இளந்தென்றலில்…

1976 ல் எனக்கு பதினைந்து வயதிருக்கும்போது நான் மலையாளம் எழுத்துகூட்டி படித்துக்கொண்டிருந்தேன். திருவட்டார் நூலகத்தில் ஒரு புத்தகம் கிடைத்தது, சட்டக்காரி. பம்மன் எழுதியது. சாதாரணமாக எடுத்து வாசிக்க ஆரம்பித்தவன் திடுக்கிட்டேன். அங்குமிங்கும் பார்த்துவிட்டு ஓட்டமாக ஓடி ஒரு மரவள்ளித் தோட்டத்தில் அமர்ந்து படித்து முடித்தேன். அது உணர்ச்சிகரமான ஒரு காதல் கதை. உணர்ச்சிகள் அக்காலக் கணக்குக்கு கொஞ்சம் அதிகம்.

ஃபோர்ட் கொச்சி பின்னணியில், ஆங்கில இந்தியர்களின் வாழ்க்கைச்சூழலில் எழுதப்பட்ட நாவல். முதிரா இளமையின் கட்டுப்பாடற்ற காமம், அதன் விளைவான கருவுறுதல், கைவிடப்படுதல், சாவு. நீண்ட நாட்களுக்குப்பின் 1988ல் மீண்டுமொருமுறை படித்தேன். யதார்த்தமான நாவல். பல இடங்கள் கலையழகு கொண்டவை. டி.எச்.லாரன்ஸின் நேரடிப்பாதிப்பு கொண்டது.

1974ல் சட்டக்காரி சினிமாவாக வந்தது. மோகன், லக்ஷ்மி நடித்தது. கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய அந்தப்படம் அன்று ஒரு புதிய அலை சினிமாவாகக் கொண்டாடப்பட்டது. லக்ஷ்மி சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது பெற்றார். அடூர் பாஸி சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். கதாசிரியர் பம்மன் மாநில அரசின் விருதையும் ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றார்.

நுணுக்கமான அண்மைக்காட்சிகள் வழியாக உணர்ச்சிக் கொந்தளிப்புகளை நம்பகமாக காட்டிய அந்தப்படம் மலையாளத்தில் சினிமாக்கலையை நிலைநிறுத்திய படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காமத்தை அது காட்டிய விதத்திற்காக இன்றும் புகழப்படுகிறது.

சட்டக்காரியின் காட்சியெழிலுக்குக் காரணமாக அமைந்தவர் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா. பெரும்பாலான காட்சிகளை அண்மைக் கோணத்தில் அமைத்திருந்தார். அது அன்று அவருடைய ஒரு பாணி. முக்கியமாக ஒப்பனை இல்லாத முகங்கள். டெலிஸூமில் எடுக்கப்படுவதனால் நடிகர்கள் சூழலை மறந்து காட்சியில் ஈடுபட, மிகையில்லாத உணர்ச்சிவெளிப்பாடுகள் அமைந்தன.

சட்டக்காரி இந்தியில் ஜூலி என்ற பேரில் எடுக்கப்பட்டது. அதன் வெவ்வேறு தழுவல்களும் மறுஆக்கங்களும் எல்லா இந்திய மொழிகளிலும் வெளிவந்துள்ளன. இந்திவடிவம் ராஜேஷ் ரோஷனின் இசைக்காக வெற்றிபெற்றாலும் எந்த வடிவமும் மலையாளத்தில் இருந்த யதார்த்தமான உணர்ச்சிவெளிப்பாட்டை அடையவில்லை. பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவின் நுட்பங்கள் சட்டக்காரிக்கு அளித்த அழகுகளும் நம்பகத்தன்மையும் அவற்றில் இருக்கவில்லை.

பம்மன்

1995ல் நான் கோவையில் அன்று என் அணுக்கநண்பராக இருந்த மலையாள மனோரமா நிருபர் சங்கரநாராயணனின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே அவருடைய பக்கத்து வீட்டில் பத்மநாபன் நாயர் என்பவர் தங்கியிருந்தார். அவருடைய மகள் வீடு அது. அங்கே விடுமுறைக்காக வந்திருந்தார். நான் எழுத்தாளன் என்று கண்டு என்னிடம் வந்து பேசினார். பேச்சினூடாக தானும் ஒரு எழுத்தாளர் என்றார். மலையாளத்தில் எழுதுவதாகச் சொன்னார்.

“பம்மன் என்று சொன்னால் தெரியும்” என்றார்.

நான் “சார்” என எழுந்துவிட்டேன். “நீங்கள் மலையாள டி.எச்.லாரன்ஸ்” என்றேன்.

பம்மன் நெகிழ்ந்துவிட்டார். “என்னை வெறும் பாலியல் எழுத்தாளராக முத்திரை குத்திவிட்டனர். நான் பம்மன் என்று சொல்லிக்கொள்வதில்லை” என்றார்.

பம்மன் மேற்கு ரயில்வேயில் ஜெனரல் மானேஜராக உயர்பதவியில் இருந்தவர். ஆங்கில இலக்கியத்தை ஆழ்ந்து படித்தவர். நான் கணித்ததுபோலவே அவருடைய பிரியத்திற்குரிய எழுத்தாளர் டி.எச்.லாரன்ஸ்தான்.

அன்று அந்நாவலின் பல உணர்ச்சிகரமான இடங்களைப் பற்றி அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். சசி ஜூலியை முதல்முறையாகப் புணரும்போது அவள் “பி கேர்ஃபுல் சசி, பி கேர்ஃபுல்” என்று புலம்பிக்கொண்டிருப்பாள். அவளுக்கே அவள் என்ன சொல்கிறாள் என்று தெரியாது. ஆனால் அது அவள் நாவில் விதி எழுந்த தருணம். அவன் அவளை கைவிட்டுவிட்டுச் சென்றுவிடுவான். அவன் மனதில் அவள் வெறும் ஒழுக்கமில்லா சட்டைக்காரி மட்டும்தான். [ஆனால் சினிமாவில் முடிவு மாற்றப்பட்டிருந்தது]

சட்டக்காரி போன்ற நாவல்கள் அவை வெளியாகும்போது ஒரு கோணத்தில் வாசிக்கப்படுகின்றன. பெரும்பாலும் கிளர்ச்சிக்காக, அதிர்ச்சிக்காக அவை பேசப்படுகின்றன. ஆனால் ஒரு தலைமுறைக்காலம் என்பது மிக நீண்டது. உணர்ச்சிகள் மாறிவிடுகின்றன. மதிப்பீடுகள் மாறிவிடுகின்றன. பின்னர் வாசிக்கையில் அவை முதலில் உருவாக்கிய எந்த கிளர்ச்சியும் அதிர்ச்சியும் ஏற்படுவதில்லை.

வெறுமே காம-வன்முறையின் கிளர்ச்சியை, அதிர்ச்சிமதிப்பீட்டை நம்பி எழுதப்படும் ஆக்கங்கள் மிக விரைவாகவே காலாவதியாகிவிடுகின்றன. அவற்றில் கலையம்சம் இருந்தால் அவை நீடிக்கின்றன. ஆனால் வேறுவகையில் வாசிக்கப்படுகின்றன. டி.எச்.லாரன்ஸின் லேடி சாட்டர்லியின் காதலனை ஒளித்துவைத்து வாசித்தவர்கள் உண்டு. இன்று அது ஒரு பாலியல்கிளர்ச்சி நாவலே அல்ல. இன்று அது பெண்ணின் சூட்சுமமான வஞ்சத்தை சித்தரித்தமையால்தான் இலக்கியமதிப்பு கொள்கிறது.

அப்படி நோக்கினால் சட்டக்காரி இன்று எவ்வாறு வாசிக்கப்படும்? முதன்மையாக அந்தக் காலகட்டத்தின் பாலியல் உளநிலையைச் சொல்லும் நாவல் அது. அன்று பாலியல் கடுமையாக கண்காணிக்கப்பட்டது, சிறையிட்டு தடுக்கப்பட்டது. ஆகவே மீறல்கள் வலுவுடன் இருந்தன. மீறலே பாலியலை மிகப்பெரிய விஷயமாக ஆக்கியது. இன்று அவ்வாறு இல்லை. இன்றைய வாசிப்பில் சட்டக்காரியின் ‘பிரச்சினைகள்’ நகைப்புக்கிடமானவை. ஆனால் இன்றும்கூட இளம் உள்ளங்களின் தவிப்பும் மீறலும் சுவாரசியமான இலக்கியப் பதிவுகளாகவே உள்ளன.

சினிமாவும் அந்த நாவலுக்கு பெருமளவுக்கு நியாயம் செய்திருக்கிறது என்று தோன்றுகிறது. இப்போது பார்க்கையில் பிராமணப் பையனுக்கு மோகன் சரியான தேர்வு. ஆனால் லக்ஷ்மி ஆங்கில இந்தியப் பெண்ணாக சரியாக அமையவில்லை. ஒரு நல்ல ஆங்கில இந்தியப்பெண்ணையே நடிக்க வைத்திருக்கலாம்.

சட்டைக்காரி படத்தின் அழகிய பாடல் இது. வயலார் ராமவர்மா எழுத தேவராஜன் மாஸ்டர் இசையமைக்க யேசுதாஸ் பாடியது

வயலார்

மந்த சமீரனில் ஒழுகி ஒழுகி எத்தும்
இந்ரசாபம் நீ
மந்தஸ்மிதங்கள் மாடி விளிக்கும்
இந்து கோபம் நீ
ஜனுவரிக்குளி சந்திரிக முகரும்
ஜலதரங்கம் நீ
சிலகள் தானே சில்பமாகும்
சௌகுமார்யம் நீ
ஸ்வப்ன சௌகுமாரியம் நீ
நிறயும் என்னில் நிறையும்
நின்றே நீஹாரார்த்ரமாம் அங்கராகம்
மதன நர்த்தன சாலையில் உணரும்
மிருது மிருதங்கம் நீ
பிரணய பிருங்கம் சுண்டில் முத்தும்
பானபாத்ரம் நீ
புஷ்ப பான பாத்ரம் நீ
அலியும் என்னில் அலியும்
நின்றே அன்யாதீனமாம் அபினிவேசம்

தேவராஜன்

இளந்தென்றலில் ஒழுகி ஒழுகி வரும்
இந்திரனின் அம்பு நீ
புன்னகைகள் தோன்றி அழைக்கும்
இந்திரகோபம் நீ.
ஜனவரி குளிர் சந்திரன் முகரும்
நீரலை நீ
கற்களெல்லாம் தானாக சிற்பங்களாகும்
பேரழகு நீ
கனவுப்பேரழகு நீ
நிறைகிறது என்னில் நிறைகிறது
உன் நனைந்து நெளியும் மேனியெழில்
மன்மதனின் நடனச்சாலையில் ஒலிக்கும்
மென்மையான மிருதங்கம் நீ
காதல்கொண்ட வண்டு உதடுகளால் முத்தமிடும்
மதுக்கிண்ணம் நீ
மலர் மதுக்கிண்ணம் நீ
கரைகிறது என்னில் கரைகிறது
வென்றடக்கப்பட்ட உனது பெருங்காமம்

****

  • இந்திரனின் அம்பு, மழைத்துளி

* இந்துகோபம் தம்பூலப்பூச்சி என தமிழில் சொல்லப்படுகிறது. இங்கே பெண்ணின் உதடுகளுக்கு உவமை.

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம், டொரன்டோ-கடிதம்