அறிவியல்புனைகதைகளின் உண்மை

விசும்பு அறிவியல் சிறுகதைகள் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

‘விசும்பு’ தொகுப்பு வாசித்தேன். அதி அற்புதம். இதற்கு மேலான வாரத்தைகளில், விமர்சன ரீதியாகவவோ இல்லை விளக்க ரீதியாகவோ என்னால் சொல்ல முடியாது, சொல்ல தெரியாது.

ஆனால் இளம் வாசகன் என்ற முறையில் விசும்பு தொகுப்பை  வாசிக்கும் போது சிறு குழப்பம் அடைந்தேன். என்னவென்றால்  கற்பனையும் யதார்த்தமும் கலக்கும் இடம் அளிக்கும் குழப்பம். உதாரணத்திற்கு முதல் கதையான ஐந்தாவது மருந்து என்ற கதையில் நீங்கள் சித்த மருந்துகளை பற்றியும் , சித்த முறைகளை பற்றியும் விரிவாக எழுதியிருப்பது, பாதி கற்பனை பாதி யதார்த்தம். ஆனால் முதல் தவணை வாசித்ததும் , நான் இந்த கதையில் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் நிஜமாகவே நடைமுறையில் இருந்தது இல்லை இருப்பது என்றே மனதில் பதித்து கொண்டேன்.

பின்பு ஒருமுறை உங்களது தீவிர வாசகன் ஒருவரிடம் இக்கதைகளை பற்றி விவாதித்து கொண்டு இருக்கும் போது தான் தெரிந்தது , இதில் பாதியும் கற்பனையாக ஜோடிக்கப்பட்டிருக்கிறது என்று. சற்று அதிரவே செய்தேன். இந்த குழப்பம் உங்களது மற்ற புத்தகங்களில் உள்ள கதைகளில் வரவில்லை. காரணம் விசும்பில் உள்ள அனைத்து கதைகளும் அறிவியல் கதை என்பது மட்டுமல்லாமல் நமது கலாச்சார சூழலில் நடக்கும் கதை என்பதால் என் மனம் conscious ஆக அதை அவதானித்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

இந்த குழப்பம் நான் இளம் வாசகன் என்ற முறையில் நான் அடைந்ததா? இல்லை நீங்கள் இந்த அறிவியல் கதைகளை நாம் இது வரை வாசித்து வந்த அறிவியல் கதைகளில் இருந்து பெரிதும் மாறுப்பட்டு நமக்கு பரிச்சயமான இந்திய , தமிழ் சூழலில் இக்கதைகளை Place செய்ததா? நன்றி ஜெ, உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தருண் வாசுதேவ்

அன்புள்ள தருண்,

இலக்கியத்தில் உள்ள கற்பனை என்பது எப்போதுமே நீட்சிகொண்ட யதார்த்தம் [extended reality] தான்.  ஏனென்றால் யதார்த்தத்தில் மெய்வெளிப்பாடு [expressed truth] இல்லை. யதார்த்தத்தில் உண்மை உள்ளது. ஆனால் வேறு உண்மைகளுடன் கலந்து, மற்றவற்றால் மறைக்கப்பட்டு அமைந்துள்ளது. இலக்கியப்படைப்பு அவற்றில் ஓர் உண்மையை முன்வைக்க விரும்புகிறது. ஆகவே அது யதார்த்ததை சற்று நீட்டி ஆசிரியன் புனைவின்போது கண்டடைந்த உண்மை வரை கொண்டுசெல்கிறது.

இது நீங்கள் அன்றாடவாழ்க்கை என நினைக்கும் புனைவுகளுக்கும் பொருந்தும். அவையும் நேரடியாக யதார்த்தத்தைச் சொல்லவில்லை, யதார்த்தத்தை புனைவினூடாக வளர்த்திருக்கின்றன. மிகுபுனைவு [Fantasy] கதைகளும் அவ்வாறே. அறிவியல் புனைவு என்பது மிகப்பெரும்பாலும் மிகுபுனைவுதான். அவை உண்மையை புனைவினூடாகச் சென்றடைகின்றன.

அறிவியல்புனைவுக்குச் சில விதிகள் உள்ளன. ஐசக் அஸிமோவ் சொன்னவை இவை

ஒன்று, அறிவியல்புனைகதை அறிவியல் சார்ந்ததாக இருக்கவேண்டும். அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயத்தை அது சொல்லவேண்டியதில்லை. ஆனால் அறிவியல்பூர்வமாக ஊகிக்கத்தக்க ஒன்றை அது சொல்லவேண்டும். அந்த ஊகத்திற்கு ஓர் அறிவியல் சாத்தியக்கூறு இருக்கவேண்டும்

இரண்டு, அந்த அறிவியலடிப்படையை அது வாசகன் நம்பும்படி முன்வைக்கவேண்டும். அந்நம்பிக்கையே வாசகனை அறிவியல்சார்ந்த ஒரு களத்திற்குள் கொண்டுசெல்கிறது. அவ்வாறு நம்பவைப்பதற்கான எல்லா உண்மையான தரவுகளையும் தர்க்கங்களையும் அறிவியல்புனைகதை அளிக்கவேண்டும். அதாவது கூடுமானவரை உண்மையான அறிவியல்செய்திகளையும் அறிவியல்கொள்கைகளையும் சொல்லிச்சென்று அவற்றின்மேல்தான் தன் புனைவை அறிவியல்புனைகதை கட்டியெழுப்பியிருக்கவேண்டும்

மூன்று, அறிவியல்புனைகதை அறிவியலை முன்வைக்கவில்லை. அது முன்வைப்பது வாழ்க்கைச்சிக்கல்களையும் தத்துவ ஆன்மிக வினாக்களையும்தான். யதார்த்தப் புனைகதை யதார்த்தவாழ்க்கையைச் சொல்லி அந்த வாழ்க்கைச்சிக்கல்களையும் தத்துவ ஆன்மிக வினாக்களையும் முன்வைக்கிறது. வரலாற்றுப்புனைகதை வரலாற்றைச் சொல்லி அந்த வாழ்க்கைச்சிக்கல்களையும் தத்துவ ஆன்மிக வினாக்களையும் முன்வைக்கிறது.  அவ்வளவுதான் வேறுபாடு.

அதாவது அறிவியல்புனைகதையில் அறிவியல் என்பது குறியீடாக, படிமமாக, உருவகமாகவே கையாளப்படுகிறது. அவற்றை நேரடியான அறிவியல்செய்திகளாகவோ அறிவியல்கொள்கைகளாகவோ எடுத்துக்கொள்ளலாகாது.

இது செவ்வியல் அறிவியல்புனைகதைக்கான வரையறை. இன்றைய அறிவியல்புனைவுகள் இந்த எல்லையை கடந்துவிட்டன. வெறும் உணர்வுப்பதிவுகள், மொழிவிளையாடல்களாகவே வரும் அறிவியல்புனைகதைகளும் இன்று முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

விசும்பு கதையில் ஐந்தாவது மருந்து என்னும் கதையைப் பற்றிப் பேசுகிறீர்கள். அது வைரஸ்களின் உருமாற்றம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அது வைரஸ் பற்றிய செய்திகளை, கொள்கைகளைச் சொல்லும் கதை அல்ல. அது இயற்கையின் பேராற்றலுக்கும் மானுடனுக்குமான போரைச் சொல்லும் கதை. இயற்கையின் நுண்வடிவமாகவே வைரஸ் சொல்லப்படுகிறது. வைரஸுக்கு பதில் எதை வேண்டுமென்றாலும் அங்கே வைத்துக்கொள்ளலாம். கரையானாகக்கூட இருக்கலாம்.

அந்தக்கதையை நம்பகமாகச் சொல்லும்பொருட்டே சரியான ஆயுர்வேத-சித்தமருத்துவச் செய்திகள் கதையில் சொல்லப்படுகின்றன. அவற்றை இணைப்பது கற்பனை. முடிவை நோக்கிச் செல்வது புனைவு. அந்த முடிவுதான் கதையின் உண்மை, அதை நோக்கி அறிவியல் யதார்த்தம் இழுக்கப்பட்டுள்ளது

ஜெ

அறிவியல்புனைவு,நீளும் எல்லைகள்

அறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்

அறிவியல் புனைகதைகள் பற்றி…

விசும்பின் மூன்று கதைகள்- கடிதம்

முந்தைய கட்டுரைகேள்விகள், விடைகள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது