குருகுலம் என்பது…

சொல்முகம் வாங்க

அன்புள்ள ஜெ

சொல்முகம் நூலில் நீங்கள் சிலாகித்திருக்கும் துறவு இன்றுகூட பெண்களுக்கு உரியதாக இல்லை. நீங்கள் சொல்லும் குருகுலத்தில் இருக்கும் அர்ப்பணிப்புடன் ஒரு மாணவப்பருவம் இருக்க வேண்டும் என்பது சிறப்புதான். ஆனால் குருகுலத்தின் மாடல் பழைய குருகுலத்தின் மாடலாக இருக்க கூடாது. நீங்கள் குருகுலம் என்று சொன்னவுடன் பழைய மாடலுக்கு மாற்றான என்ன மாதிரியான குருகுலத்தை முன்வைக்கிறீர்கள் என்பதையும் எங்காவது குறிப்பிடுங்கள். யாருக்குத் தெரியும், இன்றில்லாவிட்டாலும் என்றாவது புதிய குருகுலங்கள் உருவாகலாம்.

புதிய மாதவி

மும்பை

அன்புள்ள புதிய மாதவி,

துறவு இன்றும்கூட இந்துமதம், சமண மதம் உட்பட பல மதங்களில் பெண்களால் இயல்பாக ஏற்கப்படுகிறது. அவர்களுக்குரிய நெறிகள் சற்றுக் கடுமையானவையாக உள்ளன என்பது உண்மை. அதற்கு அவர்கள் பெண்கள் என்பது மட்டும் காரணமல்ல. நம் சமூகத்தின் ஒட்டுமொத்தமான பார்வையே காரணம்.

ஏனென்றால் ஒடுங்குதலே துறவு. பெண்கள் உடலை ஒடுக்கவேண்டும் என்றால் அவர்களின் உடல் பார்க்கப்படலாகாது, பாராட்டப்படலாகாது என சமணமும் பௌத்தமும் இந்துமதமும் கிறிஸ்தவமும் எண்ணுகின்றன. பெண்கள் உறவுகளை இயல்பாக உருவாக்கிக்கொள்பவர்கள், ஆகவே அவர்களின் தொடர்புகள் வெட்டப்படுகின்றன. சரியா தவறா என நான் விவாதிக்க மாட்டேன். அது அவர்களின் வழி.

நான் குருகுல முறையைப் பற்றிச் சொல்லும்போது சென்றகாலத்து நெறிகள் ஆசாரங்களை குறிப்பிடவில்லை. ஓர் ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான நேரடியான, நெருக்கமான, தொடர்ச்சியான உறவையே குறிப்பிட்டேன். அந்த உறவு இருந்தால் அது இயல்பாகவே குருகுலமே.

நான் அத்தகைய குருகுலத்தில் [ஸ்ரீநாராயண குருகுலம், ஊட்டி] என் மெய்யான கல்வியைப் பெற்றவன் என்பதனால் அதை முன்வைக்கிறேன். அது மரபான கல்விமுறையை கடைப்பிடிக்கும் அமைப்பு. ஆனால் மரபிலிருந்த சாதிமுறை, மூடநம்பிக்கை, பொருளில்லா ஆசாரங்கள் அனைத்துக்கும் எதிரானது.

இயல்பாகவே ஒன்றை நாம் கவனிக்கலாம். நாம் எல்லா கல்வியையும் சில குருநாதர்களிடம் இருந்தே பெற்றிருப்போம்.கல்விநிலையங்களிலேயே அப்படி சில குருக்கள் இருப்பார்கள். அதன்பின் தொழில் தளங்களில் ஆசிரியர் கிடைப்பார்கள்.கலையிலக்கியத் தளத்து ஆசிரியர்கள் வருவர். ஞானாசிரியர் அமைவர்.

ஏனென்றால் மனிதன் மனிதனிடமிருந்தே கற்றுக்கொள்ள முடியும். அமைப்புகளிடமிருந்து அல்ல. தன்னை அறிந்த ஒரு மனிதனிடமிருந்து அவர் உவந்து அளிப்பவற்றை பெற்றுக்கொள்கையிலேயே பிழையறக் கற்கிறோம். அன்பே கல்விக்கான ஊடகம். கல்வி எந்நிலையிலும் ஒரு பெருங்களியாட்டாகவே இருக்க முடியும்.

அத்தகைய கல்வி உண்மையில் நடக்கும்போது நாம் அதை உணர்வதில்லை. ஆகவே அதன்பொருட்டு நேரம் ஒதுக்குவதில்லை. அது முக்கியமானதென்னும் எண்ணமும் இருப்பதில்லை. அதை எவ்வகையிலும் முறைப்படுத்திக்கொள்வதில்லை. ஆகவே அது பெரும்பாலும் அரைகுறையாக நிகழ்கிறது. பின்னாளில் நினைத்து ஏக்கமும் வருத்தமும் அடைகிறோம்.

அத்தகைய கல்வியை அடையாளம் கண்டு அதற்கான அமைப்புக்களை உருவாக்குவதைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். பழமையான அமைப்புக்களை திரும்ப உருவாக்குவது பற்றி அல்ல. பழைய சம்பிரதாயங்கள், ஆசாரங்கள், மனநிலைகளை மீட்பதைப் பற்றி அல்ல. அவையெல்லாம் தேவை இல்லை. குருகுலத்தின் கல்விமுறை, அதற்கான உளவியல் மட்டுமே தேவை

அதுவும் அந்தக் கல்வி அனைவருக்குமான பொதுக்கல்விக்கு உகந்தது அல்ல. அதற்கு இன்றிருக்கும் கல்விமுறையே உகந்தது. தனித்திறன் வெளிப்படும் துறைகளுக்கான கல்வியிலேயே குருகுல முறை தேவை. ஒருவன் ஓவியனாகவேண்டும் என்றால் ஓவிய அடிப்படைகளை ஓவியக்கல்லூரியில் கற்றுக்கொள்ளவேண்டும். அதன் பின் ஓவியர் சந்துருவுடன் அவருடைய குருநிலையில் சென்று தங்கி உடன் வாழவேண்டும். அது ஒரு குருகுலம், நான் சொல்வது அதைத்தான்.

ஜெ

குருகுலமும் கல்வியும்

மணிமேகலை சீவகசிந்தாமணி- காவியங்களை வாசித்தல்

கற்றல்- ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைவரவிருக்கும் படங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு கேட்க…