பார்ப்பான், பார்ப்பவன்- ஒரு திரிபு

பார்ப்பான் பிறப்பொழுக்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

‘பார்ப்பான் பிறப்பொழுக்கம்’ குறளுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி வேத மத தரப்பு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

திருக்குறளுடைய கருத்துக்கள் எவ்விதத்திலும் வேத மத கோட்பாட்டுக்களுக்கு முரணல்ல என்று பல குறள்களை மேற்கோள் காட்டுகிறார்.

பார்ப்பான் என்ற சொல்லுக்கு பார்ப்பவன் என்றே பொருள் சொல்லி,  எதற்கு ஞான திருஷ்டி கொண்ட ரிஷிகளை ‘seer’ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்களோ  அதே பொருள் கொள்ள வேண்டும் என்கிறார்,

தன் குல ஆசாரத்தை விட்டவனை வேத வேதாந்தங்கள் காப்பாற்றாது என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதை ஒட்டியே வள்ளுவர் குறள் செய்திருப்பதாக விளக்கம் அளிக்கிறார்.

முழு விளக்கம் தெய்வத்தின் குரல் நூலில் இணையத்தில் தேடினால் கிடைக்கிறது.

– வைகுண்டம்

மதுரை

அன்புள்ள வைகுண்டம்,

பாடல்களைப் பொருள்கொள்வதில் வாசிப்புச் சுதந்திரத்திற்கு இடமுண்டு. எப்படி? படிமங்களை கற்பனையால் வளர்த்தெடுப்பதில். சொற்களின் வைப்புமுறையை வைத்து பொருள்கொள்வதில், சொற்பொருள் கொள்வதில். இவை மூன்றினூடும் கவிதை முன்வைக்கும் அறிதலும் அனுபவமும் பெருகவேண்டும், சுருங்கலாகாது.

சொற்பொருள் கொள்ளும் நெறி என்ன? அச்சொல்லுக்கு அவ்வண்ணம் பொருள்கொள்ள அந்தக் காலகட்டத்து சொல்முறைமை ஒத்துச்செல்கிறதா என்று பார்க்கவேண்டும். உரிய அகராதிகளில் நிகண்டுக்களில் அச்சொற்பொருளுக்கு ஆதாரமுண்டா என்று பார்க்கவேண்டும். முந்தைய நூல்களில் அச்சொல் அவ்வண்ணம் பயின்று வந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்,

ஆனால் கருத்தியல்சார்ந்து, உள்நோக்குடன், பாடல்களை ஆராய்பவர்கள் அவ்வண்ணம் செய்வதில்லை. உதாரணம் ஞானசம்பந்தரின் திருவுளப்பத்து பாட்டில்  ‘அமண் சமணர் கற்பழிக்கத் திருவுளமே’ என்று வருகிறது. அதை சமகாலப்பொருள்கொண்டு சமணப் பெண்டிரை கற்பழிக்க ஞானசம்பந்தர் ஈசனிடம் வரம்வேண்டினார் என பேசிப்பரப்பி, இன்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கற்பழித்தல் என்பது நவீன நாளிதழ்கள் ரேப் என்பதற்குச் சமானமாக உருவாக்கிய சொல்லாட்சி. தினத்தந்திச் சொல் அது. பழங்காலத்தில் அந்த பொருள் இல்லை. கற்பு என்றால் கல்வி என்றே முதற்பொருள். எழுதாக்கற்பின் நின்நூல் என குறுந்தொகை சொல்வது எழுதாமல் கற்பது என்ற பொருளில்.

சமணர் மந்திரநூல்களில் வல்லவர்கள், அக்கல்வியை வெல்ல ஆயுதமாக சிவனருள் அமையவேண்டுமென ஞானசம்பந்தர் கோருகிறார். வாதுக்குச் செல்ல அனுமதி கோரும் பாடல் அது. சமணர்கள் சபைகளில் பெண்களை கொண்டுவருவதில்லை. ஆண்களை கற்பழிக்கும் வழக்கம் பொதுவாக இல்லை. ஆனால் இந்த அபத்தத்தைப் பேசுபவர்களுக்கு எந்த கூச்சமும் இல்லை.

அந்தக் கூச்சமில்லா பொருள்கோடலின் இன்னொரு தரப்பு இது. பார்ப்பான் என்னும் சொல் பார்ப்பவன் என்னும் பொருளில் குறள் காலகட்டத்து நூல்களில் எதிலும் கையாளப்பட்டதில்லை. ஞானிகள் அவ்வாறு கூறப்பட்ட முன்னுதாரணமே இல்லை. ஞானி,பரமஹம்சர்,அவதூதர், சித்தர் என பல பெயர்கள் உள்ளன. பார்ப்பவர் என்ற பொருளில் எச்சொல் உள்ளது?

ஆங்கிலத்தில் seer என்ற சொல் உள்ளது. அதன் பண்பாட்டுவேர் இருப்பது கிரேக்க மரபில். கிரேக்க மரபில் உச்சகட்ட மத அதிகாரம் கொண்டவர்கள் தெய்வங்களை கண்டு உரையாடி குறிசொல்பவர்கள். அவர்களை clairvoyant, oracle என்றெல்லாம் சொல்கிறார்கள். அதில் ஒரு சொல் seer. அது அங்கிருந்து கிறித்தவ மெய்யியலுக்கு வந்தது.

பின்னாளில் ஆங்கிலேயர் இந்துமெய்யியலை மொழியாக்கம் செய்தபோது இங்கிருந்த ஞானி, அவதூதர், பரமஹம்சர் போன்ற சொற்களுக்கு அவர்களுக்கு இணைச்சொல் இல்லாமையால் seer என்னும் சொல்லை கையாண்டனர். அச்சொல்லுக்கு இந்து மெய்ஞானமரபில் பண்பாட்டுப்பின்புலமே இல்லை.

அச்சொல்லை மீண்டும் தமிழுக்கு மொழியாக்கம் செய்து பார்ப்பவன் என்றாக்கி பார்ப்பான் என மாற்றி இக்குறளுக்கு பொருள்கொண்டிருக்கிறார். அதன் நோக்கம் ஒன்றே. அதாவது மெய்ஞானியாக இருந்தாலும்கூட பிறப்புக்குரிய ஒழுக்கநெறிகளை கடைப்பிடிக்கவேண்டும் என்ற ஆசாரவாதத்தை முன்வைப்பது. அதற்காக மறப்பினும் ஒத்துக்கொள்ளலாகும் என்ற வரியை விட்டுவிடுகிறார். அவதூதர்கள் எதை மறக்காமலிருக்கவேண்டும்?

சுருக்கமாகச் சொன்னால், ரமணராக இருந்தாலும் சந்தியாவந்தனம் செய்தாகவேண்டும் என்று சொல்லவருகிறார். பிராமணச் சடங்குகளை முறையாகச் செய்யாமையால் ராமகிருஷ்ண பரமஹம்சர் கெட்டவர்தான் என்று நிறுவ விரும்புகிறார்.ஊரிடும் சோறு, துணிதரும் குப்பை என இங்கே வாழ்ந்து மறைந்த சித்தர்களும் அவதூதர்களும் நெறிபிழைத்த வீணர்கள் என்கிறார். அதை நம்புகிறவர்கள் அந்த ஆசாரவாதத்திற்குள் செல்லலாம். எனக்கு அவர்கள் ஆயிரம் காதம் அப்பால் நிற்பவர்கள். அவர்களிடம் பேச ஒன்றுமில்லை.

இக்குறள் இல்லறவியலில், ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் வருகிறது. இது மெய்ஞானத்தைப் பேசவில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஇறகிதழ் தொடுகை
அடுத்த கட்டுரைஇரண்டு அன்னப்பறவைகள் – அருண்மொழி நங்கை