உச்சிக்கிழான் எழில் – கடலூர் சீனு

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

இனிய ஜெயம்

கடந்த ஞாயிறு காலை நடுவீரப்பட்டு நண்பர்களுடன் கோயில் பண்பாட்டில் துலங்கும் சௌரத்தின் தடங்கள் சிலவற்றை கண்டு வருவோம் என முடிவு செய்து கும்பகோணம் நோக்கிக் கிளம்பினேன்.

ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில் ஷண்மத சங்கிரஹ அடிப்படையில் சங்கரர் ஒருங்கிணைத்த ஆறு மதங்களின் தமிழ்நாட்டுக் கலை வெளிப்பாட்டினை, அதில் சௌரத்தின் முதற்கடவுளை, அதே ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில் எழுந்த திருச்சி மலைக்கோட்டை பல்லவர் குடைவரையில் பார்க்கலாம். தமிழ்நாட்டின் ஒரே மிகப்பெரிய நின்ற திருக்கோல ஆதவன் சிலையை அந்தக் குடைவரையில் காண்கிறோம்.

அதன் பிறகு மெல்ல மெல்ல சிவசூரியர் வழியே சைவத்தாலும் சூர்ய நாராயணர் வழியே வைணவத்தாலும் உட்செறிக்கப்பட்டு அவற்றின் ‘உள் மெய்’ கட்டமைப்பில் சௌரம் சென்றமைய, திருக்காட்டுப் பள்ளி போன்ற சில சிவாலயங்களில் சூரியன் தனி சந்நிதி கொண்டு எழுந்தருளக் காண்கிறோம். அத்தகு சில சௌரத் தடங்களைக் கண்டு வருவோம் எனப் புறப்பட்டோம்.

முதல் நிறுத்தம் வீராணம் ஏரி. தமிழ்நாட்டின் பெருமிதங்களில் ஒன்றான சிரஞ்சீவியான சோழக் கொடை. இன்னும் சில தினங்களில் ஆடிப்பெருக்கு. இவ்வேரிக்கு நீர் வந்து நிறைக்கும் தடமெலாம் மங்கலம் திகழும். வந்தியத்தேவன் குதிரை செலுத்திய தடத்தில்  பொலிரோவில் மெல்ல ஊர்ந்தபடி வலது பக்கம் வேடிக்கை பார்த்தபடியே சென்றோம். காலை 8 மணி, சாம்பல் மேகம் போர்த்திய ஊமை வெயிலில் வெள்ளி மின்னும் பரப்புடன் ஏரி. கரைகளில் அங்காங்கே உறைந்து நிற்கும் படகுகளைக் கடந்து அக்கரை நோக்கிப் பறக்கும் கொக்குகள். எதிர்க்கரைப் பசுமை விரிவு. பார்க்கப் பார்க்க அகம் விரியவைக்கும் விரிவு. சற்று நேரம் இறங்கி நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, அடுத்து அருகே இருக்கும் அவ்வளவாக வெளியே தெரியாத, மிக அழகிய சோழக்கலை மேன்மைகளில் ஒன்றான 1110 இல் குலோத்துங்க சோழனால் எழுப்பப்பட்ட மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் சென்றடைந்தோம்.

தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில். அப்போதுதான் அர்ச்சகர் வந்து கோயிலைத் திறந்தார். மிகச்சிறிய மிக அழகிய தேர்வடிவக் கோயில். தமிழ் நிலத்தில் விமானம் கருவறை ஆதிட்டானம் உள்ளிட்ட மொத்த அமைப்பும், சக்கரங்கள் பூட்டி குதிரைகள் இழுக்கும் தேர் வடிவில் அமைந்த (கரக் கோயில்) ஒரே கோயில் இது மட்டுமே. விமான வடிவம், பஞ்சாரக் கூடுகள், யாளி வரிசை, போதிகை, கபோதங்களின் சிற்ப வரிசை, இவை எல்லாமே அமைந்த விதம் பிற சோழக் கோயில்கள் போலல்லாது, கிட்டதட்ட கர்நாடகா இத்தகி மகாதேவர் கோவில் விமானம் போன்ற அமைப்பு. அங்கே சோப் ஸ்டோன் கல்லில் வடித்த வடிவங்களை இங்கே கருங்கல்லில் முயன்று பார்த்ததை போல ஒரு வகைமை.

விஷ்ணு, அவரின் கீழே கருடன், கங்காதரர், (மிக அழகான இந்தப் படிமையில், கலைஞன் சிவ சக்தியின் காதல் நாடகம் ஒன்றை வடித்திருக்கிறான். நாதன் தலையில் வந்து சேரும் கங்கை கண்டு, நாதனுடன் ஊடல் கொண்டு உமை அத் திருவிளையாடலுக்கு பாராமுகம் காட்டி நிற்கிறார்) ஆலிங்கன மூர்த்தி என ஒவ்வொரு சிற்பமும் பேரழகு. அருகே தேவேந்திரன். இந்திரன் வந்து ஈசனை வணங்கிய தலம். மூலவர் அமிர்த கடேஸ்வரர், அன்னை மின்னல் நாயகி. சங்க காலத்தில் புகழ் கொண்டு விளங்கிய இந்திர வழிபாடு, மெல்ல சைவத்துள் சென்று கரையும் தடம் என இக்கோவிலை அணுகலாம். இந்திரனின் அமுதமும் மின்படையும் சிவமும் உமையும் என்றாகும் தலம். மெல்லக் கோவிலைச் சுற்றி வருகையில் கண்டேன். ஜேஷ்டா தேவிக்கு ப்ரகாரத்தில் சிலை. முற்றிலும் சேலை சுற்றி. முகத்தை மட்டும் ஏன் விட்டு வைத்தார்களோ. அவ்வாறே தக்ஷிணாமூர்த்தி, மகிஷாசுர மர்த்தினி. எல்லா அழகிய மேன்மைகளும் முகம் மட்டும் காட்டி துணிப் பொதிவுக்குள் பதுங்கிக் கிடந்தன. ஒவ்வொரு பிரதிமையாக பார்த்துவிட்டு, சிவ சக்தி இணையை தரிசித்துவிட்டு, எங்களின் அடுத்த இலக்கான சூரியனார் கோயில் மற்றும் திரு நாகேஸ்வரம் கோயில் நோக்கி நகர்ந்தோம்.

இந்த இரண்டு கோயில்களில் முதற் கோயிலான சூரியனார் கோயில் முந்தைய கோயிலுக்கு இணையாகவே கிபி 1110 வாக்கில் குலோத்துங்க சோழனால் எழுப்பப்பட்ட ஒன்று. மூலவராக சூரியன் சாயா மாயா தேவியுடன் அருள்பாலிக்க இன்றும் வழிபாட்டில் இருக்கும் இந்தியாவின் அபூர்வ சூரியனார் கோயில்களில் ஒன்று. கொனார்க் முதல் இந்த சூரியனார் கோயில் வரை ஒரே ஐதீக கதைதான். ரிஷியோ அரசரோ குஷ்டம் போன்ற தனது நோய் நீங்க சூரியனை வழிபட்டு நலம் பெற்ற கதை. இக்கோயிலில் மற்றொரு சுவாரஸ்யம் உண்டு. தமிழ் நிலத்தில்  முதல் நவக்கிரக சந்நிதி எழுப்பப்பட்ட கோயில் இதுதான். தில்லை தெற்கு கோபுரத்தின் முதல் நிலையில் அமைக்கப்பட்ட நவக்கிரக மூர்த்தி வடிவங்களே இந்த வரிசையின் முதல் மூர்த்தங்கள் என்கிறார் ஆசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன். இந்த சூரியனார் கோயிலில் சூரியன் கருவறையை சுற்றி உப மூர்த்திகளாக பிற கிரகங்களின் சன்னிதி, கிருஷ்ணதேவ ராயர் காலத்தில்தான் எழுப்பப்படுகிறது. அதன் பிறகே பிற சிவாலயங்களில் நவக்கிரக சந்நிதி வழிபாடு என்பது பரிணமித்து வளர்ச்சி கொள்கிறது.

அடுத்த கோயிலான திருநாகேஸ்வரர் கோயில் ஒரு பேராலயம். சைவ மரபின் அத்தனை ஓடைகளுக்குமான கலை வடிவங்களையும் இங்கே காணலாம். இக்கோயிலில் வட கிழக்கில் சூரியனுக்கு தனி சந்நிதி உண்டு. பிரபஞ்சத் தேரில் ஏறி நடராஜன் ஆடும் நடனம் என தனித்துவமான கான்செப்டில் அமைந்த சந்நிதி. தேர் சக்கரங்களில் பன்னிரு ஆரக்கால்களிலும் பன்னிரு ஆதித்யர்கள், தேவ கோஷ்டங்களில் பாஸ்கரன், பானு மூர்த்தி என சூர்ய வடிவங்கள் கொண்ட மொத்த சந்நிதியும் குதிரைகள் இழுக்கும் தேர் போல அமைந்த கோயில்.

ஆனால் நிகர் அனுபவத்தில் இந்த இரண்டு கோயிலையும் இன்று சென்று கண்ட அனுபவத்தை, இனி வரும் காலங்களிலும் துர்க்கனவு ஒன்றாகவே நினைவில் கொள்ள முடியும். திருநாகேஸ்வரர் கோயில் புனருத்தாரண பணிகள் நடந்து வருகிறது. ராஜ கோபுரம் முதல் கருவறை வரை எங்கெங்கும் பச்சைத் தட்டி கொண்டு மறைத்து சாரம் கட்டி பெயின்ட் வேலைகள் நடைபெற்று வருகிறது. கோயிலுள் எங்கும் கால் ஊன்றி நிற்க இடமே இன்றி,  தரையெங்கும் ப்பாக்கள், கட்டுமான தட்டுமுட்டு சாமான்கள். அடித்த சிமின்ட் மேல் பொழிந்த நீர் அருவிகளின் சிற்றோடைகள்

மொத்த வளாகமும் ஒரு சின்ன இடைவெளி கூட இன்றி உள்ளும் புறமும் அகப்பட்ட தூண்கள் சிற்பங்கள் எல்லாவற்றையும் ஆப்பாக்கி சாரம் கட்டப்பட்டு, குறுக்கே மின்சார ஒயர்கள் இழுத்தபடி ஏதேதோ மோட்டார் ஓட, வெளிப் பிரகாரம் மொத்தமும் இனி கோயிலை நிறைத்து மூடப்போகும் பக்தாள் நிழலுக்கான தகரத் தட்டிகள், கூண்டுப் பாதைகள், எவர்சில்வர் தடுப்புகள் என எங்கும் கால் வைக்க இடமின்றி ஏதேதோ குவிந்து கிடக்க, நாயக்கர் மண்டப ஓரத்தில் ஜல்லி மணல் பொதியையும் நிரப்பி வைத்திருந்தார்கள். இவற்றுக்கு எல்லாம் மேலே வெல்லத்தின் மேலே மொய்க்கும் எறும்புகள் போல பக்தர்கள்.

ஆதீன நிர்வாகத்தில் உள்ள சூரியனார் கோயிலோ ஒரு மாபெரும் நரகக் குழியன்றி வேறில்லை. மூன்றடுக்கு ராஜ கோபுரத்தைக் காணவே வகையற்று மூடி நிற்கும் மாபெரும் தகர மற்றும் நீல வண்ண பிளாஸ்டிக் கூரை மண்டபம். இரு புறமும் நேர்ச்சைக்கான தொட்டில்கள் வண்ண வண்ணக் கயிறுகள் இதர குப்பைகளை விற்கும் கடைகள். டைனோசர்கள் போல அதற்குள்ளிருந்து கிளம்பி வந்து நம்மை மோதி மிதித்து ஒரு எட்டு கூட எடுத்து வைக்க விடாமல் கடித்துப் பிழியும் வியாபாரிகள், கடந்து ராஜ கோபுரம் கடந்தால் உள்ளிருந்தும் எதையுமே காண முடியா வண்ணம், முற்றிலும் தட்டி போட்டு மூடிய உள் பிரகாரம்.

கண்படும் எல்லை எங்கெங்கும் தடுப்பு வேலிகள் வழியே சந்நிதிகள் நோக்கி உருவாக்கிய புதிர் வழிகள், அசட்டு நீலத்தில் சுவர்களுக்கும் பீ மஞ்சளில் விமானங்களும் வண்ணங்கள் பூசிய சந்நிதிகள், மையத்தில் சூரியனார் கருவறை. வெள்ளை யானை நாவலில் ஏய்டன் சாரட் வண்டியை சுற்றி குவிந்து நெருக்கும் பஞ்சப்பராரிகள் போல, கருவறையை குவிந்து நெருக்கி பரிகாரம் செய்ய வந்த பாவிகள். சுற்றுப்புற பிரகார மண்டபம் முழுக்க ஆயுஷ் ஹோமம் போன்ற ஹோமங்கள் வரிசை, புரோகித கூப்பாடு, பரிகாரம் செய்ய வந்த பாவிகளின் கூச்சல்,  நெருப்பு வரிசை, கரி படிந்த விதானங்கள், பேரோலம்… என நெருப்புக் குழி கண்விழித்த நரகத்தைக் கண் முன் கண்டேன்.

இவர்கள் எவரும் பக்தர்கள் இல்லை. இவர்களை பக்தர்கள் என்று சொன்னால் ஆழ்வார்கள் நாயன்மார்கள் அனைவர் தலையிலும் சென்று சூட்டும் அவமானம் அது. இவர்கள் எல்லாம் ஜோதிடர் சொல் கேட்டு வந்த செய்த வரப்போகும் பாவம் நீக்க வந்த பாவிகள். இவர்களுக்கு கடவுளோ, பக்தியோ, ஆத்மீகமோ, வரலாறோ பண்பாடோ ஒரு பொருட்டே இல்லை. நாளையே ஒரு முட்டாள் ஜோதிடன் சூரியனார் கோயில் மொத்தத்தையும் தீயிட்டு கொளுத்தி விடு நீ வழக்கில் வெல்வாய் என்று இவர்களில் ஒருவனுக்கு பரிகாரம் சொன்னால் இவர்கள் நிச்சயம் கோயிலை கொளுத்திவிடுவார்கள். இன்றைய இந்துமதத்தின்  பண்பாட்டில் படிந்த நச்சு, பிரிவினைவாத இந்துத்துவ அரசியல் என்றால், எழுந்த கேன்சர் கட்டி இந்த ஜோதிடர்களும், அவர்களால் வந்து குமிந்து கோயில் பண்பாட்டை நாசமாக்கும் இந்தப் பாவிகள் கூட்டமும்.

ஒரு பண்பாடு எப்போது ‘எழும்’ எனில் அது தனது மேன்மைகள் மீது கொண்ட அறிதலில், அதில் விளைந்த காதலில், அதில் எழுந்த பெருமிதத்தில், அதன் முகமான தன்னம்பிக்கையை கைக்கொள்ளுகையில். ஒரு பண்பாடு எப்போது வீழும் என்றால் அப் பண்பாடு பேசும் கலை, தத்துவம், மெய்யியல் எது குறித்தும் எந்த போதமின்றி, மனிதர்களை கொன்றுண்ணும் ஜோம்பிகள் போன்று, ‘சராசரிகளால்’ அப்பண்பாடு பண்பாடு என்பதை ‘பயன்பாடு’ என்று மட்டுமே கண்டு,  நுகர்வு, பேராசை, எதிர்பார்ப்பு என்பதை மட்டுமே  இலக்காக கொண்டு கொன்று உண்ணப்படும் போதே. இந்த இரு கோயில்களும் இவற்றின் வாழும் சாட்சியங்கள். ஆலயங்கள் எவருடையவை? விவாதத்தில் நீங்கள் சுட்டிக்காட்டிய ஒவ்வொரு எதிர்நிலைக் கூறுகளும் களிநடனம் புரியும் களம். நிற்க.

வெளியேறி, நேரம் உச்சிப்பொழுது கடந்துபோனதால், கார்போன போக்கில், கைகாட்டிப் பலகை சுட்டிய திக்கில் எல்லாம் பயணித்து பல்வேறு கோயில்களின் ராஜகோபுரங்களை தரிசித்தபடியே சென்றோம். நண்பர் மோகமுள் காவிரில குளிப்போமா என்று துவங்கிவைக்க,  வழியில் ஒருவரிடம் காவிரியில் குளிக்க அருமையான இடம் ஏதும் உண்டா என்று கேட்டோம். அவர் ஜல ஜலன்னு தண்ணி ஓடுது என்று வழி காட்டிய இடத்தில், தேடிச்சென்று கண்டவிடத்து குடமுருட்டி கும் மென்ற அமைதியில் வில்வப் பச்சையில் தேங்கி நின்றிருந்தது. கும்பகோணத்துல ஜல ஜலன்னா இதுதான் போலசார் என்றார் நண்பர் சோகத்துடன். பேசாம யமுனாவை தேடிருக்கலாம் என்றார் மற்றொரு நண்பர்.

அதில் துவங்கி திஜாவை எந்த எல்லைவரை ‘கும்மோண’ எழுத்தாளர் என்று சொல்லலாம் என்ற வகையில் உரையாடல் வளர்ந்தது. நான் முன்வைத்த எளிய வரையறை திஜா படைப்புகள் கையாளும் அகத்துறை ஜல ஜலாக்களில் எந்த எல்லைவரை கும்பகோணத்தின் வரலாறும் பண்பாடும் தொழில்படுகிறது என்பதைக்கொண்டே அதை மதிப்பிட முடியும் என்றேன். அப்படிப்பார்த்தால் திஜா கும்மோண ஜலஜலாவெல்லாம் இல்லை வெறும் ஜலஜலாதான். இப்படியே சென்று அங்கேயே சற்று நேரம் இலக்கியத்தை குடமுருட்டியில் நனைந்து பிழிந்து காயப்போட்டுவிட்டு கிளம்பி, பழைய பாலக்கரையில் ஸ்ரீ மடம் கும்பகோணம் டிகிரி காப்பி ஸ்டால் கடை கண்டு பொலிரோவை ஓரம் கட்டினோம். கும்பகோண ஜலஜலா போலன்றி நன்றாகவே இருந்தது காப்பி. முடித்து அங்கிருந்து தாராசுரம் சென்றோம்.

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் சுற்றி சௌரம் உருவாக்கிய சமூக வாழ்வின் தடத்தை இன்றும் காண முடியும். தேவிக் கோட்டம் இருக்கும் தெருவில் இன்னமும் பட்டுநூல்காரங்க என்று விளிக்கப்படும் சௌராஷ்டிரா சமூக குடும்பம் சில உண்டு. தேடிச் சென்றால் இன்றும் அருமையான நேர்த்தியான பட்டுப்புடவைகளை அடக்க விலையில்  அவர்கள் வீட்டில் வைத்தே விற்பதைக் காணலாம். சோழர் காலம் தொட்டு அவ்வப்போது புலம்பெயர்ந்து இங்கே அமைந்த இந்த சமூகத்தின் எஞ்சிய இவர்கள் இப்போது இங்கே செய்யும் இவ்வணிகத்தில் மோசடி இல்லை இடைத்தரகு இல்லை. வணிகத்துக்காக அன்றி மெய்யாகவே உளப்பூர்வமான உபசாரம் செய்யக் கூடியவர்கள். வெளியே ஒரு சுற்று சுற்றிவிட்டு கோவிலுக்கு சென்றோம். ஐராவதேஸ்வரர். பெயரிலேயே இந்திரனின் வாகனம் சிவ வடிவில் ஐக்கியம் கொள்ளும் தடத்தைக் காணலாம். ஆதித்த சோழன், ராஜேந்திர சோழன் என சூரியன் இந்திரன் இவர்கள் ஏதோ வகையில் சோழ மரபில் ஆழப் பிணைந்தே இருப்பதைக் காண்கிறோம்.

கோவிலுக்குள் நுழைந்தால், இடதுபுறம் ராஜகம்பீரன் திருமண்டபத்தின் சுற்றுச்சுவர் மூலையில் இந்தியாவின் ஒரே ஒரு சிற்பமான அபூர்வமான சிவ வடிவைக் காணலாம். அர்தனாரி சிவ சூரியன். அருகிலேயே அரவு ஆட்ட வல்லான். பிக்ஷாடன மூர்த்தியாக வந்து தாருகா வனத்தின் ரிஷி பத்தினிகளை சிவன் கவர்ந்து செல்ல, ரிஷிகள் யாகம் வளர்த்து, நஞ்சு கக்கும் பாம்புகளை எழுப்பி சிவன் மீது ஏவுகிறார்கள். அந்த அரவங்களை அணியாகப் பூண்டு அரன் ஆடும் நடனம். யோக நோக்கில் அவர் உடல் தழுவும் ஒவ்வொரு நாகங்களையும் குண்டலினியின் ஒவ்வொரு நிலையாகக் கொண்டு, இச்சிலையை யோக நிலை ஒன்றின் கலை வெளிப்பாடாக விளக்குவோரும் உண்டு.

நடந்து சில படிகள் உயர்ந்தால், சரபேஸ்வரர் சந்நிதி. உலகில் முதலில் கிடைக்கப்பெற்ற ஆளரி சிற்பம் ஜெர்மனியில் ஒரு குகையில் கண்டெடுக்கப் பட்டது. மம்மோத் தந்தத்தில் செய்யப்பட்ட ஆளரி. மானுடத்தின் ஒட்டுமொத்த ஆழ் உள்ளத்தின் பிரதிமை இந்த ஆளரி. மேற்குலகு அபிரகாமிய மதங்களின் எழுச்சி வழியே இத்தகு ஆழுள்ளத் தொன்மங்களை இழந்தது.

அத்தகு மானுடப் பொதுவான ஒட்டு மொத்த மானுட ஆழ் மனதின் தொன்மங்களின் பரிணாம வளர்ச்சி என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ள, இன்று மானுடத்துக்கு இருக்கும் ஒரே வாயில் இந்தியா மட்டுமே. மிகச் சிறிய கோயில்களில் கூட நரசிம்மர் வழிபாடு உண்டு, சிற்பக்கலை முதல், உபாசனை வழியிலான ஆத்மீக சாதகம் வரை இன்று இங்கே நரசிம்மர் உயிரோட்டமான செயல்பாட்டில் உள்ளவர். இதோ இந்த சரபேஸ்வரர், கர்வம் கொண்ட நரசிம்ம அவதாரத்தின் கர்வத்தை அடக்க வந்த சிவனின் தோற்றம்.

சரபேஸ்வரர் சந்நிதியில் நின்று பார்த்தால், ராஜகம்பீரன் திருமண்டபத்தின் குதிரைகள் தேரை இழுக்கும் உத்வேகத்தில் அந்த மண்டபம் உயிர்கொள்ளத் துவங்குவது போல உளமயக்கு அளிக்கும். சோழர் கலையின் உன்னதங்களில் ஒன்று இந்தத் தேர் மண்டபம். கட்டப்பட்ட காலம் சூழல் துவங்கி பின்னோக்கி சென்றால், கொனார்க் வரை இந்த தேர் வடிவம் எனும் கரக்கோயில் கான்செப்ட் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்தே வடக்கு நோக்கி சென்றிருக்க வாய்ப்பு மிகுதி என்று சொல்ல முடியும்.

திருமண்டபத்தில் சொல்லிச் சொல்லி வியந்து, பார்த்துப் பார்த்து மாய வேண்டிய  அழகிய படிமைகள் குறித்த அனைத்தையும், கங்கை அன்னை படிமை முதல், நாயன்மார்கள் கதைச் சிற்ப வரிசை வரை தனது ‘தாராசுரம் ஐராவதேஸ்வரர்’ நூலில் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் விரிவாக விளக்கியிருக்கிறார்கள். அந்நூல் குடவாயிலின் பல நூல்கள் போலவே இன்று ஒரு பொக்கிஷம்.  மாலை மயங்கும் வரை ஐராவதேஸ்வரர் அருள் வளாகத்தில் திரிந்திருந்துவிட்டு, வேறொரு நாள், வேறொரு பயணத்துக்கான கனவுகளை விவாதித்தபடியே மெல்லிய மழையில் இரவு அனைவரும் இல்லம் மீண்டோம்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஅன்னை என்பது…
அடுத்த கட்டுரைஆயுர்வேதம் அறிய