பிரயாகை நாவலில் விதுரர் மக்கள் திரளின் மனநிலையையும், கண்ணனின் அந்தப் புன்னகையும் அறியும் தருணம் திறப்பாக அமைந்தது ஜெ. பாஞ்சால நாட்டு இளவரசியை அஸ்தினாபுரிக்கு மணம் முடிக்கத் தடையாயிருப்பது விதுரரே எனும் எண்ணத்தை மக்கள் அடையும் புள்ளி ஒன்று நாவலில் வருகிறது. வெறும் ஐயத்தைக் கொண்டு இது நாள் வரை விதுரர் செய்த அனைத்து நல்ல செயல்களையும் அவரின் நீதியின் நிழலை அடைந்த மக்களே உடைக்கிறார்கள்.
விதுரரை ஏற்கனவே கண்ணன் தன் வார்த்தையால் உடைத்திருப்பான். “இவ்வரசில் சூதரான நீங்கள் இருக்கும் இந்த இடமே உங்களுக்கு எதிரானது.”; ”உங்கள் ஒருதுளிக் குருதிகூட இப்புவியில் எஞ்சவிட மாட்டேன்.” என்று கண்ணன் கூறி அவரை நடுங்கச் செய்திருப்பான். அதில் விதுரர் காயம் அடைந்திருப்பாரே தவிர தன்னிலையை உணர்ந்திருக்க மாட்டார். அவர் நெஞ்சத்தில் ஆழ்ந்த அவமானமும் வெறுப்புமே நிறைந்திருக்கும். “அறிவின் நிழல் ஆணவம். முதுமையில் நிழல் பெரிதாகிறது” என்று அதை முதன் முறையாக அவருக்கு முற்றுணர்த்தியது பீஷ்மர் தான்.
“அஸ்தினபுரியின் படைகளுக்கு நீயே ஆணையிட வேண்டும் என்று யாதவனிடம் சொன்னாய் அல்லவா? எந்த நெறிப்படியும் அமைச்சருக்கு அந்த இடம் இல்லை. அப்படியென்றால் ஏன் அதைச் சொன்னாய்? நீ விழையும் இடம் அது. அத்துடன் உன்னை யாதவன் எளிதாக எண்ணிவிடலாகாது என்றும் உன் அகம் விரும்பியது. மைந்தா, அவன் முன் நீ தோற்ற இடம் அது. அச்சொல்லைக் கொண்டே உன்னை அவன் முழுமையாக புரிந்துகொண்டுவிட்டான். உன் ஆணவத்தையும் விழைவையும் மதிப்பிட்டான். நீ புகழை இழப்பதை இறப்பைவிட மேலாக எண்ணுவாய் என்று உணர்ந்துகொண்டான். உன் நிலையை நீ பெருக்கிக் காட்டுவதற்கான அடிப்படை உணர்வு என்பது சூதன் என்ற உன் தன்னுணர்வே என்று கணித்துக்கொண்டான். அனைத்தையும் சொற்களால் அறுத்து வீசினான்.” என்று பீஷ்மர் எடுத்துக் கூறியும் விதுரர் தன்னிலையை முழுவதுமாக உணராமல் இருந்தார்.
”உன் ஆற்றல் இருந்தது நீ மாபெரும் மதியூகி என்ற தன்னுணர்வில்தான். அது அளிக்கும் சமநிலையே உன்னை தெளிவாக சிந்திக்கவைத்தது. அவன் அதை சிதைத்துவிட்டான். சினத்தாலும் அவமதிப்புணர்வாலும் சித்தம் சிதறிய விதுரனை அவன் மிக எளிதாக கையாள்வான்… அவன் வென்றுவிட்டான். அதை நீ உணர்வதே மேல். உன் அறிவாணவத்தை அவன் கடந்துசென்றுவிட்டான்” என்று மிகத் தெளிவாகக் கூறியும் விதுரர் அதை உணரவில்லை. ”நாட்டைக் காப்பது, தன் கடன், பொறுப்பு” போன்ற வார்த்தைகளால் கட்டுண்டிருந்த விதுரரை நோக்கி ”அறிவின் ஆணவம் மூன்று வழிகளில் வெளிப்படுகிறது. நான் அறிவேன் என்ற சொல். என் பொறுப்பு என்ற சொல். இது ஒரு தருணம், நீ உன்னை மதிப்பிட்டுக்கொள்ள. இல்லையேல் உனக்கு மீட்பில்லை.” என்று பீஷ்மர் சொல்லிவிட்டுச் செல்கிறார்.
நீதியின் மைந்தனாக, மதியூகியாக, எந்நேரத்திலும் சம நிலை குலையாதவராக, அறிஞனாக, காவியங்கங்களை விரும்பும் இலக்கிய வாசகனாக, சூத அரசியின் மைந்தனாகப் பிறந்தும் அஸ்தினாபுரியின் முடிசூடா மன்னனாக, ஒரு போதும் பதவியை விரும்பாதவராக என ஒட்டுமொத்தமாக நல்லவைகளையெல்லாம் விதுரரின் மேல் ஏற்றி வைத்து அழகு பார்த்திருந்தேன். அதை முதலில் உடைத்த பெருமை கண்ணனையே சாரும். அப்படி உடைத்த காரணத்திற்காகவே யாவரும் விரும்பும் கண்ணனை விதுரர் வெறுக்கிறார். பீஷ்மர் இத்துனை தெளிவாக எடுத்துக் கூறியும் அவர் தன்னை உணர மறுக்கிறார். தன்னை யாதவனாகக் கருதிக் கொண்டும் கண்ணனை வியந்து புகழும் தன் மகன் சுசரிதனை விதுரர் கடிந்து கொள்கிறார்.
அஸ்வதந்தம் என்ற அந்த சிறிய வைரத்தை எடுத்துப் பார்க்கும் அவரின் அக ஆழத்தை காணித்திருந்தீர்கள். அதை கண்டு கொண்ட அவரின் மனைவி சுருதையிடம் “விளையாடுகிறாயா? நான் மதியூகி. என்னிடம் உன் சமையலறை சூழ்ச்சிகளை காட்டுகிறாயா?” என்று கடிந்து கொள்கிறார். அவள் முதல் முறையாக தன் அகம் திறந்து அவரின் குறைகளையெல்லாம் சுட்டி ”உங்களால் முடியாது. உங்களிடமில்லாதது அதுதான்… ஷாத்ரம். நீங்கள் இவ்வுலகில் எதையும் வென்றெடுக்க முடியாது. அதை என்று உணர்ந்து உங்கள் ஆசைகளை களைகிறீர்களோ அன்றுதான் விடுதலை அடைவீர்கள்” என்கிறாள். “அந்த ஆசைகள் அனைத்தும் உங்களில் நிறைந்திருக்கும் அச்சங்களாலும் தாழ்வுணர்ச்சியாலும் உருவானவை. நீங்கள் எவரென்று உங்கள் எண்ணங்களும் செயல்களும் திட்டவட்டமாகவே காட்டுகின்றன. அதற்குமேல் ஏன் எழவிரும்புகிறீர்கள்? தன் நீள்நிழல் கண்டு மகிழும் குழந்தைக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?” என்று அவரை கேள்விக்குள்ளாக்குகிறாள். அப்போதிலிருந்தே அலைக்கழிந்தவராக விதுரர் தென்படுகிறார். வடக்கு உப்பரிகையில் அமர்ந்து சிவையயும், சம்படையயும் நினைத்துக் கொள்கிறார்.
இன்று மக்கள் ஒரு திரளாக நின்று விதுரரை அஸ்தினாபுரிக்கு அநீதியாளராக, யாதவர்களுக்கு நன்மை செய்பவராக சித்தரிக்கும் போது மக்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை அவர் அடைகிறார். ”அனைத்தையும் உணர்வெழுச்சியால் மறந்துவிட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படித்தானா? அவர்கள் இந்தத் தருணத்தை எதிர்நோக்கி இருந்தார்களா? அவரது நீதியுணர்ச்சியையும் கருணையையும் உணரும்போதே அவர்கள் உள்ளத்தின் ஒரு மூலையில் இக்கசப்பு ஊறத் தொடங்கிவிட்டதா?” என்று தன்னையே வினவிக் கொள்கிறார்.
”பெருந்தன்மை சினமூட்டுகிறது. கருணை எரிச்சலை அளிக்கிறது. நீதியுணர்ச்சி மீறலுக்கான அறைகூவலை அளிக்கிறது. மானுடன் தன்னுள் உறையும் தீமையை நன்கறிந்தவன். இன்னொருவனின் தீமையை காண்கையில் அவன் மகிழ்கிறான். அவனை புரிந்துகொள்ள முடிகிறது. அவனை கையாள முடிகிறது. பிறன் நன்மை அவனை சிறியவனாக்குகிறது. அதை புரிந்துகொள்ளமுடியாத பதற்றம் எழுகிறது. சீண்டப்படும் சீற்றம் எழுகிறது. எளியமனிதர்கள் என்றால் சிறிய மனிதர்கள் என்றே பொருள். மக்கள்! மானுடம்! ஆனால் ஒருவருடன் ஒருவர் முரணின்றிக் கலக்கும் மிகச்சிறிய மனிதர்களின் திரள் அல்லவா அது? அதன் பொதுக்குணம் என்பது அந்தச்சிறுமையின் பெருந்தொகுதி மட்டும்தானா?” என்று வியக்கிறார்.
”மக்களை வெறுக்காமல் ஆட்சியாளனாக முடியாது’; ‘கடிவாளத்தை விரும்பும் குதிரை இருக்கமுடியாது. அது பொன்னாலானதாக இருந்தாலும்’; ‘எங்கோ ஒருமூலையில் கணவனை வெறுக்காத பத்தினியும் இருக்கமுடியாது.’ என்ற முன்பு எப்போஒதோ சொன்ன செளனகரின் சொல் வந்து அவர் முன் நிற்கிறது.
”மக்களுக்காக வாழ்பவர்கள் பெரும்பாலும் மக்களை அறியாதவர்கள். அவர்களைப்பற்றிய தங்கள் உணர்ச்சிமிக்க கற்பனைகளை நம்புபவர்கள். அந்நம்பிக்கை உடையாத அளவுக்கு வலுவான மடமை கொண்டவர்கள். புனிதமான மடமை. தெய்வங்களுக்குப் பிடித்தமான மடமை. அந்த மடமையில் சிக்கி தெய்வங்களும் அழிகின்றன.” என்று நினைத்துக் கொள்கிறார்.
”ராகவ ராமன் தெய்வத்தின் மானுட வடிவம் என்கிறார்கள். அவன் மக்களின் மாண்பை நம்பியவன். அவர்கள் விரும்பியபடி வாழ முயன்றவன். அவர்கள் துயரையும் அவமதிப்பையும் மட்டுமே அவனுக்களித்தனர். அவன் செய்த பெரும் தியாகங்களை முழுக்க பெற்றுக்கொண்டு மேலும் மேலும் என்று அவனிடம் கேட்டனர். மனைவியை மைந்தரை இழந்து வாழ்ந்தான். சரயுவில் மூழ்கி இறக்கையில் என்ன நினைத்திருப்பான்? இதோ ஏதுமில்லை இனி, அனைத்தையும் அளித்துவிட்டேன் என்று அவன் அகம் ஒருகணம் சினத்துடன் உறுமியிருக்குமா? சரயுவின் கரையில் நின்றிருப்பார்கள் மக்கள். அவன் உண்மையிலேயே தன்னை முழுதளிக்கிறானா என்று பார்த்திருப்பார்கள். ஏதும் எஞ்சவில்லை என்று கண்டபின் மெல்ல, ஐயத்துடன், “என்ன இருந்தாலும் அவன் இறைவடிவம்” என்றிருப்பார்கள்.”
”அந்த ஒரு வரியில் இருந்து அவனைப்பற்றிய கதைகளை சூதர்கள் உருவாக்கத் தொடங்கியிருப்பார்கள். அக்கதைகளை கேட்டுக்கேட்டு தன் குற்றவுணர்வை பெருக்கிக்கொள்வார்கள் மக்கள். அக்குற்றவுணர்வின் கண்ணீரே அவனுக்கான வழிபாடு. அவன் தெய்வமாகி கருவறை இருளின் தனிமையில் நின்றிருப்பான்.” என்ற விதுரரின் எண்ணங்களாக வரும் அவரின் வரிகள் வரலாற்றை நோக்கி பல திறப்புகளைத் தந்தது.
இப்படி நாம் தெய்வமாக்கி வைத்திருக்கும் பல தலைவர்கள் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன். காந்தியைப் பற்றி படிக்கும் போது அவரை மக்கள் ஒரு கட்டத்தில் தெய்வத்தன்மையாக்கி வழிபட்டார்கள் என்ற செய்தியை பாடப்புத்தகத்தில் படித்தது சட்டென நினைவுக்கு வந்தது. காந்தி சென்ற இடமெல்லாம் அவரைக் காண மக்கள் கூட்டம் அலை மோதியது. அவரைத் தொட்டாலே நோயெல்லாம் குணமாகிறது என்ற வதந்தி பரவியது. மக்கள் அலையலையாக் அவருடைய சால்வையின் நுனியைத் தொட எத்தனித்ததாக ஒரு செய்தித்தாள் குறிப்பு கூறியிருந்தது நினைவிலெழுந்தது. ஒரு விவசாயி தன் நிலத்தில் விதைத்திருந்த கோதுமை கடுகாக மாறினால் தான் மகாத்மாவை நம்பும் எண்ணம் கொண்டவராக இருந்ததாகவும் அவருடைய நிலம் கடுகாக மாறியதால் நம்பியதாக குறிப்பிடுகிறார். அதே போல அவரை எதிர்க்கத் துணிந்தவர்கள் யாவரும் ஏதோ ஒரு வகையில் அழிவைச் சந்தித்ததாகவும் மக்கள் நம்பினார்கள். ஒரு நவீன இந்தியாவிலேயே இத்துனை மாய நம்பிக்கைகள் உலா வந்திருக்கிறது. இதனை அன்று படிக்கும் போது சிரிப்பாக இருந்தது. ஆனால் இன்று வெண்முரசில் தான் மக்கள் திரளின் நம்பிக்கையின் கண் கொண்டு அவற்றைப் புரிந்து கொண்டேன். காந்தி விரும்பப்படுபவராகவும் அதே சமயம் எளிதில் வெறுக்கப்பட்டதற்கான காரணத்தையும் அறிந்தேன். இந்த தெய்வத்தன்மையை அடைய அவர் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை என்று நினைத்துக் கொண்டேன். கோட்சேவால் சுடப்படும் தருணத்தில் அவரும் ராமனைப் போல இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்று நினைந்திருக்கக் கூடுமா? ஒரு வேளை காந்தி மீதுள்ள குற்ற உணர்வினால் தான் அவரை நாம் மேலும் மேலும் பெருக்கி புனிதப்படுத்திக் கொள்கிறோமா? இன்னும் ஆயிரமாண்டுகள் தாண்டி காந்தி கண்டிப்பாக ’என்ன இருந்தாலும் அவன் இறைவடிவம்’ என்று கூறப்பட்டு தெய்வமாகி கருவறை இருளின் தனிமையில் நின்றிருப்பாரா? என்ற கேள்விகளை என்னுள் எழுப்பிக் கொண்டேன். காந்தி மட்டுமா? ஏசுவும் நபிகளும் விவேகானந்தரும் இன்னும் தங்கள் செயலுக்காக முழுதளித்தவர்களும் யாவரும் இப்படித் தானே என்று நினைத்துக் கொண்டேன். உங்களையும் தான்.
இத்தகைய நிலையில் தான் விதுரர் கிருஷ்ணனைத் தானே கண்டடைகிறார். ”மக்களைப்பற்றி இத்தனை அறிந்த ஒருவன் வேறில்லை. ஆனால் அவன் மக்களை விரும்புகிறான். அவர்களுக்காக தன் வாழ்க்கையை அளிக்கிறான். ஒவ்வொரு கணமும் முழுமையாக மன்னித்துக்கொண்டே இருந்தாலொழிய அது இயல்வதல்ல.” என்று உணர்கிறார். தன்னுடைய இந்த கையறு நிலையை கிருஷ்ணன் எங்ஙனம் எதிர் கொண்டிருப்பான் என்று விதுரர் யோசித்துப் பார்க்கிறார். “இவர்கள் அவனை கல்லால் அடித்துக் கொன்றிருந்தால் எப்படி எதிர்வினை ஆற்றியிருப்பான்? அப்போதும் அவன் இதழ்களில் அந்தப் புன்னகை இருந்திருக்கும்.”
”ஆம், புன்னகைதான் செய்திருப்பான். அந்தப்புன்னகை. ஆம், அந்தப் புன்னகை. தெய்வங்களே, அந்தப்புன்னகையை எப்படி காணத் தவறினேன்? இத்தனை காவியம் கற்றும் அதை காணமுடியவில்லை” என்று தன்னை சூழ்ந்திருந்த வெற்று ஆணவக்குவையை நினைத்து மனம் நொந்து கொள்கிறார். கிருஷ்ணனின் அந்தப் புன்னகை என்னும் பேரோவியத்தை விதுரர் தரிசிக்கும் தருணமே விதுரரின் அகக்கட்டுகள் அவிழ்கின்றன. ஒரு வகையில் அந்தப்புன்னகை நம்முள்ளும் ஆழ ஊடுருவி அக இருளை கட்டவிழ்க்கின்றன. ஆம், அந்தப் புன்னகை. மாயப் புன்னகை.
பிரேமையுடன்
இரம்யா