ராமப்பா கோயில்- ஒரு கடிதம்

இந்தியப் பயணம் 11 – வரங்கல்

ருத்ரை- சிறுகதை

அழியா இளமைகள்

அன்புள்ள ஜெ,

‘இடம் மாறி இடம் மாறி மல்லாந்து படுத்து அந்தச் சிற்பங்களை பார்த்து பார்த்து திகட்டி சலித்து மீண்டும் தாகம் கொண்டு மீண்டும் பார்த்து அது ஒரு மீளமுடியாத அவஸ்தை. அந்த ஒரு மண்டபத்தை சாதாரணமாக ரசிக்கவே ஒரு நாள் முழுக்க போதாது. சிவபெருமானின் நடன நிலைகள். அவரைச் சூழ்ந்து பிற தெய்வங்கள். நடன மங்கையர். இசைக்கலைஞர்கள். அந்த மண்டபமே தெய்வங்களும் தேவர்களும் மானுடரும் சேர்ந்து கொண்டாடும் ஒரு பெரும் கலைத்திருவிழாபோல் இருந்த்து.

ராமப்பா கோயிலின் வெளியே மேல்கூரை வளைவுக்கு அடியில் உள்ள கரியகல் மோகினி நாகினி சிலைகள் ஒவ்வொன்றும் பெரும் கலைப்படைப்புகள். இதற்கு அப்பால் ஒரு கலையே இந்தியாவில் இல்லை என்ற பெரும் பிரமிப்பை உருவாக்குபவை. நண்பர்கள் ஒவ்வொருவரும் அரற்றியபடியே இருந்தார்கள். பித்து பிடிக்க வைக்கும் ஒரு அபூர்வமான காட்சிப்பெருவிருந்து இந்த ஆலயம். இந்திய நாட்டில் ஒரே ஒரு கலைச்சின்னம் மட்டும் எஞ்சினால் போதுமென்றால் இதை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்…’இந்தியப் பயணம் 11 – வரங்கல்

இந்திய பயணத்தில் நீங்கள் எழுதியது சார். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு உங்களை பரவசத்தில் ஆழ்த்திய இந்த சிற்ப  அற்புதம்  இனி உலகமெல்லாம் கவனிக்கப்படும். ஆம், இந்த ஆலயத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்  கிடைத்துள்ளது. நிச்சயமாக தனி தெலுங்கானா மாநிலத்தால் கிடைத்த ஆகப்பெரும் நன்மை இதுதான். இந்த உலக அங்கீகாரத்திற்காக உண்மையாகவே மெனக்கெட்டு இருக்கிறார்கள் இங்குள்ள மந்திரிகள். இந்த செய்தி கேட்டவுடன் மனம் துள்ளிக்குதித்தது . உங்கள் பதிவை தேடி படித்தேன். அதே பரவசம் உங்களில் இன்றும் இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு சின்ன சுவாரசியம் இந்த கோயிலுக்கு உண்டு சார். ஜாயப்பா சேனானி என்று காகதீய அரசி ருத்திரம்மாவின் தந்தை கணபதி தேவனின் மச்சினன் ஒருவர் இருப்பார். இவருடையது கோதாவரியின்கரையில் உள்ள சிறு நாடு. சோழர்களின் உறவினர்களான கிழக்கு சாளுக்கியர்களின் கீழ் இருந்தவர். சோழர்களின் வீழ்ச்சி கிழக்கு சாளுக்கியர்களையும் வீழ்ச்சியடைய காகதீய பேரரரசின் ஏழுமுக காலம் ஆரம்பமானது. கணபதி தேவன் கோதையின் கரையில் உள்ள சிற்றரசுகளை வென்றான். ஜாயப்பாவும் வீழ்ந்தான். ஆனால், கணபதிதேவன் அவரை கொல்லாமல் மன உறவின் மூலம் தன் அரசில் ஐக்கியமாக்கினார். ஜாயப்பாவின் தங்கைகளை மணந்தார்… ருத்திரம்மாவின் மாற்று தாய்கள் இவர்கள்.  அவரை சகல மரியாதைகளுடன் வரங்கல் அழைத்து தனது சேனானி ஆக்கினார். இந்த ஜாயப்ப பெரும் வீரன் மட்டுமல்ல நடன கலைஞரும் கூட! அதனுடன் சேர்த்து எழுத்தும் இருந்து இருக்கலாம். அதனால் தான், பாரதமுனியின் நாட்யசாஸ்திரத்திற்கு இணையானது என்று சொல்லும் ‘ந்ருத்த ரத்னாவளி’ என்ற சம்ஸ்க்ருத நூலை எழுதினர். அந்த நூலின் மூலம்…  தெலுங்கானாவில் உள்ள ‘பேரினி’ நாட்டியத்தை வரையறுத்தார். அதற்கு ஒரு கிளாசிக் அந்தஸ்தை கொடுத்தார். அவரின், அந்த நாட்டிய நூலின் சிற்ப வெளிப்பாடுதான் இந்த ராமப்பா ஆலயம்.  அதாவது ஒரு நூலில் சொன்ன வரையறைகளை வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ள எழுப்பிய சிற்ப களஞ்சியம் தான் இது. ஒரு புத்தகத்திற்கு சிற்ப வடிவம் என்பதே கிளர்ச்சியை அளிக்கிறது.

ஜாயப்பா… பேரினி கலை அழிந்துவிடும் என்று ஐயுற்றாரா? அதற்காகத்தான் அந்த நூலை எழுதி, தன் மாமாவின் மூலம் இவ்வளவு பெரிய ஆலயத்தை எழவைத்தாரா? அந்த நாட்டியம் 16வது நூற்றாண்டிற்கு பிறகு முற்றாகவே அழிந்து போனது. 1980 களில் நடராஜ ராமகிருஷ்ணா என்ற நாட்டிய கலைஞர் பேரினி நாட்டியத்தை மீள் உருவாக்கம் செய்தார். இந்த ஆலயத்தில் தவம் கிடந்து இங்குள்ள சிற்பங்களின் வடிவங்கள், அசைவுகளின் வழியே அதை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தார். அவர் வடிவமைத்த பேரினி சிவதாண்டவம் இன்றும் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்..

அன்புடன்
ராஜு

முந்தைய கட்டுரைஸ்ரீனிவாச கோபாலன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகீதை, அம்பேத்கர்