துளிக்கும்போதே அது துயர்

போகன் தனிவாழ்க்கையில் உடல்நலச்சிக்கல்கள் வேலைப்பளு உளச்சோர்வு கொண்ட மனிதர். அவற்றை நிகர்செய்ய ஒரு சிரிப்பை தக்கவைத்திருப்பவர். கவிதைகளில்  பெரும்பாலும் அந்தச் சிரிப்பு மட்டுமே வெளிப்படுகிறது, பகடியாக. அவருடைய கவிதைகளில் பகடி இயல்பாக குவிந்து ஒரு sublime ஐ தொட்டுவிடும் கவிதைகளை மட்டுமே நான் பரிந்துரைக்கிறேன்.

சமீபத்தில் என் கவனத்திற்கு வந்த அவருடைய இரு கவிதைகளிலும் அந்த இயல்பான நகை இல்லை. உயர்தருணமும் இல்லை. ஆனால் நேரடியான வலி இருக்கிறது. கவிதையை அது கூரிய பொருள் போல ஆக்கிவிடுகிறது. தொடமுடியாத இடத்தில் இருந்தாலும்கூட எங்கோ எவரையோ கீறிவிடுமென எண்ணச்செய்கிறது

தெருநாய்களின் உடல்மொழியை கவனித்திருக்கிறேன். உலகமே தங்களுக்கு எதிராக வஞ்சம் கொண்டிருப்பதாக அவை எண்ணுகின்றன. எவர் அணுகினாலும் சட்டென்று ஒரு முழுப்பணிவை உடலில் காட்டுகின்றன. கெஞ்சல், மெல்லிய உறுமல், விழிதாழ்த்தி வால் ஒடுக்குதல். எத்தனை துன்புற்றிருக்கவேண்டும் என எண்ணிக்கொள்வேன். எத்தனை கொடியது முழு உலகமும் எதிரியாவது என்று தோன்றும்.

அவளுக்கு
ஏதோ ஒரு சந்தோஷம்
என்னைக் கேலி செய்கிறவர்கள்
எல்லோருடனும் சேர்ந்துகொள்கிறாள்.
ஒவ்வொரு முறை
அதை அவள் செய்கிறபோதும்
உன்னை நான் எவ்வளவு நேசித்தேன்
என்று சொல்லிக் காட்டுகிறாள்
என்று தோன்றும்.

யாருக்கோ கொடுத்திருக்க வேண்டியது
உனக்கு கொடுத்தேன்
என்ற வெறுப்பின் இளிப்பு
என்றும் தோன்றும்.

அல்லது
இருக்கும்போது நீடித்த
அந்த நேசத்தின் மதுரத்தை
இந்த கசப்புகளின் மூலம்
கரைக்கப் பார்க்கிறாளோ?
அதற்கு எவ்வளவு கசப்பு தேவைப்படுகிறதோ

அவ்வளவுக்கு
அவள் என்னை நேசித்தாள்
என்றிருக்கட்டும்
என்றும் நினைத்துக் கொள்கிறேன்.

இனி என்ன செய்வது?
ஓடம்
நதியைக் கிழித்துச்
சென்ற பாதையை
நதி மீண்டும் மூடிவிட்டது.

சம்பந்தமில்லாத வரிகள் இறுதிப்படிமத்தில் இணையும் இக்கவிதை பலமுறை ஒடிந்து கட்டுபோட்டு குணமாகி இணைந்த எலும்பு போலிருக்கிறது என போகனுக்கு எழுதினேன். இந்த மொழி, கொடும் அநீதி இழைக்கப்பட்டவன் அளிக்கும் வாக்குமூலம்போல சொல் சொல்லாகச் சொட்டும் தயங்கிய நடை இதை முக்கியமான கவிதையாக ஆக்குகிறது.

இந்த வீட்டில்
என் படுக்கையறையின்
வசதியான மூலையை அறிய
எனக்கு
இரண்டு வருடங்கள் தேவைப்பட்டன.
எந்த வீட்டிலும்
நான் அப்படித்தான்.
நான்
என் உலகத்தை
மிக மெதுவாகவே சுற்றிப்பார்க்கிறேன்.
உன் உலகம் மிக வேகமாக சுழல்கிறது.
என் பக்கம் சுழலும்போது
அதன் பாலைவனங்களின் பருவம்
வந்துவிடுகிறது.

இத்தகைய கவிதைகளுக்குப் படிமங்கள் தேவையில்லை. அணிகளும் தேவையில்லை. வெறும் அறிக்கையிடல்களாக அமைந்தாலே போதும். எந்த அளவுக்கு குறைவாக, உணர்ச்சியின்றி சொல்கிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக குறிப்புணர்த்தி கவிதைகளாகிவிடுகின்றன. “எல்லா பெருமூச்சுகளிலும் கொஞ்சம் கவிதையின் பூச்சு உண்டு” ஆற்றூர் பேச்சுநடுவே சொன்ன ஒரு வரி.

மூன்று விதமான பெண்கள்
என் வாழ்வில் வந்துகொண்டே இருந்தார்கள்.
ராஜசத்தின் பெண்கள்
என்னை
ஒரு நகையாகவோ
பத்திரமாகவோ ஆக்கி
ஒரு பெட்டியில்
என்னைப் பூட்டி வைத்தார்கள்
அதிலிருந்து தப்பித்துப் போக
நான் முயலும்போது மட்டுமே
அவர்கள் என்னை நினைவு கூர்ந்து
சில மிட்டாய்களை எனக்கு அளிப்பார்கள்.
அவர்களது உடல்கள் அவற்றில் ஒன்று
அவர்களது
உடமையுணர்வின்
விஷம் தடவிய மிட்டாய்களுக்கு
நான் மயங்காவிட்டால்
கடும் தண்டனைகளை
அவர்கள் எனக்கு அளிப்பார்கள்.
தாமசத்தின் பெண்களுக்கு
எப்போதும் ஏதோ ஒரு நோய் இருந்தது.
ஆற்ற முடியாத ரணம் இருந்தது.
அவர்கள் தங்கள் புண்களை நக்கிக் கொண்டே இருந்தார்கள்.
அவர்கள் என்னை ஒரு மருந்து போல் பாவித்தார்கள்.
அல்லது போதை மருந்து.
நான் அவர்களுக்கு செவிலியாய் இருந்து களைத்துப் போனேன்.
அப்போதெல்லாம்
என் கருணையின்மையை அவர்கள் சுட்டிக்காட்டத் தவறுவதேயில்லை.
இவர்கள் முன்னவர் தரும் கசந்த மிட்டாய்களைக் கூடத் தருவதில்லை.
அவர்கள் தங்களுக்கே கூட
அந்த
மிட்டாய்களைத் தந்துகொள்வதில்லை.
மிக அரிதாக
என் வாழ்வில்
சத்துவத்தின் நிதானம் கொண்ட பெண்கள்
வந்ததுண்டு.
அவர்கள் போய்விட்ட பிறகுவரை
நான் அவர்களைக் கவனித்ததில்லை.
அவர்களது பதில் வேண்டா
அன்பின் சொற்களை
வருடங்களுக்குப் பிறகே
என் குப்பைத் தொட்டியில்
நான் கண்டுபிடிக்கிறேன்.
மறைந்து போனபிறகு
ஒரு வானவில்லைப் பார்க்கப் போன
ஒரு முட்டாள்ச்
சிறுவன் போல் உணர்கிறேன்.

 

சுருள்வில் – போகன் சங்கர்.
தீபம்- போகன் சங்கர்
மழை இருகவிதைகள்:போகன் சங்கர்
தீர்வுகள் – போகன்
முந்தைய கட்டுரைலாலேட்டனோ இக்காவோ?
அடுத்த கட்டுரைநுரைக்குமிழி- சிறுகதை