முகம் விருது விழா

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

செயல் வழியாக இச்சமூகத்திற்குத் தங்களுடைய அர்ப்பணிப்பை செலுத்தி, லட்சியவாதத்தின் தோற்றுவாயை நீட்சிப்படுத்தும் சாட்சிமனிதர்களுக்கு ‘முகம்’ விருதை அளித்துவருகிறோம். மானுடத்தை வழிநடத்தும் அவர்களுடைய வரலாற்றுப் பெருவிசையின் முன்பு இக்கெளரவிப்பு சின்னஞ்சிறிது என்பதையும் அறிந்திருக்கிறோம். ஆயினும்கூட, ‘கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக!’ என்கிற வேதாகமத்தின் வார்த்தைகளைச் சத்தியப்படுத்துகிற மனிதர்களை பொதுவெளியில் முன்னிறுத்துவதை முக்கியத்துவமெனக் கருதுகிறோம்.

முகம் விருதை இம்முறை தோழமை ஸ்ரீநிவாச கோபாலன் அவர்களுக்கு வழங்குவதில் நாங்களும் நண்பர்களும் பெருமகிழ்வு கொள்கிறோம். அழிசி பதிப்பகத்தினை நிறுவி இவர் முன்னெடுக்கும் அருஞ்செயலானது காலாகாலத்திற்கும் நிற்கப்போகிற பேருழைப்பு. அச்சில் இல்லாத பழமையான மற்றும் அண்மைய தமிழ்நூல்களை மின்நூல் பிரதிகளாக மாற்றி பதிவேற்றி, நவயுகத் தலைமுறைகளுக்கான வாசிப்பு வடிவத்தில் அவைகளைப் பத்திரப்படுத்தும் இவருடைய செயற்பணி நம் போற்றுதலுக்குரியது.

அய்யா வி.பி.குணசேகரன் அவர்களின் நற்கரங்களால் இவ்விருது அளிக்கப்படவுள்ளது. வி.பி.ஜி அவர்களுடன் முதன்முதலாக அந்தியூர் மலைப்பகுதிகளுக்குச் சென்றுவந்த பிறகுதான் குக்கூ அமைப்பைத் துவங்கினோம். குக்கூவின் முதல் நிகழ்வில், முதல் முகம் விருதை அய்யா வி.பி.ஜி அவர்களுக்கே அளித்தோம். தொண்ணூற்று எட்டு வயது முதியவரும், வள்ளலாரின் தொண்டராக இருந்து கல்விக்காகத் தன் வாழ்வினைத் தொண்டளித்த ‘குலசை குப்புசாமி’ அய்யா அவர்களால் வி.பி.ஜிக்கு அவ்விருது கைசேர்க்கப்பட்டது.

பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்காகத் தன் வாழ்வினை அர்ப்பணித்துச் செயல்படுகிற லட்சியவாதி வி.பி.குணசேகரன் என்கிற வி.பி.ஜி. இன்றிருக்கும் அறம்-மாந்தர்களில் நம் காலத்து இளையவர் கூட்டத்திற்கு நாம் துணிந்து சுட்டிக்காட்டத்தக்க ‘வழிகாட்டும் ஆசிரியர்’ என்கிற சொல்லிற்கு முழுத்தகுதியுடையவர். உங்களுடைய ‘அறம்’ தொகுப்பினை ஈரோட்டில் நிகழ்ந்த நிகழ்வில் அய்யா வி.பி.ஜி வெளியிட, மருத்துவர் ஜீவா அவர்கள் பெற்றுக்கொண்டதை இக்கணம் மனதில் நினைத்துக் கொள்கிறோம். மனிதர்களின் வாழ்க்கையினை மீட்டளித்துக் காக்கிற பெருந்தகையின் கரங்களால் ஸ்ரீநிவாச கோபாலன் அவர்களுக்கு முகம் விருது வழங்கும் வாய்ப்பினை காலம் அருளியுள்ளது.

ஸ்ரீநிவாச கோபாலன் அவர்களின் நேர்காணலை மிகத் தேர்ந்த முறையில் நிகழ்த்தி பதிவுசெய்தளித்த விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களான கவிஞர் மதார் மற்றும் தோழமை இரம்யாவுக்கு குக்கூவின் அன்புகூர்ந்த நன்றிகள். உங்கள் தளத்தில் முகம் விருது அறிவிப்பும், ஸ்ரீயின் நேர்காணலும் வெளியான போது, உலகில் எங்கெங்கிருந்தோ நண்பர்கள் அழைத்துத் தங்கள் வாழ்த்தையும் அன்பையும் பகிர்ந்துகொண்டார்கள்.  முகம் விருதளிப்பு நிகழ்வானது காலச்சூழ்நிலைகளால், அந்தியூர் வனப்பகுதியில் உள்ள தாமரைக்கரையில் நிகழவிருக்கிறது. பெருந்தொற்றின் பேரச்சம் நீங்காத இடர்களினால், குறைந்தளவிலான நண்பர்கள் பங்குபெறும் சிறுநிகழ்வென இதைத் திட்டமிட்டிருக்கிறோம்.

நம் சமகாலத்தில், சமூகத்திற்கான செயல்விசையாக அமைந்து, எத்தனையோ படைப்புமனங்களுக்கான அகவிசையைத் தூண்டி, வரலாற்றுமனிதர்களின் நீட்சியைத் தீர்மானிக்கும் வெளிச்சவழியில் பயணிக்கும் அழிசி ஸ்ரீநிவாச கோபாலன் அவர்களுக்கு முகம் விருதைப் பணிந்தளிப்பதை எங்கள் தன்னறப்பாதை என்றே அகமேற்கிறோம்.

(சிற்பம் – ஒளிப்படம் : பெனிட்டா பெர்ஷியாள்)

நன்றிகளுடன்,
குக்கூ குழந்தைகள் வெளி 

முந்தைய கட்டுரைஆசிரியர் வேறு படைப்பு வேறா?
அடுத்த கட்டுரைஒன் பை டூ- மீண்டும்