தேசமற்றவர்கள்

அன்புள்ள ஜெ

உங்கள், அருண்மொழி மேடம், அஜிதன், சைதன்யா அனைவர் நலமே விழைகிறேன். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த வியாழன் மதியம் அகல்யா சந்தித்தேன். ஆரணி அகதிகள் முகாம்வாசி. ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு செவிலியர் கல்லூரியில் சேர வேண்டும், உதவ இயலுமா என முகாம் அண்ணா ஒருவர் வழி அறிமுகமானாள்.

முகாம் மாணாக்கர்க்கு அரசு கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பு இல்லை என்பதால் செவிலியர் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு மட்டுமே சாத்தியம்.

ஏறக்குறைய ஆண்டொன்றிற்கு ஒன்றரை லட்சங்கள் தேவை. பாதி அளவு உதவினால் போதும் என அகல்யா வீட்டார் கேட்டுக் கொண்டனர். முழுமதி அறக்கட்டளை, எங்களது ‘100 பேர் குழுமம்’, எனது மிகச்சிறு பங்களிப்பில் நான்கு ஆண்டுகள் செவிலியர் கல்வி முடித்து கடந்த ஒன்றரை ஆண்டுகள் ‘நாராயணா ஹ்ருதாலயா’ மருத்துவமனை பெங்களூருவில் பணி புரிந்து வருகிறாள்.

பணிக்குச் சென்ற பின்பு முதன்முறையாக இப்போது தான் சந்திக்கிறேன். தூரத்தில் பார்த்து கையசைத்து அருகில் வந்து ‘ரொம்ப ஒல்லியாய்ட்டீஙக. உடம்பு சரியில்லையா’ என்றாள்.

‘டேய் எப்போதும் போலத்தான் இருக்கிறேன்’

‘இல்லயில்ல. எனக்குத் தெரியாதா.’

ஒரு மருத்துவவியலராக அகல்யா அவ்விதம் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.

உணவு விடுதிக்குச் சென்றோம். என்னை இழுத்து அமரச் செய்து பணம் செலுத்தி வாங்கி தந்த உணவு ஆழ்ந்த நிறைவளித்தது. தன் கல்வியால், உழைப்பால் தன் சமுக, பொருளாதார தேவைகளை கையாளும் இடத்திற்கு வந்துவிட்டாள்.

ஆனால் தொடர்ந்த நான்கு மணி நேர உரையாடலில் அகதியர் வாழ்வியல் குறித்து உங்களிடம் மட்டுமே பகிர்ந்துக் கொள்ள இயலும் எனத் தோன்றியது. அகல்யாவிற்கு நேர்காணலின் போது மாதம் பதினைந்தாயிரம் ஊதியம் எனவும் ஓராண்டு நிறைவுற்றதும் ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருபது மாதங்கள் ஆன பின்பும் ஊதியம் வழஙண்கப்படவில்லை. அவளுடன் பணியில் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படவில்லை என்பதால் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் சார்ந்த பொது பிரச்சனை தான். அகதியர் அரசு மருத்துமனையில் பணிபுரிய இயலாது என்பதால் அகல்யா போன்றவர்கள் இந்நெருக்கடியை எப்போதும் எதிர் கொண்டேயாக வேண்டும்.

கடந்த நான்கு மாதங்களாக மேலும் இரண்டாயிரம் கிடைக்கும் என இரண்டாம் அலை ‘கோவிட் டூட்டி’ பார்த்துக் கொண்டிருக்கிறாள். ‘அவசர சிகிச்சைப் பிரிவு’ பணிகள் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தும் இன்னும் வாய்க்கவில்லை எனத் தெரிவித்தாள். அக்டோபர் இறுதி வரையிலும் பார்த்துவிட்டு தமிழ்நாட்டில் வேலை தேடவிருக்கும் முடிவை பகிர்ந்துக் கொண்டாள்.

அகதியர் குறித்த புரிதல் உள்ள மருத்துவமனை கிடைத்தால் நல்லது என புரிந்துக் கொண்டேன். அவர்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு கிடைக்கும் குறைந்த ஊதியம் ஒரு காரணம். இரண்டு தலைமுறை இளையோர் கற்றும் உடலுழைப்புத் தொழில் தான் என்பதனால் கல்லூரி படிப்பைத் தவிர்த்து விட்டிருக்கின்றனர்.

பவானி சாகர் முகாம்வாசி இளங்கலை கணினி கல்வியில் எண்பத்தைந்து சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தாள். முதுகலை வகுப்பில் சேரத்து விடுவதாகச் சொன்னேன். வீட்டுச்சூழல், திருமண செலவினம் என பல்வேறு காரணங்களுக்காக அருகாமை கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள்.  பனிரெண்டு மணி நேர பணி. பத்து மணி நேரம் நின்றுக் கொண்டே செய்ய வேண்டிய பணி. இரண்டு ஆண்டுகளில் ஒன்றரை சவரன் வாங்கியதாகத் தெரிவித்தாள். உயர்கல்வியில் மேலும் சிறந்த மதிப்பெண் பெறும் தகுதி வாய்ந்த மாணவி. அகல்யா இப்போது கேட்ட கேள்வியை இரண்டு ஆண்டுகளுக்கு யுகவதினி கேட்டிருந்தாள். ‘எங்க அப்பா, அம்மா அங்கிருந்து வந்தவங்க. நான் இங்க தானே பிறந்தேன். எனக்கு ஏன் குடியுரிமை தர மாட்டேங்க்றாங்க?’

கல்வி சார்ந்து ஈடுபாடும், நம்பிக்கையுமாக நான் சந்தித்துக் கொண்டே இருக்கும் அப்பதின் பருவத்தினர் கல்லூரி முடித்துக் கேட்கும் கடந்த பல ஆண்டுகளாக நான் எதிர்கொள்ளும் ஒரே கேள்வி. வெளிநாட்டில் உறவினர்கள் இருப்பவர்கள் இலங்கை சென்று அங்கிருந்து வெளிநாடு சென்று காலப்போக்கில் குடியுரிமை பெற்று விடுகிறார்கள். அகல்யா போன்றவர்கள் இலங்கையில் உறவினர் என யாரும் இல்லாததால் இங்கேயே இவ்விதமே வாழ்வது மட்டுமே சாத்தியம்.

இங்கிருந்து அவர்களால் வெளிநாடு செல்ல இயலாது. இலங்கை செல்ல மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அவர் வழி மறுவாழ்வுத் துறைவழி வட்டாட்சியர்க்கு அனுப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு இறுதியாக உளவுத்துறை – க்யு ப்ராஞ்ச் விசாரித்து வழக்குகள், குற்றங்கள் ஏதுமில்லை என சான்றழிக்கப்பட்டு இலங்கை தூதரகம் வழி விண்ணப்பித்தே இலங்கை செல்ல முடியும். இந்நடைமுறைகளுக்காக உரிய அலுவலகங்களுக்கு அலைந்து, அசைத்து அசைத்து தான் சான்றிதழ்கள் பெற இயலும்.

பின் இலங்கையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து விண்ணப்பித்து வெளிநாடு செல்ல வேண்டும். இலங்கையில் தற்போது இந்நடைமுறைகள் சற்று எளிது தான் என்கிறார்கள். இலங்கையில் உறவினர்கள் இல்லாதவர்கள் அங்கேயும் செல்ல இயலாது இங்கேயும் நிரந்தரமின்றி…

வாழ்தல் பயனற்றது எனும் முடிவுக்குத் தான் வர வேண்டியுள்ளது. இவ்வாழ்க்கை பழகிப் போனவர்கள் ஏற்றுக் கொண்டு இவ்வெல்லைக்குள் வாழ்ந்து  கொண்டிருக்கின்றனர். கல்லூரி வகுப்புத் துவங்கிய பெருங்கனவு இறுதி நாளன்று இவ்வாழ்வை சோர்வுக்குரியதாக மாற்றுவதை துளித்துளியாக உணர்ந்து இவ்வெறுமைக்குள் கரைந்து போக தயாராகிக் கொள்கின்றனர். எவ்வித நெருக்கடியான வாழ்விலும் உருவாகும் கொண்டாட்டங்களும் அடியுறைந்த கசப்புமாக வாழ்வு நீடித்துக் கொண்டிருக்கிறது.

தாம் ஈடுபடும் தொழில் நேர்த்திக் குறித்து என் நண்பர்கள் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். சிறு கட்டுமானம், மின்சாரம் , குடிநீர் குழாய் சார்ந்த பணிகள். நேர்த்தி மூலம் பெறும் நன்மதிப்பு அவர்களுக்கான வாய்ப்புகளை பெருக்கியபடியே உள்ளது. பிறரை சார்ந்திராது தம் நேர்த்தி, நட்பு மூலம் இணையானவர்களாக மாற்றிக் கொள்கின்றனர்.

நீண்ட காலம் அவர்கள் நம்பிய, எதிர்பார்த்துக் கொண்டிருந்த குடியுரிமை குறித்து அச்சமும், வெறுமையுமே அவர்களது தற்போதைய மனநிலை. அகல்யாவின் எதிர்காலம் அவளைப் புரிந்து உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் மருத்துவமனை அல்லது ஒரு இந்தியக் குடிமகனுடன் வாழ்வை பகிர்ந்துக் கொள்ளுதல் வழி சாத்தியப்படும்.

இந்திய குடிமகனை திருமணம் செய்வதன் வழி குடியுரிமை பெற்று அரசு வேலைவாய்ப்பு மேலும் தனியார் என்றாலும்  பணி பாதுகாப்பு பெற இயலும். அத்திருமண வாழ்வு சார்ந்தும் சரிபாதி மாற்றுக் கருத்து முகாமில் நிலவுகிறது. மிகவும் நிறைவாக வாழும் பெண்களும் உள்ளனர். பெண்களின் உடை கலாச்சாரம், மிக இயல்பாக எல்லோருடனும் பழகுதல் சார்ந்து உருவாகும் நெருக்கடிகள் காரணமாக முகாமிற்கு திருப்பி அனுப்பப்படும் சூழல்.

ஒரு இந்தியக் குடிமகனை திருமணம் செய்வதன் மூலம் முகாம் பதிவு உட்பட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டு விடும். திருமண வாழ்வின் தோல்விக்குப் பின்பு மீண்டும் அவற்றைப் பெற குழந்தைகளுடன் அப்பெண்ணும் உறவினரும் வதையுடன் போராட வேண்டும். கடந்த ஆண்டு இறந்த, முகாம் சார்ந்து நேரிலும் அலைபேசி வாயிலும் அடிக்கடி உரையாடும் அய்யா ‘ கழுத்து வரை மண்ணுக்குள்ள புதைஞ்சிருந்தாக் கூட நம்பிக்கையோடு போராடி வெளியே வந்து  குழிய திரும்பிப் பார்த்து மண்ணத் தொடச்சுக்கிட்டு வாழத் துவங்கலாம்.மண்ண மிதிக்க முடியாது, மண்ணில புரள முடியாது இரண்டு மூணு அடி உயரத்துல மிதந்து அலைந்து வாழ்றது சாபண்டா’

சபிக்கப்பட்டவர்கள் என்பது போன்ற சொற்களில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் வாழ்வியல், உளவியல் இவ்விதமே அமைந்திருந்தாலும் அச்சொல்லை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.

உங்கள் பேரன்பும் ஆசியும் என் போன்றவர்களுக்கு மட்டுமின்றி என்னை ‘பெரியப்பா’ என அழைக்கும் அகல்யா போன்ற  என் மகள்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்..

எக்கணத்துளியிலும்

அன்புடனும் நன்றியுடனும்

முத்துராமன்

[email protected]

அன்புள்ள முத்துராமன்,

இந்த தருணத்தில் சந்திரசேகரை எண்ணிக்கொள்கிறேன். அவர் மறைந்தாலும் அவர் செய்த சேவைகள் நீடிக்கின்றன. நெஞ்சில் வெண்முரசுடன் அவர் மண்ணில் மறைந்த காட்சியை மறக்க முடியவில்லை.

உங்கள் அர்ப்பணிப்பும் சேவையும் மகத்தானவை. நம் நண்பர்கள் உங்களுக்கு உதவுகிறார்கள் என்று சொல்ல மாட்டேன். உங்களுக்கு கடன்பட்டிருக்கிறார்கள்.

இலங்கை அகதிகளின் விஷயத்தில் இந்திய அரசு காட்டும் பாராமுகம் கொடூரமானது. உலகின் பண்பாடுள்ள எந்த நாட்டிலும் நிகழாதது. நேருவின் காலத்தில் திபெத்திய அகதிகளுக்கும், இந்திராவின் காலகட்டத்தில் வங்காள, இலங்கை அகதிகளுக்கும் இந்தியா அடைக்கலமளித்தது. குடியுரிமை அளித்து கௌரவம் செய்தது. அந்தப்பெருந்தன்மையை நாம் இழந்திருக்கிறோம். சிறியோரால் ஆளப்படுகிறோம்.

ஒரு மண்ணில் பிறந்து வளர்ந்த தலைமுறைக்கு அம்மண்ணில் குடியுரிமை இல்லை என்பது போல மானுடநிராகரிப்பு வேறில்லை. எந்தமண்ணிலும் குடியுரிமை இல்லாது வாழ்ந்து மடிவதென்பது மானுடர் அடையும் துயர்களில் முதன்மையானது. இலங்கை அகதிகள் படிக்க முடியாமல், படித்தும் வேலையில்லாமல் வாழும் நிலை நாம் அனைவருமே நாணப்படவேண்டிய ஒன்று. நாம் செய்யும் உதவிகள் எல்லாமே நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வன.

பலமுறை எழுதிவிட்டேன். ஈழ அரசியல் பேசி லாபம் அடையும் தமிழக அரசும் அரசியல்வாதிகளும் இதை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. இன்றைய திமுக அரசின்மேல் இங்குள்ள ஈழ ஆதரவாளர்கள் அநீதியாகப் பழிசுமத்தி வருகின்றனர். அப்பழியை அழிக்க முதன்மை வழி என்பது இந்த அகதிகளுக்கு குடியுரிமைக்காக திமுக குரலெழுப்புவதுதான். அத்துடன் உடனடியாக அவர்களுக்கு அரச உதவிகள், வேலை முன்னுரிமைகள் ஆகியவற்றை வழங்குவது. அரசின் செவிகளுக்கு இது சென்று சேரவேண்டும்

ஜெ

அஞ்சலி: சந்திரசேகர்

முந்தைய கட்டுரைதுவந்தம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைசர்பட்டா என்னும் சொல்