நிலவும் மழையும்-1

இவ்வாண்டு குருபூர்ணிமை அன்று வெண்முரசுநாளை நேர்ச்சந்திப்பாக நிகழ்த்தவேண்டுமென எண்ணியிருந்தேன். கோவிட் தொற்று அதற்கு உடன்படுமா என்னும் ஐயமிருந்தது. ஆனால் நல்லூழாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஜூலை 23 அன்று மிகக்குறைவாக, உள்ளூர் நண்பர்கள் மட்டும் கூடி இவ்வாண்டு சந்திப்பை நிகழ்த்தினோம்.

முழுநிலவு தெரியும்படி வெட்டவெளியில் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. ஆனால் மழைக்கார் வானை மூடியிருந்தது. பெருமழை வரக்கூடும் என்னும் வானிலை அறிவிப்பும் இருந்தது. குளிர்காற்று காலைமுதலே இருந்தது. மழையை எதிர்பார்த்து கொட்டகையும் போட்டிருந்தோம். ஆனால் மாலையில் வானம் தெளிந்தது. அந்தியிலேயே முழுநிலவு எழுந்தது.

நிலவில் அமர்ந்து உலகமெங்குமிருந்து சூமிலும் யூடியூபிலும் கூடியிருந்த நண்பர்களுடன் உரையாடினேன். வெண்முரசு முடிந்தபின் இது இரண்டாவது உரை. வெண்முரசு பற்றிய உரையாடல்கள் உலகின் பல மூலைகளில் இன்று நிகழ்கின்றன. வெண்முரசின் அடுத்த தலைமுறை வாசகர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். அவர்களின் குரல்களைக் கேட்டது நிறைவளித்தது

சந்திப்பு முடிந்ததும் அப்படியே ஒரு மழைப்பயணம் என கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். ஜூலை 24 அன்று மதியம் கிளம்பி  கர்நாடக எல்லையில் ஹசனூர் அருகே ஒரு வனவிடுதியில் தங்கினோம். மழை அங்கேயே தொடங்கிவிட்டது. நிறைந்து ஒளிகொண்டிருந்த ஏரிகள். எங்கும் சுடர்விட்ட பசுமையில் பூமியே ஒரு தளிரென தெரிந்தது. மாலையில் காட்டினூடாக ஒரு சுற்று காரில் உலவி வந்தோம்.

காடுகளில் எல்லாமே மூங்கில் பூத்து காய்த்து விதைபரப்பிவிட்டு காய்ந்து மட்கி நின்றிருந்தது. சென்ற ஆண்டே மூஙீகில் பூத்துவிட்டது. கோடையில் காய்ந்துவிட்டிருந்தது. காய்ந்த மூங்கில்பத்தைகள் மேல் இப்போது கொடிகள் எழுந்து முற்றாகப் போர்த்தி பசுமையென காட்டின.

மறுநாள் காலை திம்பம் சாலையில் காலையிலேயே ஒரு யானைஜோடியைப் பார்த்தோம். சாலையில் இயல்பாக நின்றுகொண்டிருந்தன. காரை நிறுத்திவிட்டு அப்பால் நின்று பார்த்துக்கொண்டிருந்தோம். எவரையும் பொருட்படுத்தவில்லை. முகத்தில் ஒரு சாந்தபாவம் இருந்தது.

வழக்கமாக மழைப்பயணம் கேரளத்தில் நிகழும். சென்ற ஆண்டு குடகு சென்றோம். இவ்வாண்டும் குடகு வழியாக தென்கனரா வரை. கர்நாடகம் சுற்றுலாவுக்கு உகந்ததாக இருப்பது இரண்டு காரணங்களால். ஒன்று, பசுமை. இன்னொன்று இன்னும் சிற்றூர்கள் அதிகம் மாறாமல் பண்பாட்டு அடையாளங்களுடன் இருக்கின்றன.

கர்நாடகத்திற்குள் நுழைந்துவிட்டோம். தக்காணபீடபூமிக்குரிய விரிந்த நிலச்சுற்று. சிறிய மரங்கள். வளைந்து சூழ்ந்த வானம். உருளைக்கற்கள் கொண்ட சிறிய குன்றுகள்.

ஹலேஆளூர் என்னும் கோயிலுக்குச் சென்றோம். அங்குள்ள அர்க்கேஸ்வரர் ஆலயம் கங்கர்களின் ஆரம்பகட்ட கலைக்கட்டுமானங்களில் ஒன்று. கிபி பத்தாம் நூற்றாண்டில் தக்கோலம் போரின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இரண்டாம் புத்துகனால் கட்டப்பட்டது. தக்கோலத்தில் ராஷ்ட்ரகூடர்கள் சோழர்களை வென்றனர்.கங்கர்கள் ராஷ்ட்ரகூடர்களுடன் இணைந்து போரிட்டனர்

பிற்கால ஹொய்ச்சால ஆலயங்களைப்போல நுட்பமான, சிக்கலான செதுக்குகள் கொண்டதல்ல இக்கோயில். ஆனால் அந்தக் கலைமரபின் தொடக்கத்தைக் காணமுடிகிறது. அலங்கரிக்கப்பட்ட வாசல்முகப்பும் தோரணச்செதுக்குகளும் கொண்டது.

ஆலயத்தைச் சுற்றி ஏராளமான சிற்பங்களை வெளியே இருந்து கொண்டுவைத்திருந்தனர். அவற்றில் பெரும்பாலானவை சப்தமாதாக்களின் சிலைகள். அகோரவீரபத்ரர், காலபைரவர் சிலைகளும் மகிஷாசுரமர்த்தனி சிலைகளும் இருந்தன

ஆனால் சிலைகளில் ஆர்வமூட்டியது சதிமாதாவுக்கான சிலை. ஒரு மடிக்கப்பட்ட கையில் எலுமிச்சை. கீழே கணவனும் மனைவியும் நின்றிருக்கும் காட்சி. புடைப்புச்சிலை. நடுகல்லாக நாட்டப்பட்டது. அப்பகுதியின் அக்காலகட்டப் பண்பாட்டுக்குரிய தனித்தன்மை கொண்ட சிலை அது.

அன்றே குடகுக்குள் நுழைந்தோம். மழை விட்டுவிட்டு தூறிக்கொண்டிருந்தது. குடகுக்குள் சென்றதும் நல்ல மழை பொழியத்தொடங்கியது. குடகில் ஒரு வீட்டுத்தங்கலுக்கு பதிவுசெய்திருந்தோம். பழையபாணி ஓட்டுவீடு. அனைவரும் அங்கே தங்கினோம். வீடு காற்றிலேயே நனைந்து குளிர்ந்திருந்தது.

மழையில் ஒரு மாலைநடை சென்றோம். மழை காற்றுவெளியை இருண்ட நீலநிறம் கொள்ளச் செய்துவிட்டிருந்தது. மாயவெளி ஒன்றில் நடக்கும் அனுபவம். ஒரு கரிய நாய் உடன் வந்து எங்களுக்கு காவல்பொறுப்பை ஏற்றுக்கொண்டது. ஆனால் அதற்கு கார்களின் விசை புரியவில்லை. பெரும்பாலான கார்களை மறித்து நிற்க முயன்றது. எங்களுடனேயே வந்து எங்கள் தங்குமிடத்திலேயே அதுவும் தங்கிக்கொண்டது.

நடைசெல்லும் வழியில் விந்தையான பெரிய நத்தை ஒன்றைப் பார்த்தோம். இதைப்பற்றித்தான் இப்போது சூழியலாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நூறாண்டுகளுக்கு முன் ஆய்வாளர் ஒருவரால் தன் தோட்டத்தில் விடப்பட்ட இந்த நத்தை இன்று இந்தியாவெங்கும், மழைவளம் மிக்க பகுதிகளில் பரவி பெரிய அளவில் விளைச்சலை அழித்துக்கொண்டிருக்கிறது. இதை இன்று கட்டுப்படுத்த முடியவில்லை.

நத்தைகளை கட்டுப்படுத்துவது நத்தைகொத்தி நாரை என்னும் பறவை. நத்தையோடுகளை உடைப்பதற்கான தனி அலகு கொண்டது அது. அந்தப்பறவை இன்று குறைந்துவருவதும் இந்த நத்தை பல்கிப்பெருகுவதற்கு காரணங்களில் ஒன்று

இரவெல்லாம் மழையின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. இரவு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். நீண்ட பயணம். முற்றிலும் புதிய ஊர். துயில் பிந்தவேண்டும். ஆனால் மழையின் ஓசை போல தாலாட்டு வேறேதுமில்லை. நான் எதையுமே உணராமல் தூங்கிவிட்டேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைசர்பட்டா என்னும் சொல்
அடுத்த கட்டுரைகார்கடலில்…