பிரஜாபதியும் கிறித்தவர்களும்- கடிதம்

பிரஜாபதியும் கிறித்தவர்களும்

அன்புள்ள ஜெ,

உங்கள் இணையதளத்தின் வீச்சு என்ன என்று சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இங்கே தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் பலவகைப்பட்ட திரிபுப்பிரச்சாரங்கள், அபத்தமான காழ்ப்புகள் அனைத்துக்குமான பதில்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. எவரோ அவற்றை சுட்டி எடுத்து உடனே போட்டுவிடுகிறார்கள்.

சமூகவலைத்தளங்களிலோ யூடியுப் கமெண்டுகளிலோ பேசுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு கட்டுரையை வாசிக்குமளவுக்கு அறிவோ பொறுமையோ இருப்பதில்லை. ஆனால் கண்டிப்பாக அந்த இடத்திற்கு வருபவர்களில் கொஞ்சம் கூறுள்ளவர்கள் வாசிப்பார்கள். அவர்களால் மறுக்கமுடியாத தெளிவை அது அளிக்கும். காலப்போக்கில் சரியான பார்வை ஒரு வலுவான தரப்பாக நிலைகொள்ளும்.

காந்தியைப் பற்றி பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை  இணையத்தில் இருந்த காழ்ப்புகள் எல்லாம் மெல்லமெல்ல இன்று அர்த்தமற்றவையாக ஆகிவிட்டன. அதற்கு உங்கள் இணையதளத்தில் வந்த கட்டுரைகளின் பங்குதான் முதன்மையானது. டிவிட்டரிலும் மாதத்திற்கு ஒருமுறையாவது உங்கள் கட்டுரை சரியாக மேற்கோள்காட்டப்படுகிறது. சமீபத்தில் வாஞ்சி- ஆஷ் பற்றிய அவதூறுகளை முடித்துவைத்ததே உங்கள் கட்டுரைதான்.

இன்றைக்கு யாரோ ஒரு பெண்மணி தன்னை பிராமணப்பெண் என்று சொல்லிக்கொண்டு இந்து வேதங்களில் பேசப்பட்டிருக்கும் பிரஜாபதி என்பவர் கிறிஸ்துதான் என பேசிக்கொண்டிருத கிளிப்பிங் சுற்றிவந்தது. உடனே அதற்கு நீங்கள் அளித்த ஆதாரபூர்வமான தெளிவான பதில் சுட்டி அளிக்கப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட விவாதமே முடிந்துவிட்டது. பிரஜாபதியும் கிறித்தவர்களும்

இன்றைக்கு உங்களை வசைபாடுபவர்களில் அதிகம்பேரும் இந்துத்துவர்கள். உங்களை திமுக ஆதரவாளர், விலைபோய்விட்டவர் என்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். ஆனால் தேவையானபோது உங்கள் தளத்தை சுட்டிகொடுக்க அவர்கள் தயங்குவதே இல்லை.

நான் இதை ஓர் உறுதியாக கொண்டிருக்கிறேன். மற்றவர்களும் இதைச்செய்யவேண்டுமென நினைக்கிறேன். எந்த அவதூறு, திரிபு விவாதமானாலும் அந்தச் சொற்களைக்கொண்டு உங்கள் தளத்தில் தேடிப்பார்ப்பது. கட்டுரை இருந்தால் சுட்டி கொடுப்பது. தமிழ் அறிவுச்சூழலில் கொஞ்சமாவது அறிவுச்சமநிலை நிலைகொள்ள இன்றியமையாத செயல் இது

அதற்கு உங்கள் தளம் இலவசமாக இருப்பது மிக அவசியமானது. இன்றைக்கு பிரபல தளங்களில் இந்த தளமே இலவசமானது. இதை இலவசமாக நடத்த நிதியுதவியை செய்யவேண்டுமென்று நினைக்கிறேன்.

கே.ஆர்.ராஜசேகரன்

முந்தைய கட்டுரைஅறிவின் பரவல்-கடிதம்
அடுத்த கட்டுரைவருகை, ஓர் ஓவியப்புனைவு. – கடலூர் சீனு