வெண்முரசு, குருபூர்ணிமா உரையாடல்

அன்பு ஜெயமோகன்,

வெண்முரசு & குரு பூர்ணிமை நாளில் உங்களைக்  கண்டது மிகவும் மகிழ்ச்சி.

கிருஷ்ண / பாரதக் கதைகளை மகள்களுக்குக் கூறும் போது, வெண்முரசின் கூறுமுறை அவர்களுக்கு மேலும் உவப்பாயிருப்பதைக் கவனிக்கிறேன். பாட்டி சொன்ன ஒரு அரக்கி என்பதைவிட குழந்தையை இழந்த பிச்சியாகவே பூதகி அவர்கள் நினைவில் வாழ்கிறாள்.

யுவால் நோவா ஹராரியின் “சேப்பியன்ஸ்”  புத்தகத்தை குழந்தைகளுக்கான  ஒரு கிராபிக் நாவலாக அவரும் சிலரும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். வாசிப்பு சுவாரசியமும் தகவல்களும் எளிமையாகவும்  சிறப்பாகவும் உள்ளது. இதைப்போல் வெண்முரசையும் கொண்டுவரும் எண்ணம் உண்டா  என்ற கேள்வியோடு காத்திருந்தேன். வரிசையில் இரண்டாவதாக இருந்தபோது யூடியூபில் மற்றொரு நண்பர் கிட்டத்தட்ட இதே கேள்வியை இன்னும் சிறப்பாகக் கேட்டிருந்தார். அதற்கு உங்கள் விரிவான பதிலையே எனக்குமாக விளங்கிகொள்கிறேன்.

இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக நீண்ட உரையாடலில் மேலும் சிலர் வினாக்களோடு இருந்தமையால் உயர்த்திய கையை இறக்கிக்கொண்டேன். எனவே இந்நன்னாளில் உங்களைக் கண்டதும் உங்கள் உரையை கேட்டதும் தரும் மகிழ்ச்சியையும் எனது வணக்கங்களையும் தெரிவிக்க  இந்தக் கடிதம்.

நன்றி ஜெயமோகன் .

என்றும் அன்புடன்,
மூர்த்தி
டாலஸ்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நேற்றிரவு குரு பூர்ணிமா நிகழ்வில் zoom இல் பங்கெடுத்து உங்கள் உரையாடலைகாண, கேட்க முடிந்தது மிக நிறைவாக இருந்தது. நிலவொளியில், உங்கள் பின்னால் வானில் நிலவுடன் நீங்கள் அமர்ந்து உரையாற்றியதும், கேள்விகளுக்கு பதில் அளித்ததும் காண ரம்மியமாக இருந்தது. நான் இன்றுவரை உங்களிடம் இருந்து கற்றுக்கொண்ட ஞானம், வழிகாட்டல்கள் அனைத்திற்கும்
குரு பூர்ணிமா நாளான இன்று நன்றி சொல்கிறேன்.

அன்புடன்,

வெண்ணி

சென்ற ஆண்டு சூம் சந்திப்புகள்

முந்தைய கட்டுரைஆரம்பக் கல்விக்காக ஓர் இயக்கம்
அடுத்த கட்டுரைமனிதர்கள்“-சிறுகதைத் தொகுதி-நா.கிருஷ்ணமூர்த்தி-வாசிப்பனுபவம் -உஷாதீபன்