தமிழவன் -தமிழ்ச்சிந்தனையின் மடிப்புமுனையில்…

[ 1 ]

குமரிமாவட்டத்தின் அறிவுக்கொடைகளில் ஒருவர் தமிழவன். நான் பணியாற்றிய, என் குடும்ப வேர்கள்கொண்ட பத்மநாபபுரத்திற்கு அருகே பிறந்தவர். நேரடியாக அவருடைய புனைவுகளில் குமரிமாவட்டம் குறைவாகவே வந்திருக்கிறது. அறிவுக்களமாக அவர் பாளையங்கோட்டையையும் பின்னர் பெங்களூரையுமே கொண்டிருந்தார். எனினும் அவரை குமரிமாவட்டம் உரிமை கொண்டாட முடியும் என்று நினைக்கிறேன். இருபதாண்டுகளுக்கு முன்பு நண்பர் பச்சைமால் அவர்கள் நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் கூட்டிய ஒரு கூட்டத்தில் குமரிமாவட்ட எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்றாக ஒரே மேடையில் அமரச்செய்தார். சுந்தர ராமசாமி, நீலபத்மநாபன் முதல் நான் வரை அங்கே அமர்ந்திருந்த நினைவு எழுகிறது. என் விமர்சனநூல் ஒன்றை அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

தமிழவனின் புனைவுலகு, விமர்சன உலகு பற்றி விரிவாக எழுதவேண்டும் என்பது என் இருபதாண்டுக்கால திட்டம். அது தவறிச்சென்றுகொண்டே இருக்கிறது. இந்த தருணத்தில் சுருக்கமாக அவருடைய கொடை என்ன என்று வகுத்துக்கொள்ள இயலுமா என்று பார்க்கிறேன். பின்னாளில் விரித்து எழுதுவதற்குரிய முன்வரைவாக இது இருக்கவேண்டும். நான் எழுதவந்த எண்பதுகளில் தமிழில் அதிகமாகப் பேசப்பட்ட பெயர்களில் ஒன்று தமிழவன். அவருடன் முரண்பட்டு எதிர்நிலையில் நின்று விவாதித்தே நான் என்னை உருவாக்கிக்கொண்டேன். சற்று காலம் கடந்தே அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவற்றை பற்றிய தெளிவை அடைந்தேன். ஆகவே இது என்னுடைய புரிதல்களை நானே மதிப்பிட்டுக்கொள்வதும்கூட.

தமிழவனின் அறிவுச்செயல்பாட்டை புனைவு, விமர்சனம் என இரண்டாகப் பிரிக்கலாம். அதில் முதன்மையானது இலக்கிய விமர்சனமே. இலக்கிய விமர்சனத்திலேயேகூட அவருடைய கோட்பாட்டு அறிமுகக் கட்டுரைகளும் நூல்களுமே முதன்மையானவை. அவர் தமிழில் நினைவுகூரப் படவிருப்பது முதன்மையாக அவர் இங்கே அறிமுகம் செய்து, விவாதங்களை உருவாக்கிய இலக்கியக் கோட்பாட்டுகளின் வழியாகவே. இலக்கியக் கோட்பாட்டாளர், இலக்கிய விமர்சகர், இலக்கியப் படைப்பாளி என்னும் வரிசையில் அவரை நாம் மதிப்பிடலாம்.

தமிழவன் இலக்கியக் கோட்பாடுகளை தமிழில் முன்வைத்து விவாதித்த சூழலை இன்று விளக்க வேண்டியிருக்கிறது. அன்றைய இலக்கியக் கருத்துக்களம் இரண்டாகப் பிரிந்து ஒன்றுடனொன்று தீவிரமான உரையாடலில் இருந்தது. இலக்கியத்தை முழுக்க முழுக்க அகவயமான ஒரு செயல்பாடாகக் காணும் தரப்பு ஒருபக்கம். இலக்கியத்தை முழுக்க முழுக்க புறவயமான செயல்பாடாகக் காணும் மார்க்ஸியத் தரப்பு இன்னொரு பக்கம் என சுருக்கமாக வகுத்துக் கொள்ளலாம் அகவயப்பார்வை கொண்டவர்களை அழகியல்வாதிகள் என்றும் புறவயப்பார்வை கொண்டவர்களை பொதுவாக முற்போக்குத் தரப்பினர் என்றும் சொல்லலாம்.

அந்த இரு தரப்பினரின் குணாதிசயங்களையும் இந்தச் சித்தரிப்புக்காக இருமுனைப்படுத்தி அமைத்துப் பார்க்கலாம். இருசாராருமே அன்று வெளியுலகம் அறியாமல் சிற்றிதழ்களுக்குள்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அழகியல்வாதிகள் மணிக்கொடி, எழுத்து, கசடதபற என சிற்றிதழ்களை நடத்தினர். முற்போக்கினர் சரஸ்வதி, சாந்தி, தாமரை, நிகழ், படிகள் என சிற்றிதழ்களை நடத்தினர். ஆனால் இந்த அணிபிளவு முழுமுற்றானது அல்ல. இங்கிருப்பவர்கள் அங்கும் அங்கிருப்பவர்கள் இங்கும் எழுதுவது சாதாரணம். சுந்தர ராமசாமி தூய அழகியல்வாதி, அவர் சரஸ்வதியில் இருந்து வந்தவர். நான் என்னை அழகியல்வாதி என்றே சொல்லிக்கொள்வேன். நான் அதிகமும் நிகழ் இதழிலேயே எழுதினேன்.

தமிழிலக்கியத்தின் அழகியல்நோக்கு வ.வே.சு அய்யரிடமிருந்து தொடங்குகிறது. அதன்பின் ரா.ஸ்ரீ.தேசிகன், ’ஹிந்து’. சுப்ரமணிய அய்யர் என சில பெயர்களுக்குப்பின் அத்தரப்பை ஒரு வலுவான இலக்கியமரபாக நிலைநாட்டியவர்கள் க.நா.சு, சி.சு.செல்லப்பா இருவரும். வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, நகுலன், வேதசகாயகுமார் என அந்த விமர்சன மரபுக்கு ஒரு தொடர்ச்சி அமைந்தது. தமிழ் முற்போக்குத் தரப்பு எஸ்.ராமகிருஷ்ணன், நா.வானமாமலை, கைலாசபதி. கா.சிவத்தம்பி, சி.கனகசபாபதி என ஒரு தொடர்ச்சியை உருவாக்கிக்கொண்டது.

இந்த அரைநூற்றாண்டு அறிவு விவாதத்தில் தமிழகக் கல்வித்துறைக்கு அனேகமாக எந்தப்பங்கும் இல்லை என்பதைச் சொல்லியாகவேண்டும். சி.கனகசபாபதி, தமிழவன், வேதசகாயகுமார் உட்பட பலர் கல்வித்துறை சார்ந்தவர்களே ஆனாலும் அவர்கள் கல்வித்துறைக்கு வெளியே வந்து பேசியவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு கல்வித்துறை அடையாளமோ, அங்கே ஏற்போ இருந்ததில்லை. இந்த விவாதத்தில் திராவிட இலக்கியம் ஊடாடவே இல்லை. சிலருக்குத் திராவிட இயக்கத்தின்மேல் ஈடுபாடு இருந்தது என்று வேண்டுமென்றால் சொல்லலாம். திராவிட இயக்கத்தின் தரப்பு என ஒன்று இந்த விவாதத்தில் ஒலிக்கவில்லை. தமிழின் பிரபலமான வணிக எழுத்துலகம் முற்றிலும் தொடர்பில்லாமல் வேறெங்கோ கல்கி முதல் சுஜாதாவரை ஒரு தனிச் சரடென ஓடிக்கொண்டிருந்தது.

இந்த விவாதம் அதன் ஓர் உச்சநிலையில் தெளிவான துருவப்படுத்தலாக மாறியது. அழகியல்வாதிகள் புறவுலகை அகம் நிகழும் களம் மட்டுமே என்று மதிப்பிட்டனர். அகத்திற்கு படிமங்களை அளிப்பதற்கு அப்பால் அது ஆற்றுவதொன்றுமில்லை. அன்றைய அழகியல் பார்வையை மூன்று அலகுகளால் ஆனது என வகைப்படுத்தலாம். தனிமனிதன், வடிவம், தத்துவம். தனிமனிதனின் அகவுலகின் வெளிப்பாடே இலக்கியம். அது சரியாக அமைவதே வடிவம். அவ்வடிவத்தினூடாக அது சென்றடையும் ஒட்டுமொத்தமான பார்வையே தத்துவம். இந்த மூன்று அலகுகளும் நவீனத்துவத்திற்கு உரியவை. எண்பதுகள் தமிழ் நவீனத்துவத்தின் உச்சக் காலகட்டம்.

தனிமனிதனை அடிப்படை அலகெனக் கொண்டமையால் சமூகம் தனிமனிதனை எப்படிப் பாதிக்கிறது, அவனில் எப்படிச் செயல்படுகிறது என்றே அன்றைய அழகியல்வாதிகள் கருத்தில் கொண்டனர். சமூகம் என்பதே தனிமனிதர்களின் தொகை என கருதப்பட்டது. அன்றைய புனைகதைகளின் அழகியல் வடிவம் என்பது தனிமனித அகம் செயல்படும் இயக்கத்தின் மொழிப்பதிவே. நகுலனின் நினைவுப்பாதை, சு.ந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள் ஆகியவை வெறும் அகவெளிநிகழ்வுகளால் ஆனவை. சமூகச்சலனங்களைச் சொல்லும் அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு, ஆதவனின் என்.பெயர் ராமசேஷன் போன்ற நாவல்களும் கூட தனிமனிதனுக்குள்ளேயே நிகழ்கின்றன.

அந்தத் தனிமனிதன் கண்டடையும் அகமெய்மையே இலக்கியத்தின் தத்துவமாக இருக்கமுடியும் என்று அழகியலாளர் நம்பினர். அதை தரிசனம் என்றனர். அதைக் கண்டடையும் எழுத்தாளனின் அகநுண்மையை உள்ளொளி என்றனர். ஆகவே அன்றைய அழகியல்சார்ந்த இலக்கிய விமர்சனம் என்பது இரண்டு அளவீடுகளால் ஆனது. ஒன்று வடிவம். இன்னொன்று உள்ளொளியின் விளைவான தரிசனம். ‘நல்லா அமைஞ்சு வந்திருக்கு’ என்பது ஓர் இலக்கிய பாராட்டு. அதற்குமேல் படைப்பாளியின் உள்ளொளி வெளிப்படும் தருணங்கள் கருத்தில் கொள்ளப்படும். அதற்கு அப்பால் ஒட்டுமொத்தமாக அப்படைப்பின் தரிசனம் என்ன என்பது தொகுத்துரைக்கப்படும்.

மறுபக்கம் முற்போக்குத் தரப்பினர் தனிமனிதன் என்பதையே மறுத்தனர். தனி அகம் என ஒன்றில்லை. இருப்பது சமூகம் மட்டுமே. அது அடிப்படை பொருளியல் விசைகளால் இயங்குவது. அப்பொருளியல் விசைகளின் விளைவாக சமூகம் எப்படி இயங்குகிறது, சமூகத்தின் பகுதியாக மனிதன் எப்படி இயங்குகிறான் என்று பார்ப்பது மட்டுமே இலக்கியத்தின் பணி என்றனர். ஒருவனை தொழிலாளி என்றோ முதலாளி என்றோ குட்டிமுதலாளி என்றோ வகுத்துக் கொள்வது அவனை அறுதியாக புரிந்துகொள்வதுதான் என்று நம்பினர். ஆகவே இலக்கியப் படைப்பில் முதன்மையாக வெளிப்படவேண்டியது ஒரு வாழ்க்கைக் களத்தின் அடிப்படையான பொருளியல் கட்டுமானமும், அதன் பொருளியல் விசைகளும்தான் என வாதிட்டனர். இலக்கிய ஆக்கங்களையே அவ்வாறு வாசித்தனர்.

உதாரணமாக இரு வாசிப்புகளைச் சொல்லலாம். அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவல் ஓர் இளைஞனின் ‘வயதடைதல்’ சார்ந்தது என்பது அழகியல் மதிப்பீடு. அவன் தன்சூழலில் இருந்து தன் அகத்தை பிரித்துக் காணும் தருணம், தன்னுள் தன் தனித்துவத்தை கண்டடையும் தருணம் அதன் உச்சம். அதன் பின் அவன் சிறுவனல்ல, தனிமனிதன். ஆனால் முற்போக்குப் பார்வையில் அவன் ஒரு குட்டிபூர்ஷுவா. வரலாற்றின் முன் செயலற்று நின்றிருப்பது குட்டிபூர்ஷுவாவின் இயல்பு. அவன் அந்த தருணத்தை அடைவதே அந்நாவலின் உச்சம். அதற்கப்பாலுள்ள அவனுடைய அகநிகழ்வுகளெல்லாம் வெறும் பாவனைகள் மட்டுமே.

ஒருபக்கம் அழகியல் தூய்மைவாதம், இன்னொரு பக்கம் மார்க்ஸியக் குறுக்கல்வாதம். ஒரு பக்கம் தனிமனிதவாதம் இன்னொரு பக்கம் சமூகவாதம். ஒருபக்கம் வடிவவாதம் மறுபக்கம் உள்ளடக்க வாதம். ஒருபக்கம் மனித சாராம்சம் என்ன என்னும் வினா. இன்னொரு பக்கம் மனிதாபிமானப் பிரச்சாரம்.  இவ்வாறு அது பெருகிச்சென்றது. விவாதம் வசையாகி வசை விவாதமாகியது. இன்று அவ்விவாதத்தில் சில கவனத்திற்குரியவையாக எஞ்சுகின்றன. மு.தளையசிங்கத்தின் முற்போக்கு இலக்கியம் மற்றும் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி. வெங்கட் சாமிநாதனின் மார்க்ஸின் கல்லறையில் இருந்து ஒரு குரல், இசைக்கும் ஃபாஸிசத்திற்குமான உறவு குறித்து வெங்கட் சாமிநாதனுக்கும் கைலாசபதி தரப்புக்குமான விவாதங்கள்.

இதில் இரு தரப்பினருக்குமே போதாமைகள் இருந்தன. அவற்றை இப்படிச் சுருக்கிக்கொள்ளலாம். அழகியல்வாதிகளுக்கு சில தனிப்பட்ட கலைச்சொற்கள் இருந்தன, அவை அவர்களுக்குள் பொருள் அளித்தன. அவர்களால் கலைநிகழ்வை, வடிவஒருமையை, உள்ளொளியை புறவயமாக வரையறை செய்ய முடியவில்லை. அவற்றை முழுமையாக புறவயமாக வரையறை செய்துவிட முடியாதுதான். ஆனால் வரையறைக்கே அவர்கள் முயலவில்லை. ஒரு விவரிப்பு எப்போது எப்படி படிமம் ஆகிறது, ஒரு சொல் எப்படி அர்த்தவிரிவு கொண்டு கவித்துவத்தை நிகழ்த்துகிறது, ஒரு படைப்பு எப்படி பன்முக வாசிப்புக்கு ஆளாகிறது, ஒரு படைப்பாளியின் உள்ளத்திற்கும் மொழிவடிவ வெளிப்பாட்டுக்குமான உறவு என்ன, எந்த வினாக்களையும் அவர்கள் சந்திக்கவில்லை. அவற்றைப் புறவயமாகப் பேச முடியாது என்று சொல்லி கடந்துசென்றனர்.

முற்போக்கினரைப் பொறுத்தவரை மனிதர்களின் அந்தரங்கமான பெரும்பாலான உணர்வுகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே அவையெல்லாமே வெறும் பாவனைகள் அல்லது பிரமைகள் என அவர்கள் கடந்து சென்றனர். ஒரு மலர் மனிதனுக்கு அளிக்கும் மகிழ்ச்சி எதனால் நிகழ்கிறது? காதல் கொண்டவன் அடையும் பரவசம் என்ன? மனித உணர்வுகளை ஆட்டிப்படைக்கும் நான் என்னும் பிரக்ஞையின் ஊற்றுக்கண் என்ன? மொழியில் இருந்து மனிதர்கள் பெற்றுக்கொள்ளும் அர்த்தம் தொடர்ந்து வளர்வது எப்படி? எந்த வினாவையும் இடதுசாரிகள் எதிர்கொள்ளவில்லை. அவையெல்லாமே தனிமனிதனின் உள்ளத்தில் நிகழும் பொருளில்லா உணர்வுகள் மட்டுமே என்று கூறினர். ’ஒரு ரோஜா அளிக்கும் இன்பத்தை விளக்க மார்க்ஸியத்தால் இயலாது’ என்ற வரி அன்று புகழ்பெற்றது.

முற்போக்குத் தரப்பை பொறுத்தவரை பொருளியல் என்பது உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகள் ஆகியவற்றாலானது. உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றின் பொருட்டு சமூகக் கட்டமைப்பு உருவாகிறது. சமூகக் கட்டமைப்பை நிலைநிறுத்தும் பொருட்டு அதற்கான உணர்வுகளை சமூகம் உருவாக்கிக் கொள்கிறது. எல்லா உணர்வுகளும் அவ்வாறு உருவாக்கப்பட்டு நீடிப்பவை. அவற்றின் பல்லாயிரம் திரிபு நிலைகள், வளர்ச்சிநிலைகளையே அழகியல்வாதிகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த இருமுனைப் போரில் கோவை ஞானி ஒரு முக்கியமான இடைநிலைக் குரல். முற்போக்குத் தரப்பில் இருந்து எழுந்து அழகியல் வினாக்களை எதிர்கொண்டவர் அவர். தனிமனிதனை வெறும் சமூகக்கொள்கைகள், பொருளியல் கொள்கைகளைக் கொண்டு புரிந்துகொள்ள முடியாது என்று அவர் கூறினார். தனிமனிதனின் அழகியல் நாட்டத்தை, அகவயத்தேடல்களை, தன்னுணர்வின் நிலைகளை மார்க்ஸியச் சட்டகத்திற்குள் நின்று அறிந்துகொள்ள முயன்றார். அதன்பொருட்டு ஐரோப்பிய மார்க்ஸியத்தை கருத்தில் கொண்டார். ஆனால் அவருடைய இலக்கிய விமர்சனம் மரபான மார்க்சிய விமர்சனப் பாணியிலேயே அமைந்திருந்தது.

தமிழவனின் பங்களிப்பு இந்தச் சந்திப்புமுனையில்தான் நிகழ்ந்தது. நா.வானமாமலையின் மாணவராக ஓர் இளம் மார்க்சியராகவே அவர் இலக்கிய விமர்சனத்திற்குள் நுழைந்தார். தொடக்ககால விமர்சனங்கள் எல்லாமே இலக்கிய ஆக்கங்களில் பொருளியல் அடிப்படைகளை, அதன் விளைவான அரசியலைக் கண்டடையும் முயற்சிகள்தான். ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் ஞானியை தொடர்ந்து அவர் மேலைமார்க்சிய கருத்துக்களுக்குள் சென்றார். அங்கிருந்து அல்தூசர் வழியாக அமைப்பு வாதத்தைச் சென்றடைந்தார். பின்நவீனத்துவச் சிந்தனைகளை தமிழில் தொடங்கி வைத்தார்.

பழையகால கேரள இல்லங்களில் மூலைக்கட்டை என்று ஒன்று உண்டு. இரு சுவர்களின் சந்திப்புமடிப்பில் கூரையின் மூலைஉத்தரத்தை தாங்கி சுவரில் அமைந்திருப்பது. அதற்கு கல்லை வைக்க மாட்டார்கள், கல் காலப்போக்கில் எடைதாளாமல் விரிசலிடும். எடைதாளக்கூடிய காஞ்சிரம், அல்லது தோதகத்தி மரக்கட்டைகளை வைப்பார்கள். நூற்றாண்டுகளுக்குப் பின் வீட்டை இடித்து விற்கும்போது அந்த கட்டைகளுக்கு தனிவிலை இருக்கும். பலசமயம் அந்த வீட்டில் மீண்டும் பயன்படுத்தும்படி அவையே எஞ்சியிருக்கும். தமிழ்ச்சிந்தனையுலகின் ஒரு திருப்புமுனைக் காலகட்டத்தின் மூலைக்கட்டை என தமிழவனைச் சொல்ல முடியும்

[ 2 ]

தமிழவனின் கோட்பாட்டுச் செயல்பாட்டை ‘கோட்பாட்டு அறிமுகம்’ என்று சுருக்கிவிட முடியாது. இயல்பாக அந்த வார்த்தை வந்தாலும்கூட அதிலுள்ள படிநிலைகளை நாம் கவனம் கொள்ளவேண்டும். ஓர் அயல்சூழலில் உள்ள சிந்தனையை எளிமையாக, அடிப்படைகளை சுருக்கி இன்னொரு சூழலுக்கு அறிமுகம் செய்யும் நூல்களை நாம் நிறையவே வாசித்திருப்போம். தமிழவனின் நூல்கள் அத்தகையவை அல்ல. அவை தமிழில் அன்றிருந்த இலக்கிய – அரசியல் விவாதங்களை கூர்ந்து அவதானித்து, அவற்றின் வினாக்களுக்கு விடைகளாகவும் வேறுவகை ஆய்வுமுறைமைகளாகவும் முன்வைக்கப்பட்டவை.

தமிழவன் மேலைமார்க்ஸியத்தின் அன்னியமாதல் கோட்பாட்டையும் பின்னர் அமைப்புவாதத்தையும் அன்றைய அறிவுச்சூழலில் ஒரு வலுவான தரப்பாக கொண்டு வந்து நிறுத்தினார். அதன் வழியாக அன்றைய விவாதங்களை நிலைகுலையச் செய்தார். அத்துடன் தன்னுடைய சீண்டும்தன்மை கொண்ட விமர்சனங்கள் வழியாக அவற்றை தவிர்க்கமுடியாத குரல்களாகவும் நிலைநாட்டினார். அதன் வழியாக மொத்த விவாதத்தையும் நிலைமாற்றம் அடையச் செய்தார். அவருடைய முதன்மைப் பங்களிப்பு என இந்த விவாத ஊடுருவலையே சொல்லவேண்டும்.

தமிழவனின் தரப்பை சுருக்கமாக இவ்வாறு கூறலாம். அவர் அல்தூசரில் இருந்து தொடங்குகிறார். உழைப்பின் படைப்பூக்கத்தில் இருந்து மனிதன் அன்னியமாகிறான். விளைவாக ஆளுமைப்பிளவை அடைகிறான். சமூகக் கட்டமைப்பினால் அவன் அடிமைப்படுகிறான். அதிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் பொருட்டு இன்னொரு அகத்தை கற்பனையால் உருவாக்கிக் கொள்கிறான். அன்னியமாதல்- அதை வெல்லும்பொருட்டு உருவாக்கிக்கொள்ளும் இணைஆளுமை என்னும் இரு நிலைகளில் இன்றைய மனிதனின் அகநிகழ்வுகளை புரிந்துகொள்ள முடியும்.

மனிதன் ஒரே சமயம் வரலாற்றின் பெருக்கிலும் இருக்கிறான். அவனுடைய அகம் அதற்கு எதிரான உருவகங்களையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. அதையும் தன் ஆளுமையாகக் கொண்டிருக்கிறான். அவன் அவ்விரு விசைகளின் சமநிலைதான். இயல்பாக சமூகக்கட்டமைப்பு, அதற்கு ஆதாரமான பொருளியல் அடித்தளம் இரண்டும்தான் மனிதனின் பண்பாட்டை தீர்மானிக்கின்றன. ஆனால் அவற்றிலிருந்து மீறி எழுந்து அவன் உருவாக்கிக் கொள்ளும் அகத்தின் தேடலும் பண்பாட்டை தீர்மானிக்கிறது.

மனிதனின் பண்பாட்டுத் தன்னிலை என்பது முழுக்க முழுக்க பொருளியல்-சமூக அடித்தளத்தால் உருவானது அல்ல. அதற்கு தனக்கான தனித்தேடலும் தனியடையாளமும் இருக்கலாம். ஆகவே பொருளியல் அடித்தளமானது பண்பாட்டு மேற்கட்டுமானத்தை எப்படித் தீர்மானிக்கிறதோ அதற்கிணையாக பண்பாட்டு மேற்கட்டுமானமும் பொருளியல் அடிப்படையைத் தீர்மானிக்கக்கூடும்.

ஆகவே இலக்கியங்களை வெறுமே பொருளியல்- சமூகவியல் அடிப்படையில் அணுகலாகாது. அவை தனிமனிதனில் வெளிப்படும் தேடல்களும் கண்டடைதல்களும் அடங்கியவையே. அவற்றின் போக்கு தன்னிச்சையானது, ஆராயத்தக்கது, பொருளியல் அடிப்படையில் குறுக்கப்படவேண்டியது அல்ல. ஆனால் அது உள்ளொளியாலோ வேறுவகை ஆன்மிகத்தாலோ நிகழ்வது அல்ல. அதை மறைமுகமாக நிகழ்த்துவதும் பொருளியல்- சமூகவியல் சூழல்களே. அன்னியமாக்குதலினூடாக. அவற்றுக்கு புனிதமோ மர்மமோ ஒன்றுமில்லை.

இந்தக் கருத்துக்களில் இருந்து எழுந்த மேலதிக வினாக்கள் ஒரு இலக்கியப்பிரதி எப்படி உருவாகிறது என்பது. எது ஒரு மொழிக்கட்டுமானத்தை இலக்கியப் படைப்பாக ஆக்குகிறது? எது ஒரு நேரடியான பிரச்சார எழுத்தில் இருந்து இலக்கியப் படைப்பை வேறுபடுத்துகிறது? இலக்கிய ஆக்கமும் வாசிப்பும் அகவயமாக எப்படி நிகழ்கின்றன? உள்ளொளி என்றும் வடிவக்கச்சிதம் என்றும் அழகியலாளர்களால் சொல்லப்படுவன புறவயமாக எப்படி வரையறை செய்யப்படத்தக்கவை?

இக்கேள்விகளுக்கு விடை தேடி தமிழவன் அமைப்புவாதத்திற்குள் சென்றார். மிகயீல் பக்தினின் ரஷ்ய உருவவாதம், சசூரின் குறியியல் ஆகியவற்றினூடாக பின்னர் ரோலான் பார்த்தின் அமைப்புவாதத்தைச் சென்றடைந்தார். 1982ல் பாளையங்கோட்டையில் இருந்து வெளிவந்த ஸ்டக்சுரலிசம் என்னும் நூல் அவ்வகையில் முன்னோடியானது. தொடர்ச்சியாக அந்நூலை ஒட்டி விமர்சனங்களையும் விவாதக்குறிப்புகளையும் எழுதினார். அதன் வழியாக ஒரு முழுமையான ஊடுருவலை நிகழ்த்தினார்.

சிக்கலான புதியகொள்கைகள் கொண்ட அந்நூலின் உள்ளடக்கத்தை மிகச்சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். மொழி நேரடியாக சொல் – அதன் பொருள் என்னும் முறைப்படி இயங்கும் ஒரு கருவி அல்ல. அது ஒரு மாபெரும் கட்டமைப்பு. அது இரு பகுதிகளால் ஆனது. பரோல் எனச் சொல்லப்படுவது ஒலிக்குறிகளால் ஆன கட்டமைப்பு. அந்த ஒவ்வொரு ஒலிக்குறியும் சுட்டும் குறிப்பொருட்களால் ஆனது லாங் எனப்படும் அகமொழிக் கட்டுமானம். அதுவே பண்பாடு என்றும் உள்ளம் என்றும் சொல்லப்படுகிறது. உள்ளம், பண்பாடு ஆகியவை மொழியன்றி வேறல்ல.

ஒவ்வொரு சொல்லும் ஒரு குறி. அக்குறியால் குறிப்பிடப்படுவன சமூகத்தின் கூட்டான உள்ளத்தில் உள்ளன. ஒரு சொல்லை அச்சொல் குறிக்கச்சாத்தியமான அதிகபட்ச பொருள்விரிவுடன் அமைப்பதே படைப்புச் செயல்பாடு என்பது. அச்சொற்களால் ஆன புனைவுக்கட்டுமானமும் அவ்வாறே அமைக்கப்படுகிறது. அதுவே படைப்பின் நுண்செயல்பாடு, அதில் மர்மமோ புனிதமோ ஒன்றுமில்லை. மொழிதல் என்பதே சொற்களைக் கொண்டு அர்த்த உற்பத்தி செய்வதுதான். புனைவு என்பது மேலதிக அர்த்த உற்பத்தி செய்வது. அந்த அர்த்தமென்பது வாசிப்பின்போதுதான் முழுமையடைகிறது.

அமைப்பியல் என ஸ்டக்சுரலிசத்தை தமிழவன் மொழியாக்கம் செய்தார். பின்னர் வந்த அறிஞர்கள் அமைப்புவாதம் என்பதே சரி, அமைப்பியல் ஒரு கொள்கையே ஒழிய தனியான அறிவுத்துறை அல்ல என்று வகுத்தனர். அமைப்பியலின் கொள்கைகளின்படி ஒரு சொல்லானது சொல்லுதல், புரிந்துகொள்ளுதல் என்னும் இரு தளங்களிலும் எப்படிப் பொருளேற்றம் செய்யப்படுகிறது, என தமிழவன் விளக்கினார். தொடர்ச்சியாக நிகழும் இச்செயல் அதற்குப் பின்புலமாக உள்ள மொழி என்னும் மாபெரும் கட்டமைப்புக்குள் நிகழ்கிறது.

உதாரணமாக மலர்நெஞ்சம் என்னும் ஒரு சொல் கவிதையில் பயன்படுத்தப்படுகிறது. மலர் என்பதற்கு மொழியின் பண்பாட்டுப் பின்புலம் பல அர்த்தங்களை ஏற்கனவே கட்டமைத்துள்ளது. நெஞ்சம் என்பதற்கும் அவ்வாறே. மலர்நெஞ்சம் என்னும் இணைப்பு அவ்விரு அர்த்தப்புலங்களையும் இணைத்து புதிய ஒன்றை உருவாக்குகிறது. இது சாதாரண உரையாடலிலேயே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இலக்கியச் செயல்பாடு என்பது மேலும் பயிற்சி கொண்டவர்களான உள்வட்டத்தினருக்குள் நிகழும் திட்டமிட்ட நுண்மையான மொழிச்செயல்பாடுதான்.

தமிழவனுக்குப்பின் தமிழில் பின்அமைப்புவாதமும் பின்நவீனத்துவக் கொள்கைகளும் முன்வைக்கப்பட்டன. மொழியை ஓர் அமைப்பாக காணும் பார்வை மறுக்கப்பட்டது. ஒரு கூற்று என்பது ஒரு சொற்கட்டமைப்பு அல்ல ஒரு சொல்விளையாட்டு மட்டுமே, அதன் அர்த்த உருவாக்கமும் அர்த்த ஏற்பும் மாறிக்கொண்டே இருக்கின்றன என்னும் தெரிதாவின் பார்வை முன்வைக்கப்பட்டது. அவ்விவாதங்கள் எல்லாம் தமிழவன் தொடங்கிவைத்த மொழியியல் நோக்கின் நீட்சியாகவே இங்கே நிகழ்ந்தன.

தமிழவனின் இந்த ஊடுருவலின் மதிப்பு என்ன? அவை ஒரே சமயம் அழகியல் பார்வையில் இருந்த பொதுக்கூற்றுக்களையும் புனிதப்படுத்தல்களையும் உடைத்தன. இலக்கிய அழகியல் செயல்பாடு என்பது புரிந்துகொள்ள முடியாத அகவயநிகழ்வு மட்டுமே என்னும் பார்வையை அறைகூவின. அவற்றை மொழி என்னும் புற- அகக் கட்டுமானத்தின் விதிகளைக் கொண்டு விளக்கிவிட முடியும் என்று காட்டின. ஒரு கவிதை எப்படி எழுதப்படுகிறது, எப்படி பொருள் கொள்ளப்படுகிறது என்பதை பெரும்பாலும் காட்டிவிடமுடியும் என நிறுவின.

தமிழ் அழகியல் விமர்சனம் அதன்வழியாக அடுத்தகட்ட நகர்வை நோக்கிச் சென்றது. மிகச்சிறந்த உதாரணம் வேதசகாய குமார். அவர் தமிழவனின் எதிர்த்தரப்பு. ஆனால் பிற்கால விமர்சனங்களில் அவர் பண்பாட்டையும் படைப்புச் செயல்பாட்டையும் அகநிகழ்வாக மட்டுமன்றி சமூகப்பொருளியல் காரணிகளையும் கருத்தில் கொண்டு, பண்பாட்டுக் குறியீடுகளின் துணையுடன் விளக்கத்தலைப்பட்டார். அவரிடம் தமிழவனின் நேரடிச்செல்வாக்கு உண்டு.

அதேபோல முற்போக்கு நோக்கில் இருந்த எளிய அரசியல்மையப் பார்வையை மறுத்தன. அழகியலை புறவயமாக அணுகும் புதிய முறைமையை அவை காட்டின. ஆனால் துரதிருஷ்டவசமாக முற்போக்கு அணியில் அவை பெரிய அளவில் செல்வாக்கு என எதையும் செலுத்தவில்லை. அவர்கள் இலக்கியத்தை அணுகிய பார்வையில் மாற்றமும் உருவாகவில்லை. இன்னமும் அதே இயந்திரத்தனமான அரசியலணுகுமுறையே நீடிக்கிறது. சொல்லப்போனால் எதிரிகளும் கவனித்துப் பயிலும்படி தமிழவன் உருவாக்கிய பார்வையில் இருந்து மிகமிக பின்சென்று எளிய மேடையரசியல், வசைபாட்டு வெளியாக முற்போக்கு விமர்சனம் உன்று உருமாறியிருக்கிறது.

தமிழவனின் கோட்பாட்டு விவாதச் செயல்பாடுகளில் இரு நிலைகள் கவனிக்கத்தக்கவை. ஒன்று அவர் கோட்பாடுகளை அறிமுகம் செய்தபின் அவற்றை பழந்தமிழ் இலக்கியம் மற்றும் நவீன இலக்கியத்தின்மேல் செயல்படுத்திக் காட்டி எழுதிய கட்டுரைகளும் நூல்களும். தமிழவன் அமைப்புவாத அடிப்படைகளின்படி சங்ககால அழகியலையும் தொல்காப்பிய திணைக்கொள்கையையும் அணுகி விரிவான ஆய்வுகளை முன்வைத்திருக்கிறார். நவீன இலக்கிய விமர்சனத் தளத்தில் இருந்து சென்று திணைக்கொள்கையை புதிய முறையில் பார்த்து விளக்கிய முதல்விமர்சகர் அவர்.

ஏற்கனவே அதன் முன்னோடி வடிவை ஐயப்பப் பணிக்கர் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதியிருந்தாலும் தமிழவனின் பார்வை முழுமையாகவே மொழியியலின் அமைப்புவாத நோக்கில் அமைந்தது. தமிழர்களின் தனித்த அழகியல்பார்வை என அதை அவர் வரையறை செய்கிறார். பின்னர் அந்த நோக்கில் இருந்து மொத்த தமிழிலக்கிய மரபையும் தொல்காப்பிய மரபுடனான இணக்கம், விலக்கம் என்னும் அளவுகோலைக் கொண்டு விளக்குகிறார்.

கோட்பாட்டை அறிமுகம் செய்து, அதை பிரயோகித்தும் பார்த்து எழுதப்பட்ட இந்நூல்கள் தமிழ் பண்பாட்டு ஆய்வில் முக்கியமானவை. அவ்வரிசையில் மூன்று நூல்களை குறிப்பிடவேண்டும். புனைவு நிகழ்வதை- வாசிக்கப்படுவதை மொழியியல் கொள்கைகளின்படி விளக்க முற்படும் ‘படைப்பும் படைப்பாளியும்’ குறியியியலின் பார்வையில் தமிழ்தொல்லிலக்கியங்களை ஆராயும் ’தமிழும் குறியியலும்’, பிற்கால மொழிதல் கோட்பாடுகளின் அடிப்படையை முன்வைக்கும் ’தமிழில் மொழிதல் கோட்பாடு.’

தமிழவனின் கோட்பாட்டு விவாதங்களின் இரண்டாவது நிலை என்பது கோட்பாடுகளை அவர் இங்கே கொண்டுவரும்போது இயல்பாக உருவாகும் மாற்றம் அல்லது திரிபு. இதை புரிதல்குறைபாடு என நான் இருபதாண்டுகளுக்கு முன்பு மூலங்களுடன் ஒப்பிட்டு வாசிக்கையில் எண்ணினேன். இன்று அந்த மாற்றம் அல்லது திரிபின் வழியாகவே ஒரு கோட்பாடு இன்னொரு பண்பாட்டுச் சூழலில் செயல்பட முடியும் என நினைக்கிறேன். அந்த மாற்றம் அல்லது திரிபு அவருடைய படைப்பூக்கம் கொண்ட பங்களிப்பென இன்று மதிப்பிடுகிறேன்.

மிகவிரிவாகவே இந்த அம்சத்தை ஆராயவேண்டும். இங்கே ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். குறியியல் மொழிக்குறிகளை முதன்மையாக்கி பண்பாட்டை ஆராயும் அறிவுமுறை. தமிழவன் திணைக்கோட்பாட்டை ஆராயும்போது பண்பாடுக்குறிகள், வரையறைகளை முதன்மைப்படுத்தி மொழிக்குறிகளை அதன் தொடர்விளைவுகளாக பார்க்கிறார். திணைக்கோட்பாடு பற்றிய அவருடைய எல்லா குறிப்புகளிலும் இந்த உருமாற்றத்தைக் காணமுடிகிறது. அதாவது திணைப்பகுப்பு என்பது தமிழரின் வாழ்வில், வரலாற்றுக்கு முந்தைய காலத்தே நிகழ்ந்து மெல்ல மொழிக்குறியாக மாறிய ஒன்று என மதிப்பிடுகிறார்.

உண்மையில் அறிஞர் என்னும் நிலையில் இருந்து மூலச்சிந்தனையாளர் என தமிழவன் உருமாறும் இடம் இதுவே. இந்தத் தளத்தில் அவருக்குப் பின்னால் வந்த ஆய்வாளர்கள்தான் நிறைய நோக்கி எழுதியிருக்கவேண்டும், அவருடைய பங்களிப்பை வரையறை செய்திருக்கவேண்டும். என்னைப்போன்ற புனைவெழுத்தாளன், அழகியல் இலக்கிய விமர்சகன் செய்யவேண்டிய பணி அல்ல அது. அதை இங்கேச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழவன் தொடக்கம் முதலே கருத்துப்பூசல் [polemics] தன்மை கொண்ட கட்டுரைகளை நிறைய எழுதியிருக்கிறார். அவருடைய கோட்பாட்டு ஆய்வுகளின்மேல் கவனத்தை ஈர்க்க்க, விவாதத்தை முனைப்பாக்க அவை உதவின. ஆனால் எனக்கு இலக்கியத்திலுள்ள கருத்துப்பூசல்களுக்கு ஒரு சிறு பங்களிப்பு உண்டு என்னும் எண்ணம் இருக்கிறது. கோட்பாட்டு – தத்துவக் களத்தில் அவை என்ன பயன் அளிக்கின்றன என்று தெரியவில்லை. அவற்றை நான் கருத்தில்கொள்வதில்லை.

பின்னாளில் தமிழவன் தமிழ்த்தேசிய அரசியலை ஒட்டி நிறைய குறிப்புகளை எழுதியிருக்கிறார். அவர் முப்பதாண்டுக்காலம் முன்வைத்த ஆய்வுமுறைமைகள் இல்லாத எளிய அரசியல் துருவப்படுத்தல்களும் மேலோட்டமான அரசியல் நிலைபாடுகளும் கொண்டவை அவை. அவற்றையும் நான் கருத்தில் கொள்ளவில்லை.

தமிழவனின் ஆய்வுமுறைமையை நான் ஆழ்ந்து வாசித்து மேலும் மூலநூல்களை படித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். அதை எப்போதும் குறிப்பிடுவதுமுண்டு. என்னை ஓர் அழகியல்வாதியாக, தமிழவனுக்கு எதிர்நிலை கொண்டவனாகவே குறிப்பிடுவேன். அவ்வகையில் அவரிடமிருந்து பெற்றவற்றை தொகுத்துக்கொள்ள விழைகிறேன்.

புனைவின் உருவாக்கமும் வாசிப்பும் எந்நிலையிலும் தன் மர்மங்களை முழுமையாக கடந்துவிடுவதில்லை என நான் நினைக்கிறேன். அது ‘புனிதமானது’ அல்ல. அது ஒருசிலருக்கு மட்டுமே உரியது என்பது அசட்டுத்தனம். ஆனால் சொல்லித்தீராத ஒரு மர்மம் கொண்ட, வருங்காலங்களிலும் முடிவில்லாமல், விவாதிக்கப்படுகிற ஒன்று அது என்பதே என் புரிதல். அமைப்புவாதமும் குறியியியலும் அதை முற்றிலும் மர்மநீக்கம் செய்துவிட்டதாக தமிழவன் எண்ணுவது அவருடைய நிலைபாடு, அவ்வளவே.

அமைப்புவாதமும் பின்அமைப்புவாதமும் வந்து வலுவிழந்தபின்னர் மூளைநரம்பியலில் இருந்து அழகியலை வகுத்துரைக்கும் கொள்கைகள் வந்தன. ஆலிவர் சாக்ஸ், வில்லியனூர் ராமசந்திரன் போன்ற அறிவியலாளர்கள் அக்கொள்கைகளை மிக விரிவாக முன்வைத்தனர். இன்று அடுத்தகட்டமாக உயிரியல் சார்ந்து மூளையையே ஒரு தனி உயிரியாகக் கண்டு அழகியலை அதன் வெளிப்பாடு என வகுக்கும் உரையாடல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

தமிழவன் பேசிக்கொண்டிருந்தபோதே பின்நவீனத்துவத்தின் வரலாற்றுநோக்கு குறுகலானது என வரையறை செய்யப்பட்டுவிட்டது. தமிழவன் ஓர் அமைப்புவாதி என்னும் வகையில் மொழியில் உறையும் வரலாற்றை மட்டுமே அவர் கருத்தில்கொள்கிறார், அது அந்த அறிவுத்துறையின் நெறிகளுக்கு உகந்ததே. ஆனால் பின்அமைப்பியலுக்கு பின்னர் புதுசரித்திரவாதம் போன்றவை எழுந்து வந்து ஒட்டுமொத்த வரலாற்றொழுக்கை கருத்தில் கொண்டாகவேண்டும் என்ற நிலையை சிந்தனையில் உருவாக்கின.

முற்போக்குத் தரப்பினரின் மரபான வரலாற்றுவாதமும் அதன் விளைவான அறுதியான கூற்றுக்களும் இன்றைய இலக்கியத்தில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. வரலாற்றுப்பிரக்ஞை மேலும் விரிந்த வடிவில் மேலும் நுண்ணியவகையில் இன்றைய சிந்தனையில் பங்காற்றுகிறது. இன்றைய எழுத்தை வடிவமைப்பதே ஆசிரியனின் வரலாற்றுணர்வே. சென்ற இருபதாண்டுகளில் வெளிவந்து நூலகங்களில் நிறைந்திருக்கும் நூல்களை மேலோட்டமாக பாருங்கள், பெரும்பாலும் அனைத்துமே ஏதோ ஒருவகையில் வரலாற்றைக் கையாள்பவை. புனைவும் புனைவிலா எழுத்தும்.

எத்தனை நுண்ணிதின் சென்றாலும் உருவவாதம், அமைப்புவாதம், பின்அமைப்புவாதம் ஆகியவை அனைத்துமே அமெரிக்க பிரதிமையவாதம் அல்லது புதுத்திறனாய்வு முறையின் நீட்சிகள்தான். பிரதியை, அதன் மொழிக்கட்டமைப்பை மட்டுமே கருத்தில்கொண்டு ஆராய்பவை அவை. பிரதிக்குள் மிதமிஞ்சிச் செல்லும் வழியை தவிர்த்து அதை வரலாற்று அடுக்குகளுக்குள் வைத்துப்பார்க்கும் புதுவரலாற்றுப் பார்வை தமிழவன் அமைப்புவாதத்தை அறிமுகம் செய்த காலத்திலேயே வந்துவிட்டது.

வரலாறு என்பது ஒரு புறவயமான கட்டமைப்பு அல்ல. அது வரலாறுகளின் தொகுப்பு. வரலாறுகளின் மோதலும் முயக்கமும் நிகழும் முரணியக்கத்தின் வெளி. ஒவ்வொரு புனைவும் ஒரு துளி வரலாறுதான். வரலாற்றில் இருந்துகொண்டு வரலாற்றைப் புனையும் ஒரு தொடர்செயல்பாடே புனைவெழுத்து என்பது. புனைவின் சொற்களுக்கு பொருள்வெளியாக அமைவது வரலாறே. ஸ்டீஃபன் க்ரீன்பிளாட் முதலிய இலக்கியக் கோட்பாட்டாளர்களின் இந்த புதுவரலாற்றுநோக்கே இந்திய- தமிழ் இலக்கிய மரபை மதிப்பிடவும் ஆராயவும் உகந்தது.

இந்தியாவில் வரலாறுகள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மிக மேலோட்டமாகப் பார்த்தாலே இங்கே வைதிக, பௌத்த, சமண வரலாறுகளைக் காண்கிறோம். நாட்டார் வரலாறுகள் உள்ளன. புராண வரலாற்றிலேயே அசுரவரலாறு, நாக வரலாறு போன்றவை பிறவரலாறுகளுக்கு நேர் எதிரானவையாக உள்ளன. மகாபாரதம் என்னும் பெரும்பிரதியே ஒன்றையொன்று மறுத்து பின்னி விரியும் பலவகையான வரலாற்றுச் சரடுகளின் களம்தான். இன்றைய இந்தியாவே அவ்வாறு பலதிசைகளிலும் விரியும் வரலாற்றெழுத்துக்களின் பரப்புதான். புனைவெழுத்தாளன் நின்று எழுதுவது அந்தப் பெருங்களத்தில்தான். அவன் படைப்புகள் வாசிக்கப்படுவதும் அதைக்கொண்டுதான்.

இதுவே இன்றைய புனைவுகளை பன்முகத்தன்மை கொண்டவையாக, உள்விரிவு கொண்டவையாக, மீபுனைவுத்தன்மை கொண்டவையாக ஆக்கும் கூறு. இதுவே நவீனத்துவத்தைக் கடந்து வந்து தமிழிலக்கியம் அடைந்த இடம். நவீனத்துவத்தின் வரலாறற்ற தனிமனிதன் என்னும் உருவகம் முற்றாக மறுக்கப்படும் முறை. எண்பதுகளில் தமிழவன் போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட அமைப்புவாதம் வழியாக நான் வந்தடைந்த இடம் என இதையே சொல்வேன். இதில் தமிழவனுக்கு எந்தப்பங்கும் இல்லை. அவர் வரலாற்றையே கருத்தில் கொள்ளவில்லை. அவர் தன் நாவல்களில் புனைவுக்காக செயற்கையான வரலாற்றையே உருவகம் செய்கிறார்.

ஆனால் அவ்வாறு கடந்துவர எனக்கு தமிழவன் உருவாக்கிய விவாதக்களம் பெரிதும் உதவியிருக்கிறது. இலக்கிய உருவாக்கம், வாசிப்பு ஆகிய இருமுனைகளையும் கூடுமானவரை புறவயமாக விளக்கிக்கொள்ள அவருடைய மொழியியல்- குறியியல் சார்ந்த ஆய்வுமுறைமைகள் உதவின. முன்பு மழுங்கலாகச் சொல்லிவந்த பல தருணங்களை கூர்மையாகச் சொல்லும் கலைச்சொற்களை அளித்தன.

சொல்லப்போனால் தமிழவன் தொடங்கிவைத்த விவாதம் ரசனை விமர்சனத்தின் பார்வையையும் கலைச்சொற்களையும்தான் மாற்றியது. அவர் இடதுசாரியாக இருந்தாலும் அவரை இடதுசாரிகள் கடுமையாக நிராகரித்தனர், அவரது விவாதங்களில் அவர்கள் கலந்து கொள்ளவுமில்லை, அவர்களிடம் அவருடைய செல்வாக்கும் மிகக்குறைவே. இன்றும் அவர் அவர்களால் ஏற்கப்பட்டவராக இல்லை.

அழகியல் விமர்சனம் தன்னைச் சூழ்ந்திருக்கும் அறிவுவெளியில் இருந்து கருத்துக்களையும் கலைச்சொற்களையும் எடுத்துக்கொண்டு அவற்றை அந்தந்த அறிவுத்துறைகளில் கையாளும் அதே கறாரான பொருளில் கையாளாமல் உருவகங்களாகவும் அடையாளங்களாகவும் பயன்படுத்துகிறது. அவ்வகையில் இலக்கியப்பிரதி, பன்முகவாசிப்பு, சொல்லாடல், சொற்களன், உள்விரிவு என இன்றைய அழகியல் விமர்சனத்தின் கலைச்சொற்கள் தமிழவன் தொடங்கிவைத்த மாபெரும் விவாதத்தின் விளைவாக வந்தமைந்தவைதான்.

அழகியல் விமர்சன மரபில் தமிழவனின் அமைப்புவாத விவாதக்களம் உருவாக்கிய செல்வாக்கினால் விளைந்தவை என இவ்வாறு தொகுத்துச் சொல்லமுடியும்.

அ. அழகியல் விமர்சனம் அதன் ஆய்வுமுறையை பழைய அணியிலக்கண மரபில் இருந்து பெற்றுக்கொண்டது. ஆஸ்வாதனம் என சம்ஸ்கிருத மரபு சொல்லும் சுவையறிதல் முறையே அதற்குரியது. அம்முறையில் இருந்து அது ஐரோப்பா நோக்கி நகர்ந்தபோது ஐரோப்பிய இலக்கிய அழகியல் ஆய்வுமுறைமையில் இருந்து பகுத்து, அட்டவணையிடும் பாணியை பெற்றுக்கொண்டது. உதாரணம் சி.சு.செல்லப்பா. அதன்பின் பிரதி ஆய்வுமுறைமையை. உதாரணம், வேதசகாயகுமார்.

இந்த எந்த முறைமையிலும் எப்படி ஒரு பிரதி எழுதப்பட்டு பொருள் கொள்ளப்படுகிறது என்னும் பார்வை இல்லை. அதை அது ஆராயமுடியாததாக கருதியது. அதிகபட்சம் அது கருத்தில் கொண்டது ஆர்தர் கோஸ்லரின் ‘ஆர்ட் ஆஃப் க்ரியேஷன்’ போன்ற நூல்களைத்தான். தமிழவனின் விவாதங்களினூடாக அதை வரையறை செய்தேயாகவேண்டும் என்னும் கட்டாயத்தை உருவாகியது.

அ. அழகியல்விமர்சனத்தில் இருந்த மதம்சார் மனநிலைகளை விமர்சனத் தாக்குதல் வழியாக பின்னடையச்செய்ய தமிழவனால் இயன்றது.

ஆ. அழகியல்விமர்சனத்திற்கு பழைய ரஸசித்தாந்தம், வக்ரோக்தி, அலங்கார சாஸ்திரம் ஆகியவற்றில் இருந்து கொண்ட சொற்களே சற்று மழுங்கிய வடிவில் பயன்படுத்தப்பட்டன. மேலும் கூரிய நவீன கலைச்சொற்களை அமைப்புவாதம் அளித்தது.

இத்தனை ஆண்டுக்கால செயல்பாட்டைக் கொண்டு ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழவனின் கொடை என்பது இவ்வண்ணம் வகுத்துரைக்கத் தக்கது

அ. இலக்கியம் மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளை பொருளியல்-சமூகவியல் குறுக்கல்வாத நோக்கில் இருந்து விலக்கிப் பார்க்க முற்பட்ட முன்னோடியான முற்போக்குத் தரப்புச் சிந்தனையாளர் தமிழவன். பண்பாட்டின் தனித்த இயக்கத்தை ஏற்று ஆராய முற்பட்டவர்.

ஆ. பண்பாட்டின் இயங்குமுறையை புறவயமாக வகுத்துரைக்கும் மொழியியல், குறியியல் கோட்பாடுகளை தமிழில் அறிமுகம் செய்தவர்.

இ. அந்த ஆய்வுமுறைகளை பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து நம் படைப்புகள் மேல் செயல்படுத்தி காட்டியவர்

ஈ. அந்த ஆய்வுமுறைகளை தமிழ்ப்பண்பாட்டின் தனித்தன்மைக்கு ஏற்ப உருமாற்றிக்கொண்டவர். அந்த உருமாற்றம் வழியாக அவர் ஓர் அசலான சிந்தனையாளராக நிலைகொள்கிறார்.

[ 3 ]

தமிழவனின் புனைவுலகை மதிப்பிடும்போது முற்றிலும் எதிர்நிலையில் நின்றுதான் என் எண்ணங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. கோட்பாட்டு விவாதங்களிலும் அவருக்கு எதிர்நிலையிலேயே நின்றிருக்க விரும்புவேன். ஆனால் அங்கே அவர் தன் விரிவான அறிதல்கள் மற்றும் புறவயமான ஆய்முறை வழியாக என் மேல் செல்வாக்கு செலுத்துகிறார், என்னை மாற்றியமைக்கிறார். ஆனால் புனைவுகளைப் பொறுத்தவரை நான் அறிதலின் தளத்தில் ஆசிரியர்களை அணுகுவதில்லை. என் வழி, ஏற்கனவே சொன்னதுபோல, அழகியல் சார்ந்தது.

அழகியல் முற்றாகப் பகுப்பாய்வு செய்யப்படவோ, புறவயமாக வகுத்துவிடவோ முடியாதது. அதை இனிவரும் மூளைநரம்பியலாளர்கள் மேலும் துல்லியமாக விளக்கக்கூடும். மனிதமூளை என்னும் அமைப்பின் தனிவெளிப்பாடு அது என்பதை கடந்து உயிர்களின் மூளை என்னும் பேரமைப்பின் வெளிப்பாடு என அழகியலை விரித்துக்கொண்டே செல்கிறார்கள். அதை இனி என்னால் முழுமையாக வாசிக்கவோ விளங்கிக்கொள்ளவோ முடியாமலாகலாம். என் ஆர்வங்களின் திசை மாறிவிட்டிருக்கிறது. என் பார்வையை அகவயமான பார்வை என்றே நான் முன்வைக்கமுடியும்.

1985ல் தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் என்னும் நாவல் வெளிவந்தது. ஸ்பானிஷ் மாய யதார்த்த பாணியை தமிழில் அறிமுகம் செய்த படைப்பு அது. அவ்வகையில் தமிழுக்கு அது ஒரு வழிகாட்டி நூல். கோணங்கி போன்ற சிலரிடம் அது ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியது. ஆனால் நான் கப்ரியேல் கார்ஸியா மார்க்யூஸை வாசித்தபின் அதை வாசித்தேன். அது ஒரு எளிய நகல்படைப்பு என்றே எனக்கு பட்டது. இத்தனைக்கும் அது நான் நன்கறிந்த குமரிமாவட்ட நாட்டார் மரபின் தொன்மங்களின் சாயல்களைக் கொண்டிருந்தது.

இன்று மீண்டும் வாசிக்கையில் அதன் சிக்கல் என்ன என்று தெரிகிறது. மாய யதார்த்தம் என்பது அடிப்படையில் ஒரு சிறுவனால் எழுதப்படுவது- சிறுவனால் வாசிக்கப்படுவது. அதற்கான மொழியை அது அடையவேண்டும். தமிழவனின் நாவல் பிரக்ஞைபூர்வமாக கட்டமைக்கப்பட்டிருந்தது. மார்க்யூஸை ரசிக்கமுடிந்த என்னால் அதை ஒரு வகை ஜோடனையாகவே பார்க்கமுடிந்தது.

’சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ நாவலும் இதே சிக்கல் கொண்டது. அது மேலைநாட்டு இலக்கிய வகைமை ஒன்றை இங்கே அறிமுகம் செய்யும்பொருட்டு எழுதப்பட்டது. மிகுபுனைவை அது இங்கே கொண்டுவந்தது. ஆனால் இங்கே நமக்கு மிகுபுனைவுக்கு ஒரு பாணி உள்ளது. அது டெம்ப்ளேட் அல்ல. நாம் கனவுகாணும் வகை அது. நம்மில் கனவுகளை உருவாக்கும் சொல்முறை. சொற்களுக்கே அந்த கனவுத்தன்மை உண்டு. தெகிமொலா போன்ற பெயர்கள் எந்த இடத்திலும் நம்முள் உள்ள பிறவற்றை சென்று தொட்டு எழுப்பவில்லை.

தமிழவனின் ஆய்வு முறைமையைக் கொண்டே பார்த்தால் அந்நாவல்கள் உருவாக்கும் குறியீடுகளும் அடையாளங்களும் நம்முள் பல்லாயிரமாண்டுக் காலமாக உறையும் குறியீட்டுப் பெரும்பரப்பைச் சீண்டவில்லை. அதை திட்டமிட்டுச் செய்யமுடியாது. ஆனால் அவர் அவற்றை திட்டமிட்டுக் கட்டமைக்கிறார். அவரில் இருந்து நம்மில் அறிதலாக மட்டுமே அவை நிகழ்கின்றன. அவர் கனவுகண்டிருக்க வேண்டும். அக்கனவு மொழியில் இருந்திருக்க வேண்டும். அது என் கனவை சீண்டியிருக்கும். அது நிகழவில்லை.

ஜி.கே எழுதிய மர்ம நாவல்’ உம்பர்ட்டோ எக்கோவின் ‘நேம் ஆஃப் த ரோஸ்’ நாவலை அணுக்கமாக பின்பற்றி உருவாக்கப்பட்டது. எனக்குப் பிடித்தமான நாவல் உம்பர்ட்டோ எக்கோவின் ‘நேம் ஆஃப் த ரோஸ்.’ அதைப்பற்றி நிறைய எழுதியுமிருக்கிறேன். ஆனால் ஜி.கே.எழுதிய மர்மநாவல் எனக்கு உவப்பானதாக இல்லை. அதன் செயற்கையாக கட்டமைக்கப்பட்ட படிமத்தன்மை, அதன் போதாமை கொண்ட மொழிநடை ஆகியவற்றுக்கும் அப்பால் அதிலுள்ளது வரலாற்றுத் தன்மையின் போதாமை.

அது புனைவுக்காகச் செயற்கையான ஒரு வரலாற்றுப் புதிரை உருவாக்குகிறது. அதற்கும் இங்குள்ள வரலாற்றுக்கும் சம்பந்தமில்லை. இங்குள்ள வரலாற்றெழுத்தின் தர்க்கமுறைமைக்குள்ளேயே அது வரவில்லை. இங்கே பலநூறு வரலாற்றுப்புதிர்கள் உள்ளன. உம்பர்ட்டோ எக்கோவின் நாவலுடன் ஒப்பிட்டால் கொடுங்கல்லூர் பகவதி [கண்ணகி] ஆலயத்தின் கருவறையைச் சொல்லலாம். நான்குபக்கமும் கல்வைத்து மூடப்பட்ட அந்த மையக்கருவறை நாநூறாண்டுகளாக உள்ளே என்ன இருக்கிறதென்றே தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது.

அத்தகைய வரலாற்றுப்புதிர்களினூடாகச் செல்லும் ஒருநாவல் ஒரே சமயம் புனைவாக இருக்கிறது. மறுபக்கம் வரலாற்றெழுத்தை ஊடுருவி மாற்றியமைக்கிறது. உம்பர்ட்டோ எக்கோவின் நாவலின் செல்வாக்கை டான் பிரவுனின் டாவின்ஸி கோட் நாவல் வரை நாம் காணமுடியும். தமிழவன் ஜி.கே.எழுதிய மர்மநாவலை சமகால அரசியல் செய்திகள் பழையகால மேலோட்டமான வரலாற்றுச்செய்திகளுடன் கலந்து எழுதியிருக்கிறார்.

அவர் பின்னாளில் எழுதிய ‘வார்சாவில் ஒரு கடவுள்’, ’ஷம்பாலா’ போன்றவற்றை நான் வாசிக்கவில்லை. அவை சமகால அரசியலை விமர்சிப்பவை என குறிப்புகள் வழியாக அறிந்துகொண்டேன். தமிழவனின் நாவல்கள் மீதான என் விமர்சனத்தை நான் விரிவாக பதிவுசெய்ததில்லை. அதற்கு அவர் மேல் ஒரு கோட்பாட்டாளர் என்னும் முறையில் நான் கொண்டிருக்கும் மதிப்பே காரணம்.

என் தலைமுறை படைப்பாளிகளும் அடுத்த தலைமுறையினரும் அவரை குறிப்பிடத்தக்க நாவலாசிரியராகக் கருத்தில் கொண்டதில்லை. அது அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருப்பதை பேட்டிகளில் காணமுடிகிறது. அதை அவர் புறக்கணிப்பு என எண்ணுகிறார். ஆனால் கோட்பாட்டாளராக அவர் எப்போதுமே கருத்தில் கொள்ளப்பட்டார் என்பதை நாம் மறுக்கமுடியாது. 

அவர் நாவல்கள் எழுதி, அவற்றை தீவிரமான பற்றுடன் முன்வைத்தமையாலேயே தமிழ் நாவல்களில் நிகழ்ந்தவற்றை திறந்த உள்ளத்துடன் எதிர்கொள்ளவோ மதிப்பிடவோ முடியாதவராக, சற்று காழ்ப்பு கொண்டவராக ஆனார் என்று நான் எண்ணுகிறேன். அத்துடன் அவர் கோட்பாட்டு விமர்சனக் களத்திலிருந்தும் விலகிச்சென்று எளிய அரசியல்குறிப்புகள் எழுதுபவராக ஆனார். உண்மையில் தமிழவனை தமிழின் அடுத்த தலைமுறை புறக்கணிக்கவில்லை, அவர்தான் அவரை புறக்கணித்தார்.

தமிழவனின் நாவல்களில் புனைவுநிகழும் உளநிலை கூடவில்லை என்பதே உண்மை. அவர் புனைவு என்பது திட்டமிட்டுச் செய்யப்படும் ஓர் அரசியல் செயல்பாடு, ஓர் அறிவுச்செயல்பாடு என நினைக்கிறார். அவ்வாறு நினைக்கும் ஒரு சில நண்பர்களும் அவருக்கு உண்டு. அவர்கள் அவற்றைப்பற்றி எழுதித்தள்ளியிருக்கிறார்கள். அவர்கள் வழியாக தமிழவனை அணுகுவது மேலும் ஏமாற்றம் அளிப்பது.

பின்நவீனத்துவப் பார்வையைக் கொண்டு சொல்வதாக இருந்தாலும்கூட புனைவு என்பது A Raid into the Unconscious. படைப்பாளி தன்னுள் விதையென உறங்கும் காடுகளை மொழிபெய்து முளைக்கவைக்கிறான். அவனில் மொழிவழி நிகழும் ஒரு கனவு அது. அதில் அவனை மீறிய ஓர் அம்சம் உள்ளது. அது இருந்தாலொழிய அது இன்னொரு வாசகனின் கனவுக்குள், ஆழுள்ளத்திற்குள் ஊடுருவாது. அதைத் திட்டமிட்டு நிகழ்த்த முடியாது. நிகழாவிட்டால் ஒன்றுமே செய்யமுடியாது.

உண்மையில் அது எவ்வண்ணம் நிகழ்கிறது என்று பெரும்புனைவுகளை எழுதித்தள்ளியவர்களால்கூட சொல்லிவிடமுடியாது. ஆகவேதான் அரிய படைப்புகளை எழுதியவர்கள்கூட அடுத்து எழுதமுடியாமலாகிறார்கள். இருபது வயதில் தல்ஸ்தோய் எழுதிய கசாக்குகள் நாவலில் உள்ள அகச்செறிவு முதிர்ந்து, தத்துவஞானியென ஆனபின் எழுதிய ஃபாதர் செர்ஜியஸ் நாவலில் காணாமலாகிவிட்டிருக்கிறது. அக்கனவு நிகழாதவை தமிழவனின் நாவல்கள்.

தமிழவன் படைப்பும் படைப்பாளியும் கொண்ட உறவைப் பற்றி நிறைய எழுதியவர். அவர் அறியாத ஒன்றல்ல இது. ஆனால் மொழியில் அக்கனவை நிகழ்த்த மொழிப்பயிற்சியோ அறிவுத்திறனோ மட்டுமல்ல வேறொன்று தேவை. அவற்றை இப்படிச் சொல்கிறேனே. மொழிவழியாக கனவை எழுப்பிக்கொள்ளும் பயிற்சி. கொஞ்சம் உணர்ச்சிகர மூடத்தனம். கொஞ்சம் தர்க்கமற்ற அபத்தமனநிலை. கொஞ்சம் பித்து. கொஞ்சம் கட்டற்ற தன்மை.  கல்வி, கோட்பாட்டுத்தெளிவு, அரசியல் நிலைபாடு ஆகியவற்றை கடந்துசெல்லும் ஒரு தன்மை என அதைச் சொல்வேன்.

இப்படி விளக்குகிறேன். அத்தனை நாத்திகக் கருத்துக்களையும் கற்றபின்னரும் பூசாரி சாமிகொண்டாடும்போது மெய்சிலிர்ப்படைந்து அழுபவனிடம் இருக்கும் அசட்டுத்தனம் அது. திருவக்கிரகாளியின் ஆலயத்தில் கல்லாகிவிட்ட மரத்தைக் கண்டதும் பித்துப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டே இருக்கும் மனநிலை. இரு கவிஞர்களிடம் நான் கண்டது இது.

படைப்பாளியின் விழிப்புநிலை உள்ளத்தை, கல்வியை, சூழல்பயிற்சியை, தன்னுணர்வை கடந்து அவனுள் நிறைந்திருக்கும் ஆழுள்ளத்துக் கனவுகளை அவன் சென்றடைய முடிகிறது என்பதற்கான சான்று அது. அவனை மீறி அக்கனவு மொழிவழி வெளிப்பாடு கொள்கையில் இலக்கியமாகிறது. மொழிவழியாகவே இன்னொரு கனவை தொட்டெழுப்புகையில் பண்பாட்டில் வாழ்கிறது.

ஆனால் தமிழவன் அதை திரும்பத் திரும்ப நிராகரிக்கிறார். அவர் தன்னை தமிழின் சிந்தனையாளர்களுடனேயே அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆகவே அவருடைய நாவல்கள் வ.ராவின் கோதைத்தீவு, மறைமலை அடிகளின் கோகிலாம்பாள் கடிதங்கள், எஸ்.வையாபுரிப் பிள்ளையின் ‘ராஜி’  போன்ற நாவல்களின் வரிசையிலேயே வைக்கப்படத்தக்கவையாக உள்ளன. புனைவில் நிகழும் ஒரு மீறல் அவற்றில் நிகழவில்லை.

உண்மையில் அந்த மீறலை விளக்கவே தமிழவனின் அத்தனை கோட்பாடுகளும் தேவையாகின்றன. ஆனால் அத்தனை விளக்கிய பின்னரும் அவருடைய நாவல்களில் அவர் அதை அடையவில்லை. ஆகவே தமிழவனின் நாவல்கள் வடிவப்பயிற்சிகளாகவே நிலைகொண்டுவிட்டன.

அவ்வகையில்  நான் அவருடன் ஒப்பிடுபவர் மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன். அவர் பேரறிஞர். எழுத்தும் வாசிப்பும் நிகழும் முறை பற்றி எழுதிக் குவித்தவர். அமைப்புவாதம் பின்அமைப்புவாதம் பற்றி பலநூல்களை எழுதியவர். என் ஆசிரியர் என நான் கொள்பவர். ஆனால் அவர் கவிதைகளில் கவிதைக்கான கனவு நிகழவில்லை.

ஆயினும் தமிழில் நாவல் என்னும் வடிவின் சாத்தியக்கூறுகளை அறிமுகம் செய்தவை என்னும் வகையில் தமிழவனின் முதல்மூன்று நாவல்களும் இலக்கியப் பங்களிப்பாற்றியவை என்றே நினைக்கிறேன். முறையே மாய யதார்த்தம், மீபுனைவு, மாற்று வரலாற்றுப் புனைவு ஆகிய இலக்கியச் சாத்தியக்கூறுகளை அவை முன்வைத்தன.

ஆனால் தமிழிலக்கியத்தின் தேவை பெரும்பாலும் அவை சார்ந்ததாக இருக்கவில்லை. இங்கே எழுதவந்த தலித் படைப்பாளிகள் அப்பட்டமான யதார்த்தத்தை முன்வைக்கவே விரும்பினர். தமிழவனுக்கு இணையாக பின்நவீனத்துவ கொள்கைகளைப் பேசிய ராஜ்கௌதமனே தன்வரலாற்று நாவல்களையே எழுதினார். தமிழவனின் செல்வாக்கால் தமிழில் உருவான நாவல் என்றால் பா.வெங்கடேசன் எழுதிய தாண்டவராயன் கதையைச் சொல்லவேண்டும். தமிழவனின் மாற்று வரலாற்றெழுத்து நாவலாகிய ஜி.கே.எழுதிய மர்மநாவலின் செல்வாக்கு அதிலுண்டு.

தமிழவனின் புனைவுக்களப் பங்களிப்பு அவருடைய சிறுகதைகளில்தான். அவருடைய சிறுகதைகளிலுள்ள அரசியல்பகடிகள் கூரியவை. அவை நவீனத்துவச் சிறுகதைகளுக்குரிய இறுக்கமும் கூர்மையும் கொண்டவை என்னும்போது அவர் கற்றறிந்த பின்நவீனத்துவத்திற்கு அப்பால் அவருடைய ஆழுள்ளம் அவர் மாணவராக இருக்கையில் அறிந்த நவீனத்துவ அழகியலில் வேரூன்றியதோ என்னும் ஐயம் ஏற்படுகிறது.

கன்னடமொழிச் சூழலில் தமிழ் அரசியல் தலைவரின் வேடமிட்டு முச்சந்தியில் நின்றிருக்கும் எளிய தொண்டரின் அர்ப்பணிப்பின் அசட்டுத்தனமும் தூய்மையும் [பிடிக்காத வண்ணம்பூசப்பட்ட போலீஸ் வேன்], எந்த செயலையும் செய்யாமல் வெறுமே இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரம், படைப்புகளை மொழிபெயர்க்க ஆரம்பித்து பண்பாடுகளை அழிக்கும் அமைப்பு [மொழிபெயர்ப்பு நிறுவனம்]   என தமிழவன் சிறுகதைகளில் அழகிய பகடி உருவகங்களை உருவாக்கியிருக்கிறார்.

’மெழுகுதிரி எரிவதைப் பார்த்தேன்’ போன்ற கதைகள் எளிமையான இனிய கவித்துவம் கொண்டவை, நவீனத்துவச் சிறுகதை உச்சத்தில் இருந்தபோது எழுதப்பட்டவை போன்று கிறிஸ்தவக் கிராமிய வாழ்க்கையின் ஒரு துளியினூடாக ஒரு முழுமைப் பார்வையை முன்வைப்பவை. அவருடைய சிறுகதைகளை பற்றிய விரிவான ஒரு ஆய்வுநோக்கும் தெரிவும் எதிர்காலத்தில் செய்யப்படவேண்டும்.

[ 4 ]

ஓர் இலக்கிய முன்னோடியை மதிப்பிடுவதிலுள்ள சிக்கல்கள் பல. அவரிடமிருந்து கொள்வன கொண்டு, தள்ளுவன விலக்கியே மதிப்பிடமுடியும். அதில் ஓர் இரக்கமின்மை உள்ளது. ஆனால் வேறுவழியும் இல்லை. முற்றிலும் மறுக்கப்படுகையில் கூட அந்த மதிப்பீடு அவர்மேல் பெருமதிப்புடன் செய்யப்படுவதே.

மலையாள மார்க்சிய இலக்கிய விமர்சகரான எம்.என்.விஜயன் “மிக அதிகமாகப் புல் தின்று கொஞ்சமே பால்கொடுக்கும் விந்தையான பசு இலக்கியக் கோட்பாட்டியல்’ என்று ஓர் உரையை தொடங்கினார். இலக்கியம் நிகழ்வது ஆழுள்ளத்தில், கனவில். அதை வகுப்பதும் மதிப்பிடுவதும் புறவயமான தர்க்கமொழியில். இம்முரண்பாடே இலக்கியக் கோட்பாட்டியலின் பெரும் அறைகூவல். பெருமழையின் மிகச்சிறு பகுதியே நிலத்தடிநீராகிறது. இலக்கியக் கோட்பாட்டியலில் ஒரு சிறுதுளியே இலக்கியப் பிரக்ஞையை சென்றடைகிறது.

ஆகவே சூழலின் இலக்கியப் பிரக்ஞையுடன் மோதி, அதை உடைத்து உட்சென்று அதை நிலைமாற்றம் செய்வதென்பது ஒரு வாழ்நாள் பெரும்பணி. தளர்வில்லா அறிவூக்கத்துடன் பல ஆண்டுகள் செய்தாலொழிய பயனளிக்காதது. அதைச் செய்து முடித்தவர்கள் இலக்கியச் சூழலில் தலைமுறைக்கு ஒருவரே. அல்லது சிலபோது பலதலைமுறைக்கு ஒருவர். தமிழவன் தமிழிலக்கியச் சூழலில் அந்த இடம் பெறுபவர். அவ்வகையில் அவர் ஒரு வரலாற்று நாயகன்.

ஆனால் அச்சாதனை கண்கூடானது அல்ல. இன்னொரு இலக்கிய விமர்சகர், கோட்பாட்டாளர் அதை கண்டறிந்து சொல்லமாட்டார். ஏனென்றால் அவர் முந்தைய கோட்பாட்டாளரை மறுத்து முன்செல்பவராகவே இருப்பார். விந்தை என்னவென்றால் ஓர் இலக்கியக் கோட்பாடு ஏற்கப்பட்டதுமே இயல்பானதாக ஆகிவிடுகிறது. அதன்பின் வாழ்நாள் பஙக்ளிப்பாக அதை உருவாக்கி நிலைநிறுத்தியவர் சட்டென்று தேவையற்றவராக ஆகிவிடுகிறார். போலியோ ஒழிக்கப்பட்டபோது அதற்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவமேதை மறக்கப்பட்டார் என்பது வரலாறு, அதுபோல.

அச்சாதனையை அதனால் அகநகர்வு பெற்ற இன்னொரு புனைவெழுத்தாளனே சொல்லமுடியும். ஏனென்றால் அவன் தன் புனைவை நிகழ்த்திய இலக்கியத் தன்னுணர்வின் உருவாக்கத்தை கூர்ந்து பார்ப்பான் என்றால் அந்த முன்னோடியான இலக்கியக் கோட்பாட்டாளரை அங்கே கண்டடைவான். அவ்வாறு நான் என்னில் கண்டடைந்த தமிழவனையே இங்கே மதிப்பிட்டிருக்கிறேன். அவருக்கு என் வணக்கம்.

***

முந்தைய கட்டுரைசமணர் கழுவேற்றம்
அடுத்த கட்டுரைமுதற்கனல் அன்னையரின் கதை