அத்தர் – கடிதம்

அத்தர்

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

ஊரெங்கும் மழை பெய்து மண் குளிர்ந்து இருக்கிறது. ஈரட்டிக் காற்றின் மழை வாசனையின் இனிமையில் உள்ளம் ஆழ்ந்து, ஊழ்கமே பொழுதுகளாய், வாழ்வின் முழுமை உணர்வில் திளைத்த வண்ணம் உங்கள் நாட்கள் இனிதே நகர்ந்து கொண்டிருப்பதை இங்கிருந்தும் உணர முடிகிறது.

வியாச பூர்ணிமை நன்நாளில் ஞானநிலவின் தன்னொளிபோல் வெண்முரசை குறித்த உங்கள் நல்வார்த்தைகளை சூம் நேரலையில் கேட்டுக் களித்தது மிக்க மனநிறைவை அளித்தது. வியாச பீடம் என்பது ஞானத்தின் எடையின்மையும் பொறுப்புணர்வின் பேரெடையையும் தன்னகத்தே ஒருங்கே கொண்டது என்பதை அகத்தே முழுதுணர்ந்ததின் உண்மை வெளிப்பாடாகவே அன்றைய உங்களது ஒவ்வொரு சொல்லும் அமைந்திருந்தது.

எத்தனை கசக்கப் பட்டாலும் மணம் மட்டுமே அளிப்பது மலரின் குணம். எந்நிலையிலும் பிறருக்கென கசிந்து உருகி கனிந்திறங்குவது ஞானியின் மனம். மலரென இலகுவாய் இருந்த வண்ணம் நண்பர்களின் கேள்விகளுக்கு கனிவோடு நீங்கள் பதிலளித்துக் கொண்டிருப்பதைக் கண்ணுற்ற பொழுது எனக்கு வெண்முரசுக்குப் பிறகு இவர் எத்தனை மலர்ந்தும் கனிந்தும் இருக்கிறார் என தோன்றியது.

இன்று சிங்கப்பூர் எழுத்தாளர் முகமது ரியாஸ் எழுதிய “அத்தர்” ( https://vallinam.com.my/version2/?p=7650 ) சிறு கதையை வல்லினம் இதழில் வாசித்த பொழுது, குரு பூர்ணிமா அன்று உங்களை நேரலையில் கண்டு எனக்கு சிந்தையில் உதித்த மலரோடு கூடிய ஒப்புமை சட்டென்று சிந்தையில் மின்னல் அடித்துச் சென்றது.

இந்தக் கதையை முகமது ரியாஸ் வெகு அழகாக எழுதி இருக்கிறார். இஸ்லாமிய பின்புலம், சூஃபி மர்மம், தொன்மம், ஞானம், தத்துவம், வரலாறு மற்றும் மொழி என அனைத்தையும் இணைத்து அத்தர் என மணக்கும் சிறுகதையை வாசத்தோடு கவித்துவமான மொழியில் வடித்துக் கொடுத்திருக்கிறார். சூஃபி ஞானம் என சுகந்தம் வீசி உன்னத வாசிப்பு இன்பத்தோடு ஒரு உயர் தத்துவ தரிசனத்தையும் சட்டென்று ஒளிக்கீற்றாய் அளித்துச் செல்கிறது இந்தக் கதை.

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் நாவலின் தாக்கம் சற்றே இருந்தாலும்கூட இந்த சிறுகதை தனது மொழியாலும் அது காட்டுகின்ற தத்துவ தரிசனத்தாலும் தனித்து நிற்கிறது.

ஆண்டுக்கணக்காக குளிக்காமல் இருந்த பொழுதும் அவர்களின் உடல் அற்புதமான மணம் வீசிக்கொண்டிருந்த எத்தனையோ துறவிகளின் அருகாமை வாசம் எனக்கு பல பொழுதுகளில் கிட்டியிருக்கிறது. ஞானியின் மனத்தை போல அவர் உடல் வீசுகின்ற சுகந்தமும் நம்மால் எண்ணி வகுத்துவிட முடியாததுதான். ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி இருக்கின்ற பொழுதுகளில் என்னவென்று பிரித்தறிய முடியாத எத்தனையோ இனிய நறுமணங்கள் அனுபவம் ஆனதுண்டு. ஆன்ம சாதனைகளுக்கும் தெய்வீக மணங்களுக்கும் நேரடி தொடர்பு காலம் காலமாக பல கீழை மரபுகளில் முன்வைக்கப் பட்டிருக்கிறது. நிமித்தங்கள் என அவை அழைக்கப்படுகின்றன. இந்தக் கதை மற்றும் இதில் அளிக்கப்பட்டு இருக்கின்ற தகவல்கள் பலருக்கு பல புதியத் திறப்பு களை அளிக்கக்கூடும்.

ஒரு சில கதைகளையே எழுதி இருந்த பொழுதும் இந்தக்கதையில் ஒரு தனித்துவமான நடை சிங்கப்பூர் முகமது ரியாஸ் அவர்களுக்கு கைகூடி வந்திருக்கிறது.

உதாரணத்துக்கு ஒரு சில

கதவைத் திறந்ததும் வெளிச்சம் உள்ளே புக, தூசுகள் ஒளியில் விண்ணேற்றம் சென்றன.

தோல்வி வலியது. நீரில் நிற்கும் எண்ணெய்க் குமிழ் போல் சமூகத்தில் இருந்து அது விலகி நிற்க வைக்கிறது.

அத்தர்காரனுக்கு சூத்திரம் மட்டுமல்ல – அவன் கைகளுக்கு எதை கலந்தால் மனிதர்களை வாசனையால் பரவசப்படுத்த முடியும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் லட்சணம் தொழில் அல்ல ஞானம் . 

உன்னத லட்சியங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும் லட்சியங்களால் ஞானிகள் வாழ்கிறார்கள்.

சேத்துக்குள்ள போறவனோடு கைய புடிச்சிப்போனா நாமளும் சேத்துக்குள்ள போகணும்

அம்மா காயவைத்த பால் சட்டி பொங்கி வழியும் வாசனை கருகலாக வந்துகொண்டிருந்தது

ஒய்யார பெண்களின் கழுத்துப்போல நீண்ட குப்பிகள், காதலிகளை கவரும் வகையில் அதை அடைக்கும் சுருக்குப்பைகள்

உள்ளங்கை விரிய குழந்தையின் வாய் திறப்பதுபோல் குவிக்கும் உதடுகள் கொண்ட குப்பிகளில் ஊத்திக் கொடுத்துக்கொண்டிருந்தேன்.

பூக்கள்தான் ஞானம்- அதனை எத்தனை முறை கசக்கினாலும் கசக்கிய கரங்களுக்கு வாசனையைத் தவிர வோறொன்றும் தராது. 

எல்லோருக்குள்ளயும் பூ இருக்குதானே..

உள்ளம் உருகி எல்லாம் வல்ல பேரறிவிடம் வேண்டி நின்றால் எந்தத் துயருக்கு தான் தீர்வும் வழியும் கிடைக்காமல் போய்விடும்?. நேர்மறை உணர்வோடும், ஒரு உன்னத தத்துவ தரிசனம் காட்டியும், உணர்வெழுச்சி அளிக்கும் கதை இது.

பொதுவாக சராசரி வாசகர்களால் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத பல தகவல்களும் பேசு பொருட்களும் இருந்தபோதும், வாசம் வாசனை என பல சொற்றொடர்கள் திரும்பத் திரும்ப வந்த போதும், இந்தக்கதை அதன் கவித்துவ மொழியின் அழகியலால், கச்சிதமான வடிவத்தால், உள்ளுறை ஆன்மீக தரிசனத்தால் தனித்து சிறந்து நிற்கிறது.

இஸ்லாமிய பின்புலத்தில் எழுத வருபவர்கள் மிகக்குறைவாகவே இருக்கின்ற தமிழ் இலக்கியத்தில் முகமது ரியாஸ் இஸ்லாம் மற்றும் சூஃபி மறை மொழியில் எழுதத் தொடங்கியிருப்பது மிக்க மகிழ்வளிக்கிறது.

என்னைக் கவர்ந்த இந்த கதையை எனக்கு மிகவும் பிடித்த இலக்கிய ஆளுமையான தங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

திருவண்ணாமலை

முந்தைய கட்டுரைமொழிக்கு அப்பால்…
அடுத்த கட்டுரைகாந்தி, இரு ஐயங்கள்