புத்தரின் துறவு

கீதை, அம்பேத்கர்

மரியாதைக்குரிய ஆசிரியர் ஜெயமோகன்  அவர்களுக்கு வணக்கம்.

கீதை பற்றிய அம்பேத்கர் கருத்து குறித்த எனது கடிதத்திற்கு தங்கள் விரிவான பதில் கண்டு மகிழ்ச்சி.கீதை, அம்பேத்கர்நன்றிகள் பல.

தமிழில் காளிபிரசாத் அவர்கள் மொழி பெயர்த்த விலாஸ் சாரங்கின் “தம்மம் தந்தவன்” படித்தேன். அதில் இருந்தும் அம்பேத்கர் அவர்களின் தம்மபதம் நூலில் இருந்தும் மாறுபடும் சில இடங்கள் பற்றிய ஒரு சிறு கட்டுரை எழுதி உள்ளேன். ( https://manianviews.blogspot.com/2021/05/blog-post_9.html )

மேலும் காங்கிரசின் ஜெயராம் ரமேஷ் அவர்கள் அண்மையில் எழுதிய ‘The light of Asia the poem that defined’ நூலின் தமிழ் இந்து  விமர்சனத்தில் வரலாற்று ஆசிரியர் கோசாம்பி அவர்கள் இளவரசர் சித்தார்த்தனின் துறவுக்கு காலம் காலமாக கூறப்படும் காரணங்களை கோசாம்பி மறுப்பதாக குறிப்பிடப் பட்டு உள்ளது. https://www.hindutamil.in/news/literature/681010-the-light-of-asia-3.html)

உங்களின் தம்மபதம் பற்றிய கட்டுரைகளை மீண்டும் ஒரு முறை படித்தேன்.அம்பேத்கர் அவர்களை மற்றொரு போதி சத்வர் நிலைக்கு உயர்த்தும் அக் கட்டுரைகளில் புத்தர் துறவு பற்றிய அவரின் முற்றிலும் வித்தியாசமான பார்வை பற்றி குறிப்பிடப் பட வில்லை. இது பற்றிய உங்களின் பார்வையை அறிய விரும்புகிறேன்.

நன்றிகளுடன்

சுப்ரமணியம்

கும்பகோணம்.

***

அன்புள்ள சுப்ரமணியம் அவர்களுக்கு,

புத்தர் ஒரு வரலாற்று நாயகர், கூடவே ஒரு பெரும்புனைவு. கிருஷ்ணனும் அப்படித்தான்.

இந்தப்புனைவுகள் எவ்வண்ணம் நிகழ்கின்றன, எவ்வாறு வளர்கின்றன என்பதை வரலாற்றில் வைத்து புரிந்துகொள்ள முடியாது. தொன்மவியலில் வைத்தே புரிந்துகொள்ள முடியும். ஆகவே இது வரலாற்றுவிவாதமே அல்ல. புத்தரைப் பற்றி ஆதாரபூர்வமாக வரலாற்றுச் சித்திரம் எதையும் எவரும் முன்வைக்க முடியாது.

புத்தர் துறவுபூண்டமைக்கான காரணம் அவருடைய சாக்கிய குலத்திற்கும் கோலியா குலத்திற்குமான குடிப்பூசல்தான் என்பது டி.டி.கோசாம்பி [தந்தை]யால் முன்வைக்கப்பட்டு அப்போதே மார்க்சியர் சிலரால் விவாதிக்கப்பட்டு, மத- ஆன்மிக அறிஞர்களால் பெரிதாகப் போருட்படுத்தப்படாத ஒரு கருத்துதான். அது ஒரு தாவிச்சென்றடையும் மிகையூகம், அவ்வளவே.

அந்தக் கருத்து ஏன் வருகிறது என்றால் அன்று, நூறாண்டுகளுக்கு முன்பு, அனைத்தையும் ‘வரலாற்றுப் பகுத்தறிவுப்’ பார்வையுடன்  [Logical Positivism ] இணைத்தாகவேண்டும் என்னும் அறிவுத்தள கட்டாயம் இருந்தது. அதுவே தர்க்கபூர்வமான பார்வை என்னும் நம்பிக்கை அமெரிக்க கல்வித்துறையில் இருந்து உலகமெங்கும் பரவியிருந்தது.அம்பேத்கரிடம் ஆரம்பகாலச் சிந்தனையில் அது ஆழமாக திகழ்ந்தது.

இன்று மதநம்பிக்கைகளையும் தொன்மங்களையும் அவ்வாறு புறவயமாக தர்க்கப்படுத்திக்கொள்வதற்கு பெரிய இடமில்லை. அவ்வாறெல்லாம் சமூக, அரசியல், உளவியல் காரணங்கள் கண்டுபிடிப்பதெல்லாம் ஒருவகை கற்பனை மட்டுமே என்றும் அது  வெறும் புராணங்களை விடவும் பொருளற்றது என்றும் ஏனென்றால் அதனால் எந்தப் பயனும் இல்லை என்றும் கருதப்படுகிறது. ஒரு தொன்மம் எவ்வாறு உருவாகிறது, எவ்வாறு வளர்கிறது, எவ்வாறு காலந்தோறும் பொருள்கொள்ளப்படுகிறது என்பதே முக்கியம். அதையே ஆய்வாளர் கருத்தில்கொள்ளவேண்டும்.

நதிநீர் பிரச்சினைக்காக நாட்டைவிட்டு விலகிச்சென்றவர் என்றால் சித்தார்த்தர் ஏன் மெய்ஞானத்தேடல் கொள்ளவேண்டும்? ஏன் தத்துவ தரிசனத்தை அடையவேண்டும்? எதன்பொருட்டு அதை நிலைநாட்டவேண்டும்? எங்கே அவர் திரும்பினார்? அதற்கு வேறொரு காரணத்தை கண்டடையவேண்டும் அல்லவா? நதிநீர் பிரச்சினையில் இருந்து அவர் தப்பி ஓடினார், அவர் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்கிறார்களா? அல்லது அவர் மெய்ஞான தேடலே கொள்ளவில்லை, அதெல்லாம் அவர்மேல் ஏற்றப்படுகிறது என்று சொல்ல வருகிறார்களா? நதிநீர் பிரச்சினைக்காக நாடுகடத்தப்பட்டவர் புத்தரானார் என்னும் கதையில் நாம் இன்று அடையும் கொள்பொருள் என என்ன உள்ளது?

நாமறிந்தது புத்தர் என்னும் தொன்ம உருவகம். புத்தர் போன்ற ஒரு தொன்மம் எப்படி உருவாகிறது? முதலில் வரலாற்றுநாயகரான, மெய்ஞானியாகிய கௌதம சித்தார்த்தர் இருக்கிறார். அவருடைய தனிவாழ்க்கை பற்றிய செவிச்செய்திகள் உள்ளன. பின்னர் அவருடைய சொற்கள் வழியாக ஒரு மதம் திரண்டு உருவாகிறது. அச்சொற்களுக்கு உகந்த முறையில் அவருடைய தனியாளுமையை சிறிது சிறிதாக மாற்றியமைக்க ஆரம்பிக்கிறார்கள்.

உதாரணமாக புத்தர் ஓர் ஆழ்ந்த மெய்யியல் வரியைச் சொல்லியிருப்பார். அவர் அவ்வரியைச் சொன்ன சந்தர்ப்பம் பின்னர் புனைவாக உருவாக்கப்படும். அப்போதுதான் அந்த வரி அர்த்தமும் உணர்வும் கொண்டு நிலைகொள்ளும். அது மனித சிந்தனை செயல்படும் விதம்.

இவ்வாறு அவருடைய வாழ்க்கைவரலாறு பெருகிக்கொண்டே செல்கிறது. அவருடைய இளமைப்பருவ வாழ்க்கையே மெல்லமெல்ல மாற்றியமைக்கப்படுகிறது. அதில் தெய்வீகத்தன்மை ஏற்றப்படுகிறது. நாடகத்தருணங்கள் உருவாக்கப்படுகின்றன.  புத்தரின் பிறப்பு, துறவு பூணுதல்,மெய்ஞானம் அடைதல், மீண்டும் அன்னையையும் மனைவியையும் சந்தித்தல் போன்ற எல்லா தருணங்களிலும் இந்த புனிதமாக்கல், மாயத்தன்மைகூட்டல் நிகழ்ந்துள்ளது. அவை அப்பட்டமான உண்மைகள் என எந்த ஆய்வாளரும் சொல்லமாட்டார். அவை குறியீட்டுநிகழ்வுகள்.

காலப்போக்கில்  அந்த மெய்ஞானிக்குச் சிலைகள் உருவாகின்றன பிறஞானியரின் கதைகளின் சாயல்கள் அவர் மேல் படிகின்றன. முன்பிருந்த ஞானியர் கதைகளின் சற்றே வேறுபட்ட வடிவங்கள் அவருக்கும் அளிக்கப்படுகின்றன. வாய்மொழி வரலாறாகவே அது வளர்கிறது. புத்தரின் கதையில் சமண தீர்த்தங்காரர்களின் கதைகளின் சாயல்கள் உள்ளன.

பின்னர் அந்த மெய்ஞானி தெய்வ உருவமாகிறார். அவருடைய  சிலைகள் வழிபடுபொருட்களாகின்றன. அவை மேலும் மேலும் குறியீட்டு உட்பொருள் அடைந்தபடியே செல்கின்றன.அவருடைய வாழ்க்கைக்கதை முன்பிருந்த பல தொன்மங்களுடன் இணைக்கப்படுகிறது. அவருடைய உருவத்திற்கு குறியீட்டு இலக்கணங்கள் அமைகின்றன.

புத்தரின் பிறவிக்கதைகள் [ஜாதகக்கதைகள்] அவ்வாறுதான் உருவாயின. புத்தர்சிலைகளுக்கான கைமுத்திரைகள், நிற்றல் இருத்தல் கிடத்தல் என்னும் முறைமைகள் வகுக்கப்பட்டன.

இவ்வாறு ஒரு நிலத்தில் உருவான பின் அந்த தெய்வ உருவம் வேறுவேறு பண்பாடுகளுக்குச் செல்கிறது. செல்லுமிடத்தின் பண்பாட்டுக்கும் அங்குள்ள மானுட இனத்தன்மைக்கும் ஏற்ப அது மாற்றமடைகிறது. கீழைநாட்டு புத்தர் கீழைநாட்டு முகம் கொண்டிருக்கிறார். திபெத்திய புத்தர் பதினாறு கைகள் கொண்டிருக்கிறார். வஜ்ரயோகினியை புணர்ந்த நிலையில் இருக்கிறார். அப்படி புத்தரின் தோற்றமும் தத்துவமுமே பலநூறு மாற்றங்கள் கொண்டவையாக இருக்கின்றன.

ஆகவே நான் ‘மெய்யான வரலாறு’ எது என்ற விவாதத்திற்குள் செல்வதில்லை. அது பெரும்பாலும் பயனற்றது. ஆன்மிகரீதியாக புத்தர் என்னும் குறியீடே உதவியானது.

ஜெ

ஜெயமோகன் புத்தகங்கள் வாங்க

 

வடிவமைப்பு கீதா செந்தில்குமார்
முந்தைய கட்டுரைவேலிகள்- அருண்மொழி நங்கை
அடுத்த கட்டுரைமுதற்கனல் வாசிப்பு