அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
தளத்தில் மாற்றுக் கல்வி குறித்த பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருந்த ”டோட்டோ –சான் ஜன்னலில் சின்னஞ்சிறுமி” புத்தகத்தை வாங்கி வாசித்தேன்.
இருபது ஆண்டுகளாக என் ஆசிரியப்பணியில் வழக்கமான கல்வியின் போதாமைகளை நான் அநேகமாக தினமுமே உணர்கிறேன். சராசரி குடிமகன்களை உருவாக்குவதாக சொல்லப்படும் பொதுக்கல்வியில் எனக்கு நம்பிக்கை அற்றுப்போய் பல வருடங்களாகி விட்டிருக்கிறது.
பள்ளிக்கல்வியில் மதிப்பெண்கள் வாங்கும்படிமட்டும் தயாரிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் மனனம் செய்யப் பழகி, சுயமாக சிந்திக்கும் திறனை இழந்த, மூளை மழுங்கடிக்கப்பட்ட மாணவர்களே அதிகம் கல்லூரிக் கல்விக்கு வருகிறார்கள். 12 ஆம் வகுப்பில் முதலிடம் இரண்டாமிடம் வந்த மாணவர்கள் கூட கல்லூரியில் வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்டு கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொள்ளத் தடுமாறுவதை பார்க்கிறேன். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, தன் வீட்டில் என்ன நடக்கிறது, தன் ஊரில் உலகில் என்ன நடக்கிறது என்பதையெல்லாம் குறித்து எந்த அறிதலும் இல்லாமல்தான் 3 வருடங்களும் படித்துப் பட்டமும் வாங்கி வெளியில் வருகிறார்கள். ஆசிரியர்களும் எந்த மாறுதலும் இல்லாமல் அரைத்த மாவையே அரைக்கிறோம்.
நான் இளங்கலை தாவரவியல் படித்த அதே துறையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியராக சேர்ந்தபோது நான் படித்த அதே பாடத்திட்டம் எந்த மாறுதலுமின்றி நடைமுறையில் இருந்தது. இன்று 20 வருடங்களாகியும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாடத்திட்டத்தை தான் நடத்துகிறோம். நினைத்துப்பாருங்கள் பொள்ளாச்சியை போன்ற பச்சை பிடித்த பல கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் ஓரிடத்தில் நான்கு சுவர்களுக்குள் தாவரவியலை நடத்திக் கொண்டிருப்பதென்பது எத்தனை அநியாயமென்பதை.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சைகஸ் என்னும் ஒரு கீழ்நிலைத் தாவர குடும்பத்தை சேர்ந்த மரமொன்றை குறித்து பாடம் நடத்த வேண்டி இருக்கும் அந்த சைகஸ் பெண் மரமொன்று கல்லூரியில் என் வகுப்பிற்கு பின்புறம் இருக்கிறது. ஆனால் அந்த மரமத்தினருகில் மாணவர்களை அழைத்துச் சென்று மரத்தை அவர்கள் தொட்டு உணர்கையில் பாடம் நடத்த நான் பல படிநிலைகளில் அனுமதி வாங்கவேண்டும். மாணவர்களின் ஒழுங்கு சீர்குலையும் என்றும், வகுப்பில் அமர்ந்திருக்கும் பிற துறை மாணவர்களை அது தொந்தரவுக்குள்ளாக்கும் என்றெல்லாம் எனக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படும் ஆனாலும் நான் ஒவ்வொரு வருடமும் சைகஸ் மரத்தருகில் கூட்டமாக மாணவர்கள் வைத்துக்கொண்டுதான் பாடம் எடுப்பேன். கல்லூரியில் மேலும் பல இடங்களில் சைகஸ் மரங்களை நட்டும் வைத்திருக்கிறேன். இலைகள் செடிகள் கொடிகள் என கைகளால் எடுத்துக்கொண்டு போக முடிந்த அளவில் வகுப்பிற்கு எடுத்துக்கொண்டுபோய்க் கூடக் கற்பிக்கிறேன்
அருகம்புல் மண்டிக்கிடக்கும் கல்லூரி வளாகத்தின் ஒரு வகுப்பறைக்குள் அருகை கரும்பலகையில் படமாக வரைந்து கற்றுக் கொடுக்கும் பொதுக்கல்விமுறை தான் இப்போது அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுக் கல்வி குறித்த தயக்கங்களும் அச்சமும் பெற்றோர்களுக்குத்தான் இருக்கிறது. விரும்பும் படியான எந்த முறையில் கற்றலை அளித்தாலும் மாணவர்கள் ஆர்வமாகக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை
நான் 8 ஆவதில் படிக்கையில்தான் எங்களூருக்கு முதன் முதலில் பிரஷர் குக்கர்கள் புழக்கத்தில் வந்தன. அறிவியல் ஆசிரியை துஷ்யகுமாரி வகுப்பிற்கு குக்கரையும், ஊறவைத்த கடலைகளையும் வீட்டிலிருந்து கொண்டுவந்து, எங்கள் முன்பு அதை விளக்கி வேக வைத்து சுண்டல் செய்து குக்கரின் செயல்பாட்டை விளக்கிய அந்த பாடம் இன்னும் என் மனதில் அப்படியே நினைவில் இருக்கிறது.
குறிஞ்சி மலர்ந்திருந்த ஒரு கல்லூரிக்காலத்தில், தாவர வகைப்பாட்டியல் ஆசிரியருடன் தொட்டபெட்டா சிகரத்தின் உச்சியில் இருந்து மலைச்சரிவெங்கும் நீலக்கம்பளமாய் மலர்ந்திருந்த குறிஞ்சி செடிகளை பார்த்ததும், காலடியில் இருந்த சிண்ட்ரெல்லா செருப்பென்னும் ஒரு சிறு மலர்ச்செடியை பார்த்ததும் எனக்கு நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது. மிக மகிழ்வுடனும், நிறைவுடனும் நான் திரும்ப எண்ணிப்பார்க்கும் கற்றல் என்பது வகுப்பறைக்கு வெளியில் அரிதாக எனக்கு கற்பிக்கபட்டவைகளையே.
டோபியரி என்னும் தாவர உயிர் சிற்பக்கலையை பூங்காக்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள், கம்பிச்சட்டங்களால் விலங்கு, பறவை உருவங்கள் செய்து, வளரும் சிறு செடி ஒன்றின் மீது இதை பொருத்தி வைத்து விடுவோம். செடி வளருகையில் சட்டத்துக்கு வெளியில் வளரும் இலைகளையும் கிளைகளையும் வெட்டி வெட்டி விரும்பிய வடிவில் உயிருள்ள பசுஞ்செடிகளை உருவாக்கும் இந்த முறைதான் இப்போது பொதுக்கல்வியில் இருக்கிறது. மாணவர்களின் தனித்திறன், அவர்களின் விருப்பம், தேவை, நிறைவு, லட்சியம் இவற்றை குறித்தெல்லாம் எந்த அறிதலும், கவலையும் இல்லாமல் எங்கோ, யாரோ, முன்னெப்போதோ முடிவு செய்த பாடத்திட்டங்களை திணித்து, ஒரு சராசரி குடி மகனை உருவாக்கும் முயற்சியில் தான் நாங்களனைவருமே இருக்கிறோம்.
எனவேதான் எனக்கு டோட்டோ சானின் டோமோயி மாற்றுக்கல்வி பள்ளியை அத்தனை பிடித்திருந்தது. முன்பே தீர்மானித்திருக்கும் வடிவிலான ஆளுமைகளாக மாணவர்களை மாற்றும் பணியில் இருக்கும் எனக்கு இந்த பள்ளி அதன் செயல்பாடுகள், அங்கிருக்கும் குழந்தைகள், அவர்களின் மகிழ்ச்சி எல்லாமே பெரும் குதூகலத்தை அளித்தது. கூடவே பெரும் ஏக்கத்தையும்.
இப்படியான கல்விமுறையை எல்லாருக்கும் அளிக்கையில் உருவாகும் ஒரு சமூகத்தை எண்ணி பார்க்கையில் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று ஹோம் ஸ்கூலிங் பற்றி கொஞ்சம் பேச தொடங்கி இருக்கிறார்கள். எனினும் அதன் அடிப்படைகளை அறியாத பெற்றோர்களால் அக்கல்வியை முழுமையாக அளித்துவிட முடியாது. டோமோயி போன்ற பள்ளிகளே நமக்கு இப்போது தேவையாக இருக்கிறது.
குருவிகளோடு பேசிக்கொண்டிருந்ததற்காகவும், மேசையறையை அடிக்கடி திறந்து மூடியபடி இருந்ததற்கும், வகுப்பு ஜன்னல் வழியே இசைக்கலைஞர்களை வரவழைத்து இசைகேட்டதற்காகவும் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிறுமி ஒருத்தி, அந்த மாற்றுக்கல்வி பள்ளியின் உயிருள்ள பசுமையான கதவுகள் திறந்து வரவேற்கப்பட்டு நுழைகிறாள்.
அங்கே அவள் பல மணி நேரம் தொடர்ந்து பேசுவதெல்லாம் செவிகொடுத்து கேட்க தலைமை ஆசிரியர் இருக்கிறார். அவளால் உடலூனமுற்றவர்களுடனும் உடல் வளர்ச்சி நின்று போனவர்களுடன் அவர்களைப் புரிந்து கொண்டு அன்புடன் இருக்க முடிகிறது, அவர்களுக்கு அவளாலான உதவிகளை மனப்பூர்வமாக செய்யவும் முடிகிறது.
இப்போதைய பெரும்பாலான பெற்றோர்கள் நினைப்பதும் விரும்புவதும் போல முழுக்க முழுக்க பாதுகாப்பை மட்டும் அளிக்கும் பள்ளியாக இல்லாமல் சின்ன சின்ன ஆபத்துக்களையும் அவள் அங்கே சந்திக்க வேண்டி இருக்கிறது. மிக பத்திரமான, சுத்தமான இடங்களில் மட்டும் அவள் இருப்பதில்லை, பள்ளியில் கழிவறை குழிக்குள் விழுந்த தொப்பியை அவளாக கம்பியைக் கொண்டு எடுக்க முயற்சிக்கிறாள், உயரமான மரத்தில் ஏணியை கொண்டு, இளம்பிள்ளை வாதத்தால் சூம்பிய காலுடன் இருக்கும் நண்பனுடன் ஏறுகிறாள், செய்தித் தாள் கொண்டு மூடப்பட்டிருக்கும் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுகிறாள், கொக்கியில் தானே மாமிசமாக தொங்கி கீழே விழுந்து அடிபடுகிறாள். ஆனால் அவ்வனுபவங்களிலிருந்து அவள் ஆபத்தான சூழல்களை குறித்தும் எப்படி பாதுகாப்பாக இருப்பதென்றும் சுயமாகக் கற்றுக் கொள்கிறாள்.
தங்கள் பிள்ளைகளை மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும், வெயிலில் காய்ந்தால் தலைவலி வரும், பனியில் நின்றால் காய்ச்சல் வருமென்று பொத்தி பொத்தி வளர்க்கும் பெற்றோர்கள் கட்டாயம் இப்பள்ளியைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளிக்கு வெளியே சென்று மகரந்தச் சேர்க்கையை, பட்டாம் பூச்சிகளை, எல்லாம் நேரில் பார்த்து தாவரவியல் கற்றுக்கொள்ளும் டோட்டோசான் அருகில் இருக்கும் தோட்ட உரிமையாளர் ஆசிரியராக வந்தபோது விதைக்கவும், களையெடுக்கவும், கற்றுக்கொள்கிறாள்.
அந்த ரயில் பெட்டி வகுப்பறைகளே வெகு கொண்டாட்டமானதாக இருக்கிறது அவளுக்கு. பள்ளிக்கு வரும் கூடுதல் ரயில் பெட்டி டிரெய்லர்களால் இழுத்து வரப்பட்டு மரப்பாளங்களில் உருட்டி எடுத்து வைக்கப்படுகையில் இயற்பியலையும், சிறுவர்களனைவரும் நிர்வாணமாக நீச்சல் குளத்தில் குளிக்கையிலே, உடலறவியலையும், திறந்தவெளி சமையலின் போதும், தேநீர் விருந்தின்போதும் சமையலையும், விருந்தோம்பலையும்,, சென்காகுஜீ கோயிலுக்கு போகையில் வரலாறையும், பள்ளிப்பாடலை பாடிப்பாடி இசையையும், சபையினர் முன்பு எப்படி அச்சமின்றி பேசுவதென்பதையும், கடலிலிருந்தும் மலையிலிருந்தும் உணவுகளை சாப்பிடுவதால் சரிவிகித சமச்சீர் உணவு கிடைக்கும் என்பதையும், கப்பல் பயணத்தையும், பிறருக்கு உதவி செய்வதையும் இன்னும் பலவற்றையும் கற்றுக்கொண்டே இருக்கிறாள்.
சந்தையில் காய்கறிகள் வாங்கி வணிகத்தை அறிந்து கொள்வது, கூடாரமடித்து தங்குதல், கொதி நீர் ஊற்றுகளில் குளிப்பது. ஆரோக்கிய மரப்பட்டை வாங்குவது, தனந்தனியே ரயிலில் பயணிப்பது என டோட்டோ சானின் பள்ளி வாழ்க்கை ஒவ்வொரு நாளுமே கொண்டாட்டமாக, அற்புதமாக இருக்கிறது. போட்டியில் வென்றவர்களுக்கு கோப்பைகளுக்கு பதிலாக காய்கறிகள் பரிசாக கொடுக்கப்பட்டு, அவற்றை அக்குழந்தைகளின் குடும்பம் உணவாக்குவதும் குழந்தைகளுக்கு கொடுக்கும் மகிழ்ச்சி அளப்பரியதாயிருக்கிறது.
டோட்டோசானும் பிற குழந்தைகளும் பள்ளி மைதானத்தின் மரங்களின் மீதமர்ந்த படி கீழே நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி தான் எத்தனை அழகானது. அங்கிருந்து அக்குழந்தைகள் அறிந்துகொள்ளுபவற்றை வெகு நிச்சயமாக வகுப்பறைக்குள் கற்பிக்க முடியாது.
டோட்டா சான் மஞ்சள்நிறக்கோழி குஞ்சுகளிடமிருந்தும், தன் தோழன் ஒருவனிடமிருந்தும், தன் பிரிய நாயிடமிருந்தும், இழப்பின், மரணத்தின், பிரிவின், துயரையும் கூட அறிந்துகொள்கிறாள்
அவளுக்கென அளிக்கப்பட்ட அடையாள அட்டையும், “நீ மிகவும் நல்ல பெண் தெரியுமா” என அடிக்கடி அவளிடம் சொல்லப்பட்டதும் அவளது ஆளுமையில் உருவாக்கிய மாற்றம் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று. பேய்களைக் கொசு கடிப்பதும், இரண்டு பேய்கள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு அழுவதும், பயந்துபோன பேய் கண்ணீர் விடுவதுமாக அந்த தைரிய பரீட்சை வெகு சுவாரஸ்யம்.
அப்பள்ளிக்கு வெளியே போர்ச்சூழல் நிலவுவது குறித்து எந்த அறிதலும், அச்சமும் இல்லாமல் அக்குழந்தைகள் அங்கு வாழ்வின் இயங்கியலை மகிழ்ந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
குண்டு வீச்சில் அழிந்து போன அந்த பள்ளி அங்கு படித்த அத்தனை மாணவர்களின் மனதிலும், அவர்கள் சொல்லக் கேட்கும் அவர்கள் குடும்பத்தினர் மனதிலும் எந்த சேதாரமும் இல்லாமல் நிரந்தரமாக இருக்கிறது. தற்போது மிகப் பிரபலமான திரை மற்றும் தொலைக்காட்சி நடிகையாகவும் புகழ்பெற்ற ஜப்பானிய ஆளுமையாகவும் இருக்கும் டெட்சுகோ குரோயோ நாகி என்னும் டோட்டோ சான் தன்னுடன் படித்த தோழர்கள் இப்போது என்னவாக இருக்கிறார்கள் என்னும் குறிப்பையும் இதில் தந்திருப்பது மிக சிறப்பானது.
அவர்களின் ஆளுமை உருவாக்கத்தில் மாற்றுக் கல்வி முறையின் நேரடி தாக்கம் இருப்பதை வாசிப்பவர்கள் உணரமுடிகின்றது குறிப்பாக உடல் வளர்ச்சி நின்று போன தாகா ஹாஷி என்னவாயிருக்கிறான் என்பதே அப்பள்ளியின் மாற்றுக்கல்வி முறையின் வெற்றிக்கு சான்றளிக்கிறது.
டோமோயி பள்ளியை உருவாக்கிய திரு.கோபயாஷி போல தேர்ந்த கல்வியாளர்களால் மாற்றுக்கல்வி முறை உலகின் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல மொத்தமாக பொதுக்கல்வி முறையை அப்படியே தலைகீழாக மாற்றிவிட முடியாது. ஆனாலும் மாற்றுக்கல்வியின், சில அம்சங்களையாவது பொதுக்கல்வியில் சேர்க்கலாம்.
வகுப்பறைக்கு வெளியேவும் கற்றலை அளிப்பது, மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் காணும் முறைகளை கல்வித்திட்டங்களில் சேர்ப்பது, மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக அவர்கள் கருதாமல் இருப்பது போன்றவற்றை நிச்சயமாக செய்யலாம். தற்காலத்துக்கேற்றபடி பாடத்திட்டங்களை மாற்ற வேண்டியது மிக அவசியமானது.
பெற்றோர்களின் மனநிலையும் வெகுவாக மாற வேண்டி இருக்கிறது. தன் மகள் மருத்துவப்படிப்பு சேரும் அளவிற்கு மதிப்பெண் வாங்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தாயொருத்தியை நானறிவேன். பிற குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு கடிந்துகொள்ளும் பல்லாயிரம் பெற்றோர்கள் இங்கே இருக்கிறார்கள்.
குழந்தைகளின் தேவைகளும், விருப்பங்களும், சிக்கல்களும் என்னவென்று அறியாத, மருத்துவர்களாலும், பொறியாளர்களால் சமைக்கபட்டிருக்கும் ஒரு பொன்னுலகை குறித்தான தீவிர நம்பிக்கையுடன் இருக்கும் பெற்றோர்களில் பலருக்கு மாற்றுக்கல்வி உகந்ததல்ல.
என் மகன் பத்தாவது முடித்த பின்னர், 11 படிக்க பலரால் ஆகச் சிறந்த பள்ளி என பரிந்துரைக்கபட்ட ஹைதராபாதிலிருக்கும் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். அது ஒரு பள்ளிக்கூடம் கூட அல்ல ஒரு அடுக்ககம். அதன் குளிரூட்டப்பட்ட அறைகளில் அடைத்த ஜன்னல்களுக்கு உள்ளிருந்து பிராய்லர் கோழிகளை காட்டிலும் பாவமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர். அந்த கட்டிடத்தில் இருந்து துரத்தப்பட்டவள் போல நான் வேகமாக வெளியேறினேன். டோமோயி பள்ளியில் முள் கம்பிகளுக்கு அடியில் படுத்தும், தவழ்ந்தும் வெளியேறும் விளையாட்டில் தனது ஆடைகள் மட்டுமல்லாது ஜட்டியும் கூட கிழியும்படி விளையாடும் டோட்டோ சானுக்கு கிடைக்கும் அனுபவங்களைக் குறித்து ஏதும் அறியாமல் IIT கனவுகளில் மூழ்கி இப்படி லட்சக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோவையில் மகன்கள் படித்த பள்ளியும் பொது கல்வி முறையில் மாற்றுக் கல்வியின் அம்சங்களையும் கலந்த கல்விமுறையை தான் கொண்டிருக்கிறது. படிக்க சொல்லி அழுத்தமோ கட்டாயமோ அங்கு எப்போதும் இருந்ததில்லை. சேர்க்கையின் போதே உங்கள் மகன் இங்கு படித்து பொறியாளராகவும் மருத்துவராகவும் ஆகவேண்டும் என உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதற்கானது இந்தப்பள்ளி அல்ல என்று சொன்னார்கள்.
மதிய உணவிற்கு பின்னர் பெரும்பாலான நாட்களில் வகுப்பறைக்கு செல்ல வேண்டியதில்லை விடுதி அறையிலேயே இருக்கலாம், இசை கேட்கலாம், மிதிவண்டியில் சுற்றலாம், இசைக்கருவிகள் வாசிக்கலாம், பள்ளி வளாகத்தில் இருக்கும் கோயில்களுக்கோ அல்லது மைதானத்தில் விளையாட்டு பயிற்சிகளுக்கோ செல்லலாம், ஆணும் பெண்ணும் இயல்பாக பார்த்து, பேசிக் கொள்ளலாம். இங்கு மட்டும் தான் எனக்கு தெரிந்து KTPI – Knowledge and traditional practices of India என்னும் ஒரு பாடத்தை 12 ஆம் வகுப்பில் கற்றுக்கொள்ள முடியும். இந்திய தொன்மங்கள், இலக்கியங்கள், இதிகாசங்களை இப்பாடத்தில் கற்பிக்கிறார்கள். இந்திய புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களுக்கும் கோவில்களுக்கும் சுற்றுலா அழைத்து செல்கிறார்கள்.
இந்த பள்ளியில் மட்டுமே நான் ஆசிரியர்களின் தோளில் கைகளை போட்டுக்கொண்டு நடக்கும் மாணவர்களை பார்த்திருக்கிறேன்.
ஒரு முறை நான் பள்ளிக்கு சரணுடன் சென்றிருக்கையில் தூரத்தில் இருசக்கரவாகனத்தில் கணவரின் பின்னால் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்த அப்பள்ளியின் முதல்வர் ”சரண் லவ் யூ சரண்” என்று கூச்சலிட்டபடி காற்றில் ஒரு முத்தத்தை பறக்க விட்டு சென்றார்கள். பள்ளிப்படிப்பை முடித்து சில வருடங்களுக்கு பின் ஒரு விழாவுக்கெனெ மீண்டும் பள்ளிக்கு சென்றிருந்த சரணை “looking handsome man” என்றபடி ஒரு ஆசிரியை இறுக்க அணைத்துக் கொண்டார்கள். அங்கே போலி பணிவும் பவ்யமும் இல்லவே இல்லை. டோமோயி பள்ளியின் மாணவர்கள் தலைமை ஆசிரியரின் மடியிலும், முதுகிலும், தோளிலும் ஏறி தொங்கிக் கொண்டிருப்பதை வாசிக்கையில் நான் அவற்றை நினைவுகூர்ந்தேன்.
நான் மகன்களின் ஆளுமை உருவாக்கம் குறித்து இந்த பள்ளியில் சேர்த்த பின்னர் ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை. இப்படியான பள்ளியில் கற்றுக்கொள்வது அனைவருக்கும் சாத்தியமில்லை தான். நம் பொதுக் கல்வியில் மாற்றுக்கல்வியின் சாத்தியமான அம்சங்களை சேர்ப்பது குறித்து கல்வியாளர்கள் அரசியலாளர்கள் யோசித்து, உலகின் பல பகுதிகளில் இருக்கும் மாற்றுக்கல்வி முறைகளை பற்றியெல்லாம் அவர்கள் அறிந்து கொண்டு ஆலோசித்தால், பரிசீலித்தால் மட்டுமே மெல்ல மெல்ல மாற்றம் வரும்.
ஆசிரியர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. இப்புத்தகத்தை நான் மிக மிக நேசிக்கிறேன். எனக்கு தெரிந்து வாசிப்பில் ஆர்வம் இருக்கும் பலருக்கும் இதை நான் பரிந்துரைத்தேன், பெற்றோர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று இது. மிகச் சிறிய புத்தகம் ஆனால் இதன் பேசுபொருள் மிக மிக பெரியது.
டோமோயி பள்ளியின் மாணவியும் இந்நூலின் ஆசிரியருமான டெட்சுகோ குரோயா நாகிக்கு ஆசிரியராகவும் அன்னையாகவும் எனது பாராட்டுக்களை தெரிவிக்க அவரது முகவரியை தேடிக்கொண்டிருக்கிறேன்.
இந்த நூலை அறிமுகப்படுத்தியதற்கான நன்றிகளுடன்
லோகமாதேவி