் கொண்டவர். அவ்வண்ணம் வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் அமைந்தவர்.

அதற்கும் அப்பால் ஒன்றுண்டு, உங்கள் நாற்பது அகவைக்குமேல் ஆன்மிகமான இன்னொரு தளத்தை அடைவீர்கள். அங்கே இதெல்லாமே அபத்தமான சிறுவிஷயங்களாக தோன்றும். இன்னும் பல்லாண்டுகள் இருக்கின்றன.

உங்கள் தந்தைக்கு வணக்கம்

ஜெ

முந்தைய கட்டுரைஆயுர்வேதம் அறிய
அடுத்த கட்டுரைகவிதையை அறிதல்