விகடனுக்காக பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் இருவரும் என்னை பேட்டி எடுக்கவேண்டும் என்றார்கள். எனக்கு கோவிட் வந்தமையால் முதல்முறை நாள் தவறிச் சென்றது. அதன்பின் பலமுறை மாற்றப்பட்டு பேட்டிக்கு நாள் குறிக்கப்பட்டது. பேட்டியின்போது என்னென்ன கேட்கக்கூடாது, எவ்வளவு நேரம் பேட்டி நிகழலாம் என்று கேட்டார்கள். என் இயல்பு என்பது மனிதர்களை கூர்ந்து தெரிவுசெய்வதுதான். அதன்பின் அவர்களிடம் நிபந்தனைகள் இடுவது அல்ல. எதை வேண்டுமென்றாலும் கேட்கலாம், எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பேட்டி நிகழலாம் என்று சொன்னேன்.
பேட்டி தீவிரமான இலக்கிய வினாக்கள், சுவாரசியமான தனிப்பட்ட கேள்விகள், சினிமாக்கேள்விகள் என நீண்டது. தொடர்ச்சியாக மூன்றுமணிநேரம். அதை வெட்டி வெளியிடுவார்கள் என நினைத்தேன். முழுப்பேட்டியும் ஆறு பகுதிகளாக யூடியூபில் வெளிவந்துள்ளது. நன்றாக இருப்பதாக பலர் சொன்னார்கள். குறிப்பாக என் பெரியம்மாவின் மகனும் என் தந்தைக்கு நிகரானவருமான பிரசாத் அண்ணன் பார்த்துவிட்டு “டேய் சில இடங்களிலே கண்ணீர் வந்திச்சுடா” என்றார்.அக்கணமே இப்பேட்டி எனக்கு இனிதானதாக ஆகியது.
ராஜா அவர்களுக்கும் பாரதிக்கும் அன்பும் நன்றியும்.