«

»


Print this Post

மதுபாலா


‘நான் கடவுள்’ படப்பிடிப்புக்காக தேனி சென்றிருந்தபோதுதான் மதுபாலாவைப் பார்த்தேன். டைரக்டர் இருக்கைக்கு அருகே ஒரு சிறிய நாற்காலியில் கையில் ஒரு மிட்டாயுடன் அமர்ந்திருந்தாள். வட்டமான முகம். சிரிக்கும்போது இடுங்கும் கண்கள். சிறிய குழந்தைப் பற்கள். மூன்றடி உயரம் இருக்கும். கைகள் கால்கள் எல்லாமே குழந்தைகள் போல குண்டுகுண்டாக இருந்தன. ஒருவயதுக்குழந்தை ஒன்று இரண்டுமடங்கு வளர்ச்சி அடைந்துவிட்டது என்றுதான் முதலில் நினைத்தேன். இல்லை, மதுபாலாவுக்கு வயது பதினேழு.

ஆனால் அவள் மன வளர்ச்சி ஒருவயதுக்குழந்தைக்கு உரியதுதான். ·பீடிங் பாட்டிலில் டீ சாப்பிடுவாள். காலையில் ஒரு பூரி. மதியம் இரண்டு இட்லி. மாலையில் மீண்டும் இரண்டு இட்லி. பால் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாள். சிரிப்பு அழுகை கைசுட்டுதல் ஆகியவைதான் மொழி. அவ்வப்போது ‘ங்கே’ ‘ப்போ’ ‘ப்பாத்தி’ போன்று சில மழலைச்சொற்கள் உண்டு. மதுபாலா பதினைந்துவருடங்களாக ஒருவயதிலேயே திகைத்து நின்றுவிட்டிருந்தாள்

நான் கடவுள் படத்தில் மதுபாலா குருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தாள். ராமப்பனாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன் அவளை எந்நேரமும் தூக்கி வைத்திருப்பார். ஊட்டுவார் கொஞ்சுவார். அவருடைய பேத்தி போல அப்படத்தில் அவள் வருவாள். அவளது அழகிய அண்மைக்காட்சி சிரிப்புகள் பல படத்தில் வருகின்றன. ஒரு காட்சியில் விக்கிரமாதித்யன் அழும்போது அவள் கண்ணீரைத்து ப்பாள். அவளுக்கு சினிமா என்றால் என்னவென்றே தெரியாது. அவள் குழந்தை மனம் இயல்பாகவே துயரை விரும்புவதில்லை, அவ்வளவுதான். அது அன்பை மட்டுமே அறிந்தது.

மதுபாலாவுக்கு சொந்த ஊர் தேனிதான். மதுபாலாவின் அப்பா அவள் பிறந்ததுமே விட்டுவிட்டுச் சென்றுவிடார். அம்மாவும் சில வருடங்களிலேயே வேறு ஒரு துணையைத்தேடிக்கொண்டாள். மதுபாலாவும் அவள் அண்ணாவும் பாட்டியால் கஷ்டப்படு வளர்க்கப்படுகிறார்கள். பாட்டிக்கு தொழில் என ஏதும் இல்லை. பலர் பலவிதமாக உதவிசெய்கிறார்கள். அதை பிச்சை என்று சொல்லமுடியாது

 

 

 

மதுபாலாவின் சிரிப்பு மிக மனம்நெகிழச்செய்வது. பரிபூரணமான குழந்தைத்தன்மை அதில் உண்டு. மனிதர்களைக் கூர்ந்து நோக்கிக்கொண்டே இருக்கிறாள். பெரும்பாலான மனிதர்கள் அவளுடைய சப்பைமூக்கு கொண்ட குழந்தைமுகத்தின் அழகில் மயங்கி அவளிடம் அன்பாகவே இருக்கிறார்கள். ஆகவே மதுபாலாவுக்கு மனிதர்களை மிகவும் பிடித்திருக்கிறது. நாம் அவளைப் பார்ப்பதைக் கண்டால் நம் கண்களைச் சந்திப்பாள். உடனே பிரியம் அவளுக்குப் புரிந்துவிடுகிறது. பின் ஒரு பிள்ளைச் சிரிப்பு.

 

 

 

நான் கடவுள் குழுவில் இருந்த காலகட்டம் மதுபாலாவின் வாழ்க்கையில் ஒரு பொற்காலம் என்பது வளுக்குத்தெரியாது.. குழுவில் எல்லாருக்குமே அவள் ஒரு செல்லம். அவளை விதவிதமானவர்கள் தூக்கிவைத்து கொஞ்சினார்கள். மிட்டாயும் பிஸ்கெட்டும் கொடுத்தார்கள். ”மதுபாலா சலாம் சொல்லு” மதுபாலா கண்களை இடுக்கிச் சிரித்து ”சாம்” என்று தன்  பொத்துபொத்துக் கையால் நெற்றியை தொடுவாள்.

மதுபாலாவின் பாட்டி படப்பிடிப்பில் ஓரமாக இருப்பாள். பள்ளிக்குச் செல்லும் தம்பி படப்பிடிப்புச் சாப்பாட்டுக்காக மதியம் ஓடிவந்துவிடுவான். அக்காவும் தம்பியும் என்று சொல்லவேண்டும். அவன் மதுபாலாவை விட ஆறேழு வயது இளையவன். ஆனால் மதுபாலாவுக்கு ஏது வயது? அண்ணன் என்றுதான் சொல்வோம். அவர்கள் மிக நெருக்கம். அண்ணன் அருகெ எஇருந்தால் மதுபாலா பிறருக்கு அண்ணைச் சுட்டிக்காட்டியபடியே இருபபள். அவன் எனன் செய்தாலும் சிரிப்பாள்.

 

மதுபாலா படப்பிடிப்பில் இருக்கும் தகவல் தெரிந்ததும் அவள் தகப்பன் அவளுக்கு கூலிபெற்றுச் செல்ல தேடி வந்தான். பாட்டியிஅம் வந்து பணம் கேட்டு அடம்பிடிக்கிறான் என்று தெரிந்ததும் அவனை உடனே தன்னிடம் வரும்படி பாலா சொன்னார். ஆள் நல்ல புத்திசாலி. அப்படியே தாவி பாலம் வழியாக தப்பி ஓடிவிட்டான்.

மதுபாலாவுக்கு பால் நினைப்பு அவ்வப்போது பீரிட்டுக்கிளம்பும். ”பா” என்று சொல்லி  உணவு பரிமாறும் பையனை கைகாட்டுவாள். தட்டு போட்டு கால் சப்பணமிட்டு அமர்ந்து இருகைகளாலும் ஆவலுடன் சாப்பிடுவாள். எப்படியோ அந்த குழுவில் பாலாதான் முக்கியமானவர் என்று அவளுக்கு புரிந்து விட்டது. பாலா அவளைக் கொஞ்சுவது இல்லை. அவருக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை. ஆனால் சின்னக்குழந்தைகள் கண்களை நோக்கியே பிரியத்தைக் கண்டுகொள்கின்றன. மதுபாலா எப்போதும் பாலா அருகிலேயே இருக்க விரும்புவாள்.

அவளுக்கு பொதுவாக பாலா எடுக்கும் சண்டைக்காட்சிகள் பிடிக்கவில்லை. ஆனால் அவள் பெரும்பாலும் தன் முன் உள்ள ஏதாவது ஒன்றில் ஆழ்ந்திருபபள். பாலா அவளுக்கு கறுப்புக்கண்ணாடி, பம்பரம், பொம்மை என்று ஏதாவது கொடுப்பார். இல்லாவிட்டால் சிகரெட் லைட்டர்.  ஒன்றும் இல்லாவிடால் இயக்குநருக்கான மைக். அவளுக்கு ஒரு இலை கிடைத்தாலே போதும் விளையாடுவதற்கு.

கட்டைகளால் செய்யபப்ட ஒரு பொம்மைப்பாம்பு ஒருவரிடமிருந்தது. பாலா அதை வாங்கினார். அது அசைவது உண்மையான பாம்பு நெளிவதுபோலவே இருக்கும். பாலா அதை மதுபாலாவிடம் காட்டினார். அவள் அரண்டுபோய் மூலையில் ஒடுங்கினாலும் சில நிமிடங்களிலேயே அது பொம்மைப்பாம்பு என்று புரிந்துகொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். பின்னர் ஒருநாள் முழுக்க அவளுக்கு அந்த பாம்பு உற்சாகத்தை தந்துகொண்டே இருந்தது. சிரிப்பு பீரிட்டு வந்தது. எல்லாரையும் ஓடி ஓடி பயமுறுத்தினாள்.

பூஜா வரும்போது மதுபாலாவுக்கு சாக்லேட்டுடன் மட்டுமே வர முடியும். கையில் சாக்லேட் வாங்கியதுமே மதுபாலா தன் அண்ணாவுக்கும் கொடுக்கச்சொல்லி கைந்நீட்டுவாள். கொடுக்காவிடால் அவள் சாப்பிடமாட்டாள். மதுபாலாவுக்கு சாக்லேட் கொடுத்ததுமே மும்பை ஒப்பனைக்காரர் வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்து பூஜா அங்கே போய்விட்டார். அண்ணனுக்கு சாக்லேட் கொடுக்கப்படவில்லை என்று கண்டதுமே மதுபாலாவின் முகம் வாடிவிட்டது.

என்னிடம் அவள் அண்ணனைச் சுட்டிக்காட்டினாள். நான் என்னிடம் சாக்லேட் இல்லை என்றேன். அவளுக்கு துக்கம் தாங்கவில்லை. அண்ணாவை நோக்கி கைநீட்டி ‘இந்தா’ என்று தன் சாக்லேட்டை நீட்டினாள். அவன் உடனே பாய்ந்து அதை வாங்கிக்கொண்டு ஓடினான். மதுபாலா கண்களை இடுக்கி கைநீட்டி சுட்டிச் சிரித்தாள்.

என் மனம் என்னவோ ஆகியது. உடலிலும் மனத்திலும் எந்த வளர்ச்சியையும் இயற்கை அளிக்கவில்லை. ஆனால் பாசம் மட்டும் இயற்கையை மீறி வளர்ந்திருக்கிறது. பெரும் பறாங்கற்களுக்கு அடியில் இருந்து சிறிய செடிகள் வளைந்து முளைவிட்டு மேலெழுவதைக் கண்டிருக்கிறேன், அதைப்போல

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/1504

4 pings

 1. நான் கடவுள் - திரை விமர்சனம் « Share Hunter

  […]        கதை நாயகர்களில் ஒருவரான அந்த அழகிய பாப்பாவை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருப்பதை படிக்க மதுபாலா. […]

 2. jeyamohan.in » Blog Archive » மதுபாலா:கடிதங்கள்

  […] February 9, 2009 – 12:34 am வணக்கம் குரு.,  மதுபாலா பற்றிய கட்டுரை வாசித்தவுடன் என்னமோ […]

 3. jeyamohan.in » Blog Archive » நான் கடவுள், கடிதம்

  […] மதுபாலா  கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]

 4. மதுபாலா:கடிதங்கள்

  […] Share வணக்கம் குரு.,  மதுபாலா பற்றிய கட்டுரை வாசித்தவுடன் என்னமோ […]

Comments have been disabled.