சமீபத்தில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகரித்து விட்டதை பற்றி படித்தேன். எனக்கு தெரிந்த வரையில் எல்லோரும் வடமாநில தொழிலாளர்கள் பற்றி சற்று எதிர்மறையான முறையில் பேசி வருவதாக தெரிகிறது. ஆனால் நான் பார்த்த வரையில் அவர்களை போல் தமிழக இளைஞர்கள் உடல் உழைப்பை தர அலுப்பு படுவதாக தெரிகிறது.
வடமாநில இளைஞர்கள் ஒரு சிறிய அறையில். சப்பாத்தி செய்து சிக்கனம் பிடித்து பணத்தை தன் குடும்பத்திற்கு அனுப்புகின்றனர். அவர்களை குறைவான கூலிக்கு அமர்த்துவது நம்மவர்கள் தானே. நம் இளைஞர்கள் டாஸ்மாக்கில் தவம் கிடந்து குடும்பத்திற்கு பாரமாய் இருந்து விட்டு ஏதோ தாங்கள் உலகை ஆள்வது போல பேசுவது சரியா? உங்கள் கருத்தை அறிய விழைகிறேன்.
செல்வராஜ்
திசையெட்டும் தமிழ்
அன்புள்ள செல்வராஜ்,
விந்தையான ஓர் உரையாடலை சில நாட்களுக்கு முன் கேட்டேன். பேசியவர்களை எனக்குத் தெரியும் என்பதனால்தான் அது விந்தையானது. ஓர் இளைஞர் தமிழகத்திற்கு வரும் பிகாரி இளைஞர்களை வெறுத்தும் இழித்தும் பேசினார். வந்தொட்டிகள், காளான்கள் என்றார். அவர்களை தடுக்கவேண்டும், எதிர்த்தால் தாக்கவேண்டும் என்றார். அவருடன் இணைந்து இருவர் பேசினர். முதலில் பேசியவர் குமரிமாவட்டத்தில் இருந்து கேரளத்திற்குச் சென்று பத்தாண்டுக்காலம் வேலைபார்த்து பணமீட்டி வந்தவர். அவர் பேச்சைக் கேட்டிருந்தவர் சிங்கப்பூரில் வேலைசெய்பவர்.
அவர்களுக்கு அவர்கள் பேசிக் கொண்டிருப்பதிலுள்ள முரண்பாடு உறுத்தவே இல்லை. அவர்களுக்கு வாழ்வளித்தது அயல்மாநிலமும், அயல்நாடுகளும்தான். அதுவே அவர்களின் நிலத்தில் நிகழ்கையில் எதிர்க்கிறார்கள். தனக்கொரு நீதி பிறருக்கொரு நீதி என்பது ஒரு பண்படா மனநிலை என்பார்கள். அது அப்படியே வெளிப்படுகிறது இங்கே.
இன்று திராவிடப் பொருளியல் என்றெல்லாம் பேசுபவர்கள் வசதியாக மறந்துவிட்ட சில உண்டு. தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சியில் எழுபதுகள் முதல் தொண்ணூறுகள் வரையிலான இருபதாண்டுக்காலம் என்பது மிகப்பெரிய தேக்கநிலை. [உடனே புள்ளிவிபர உருட்டுகள் வந்துகொட்டும். அதற்குரிய ‘ஆய்வாளர்கள்’ இன்று திரண்டுவிட்டார்கள். இது கண்கூடாக நாம் அனைவரும் கண்ட யதார்த்தம். என் அறிதலையே நான் எப்போதும் சார்ந்திருக்கிறேன். கட்சிசார்பான பொருளியலாளர்கள் பொருளியலாளர்கள் அல்ல, புள்ளிவிபரத்தை பயன்படுத்தும் பிரச்சாரகர்கள் மட்டுமே.]
அந்த தேக்கநிலை ஏன் வந்தது? தமிழகம் சுதந்திரத்திற்கு முந்தைய சுதேசிக்கல்வி இயக்கத்திலேயே கல்வியில் முன்னேறத் தொடங்கிய மாநிலம். காமராஜரின் ஆட்சிக்காலத்தில் கல்வி புதுவிசை ஊட்டப்பட்டது. இன்றைய தமிழகத்தின் முக்கியமான தொழில்வட்டங்கள் அன்று உருவாக்கப்பட்டன. முதன்மையான அணைக்கட்டுக்கள் உருவாயின. கல்வி வளர்ச்சியும் பொருளியல் வளர்ச்சியும் உருவாயின.
ஆனால் அறுபது எழுபதுகளின் ‘லைசன்ஸ்ராஜ்’ தொழில்வளர்ச்சியை முடக்கியது. ஆரம்ப விசைக்குப்பின் பொதுத்துறை நிறுவனங்கள் தேங்கின. தனியார்த்துறை பல்வேறு சிவப்புநாடாச் செயல்பாடுகளால், போலி சோஷலிச நம்பிக்கைகளால் முடக்கப்பட்டது. இன்று கோவையின் மூத்த தொழிலதிபர்கள் சிலருடன் பேசும்போது அன்றிருந்த லைசன்ஸ்முறையில் ஒரு சாதாரண தொழிற்சாலையை தொடங்க பத்தாண்டுகள் வரை அனுமதிகள் பெறவே செலவிடவேண்டியிருக்கும் என்று கேட்டு திகைப்படைகிறேன்.
எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் தமிழகத்தில் வறட்சிகள் தொடர்ச்சியாக உருவாகி விவசாயம் நலிந்தது. அதற்கு ஏரிகள் தூர்வாராமல் விடப்பட்டது முதன்மைக் காரணம். மழை பொய்த்தது இன்னொரு காரணம். விளைவாக பல நூறாண்டுகளாக விவசாயத்தை நம்பியிருந்த பல்லாயிரம்பேர் வாழ்விழந்தனர். அவர்களை ஏற்றுக்கொள்ள இங்கே தொழில்கள் இருக்கவில்லை. ஆகவே கூட்டம் கூட்டமாக பஞ்சம் பிழைக்க இடம்பெயர்ந்தனர். கிட்டத்தட்ட பத்துலட்சம் பேர் கட்டிட வேலைக்காக கேரளம் சென்றனர். அதேயளவு தமிழர்கள் பெங்களூர் நகரில் மட்டுமே குடியேறினர். இருமடங்கு பேர் மும்பைக்குச் சென்றனர். எண்பதுகளில் தமிழகத்திலிருந்து செல்லும் ரயில்களில் இந்த பஞ்சம்பிழைக்கும் பெருங்கூட்டம் நிறைந்திருக்கும்.
அன்றைய இலக்கியப் படைப்புகளில் இந்த மாபெரும் பஞ்சம்பிழைத்தல் பதிவாகியிருக்கிறது. பூமணி, வண்ணநிலவன் முதல் கோணங்கி வரை பலர் எழுதியிருக்கிறார்கள். நானும் நிறைய எழுதியிருக்கிறேன். தண்ணீர் தண்ணீர் உட்பட பல படங்களில் இது ஆவணமாகியிருக்கிறது. இன்று இந்தியப் பெருநகர்களில் இவ்வண்ணம் குடியேறிய லட்சக்கணக்கான தமிழ்மக்கள் அங்கேயே தொழில்கள், வணிகம் என வேரூன்றியிருக்கின்றனர்.
தோராயமாக ஒருகோடிபேர் வரை தமிழகத்திற்கு வெளியே இவ்வாறு குடியேறிய தமிழ்மக்கள் இருக்கக்கூடும். செல்லுமிடமெல்லாம் அவர்களைப் பார்க்கிறோம். மும்பை, கல்கத்தா, டெல்லி நகர்களில் பெரும்பாலும் தெற்கத்திக்காரர்கள் இருப்பார்கள். பெங்களூரில் தர்மபுரி, திருப்பத்தூர்க்காரர்கள். அன்று ஹைதராபாத் தொழில்வளம் கொண்ட நகர் அல்ல. ஆகவே அங்கே குடியேற்றத் தமிழர்கள் குறைவு.
கல்வி வளர்ச்சி தொடங்கிவிட்டால் நிற்காது. காமராஜர் உருவாக்கிய தலைமுறையில் கற்றவர்களுக்கு அரசுவேலைகள் அமைந்தன. அடுத்த தலைமுறையில் கல்வி இருமடங்காகியது. படித்த இளைஞர்களின் பெருந்திரள் உருவாகியது. ஆனால் அரசுவேலைகள் மட்டுமே அவர்களுக்கு இருந்தன. தனியார்த்துறை என்பதே இல்லை. ஆகவே வேலைவாய்ப்புகள் இல்லை.
வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சம் அன்று நிகழ்ந்தது. அன்றைய கதைகள் அனைத்திலும் இது பதிவாகியிருக்கிறது. பாலகுமாரன், வண்ணதாசன், கலாபிரியா தலைமுறையின் முதன்மைப் பேசுபொருளே இதுதான். வறுமையின்நிறம் சிவப்பு, பாலைவனச்சோலை போன்ற ஏராளமான படங்கள் அதை சித்தரிக்கின்றன. வேலையில்லா திண்டாட்டம் என்பது நம் கலையிலக்கியத்தின் மிக முக்கியமான கருப்பொருளாக இருந்தது. அதன் உணர்ச்சிநிலைகள், வெறுமைகள், அரசியல் சிக்கல்கள், தத்துவக்கேள்விகள்.
எண்பதுகளின் இறுதிமுதல் படித்த இளைஞர்கள் சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளுக்குச் செல்லத் தொடங்கினர். அது நம் பொருளியலை மேம்படுத்தியது. பின்னர் உடலுழைப்புத் தொழிலாளர் வேற்றுநாடுகளுக்குச் சென்றனர். அந்தப் போக்கு தொண்ணூறுகளுக்கு மேல் மிகப்பெரிய விசையை அடைந்தது. நம் உழைக்கும் இளைஞர்களில் பாதிப்பங்கினர் புலம்பெயர்ந்து வேலைசெய்பவர்களே. இன்றும் அதுவே நிலைமை. தமிழகத்தின் மிகப்பெரிய வேலைவாய்ப்புச்சந்தை இருப்பது இந்தியாவுக்கு வெளியேதான்.
நம் கிராமப்புறப் பொருளியலில் உண்மையான மாற்றம் வரத் தொடங்கியதே அந்த ‘மணியார்டர்’ பணத்தால்தான். கிராமத்தில் சென்ற முப்பதாண்டுகளில் கட்டப்பட்ட வீடுகளை பாருங்கள், பெரும்பாலானவை புலம்பெயர்ந்து சென்று உழைத்து அனுப்பப்பட்ட பணத்தால்தான் கட்டப்பட்டிருக்கும். எந்த அரசு உதவியும் இல்லாமல் நம் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த ‘மணியார்டர் பொருளியலை’த்தான் தமிழகத்தின் அரசியல்வாதிகள் தங்கள் சாதனை என்று கணக்கில் சேர்க்கின்றனர்.
தொண்ணூறுகளில் தாராளப் பொருளியல் உருவாகியது. அது ராஜீவ் காந்தி காலத்தில் மெல்ல தொடங்கி நரசிம்மராவ்- மன்மோகன்சிங் கூட்டணியின் கொடையாக வந்தது. தமிழகத்தில் அதுவரை தேங்கி நின்றிருந்த பல தொழில்கள் புதுவிசை கொண்டன. நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், கோவை எல்லாம் தீவிரமான தொழில்வட்டங்களாயின. வேளாண்மையில் இருந்து வெளியேறிய உழைப்பாளிகளை அவை உள்ளிழுத்துக் கொண்டன. தமிழகம் அதன்பின்னரே இன்றைய பொருளியல் வெற்றியை நோக்கி வர ஆரம்பித்தது.
நாம் இன்று காணும் தமிழகம் முழுக்க முழுக்க தாராளமயமாக்கத்தின் வாய்ப்பும் அதை பற்றிக்கொண்டு மேலெழுந்த தமிழ்ச் சிறுதொழிலதிபர்களின் தீவிரமும் சேர்ந்து உருவாக்கிய ஒன்று. பொருளியல் வளர்ச்சி சேவைத்துறையை வளரச்செய்தது. சுற்றுலா, ஓட்டல் போன்ற தொழில்கள் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தன.
இயல்பாகவே இத்தகைய வளர்ச்சி உடலுழைப்புத் தொழிலாளர்களை குறைக்கிறது. உடலுழைப்பில் இருந்து வெளியேறி திறன்மிகு தொழில்களுக்கும், சேவைத்தொழில்களுக்கும் செல்கிறார்கள். அதுதான் வழக்கமான பாதை. அதன் விளைவாக உருவாகும் உழைப்பாளர் வெற்றிடத்தை நிரப்பவே வடக்கில் இருந்து உடலுழைப்புத் தொழிலாளர்கள் வருகிறார்கள்.
இங்கே நம் உடலுழைப்புத் தொழிலாளர்களில் ஒரு சிறுசாரார் குடிப்பழக்கம் போன்றவற்றால் உழைக்க முடியாமலிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அது சிறுவட்டம்தான். பெரும்பாலானவர்கள் உடலுழைப்புக்கு வராமலிருப்பது நடுத்தரவர்க்க வாழ்க்கையின் கொண்டாட்டங்கள் அமைந்துவிட்டிருப்பதனால்தான். பொருளியல் வளர்ச்சியின் விளைவே அதுதானே?
நாம் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் போனது அங்குள்ள மக்கள் நடுத்தர வாழ்க்கைக்குச் சென்றபோது அங்கே உருவான உழைப்பாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்காகத்தான். நம் மக்கள் நடுத்தர வாழ்க்கைக்குச் செல்லும்போது உருவாகும் வெற்றிடம் புலம்பெயர் உழைப்பாளிகளால் நிரப்பப்படுகிறது. அவர்கள்மேல் நாம் நின்றிருக்கிறோம்.
புலம்பெயர்ந்த உடலுழைப்பாளர்கள் எவராயினும் கடுமையாக உழைப்பார்கள். சேர்த்துவைப்பார்கள், அச்சேமிப்பைக் கொண்டு செல்வார்கள், அதன் வழியாக தங்கள் ஊர்களை வளப்படுத்துவார்கள். சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றபோது அவை புலம்பெயர்ந்த உழைப்பாளர்களின் பணத்தால் மீண்டெழுந்து கொண்டிருப்பதை கண்கூடாகவே காணமுடிந்தது. தமிழர்களும் சிங்கப்பூரிலும் வளைகுடா நாடுகளிலும் அப்படித்தான் உழைத்தார்கள், இன்றும் உழைக்கிறார்கள்.
இன்று தமிழகத்தில் கட்டுமானத்துறை உள்ளிட்ட பலதுறைகள் வடஇந்தியத் தொழிலாளர் இல்லாமல் நடக்கவே முடியாது. இன்னும் சில ஆண்டுகளில் வேளாண் தொழிலாளர்களாகவே அவர்கள் வரவேண்டியிருக்கும். நம் வேளாண்மை மேலும் மேலும் இயந்திரமயமாகும். நம் கட்டுமானத்துறை அச்சுக் கட்டிடங்கள் வழியாக உடலுழைப்பை தவிர்க்கும். அது நிகழ்வது வரை அவர்கள் வந்தாகவேண்டும். அதன்பின்னரும் அவர்கள் வேறுதுறைகளுக்கு தேவைப்படலாம்.
இன்று அவர்கள் இங்குள்ள எந்த தொழிலாளர்களின் வேலையையும் எடுத்துக்கொள்ளவில்லை. தொழிலாளர் பற்றாக்குறையையே தீர்க்கிறார்கள். இது அனுபவபூர்வ உண்மை. அப்படியும் ஏன் அவர்களை எதிர்க்கிறார்கள்? அவர்கள்மேல் இயல்பாக உருவாகும் இனக்காழ்ப்பு. சாதாரணமாகவே தமிழர்களும் மலையாளிகளும் சாதிவெறியர்கள். இனவெறியர்களும்கூட. அதை நாம் முற்போக்கு முகமூடி போட்டு வெளிக்காட்ட கற்றிருக்கிறோம். படித்தவர்கள், முற்போக்குப் பாவனை செய்பவர்கள்கூட வடக்கர்களை பீடாவாயன்கள் என்றெல்லாம் பொதுவெளியில் கூச்சமில்லாமல் பேசும் சூழல் நம்முடையது.
இன்னொன்று, அவர்கள் வராவிட்டால் இங்குள்ள தொழிலாளர்களின் பேரம்பேசும் திறன் பெருகும், இன்னும் அதிக ஊதியம்பெறலாம் என்னும் எதிர்பார்ப்பு. அது நிகழப்போவதில்லை. ஒரு தொழில் அதற்கென ஒரு சரிவிகிதத்தை வைத்திருக்கும். அதற்குமேல் ஊதியமோ பொருட்செலவோ செல்ல முடியாது. அதற்குச் சந்தையின் சமநிலை அனுமதிக்காது.
உதாரணமாக கட்டுமானத்துறை. அதில் உழைப்புக்கான ஊதியம் இன்று மூன்றில் ஒரு பங்கு. அதற்குமேல் அது செல்லுமென்றால் கட்டிடத்தின் விலை அதிகரிக்கிறது. அதற்கு சந்தை அனுமதிக்காது. அந்த இடத்தில் இயந்திரங்கள் வந்துவிடும். இப்போதே முன்னரே அச்சிட்டு அடுக்கி கட்டும் இயந்திரமய கட்டுமானத் தொழில்நுட்பம் வந்து காத்திருக்கிறது. வட இந்தியத் தொழிலாளர்களால்தான் அது காக்க வைக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியத் தொழிலாளர் வராவிட்டால் உள்ளூர் தொழிலாளர்களுக்கு கூலி அதிகரிக்காது, அவ்விடத்தில் அச்சுக்கட்டிடத் தொழில்நுட்பம் வரும். இன்னும் பத்தாண்டுகளுக்குள் அது பரவலாகும் என நான் நினைக்கிறேன். அதை கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறேன்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான கசப்புகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ளன. சிங்கப்பூர் பூர்வகுடித் தமிழர்கள் மிகமிகக் கசப்புடன் குடியேற்றத் தமிழர்கள் பற்றிப் பேசுவதை கண்டிருக்கிறேன். மலேசியாவிலும் அக்கசப்பு ஆழமாக உள்ளது. சிங்கப்பூரில் என்னையே ஒரு டாக்ஸி டிரைவர் நான் இந்தியாவில் இருந்து வந்த தொழிலாளர் என நினைத்து இழிவாகப் பேசிய அனுபவமும் உள்ளது. வளைகுடா நாடுகளில் நம்மவர்கள் மேல் கடுமையான ஒவ்வாமையே உள்ளது. அங்கும் விமானநிலையத்தில் ஒரு கசப்பான அனுபவம் எனக்கு உண்டு. அங்கே சிறு சிக்கல் என்றாலும் ஊருக்குத் துரத்திவிடுகிறார்கள்.
புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களை சுரண்டிச்செல்பவர்கள் என பழிக்கும் மனநிலை உலகளாவியது. ஆனால் பொருளியலாளர்கள் சொல்வதன்படிப் பார்த்தால் புலம்பெயர் உழைப்பு என்பது புலம்பெயர்பவர்களின் ஊர்களுக்கு நிகராகவே புலம்பெயர்ந்தவர்கள் சென்று உழைக்கும் நாடுகளுக்கும் செல்வம் சேர்ப்பது. அமெரிக்காவின் வளம் என்பதே புலம்பெயர்ந்தவர்களின் உழைப்பால் உருவானது என்று சொல்லும் ஆய்வுகள் பலவற்றை வாசித்திருக்கிறேன்.
கண்கூடான உதாரணம் கேரளா. எண்பதுகளில் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான கட்டுமானத்துறை ஊழியர்கள் கேரளத்திற்கு வந்தமையால்தான் கேரளா வளம் பெற்றது. கட்டுமானத் தொழில் என்பது கேரளத்திற்கு வந்த வளைகுடாப் பணத்தையும், அங்கே உருவான ரப்பர்ப்பணத்தையும் முதலீடாக ஆக்க, சமூகநிதியாக வளர்க்க பெருமளவில் உதவியது. அடித்தளத்தில் அந்த தமிழகத்து உழைப்பாளர் இருந்தமையால்தான் கேரளத்தில் கணிசமானவர்கள் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு சென்றனர். கேரளப் பொருளியலாளரான டி.எம்.தாமஸ் ஐசக் அதைப்பற்றி எழுதியிருக்கிறார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் வந்த தொடக்க காலத்தில் கேரள தொழிலாளர்களின் அமைப்புக்கள் கடுமையாக எதிர்த்துப் போராடியிருக்கின்றன. ஆனால் நல்லவேளையாக கம்யூனிஸ்டுக் கட்சியில் தாமஸ் ஐசக் போன்ற அறிஞர்கள் இருந்தனர். இ.எம்.எஸ்ஸும் நாயனாரும் இருந்தனர். இன்று சில மாநிலங்கள் புலம்பெயர்ந்த உழைப்பாளர்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று சொல்கின்றன. அவை பொருளியல் அறியா இனவாதிகளின் கூச்சல்களுக்கு செவிசாய்க்க ஆரம்பித்துள்ளன. அவை மிகப்பெரிய பொருளியல் தேக்கநிலையைச் சென்றடையும்.
இருபதாண்டுகளுக்கு முன்பு கேரள கார்ட்டூனிஸ்டான பாஸ்கரன் என்பவர் இடம்பெயர்ந்து வந்த தமிழ் உழைப்பாளர்களை கேலி செய்து பாஷாபோஷிணி இதழில் ஒரு கார்ட்டூன் வரைந்தார். கேரளச்சித்திரங்கள் என்னும் ஓவியத்தொடரின் பகுதியாக. அந்த தமிழ் உழைப்பாளர்கள் நாகரீகமற்ற விலங்குகள் போன்றவர்கள் என்னும் பொருளில்.
அதற்கு நான் மிகக்கடுமையாக எதிர்வினை ஆற்றினேன். அரேபியாவில் மலையாளிகளும் அப்படித்தான் கருதப்படுகிறார்கள் என்று. பாஸ்கரனையும் தனிப்பட்ட முறையில் தாக்கியிருந்தேன். அதற்காக அவர் தன் எதிர்ப்பை தெரிவித்தபோதிலும் நான் வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டேன்.
பாஸ்கரனின் மனநிலை அன்றிருந்த அற்பர் பலருடைய உணர்ச்சிதான். அதே மனநிலையை இன்று இங்கே காண்கிறேன். அதற்கு பலவகையான மேற்பூச்சுகள் இருந்தாலும் அப்பட்டமான அறியாமையும் வெறியும்தான் அது.
புலம்பெயர் உழைப்பு என்பது இன்றைய உலகின் தவிர்க்கமுடியாத ஒரு பெருநிகழ்வு. காலனியாதிக்கக் காலகட்டத்தில் அது கிட்டத்தட்ட அடிமைமுறையாக தொடங்கியது. ஆனால் பலநாடுகளை அது பஞ்சங்களிலிருந்து காப்பாற்றியது. அரசியல் காரணங்களுக்காக பொருளியல் அழிவைச் சந்திக்கும் நாடுகள் மீண்டெழ ஒரே வழி என்பது உழைப்பாளர் புலம்பெயர்தல்தான்.
நம் கண்முன் உள்ள இரு சிறந்த உதாரணங்கள் இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும். சுகர்ணோ சுகர்த்தோ மோதலால் வீழ்ச்சியடைந்த இந்தோனேசியா முழுக்க முழுக்க புலம்பெயர் உழைப்பாளர்களால்தான் மீண்டது. மார்கோஸின் சர்வாதிகார ஆட்சியின் பேரழிவிலிருந்து பிலிப்பைன்ஸ் எழுந்தது புலம்பெயர் உழைப்பால்தான். இன்று பிலிப்பைன்ஸின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்று புலம்பெயர்ந்த உழைப்பாளருக்கு வழங்கப்படுகிறது. பிலிப்பைன்ஸின் புலம்பெயர் பொருளியல்.
இங்கே ஒன்றைக் குறிப்பிடவேண்டும். பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் புலம்பெயர் உழைப்பு அத்தனை முதன்மை பெற்றமைக்குக் காரணம் ஆங்கிலம். அங்குள்ள சாமானிய மக்கள்கூட ஓரளவு ஆங்கிலம் பேச, புரிந்துகொள்ள முடியும். ஓரிரு வாரங்களில் அவர்கள் ஆங்கிலக் கல்வியை அடைய முடியும். இந்தோனேசியாவின் கிராமப்பக்கங்களில் பயணம் செய்கையில் அதைக் கண்டேன். காரணம் அந்நாடுகளில் நடந்த மொழிச்சீர்திருத்த நடவடிக்கைகள்.
இந்தோனேசிய மொழிகள் அரபி, சீன எழுத்துக்களில் எழுதப்பட்டுவந்தன. அவ்விரு எழுத்துக்களும் மிகச்சிக்கலானவை. அவற்றை ஆங்கில [ரோமன்] எழுத்துருவுக்கு மாற்றி தரப்படுத்தினர். அது கல்வியை எளிதாக்கியது. கூடவே ஆங்கிலத்தையும் பரவலாக்கியது. பிலிப்பினோ மொழிகளையும் தரப்படுத்தி ரோமன் எழுத்துருவுக்கு மாற்றினர். ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களுக்கு மேலதிகமாக இரண்டு ஸ்பானிஷ் எழுத்துக்களும் கொண்டது பிலிப்பினோ மொழி. ஆகவே பிலிப்பைன்ஸில் அடிப்படை கல்வி பெற்ற ஒருவர் ஓரளவு ஆங்கிலம் வாசிக்கமுடியும். இரண்டுவாரத்தில் ஆங்கிலம் எழுதவும் பேசவும் கற்கமுடியும்.
இந்தியாவிலேயே புலம்பெயர் உழைப்பாளர்களில் நாகாலாந்து போன்று ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தும் மொழிச்சூழலில் இருந்து வந்த இளைஞர்கள் அடிப்படை ஆங்கில உரைத்திறன் காரணமாக நட்சத்திர விடுதிகளில் பணியாற்றும்போது, மணிப்பூர் போன்ற ஆங்கிலமறியா வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கடும் உடலுழைப்பு வேலைகளுக்குச் செல்லவேண்டியிருப்பதைக் காணலாம்.
தமிழகத்தின் புலம்பெயர் உழைப்பு என்பது நமக்கு அடிப்படை ஆங்கிலப் பயிற்சி பள்ளிகளில் கிடைப்பதனால்தான் நிகழ்கிறது. நாம் வெளிநாடு செல்கிறோம். வடக்கே பிகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் ஆங்கிலக்கல்வி அறவே இல்லை என்பதனால் அவர்கள் இங்கே வருகிறார்கள்.
இன்றைய தமிழகத்தின் பொருளியலின் அடித்தளமே இங்கிருந்து புலம்பெயர்ந்த உழைப்பாளிகள்தான். அந்த பொருளியல் செயலூக்கத்துடன் இருப்பது இங்கே வரும் புலம்பெயர்ந்த உழைப்பாளிகளால்தான். பொருளியல் செயல்பாட்டின் மூச்சோட்டம் போன்றது இது.
ஜெ