அன்புள்ள ஆசிரியருக்கு ,
வணக்கம்.
பல்லாண்டுகளாக தங்களிடம் தொடர்பிலிருந்தாலும், நான் எழுதும் முதற்கடிதம் இதுதான்.அந்த எண்ணமே, ஒரே நேரத்தில் தயக்கத்தையும் உவகையையும் தருகின்றன.
தங்களின் சிந்தாமணி உரை மிகச்செறிவாக இருந்தது. நூல் தோன்றிய காலத்து சமணச்சூழல், சுடுகாட்டில் கதை தொடங்கும் நவீனத்துவ தொடக்கம், முன்னுதாரணம் இல்லாத விருத்தப்பா வகை, அடுத்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் தமிழ்க்காவியங்கள் சிந்தாமணியை பின்பற்றிய வரலாறு என பல கூறுகளை சிறப்பாக உரைத்தீர்கள்.
பல பாடல்களைச்சொல்லி நயங்கள் சொன்னது, என்னை மகிழ்வடைய வைத்தது. தமிழை முறையாக படித்தவர்களுக்கே சிந்தாமணி தெரியாது அல்லது அதிக பரிச்சயம் இருக்காது.
பறவையின் நிழல் தவறாதுபின் தொடர்வது போல ஒவ்வொருவரின் வினைபயன்களும் பின் தொடரும் எனும் உவமையை பல ஆண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி காப்பிய கழக விழாவில் தி.வே.கோபாலய்யர் தன் உரையில் குறிப்பிட்டது நினைவில் வருகிறது.
மிகப்பெரிய திறப்புகளை தந்தது தங்களின் உரை. எப்படி நூலை அணுகவேண்டும்,குறியீட்டுப்பொருளை எப்படி உணரவேண்டும் என பல கோணங்களில் உணர்த்தியது.
நீங்கள் Master of all Subjects என மிக நன்றாக எனக்குத்தெரியும். .இருந்தாலும்கூட சிந்தாமணியை நீங்கள் அணுகிய விதம் என்னை பெரும் வியப்பிலும் பேரானந்தத்திலும் மூழ்க வைக்கிறது. உரைக்கு மிக்க நன்றி.
ஓர் வேண்டுகோள். மணிமேகலையையும் இதே போன்ற ஓர் முழுமையான உரை மூலம் தாங்கள் வழங்கவேண்டும். தங்களால் முடியும்போது, அவசரம் இல்லை. பளிங்கு மண்டத்தைப்பற்றிய பெண்ணிய நோக்கிலான தங்கள் உரையும், இறந்தவர்கள் வசிக்கும் பெருங்கடல் தீவு இடம்பெறும் தங்களின் சிறுகதையும் உடனே நினைவுக்கு வருகின்றன என்றாலும் நான் வேண்டுவது சிந்தாமணி உரையை போன்ற முழுமையான ஒன்றை.
அன்புள்ள,
ஜி.நாகராஜன்
பாண்டிச்சேரி.
அன்புள்ள ஜெ
சீவகசிந்தாமணி உரையை ஆர்வமில்லாமல்தான் கேட்க ஆரம்பித்தேன். முற்றிலும் புதியவாசிப்பு ஒன்றை கண்டடைந்தேன். உரையில் நீங்கள் சிந்தாமணியின் குறியீட்டுவிரிவை மட்டுமே கருத்தில்கொள்கிறீர்கள். நாமகள் இலம்பகத்தை முதல் பெண் நாமகளாகிய கலைமகள் என அர்த்தம் கொண்டதில் தொடங்கி அந்த வாசிப்பு விரிந்துகொண்டே சென்றது. காவியங்களை ஒருவகையில் மதநீக்கம் செய்து வாசிக்கிறோம். பழைய விழுமியங்களையும் ஒதுக்கிவிட்டு வாசிக்கவேண்டும் என்று தெரிந்துகொண்டேன். வாழ்க்கைநுட்பங்கள், மொழிநுட்பங்களை மட்டுமே கருத்தில்கொண்டு வாசிக்கவேண்டும்
ஜெ