கல்வலைக்கோடுகள்,ஜெயராம் கடிதம்

கல்வலைக்கோடுகள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வழக்கம்போல இவ்வருடமும் தேசிய விருதுக்கு படைப்புகளை அனுப்ப எண்ணி பிறகு அது பற்றிய ஞாபகம் இல்லாமல் தவறிப்போனது. இப்போதைக்கு முழுமையாக கற்பதில் என்னை தயார்படுத்துவதில் தான் மனது ஊன்றியிருக்கிறது. விருதெல்லாம் சில இடங்களில் நமக்கு ஒரு அறிமுகத்தை அளித்து உதவும் என்றாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்பு தான். ஆனால் என் ஆசானே என் படைப்பைப் பற்றி எழுதி விட்டாரே:) ஒரு வேளை விருது எதாவது கிடைத்தாலும் அவையெல்லாம் அதற்குப் பல படிகள் கீழ் தான்.

சென்ற இரண்டு வருடங்களில் நான் பயணித்த புதுக்கோட்டை தஞ்சாவூர் மதுரை போன்ற தமிழ் நாட்டின் சில முக்கியமான கோவில்கள் அருங்காட்சியகங்கள் போன்றவற்றில் எடுத்த புகைப்படங்களை உபயோகப்படுத்தி தான் இந்த ஓவியங்களை வரைந்தேன். என் ஆசிரியரில் ஒருவரான மறைந்த மதிப்பிற்குரிய கலை இயக்குநர் பி. கிருஷ்ணமூர்த்தி தான் சொல்லிக் கொண்டேயிருப்பார். பெரிய தாள் நோட்டு தைத்து அதில் சிற்பங்களை வரைந்து பார்க்க வேண்டும் என்று. நிறைய பயணம் செய்ய சொல்வார். அவரது இளமைப் பருவத்தில் சிற்பங்களை தேடித் தேடி வரைந்தவர் அவர். கலை இயக்குநராக அவர் பணிபுரிந்த படங்கள்(பெருந்தச்சன், வைசாலி) கூட பெரும்பாலும் மரபு சார்ந்த படங்களாகவே இருக்கும்.

அவரது காலத்தைய கலைஞர்கள் பெரும்பாலானவர்கள் நிறைய வரைந்து தள்ளியவர்கள். ஆனால் இப்பயணத்தை அவரை சந்திப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே துவங்கியிருந்தேன். மாமல்லபுரத்தில் நேரடியாகச் சென்று ஒரு சில ஓவியங்கள் வரைந்தேன். ஆனால் அவைகள் பால்பாயின்ட் நீல பேனாவில் வரைந்தவை. பிறகு அது ஏனோ தடைபட்டது. புதுக்கோட்டை தஞ்சாவூர் போன்ற இடங்களில் நேரடியாக சென்று வரைந்தது சிலதை அவரிடம் காட்டியிருக்கிறேன். அவைகள் அவருக்கும் திருப்தி இல்லை. எனக்கும் பிடிக்கவில்லை. ஆட்கள் சுற்றி நின்று கொண்டிருக்கும் போது வரைவது பெரிய சிரமம். செல்பி எடுப்பவர்கள் முதல் ‘எனக்கு ஒரு டிராயிங் பண்ணிதரீங்களா’ என்று கேட்பவர்கள் வரை. முதலில் நன்றாக இருக்கும். நாம் ஒரு காட்சி பொருளாக மாறிக் கொண்டிருப்பதை அறியும் போதும் விடுமுறை எல்லாம் எடுத்து பயணம் செய்து வரும் போது பாதி நேரங்கள் இவற்றிற்கே செலவழிவதை உணரும் போதும் சலிப்பு வரும்.

சில மாதங்களுக்கு முன்பு கொரிய காமிக் ஓவியர் கிம் ஜங் கி(Kim Jung Gi) அவர்களின் காணொளி ஒன்றைப் பார்த்தேன். அதில் அவர் உபயோகித்த brush pen கவர்ந்தது. பேனா தான். மை ஊற்றி உபயோகப்படுத்தலாம். ஆனால் அதன் முனை தூரிகை. அதற்கென்ற பிரத்யேக மை. எல்லாம் கொஞ்சம் விலை அதிகம். ஆனால் உபயோகிக்க மிக இலகுவாக இருந்தது. கருப்பு மை மிகவும் பிடித்துவிட்டது.

அதாவது கரியை மேலும் எரித்து கரியாக்கி அதற்கு மேல் கருமையாக்க முடியாத அளவுக்கு கருமை கொண்ட மினுமினுப்பு கொண்ட கருப்பை தேடிக் கொண்டிருந்திருந்தேன் என்பதை இந்த மையை உபயோகப்படுத்த ஆரம்பித்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்.  சூனியத்திற்கு நிறம் இருந்தால் அது கருப்பாகத் தான் இருக்கும். சூனியத்திலிருந்து தான்  எல்லாம் பிறந்தது என்றால் இங்குள்ள அனைத்திலும் சூனியத்தின் அம்சம் கருமையின் அம்சம் இருக்கிறது என்று தான் பொருள். அந்த இருட்டும் சூனியமும் உறைந்திருக்கும் கருப்பு மையை அழகிய உருவங்களாக மாற்றி வெள்ளை தாள்களில் பதிந்து கொள்கிறேன். வெள்ளை நிறத்திற்கு மிகவும் பொருத்தமான நிறம் கருமை தான் போல. எந்த நிறத்தையும் விட பளிச்சென்ற வெள்ளை நிறத்தின் மேல் வரையப்படும் முதல் தர கருப்பு நிறம் தான் நம் கண்ணுக்கு முதலில் தெரியும். இதில்லாமல் உடனே கண்ணுக்குத் தெரியும் மற்றொரு  நிறமென்றால் அது கருமையின் உச்சத்தின் மேல் வரையப்படும் வெள்ளை நிறமாக இருக்க வேண்டும். வெள்ளைத் தாள்களென்று சொல்லலாம் ஆனால் தூய வெள்ளை நிறத் தாள் என்பது இல்லை. எந்த வெள்ளை தாளை துணியை கூர்ந்து கவனித்தாலும் அங்காங்கே கொஞ்சம் அழுக்கோ சிறுகறையோ படிந்திருப்பதை பார்க்க முடியும். அதை பார்க்கத் தவறும் போது தான் முழுக்க வெள்ளை நிறம் என்று சொல்லிக் கொள்கிறோம். அப்படியென்றால் கருமையில் கூட எங்கேயோ வெள்ளை நிறம் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். அதையும் கூர்ந்து கவனித்தால் தெரியும் போல.

வெண்முரசின் முதற்கனலில் வரும் ஒளி-இருள்(கருப்பு-வெள்ளை) சமநிலை பற்றிய விவாதத்தைப் பற்றி இங்கே சொல்ல வேண்டியுள்ளது. யாராவது என் ஓவியங்களை பார்த்து பிறகோ அல்லது என்னுடன் உரையாட ஆரம்பித்த பிறகோ உன் முதன்மை ஆசிரியர் யார்? என்ற நேரடியான கேள்வியைக் கேட்டால் ‘ஜெயமோகன்’ என்ற பெயரை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. கேட்பவர்கள் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் உடனே ‘அவர் பெரிய ஆர்டிஸ்டா? என்று திருப்பிக் கேட்பார்களென்றால். ‘இல்லை அவர் பெரிய எழுத்தாளர். நான் எழுத்தாளர் ஜெயமோகனைப் பற்றி சொல்கிறேன்’ என்று விளக்க வேண்டி இருக்கும். கேட்பவர்கள் கொஞ்சம் குழப்பமடைவார்கள்.  முதற்கனலிலிருந்து நான் பெற்ற ஒளி-இருள் சமநிலையைப் பற்றிய படிமமும் சேரும் போது தான் இந்த கருப்பு-வெள்ளை ஓவியங்கள் என் மனதிற்கு அணுக்கமாகின்றன என்பதை விளக்க முயல்வது கொஞ்சம் சிரமம் தான். பலரும் கலையென்பதை மேலோட்டமான பயிற்சிகளாகவும் அல்லது தொழில்நுட்பங்களாகவும் மட்டுமே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதைக் கற்றுக் கொள்வதற்கு இன்று  YouTube Videoகளே போதும். கலை முதலில் கலைஞனின் மனதிலிருந்து அவன் கனவுகளிலிருந்தும் ஆழ் உள்ளத்திலிருந்தும் தான் தோன்றும். அவற்றை சார்ந்த பயிற்சிகளுக்குத் தான் சிறந்த இலக்கிய படைப்புகளும் அதற்கு மேல் பேராசான்களின் அருகாமையும் தேவைப்படுகிறது. அக்கனவையும் அகத்தையும் வெளிப்படுத்துவதற்கே தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி.

இந்தக் கட்டுரையிலேயே நீங்கள் குறிப்பிட்ட சில உவமைகளைக் கொண்டே(1. கோட்டோவியங்களாகப் பார்க்கையில் அவை மெல்ல நெளிந்தாடுவதாக, கருந்தழலென கரியமலரிதழென ஒளியும் மென்மையும் கொண்டுவிடுவதாக எண்ணிக்கொள்கிறேன், 2. நெளியும் திரைச்சீலையில் வரையப்பட்டவை போல நடிக்கின்றன)என்னால் பல பாய்ச்சல்களை நிகழ்த்த முடியும். நீங்கள் குறிப்பிட்ட என் வரைகளில் இருக்கும் ஆவேசத்தை மிகச் சிலரே குறிப்பிட்டிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னால் நான் சந்தித்த கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நாடக நடிகர் என் ஓவியத்தில் தற்காப்பு கலை வீரர்களின் உடல்மொழிகள் உள்ளதாகக் குறிப்பிட்டார். அவர் அதை துல்லியமாக புரிந்து கொள்ள காரணம் அப்போது கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆசானிடம் அவர் களரி கற்றுக் கொண்டிருந்தார் என்பதே. டாய்ஜி போன்ற கலைகளும் பயின்றிருப்பதாகச் சொன்னார்.

நான் பத்து வருடங்கள் முறையாக தற்காப்புக் கலை(கராத்தே, பிறகு டாய்ஜி) பயின்றவன். கல்லூரி காலத்தில் பெரிய தாள்களின் மேல் பென்சிலைப் பிடித்து குறுக்கும் நெடுக்குமாகவும் வட்டமாகவும் வேகமாகவும் கையை அசைத்து வரைவது போன்ற தற்காப்புக் கலையையும் ஓவியத்தையும் இணைத்து சில விசித்திர பயிற்சிகளையெல்லாம் செய்து பார்த்திருக்கிறேன். தோள்பட்டை வலியால் பிறகு தீவிர பயிற்சிகள் செய்வதில்லை. மிதமான உடற்பயிற்சிகள் மட்டும் தொடர்கிறேன். பிறகு கொஞ்சம் நடனமும் பிடிக்கும். அதனாலேயே போருக்கு போகும் ஆயத்தத்தில் இருக்கும் வாள் வீசும் குதிரையில் பாயும் நடனமிடும் சிற்பங்கள் மிகவும் பிடிக்கும். அந்த அசைவின் மேல் இருக்கும் பெரிய பற்றே வரைகளில் வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன். காமம் காதலாகவும் பிறகு தூய அன்பாகவும் பரிணமிப்பதைப் போல வன்முறை வீரமாகவும் பிறகு கலையாகவும் மாறுகிறது என்று வைத்துக் கொள்ளலாம். என் மாஸ்டர் விஜயன் சொல்வார் கராத்தே என்பது அடிதடிக் கலையோ தற்காப்புக் கலையோ கூட அல்ல முதலில் அது ஒரு கலை என்று. தற்காப்பு என்பது கூட அவருக்கு இரண்டாம் பட்சம் தான்.

முதலில் இந்திய கலைகளை கற்றுப்புரிந்து கொள்ளும் நோக்கத்துடன் நம் சிற்பங்களின் வடிவங்களை நேர்த்திகளை வரைந்து பார்க்க வேண்டும் என்று தான் ஆரம்பித்தேன். நான் ஏற்கனவே எனக்குப் பிடித்த கோணங்களில் எடுத்து வைத்திருந்த புகைப்படங்களைப் பார்த்து இவைகளை வரைந்தேன். பிறகு அதில் மூழ்கிப் போய், அதைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இருந்து அதை எனக்குப் பிடித்தது போல வரைந்து வெளிப்படுத்தி மட்டுமே கொள்வது என்ற இடத்திற்கு நகர்ந்தேன். அத்தருணத்தில் நான் தேர்ந்தெடுக்கும் புகைப்படத்தில் உள்ள சிற்பங்களின் அடிப்படை வடிவம் இருக்கும். ஆனால் அந்நேரத்தில் நான் எப்படி கிறுக்க விரும்புகிறேனோ அந்த தன்மை இருக்கும். எல்லா ஓவியங்களும் நிஜ சிற்பத்தை விட கருப்பாக்கப்பட்டிருக்கும். எந்த ஓவியமும் தாளுக்குள் சரியாகப் பொருந்தாமல் வெளியே நிற்கும். சிலவற்றின் முகம் மட்டும் தான் தெரியும். சில அரையுடல் வரை. சில சிற்பத்திற்கு முகம் அழகு சிலவற்றிற்கு கையில் ஆயுதம் வைத்திருக்கும் அதன் உயிர்ப்பு சிலவற்றிற்கு நடனமாடும் போது உருவாகும் அதன் வீச்சு. எது என்னை அப்போது கவர்கிறதோ அது. வரைந்த பிறகு மறுபடியும் எனக்குப் பிடித்த கோணங்களில் புகைப்படம் எடுத்து அதன் ஒளி-நிழல் தன்மையை மேலும் அதிகப்படுத்துவேன். அதாவது புகைப்படம்-ஓவியம்-புகைப்படம் என்ற வடிவம்.

நான் பெரும்பாலான சமகால ஓவியர்களைப் போல கணினி wacom tablet போன்றவைகள் உபயோகித்து டிஜிட்டலிலும் வரைபவன். அது எனக்கு மிகவும் பிடித்தது கூட. நிறைய வசதிகள் உள்ளன. ஆனாலும் கையில் தொட்டு வரைவதில் ஒரு வித இன்பம் இருக்கிறது.எங்களுக்கு கல்லூரியில் வரைவதற்கு ‘Model’ வைப்பார்கள். நிஜ மனித உருவங்களை அப்படியே பார்த்து வரைவதை விட கனவாக ஆக்கப்பட்ட இந்த வடிவங்களை வரைவது மிகவும் பிடித்திருக்கிறது.

இந்த சிற்பங்களை வரையும் போது அதை வடித்த சிற்பிகளை மானசீகமாக வியந்து வணங்கிக் கொண்டே இருந்தேன். கல்லில் வடிப்பதற்கு எவ்வளவு அர்பணிப்பும் நேரமும் தேவைப் பட்டிருக்கும். மாறாக நாம் ஒன்று முதல் நான்கு மணி நேரத்திற்குள் ஒன்றை வரைந்து முடித்து விடுகிறோம் என்று நினைக்கும் போது கொஞ்சம் பணிவு ஏற்படுகிறது. அந்த அர்ப்பணிப்பில் பாதி பங்கையாவது நாம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய சிற்பியின் உழைப்பில் இருபது சதவீதத்தை செலுத்தினாலே உலகின் பெரிய கலைஞன் ஆகி விடலாம். இது போன்ற பெரும் படைப்புகள் யாவும் ஸ்தூல வடிவ வெண்முரசு போல நின்று கொண்டிருக்கிறது.

எங்கள் அலுவலகத்தில் இருந்து சேவைச் செயல்பாடுகளில் ஈடுபடும் Outreach Volunteering-ன் பகுதியாக சென்னை பசுமைவழிச் சாலை(Greenways road) ரயில் நிலையத்தின் சுவர்களில் நாங்கள் பத்து பதினைந்து பேர் சேர்ந்து ஓவியங்கள் வரைந்து கொடுத்தோம். மொத்தச் செலவும் அலுவலகம் ஏற்றுக் கொண்டது. உழைப்பு எங்களது. இரு வாரங்கள் தொடர்ந்து வார இறுதி நாட்களை முழுமையாகச் செலவழித்து நின்று கொண்டும் ஏணியில் ஏறிக்கொண்டும் வரைந்து முடித்தோம். என் அலுவலகக்கிளை பக்கத்தில் என்பதால் இந்த ரயில் நிலையத்தில் இறங்கித் தான் நான் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாட்களும் நாங்கள் வரைந்த ஓவியத்தின் மேல் யாராவது புதிதாகக் கிறுக்கி வைத்திருப்பதை பார்த்துக் கொண்டேயிருக்கவேண்டியிருந்தது. ‘ஐ லவ் யு’ முதல் கெட்ட வார்த்தைகள் வரை. இதற்கென்றே எடுத்து வந்த பெரிய பிரஷால் போட்டக் கோடு என்று சந்தேகிக்கும் அளவிற்கு தடிமனான கோடுகளைக் கொண்டே கூட கிறுக்கி இருந்தார்கள் அதன் மேல். கோவில்களிலும் புராதன படைப்புகளிலும் கிறுக்குபவர்கள் இவர்கள் தான்.

சிறு வயதில் இயற்கைகாட்சியை வரைந்து ரசித்தவனுக்கு சுற்றுலா போகும் காட்டை பாழ்படுத்தும் மனநிலை வராது என்று நீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல நம் சிற்பங்களை கோவில் பிரகாரங்களை சிறுவயதில் குழந்தைகளுக்கு வரையக் கொடுத்துப் பழக்கினால் அக்குழந்தைகள் அவற்றின் அழகை ரசிக்கத் தொடங்கும். நாம் ரசிப்பவற்றை நம்மால் அழிக்க மனம் வராது. அவர்கள் வளரும் போது நம் அரும்படைப்புகளை காப்பவர்களாகவும் மாறுவார்கள். ஒவ்வொரு பெரும் கோவில்களை மையமாகக் கொண்டே அக்கோவில்களின் கலையமைப்புகளை சிற்பங்களை பார்த்து வரைவதற்கான பயிற்சி வகுப்புகளைக் கூட அவ்வப்போது நடத்தலாம். அது கோவில்கள் வழிபாட்டிடம் மட்டுமல்ல கலைக் களஞ்சியங்கள் கூட என்ற எண்ணம் மக்களிடம் வலுப்பெற உதவும். நான் என்னிடம் ஓவியம் கற்கும் சில குழந்தைகளுக்கு பழைய சிற்பம் மற்றும் ஓவியங்கள் வடிவமைப்புகளை அவ்வப்போது வரையக் கொடுக்கிறேன்.

பத்து வருடத்திற்கு முன்பு கவின் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது இந்திய சுற்றுப் பயணத்தின் பகுதியாக பேலூர் சென்றோம். அங்கே பிரகாரத்தில் இருக்கும் குளித்துவிட்டு ஈரந்தலையுடன் நிற்கும் ஒரு பெண்ணின் சிற்பத்தை எங்கள் வழிகாட்டி சுட்டிக் காட்டி விளக்கினார். தலைமுடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நீர்த்துளியைக் கூட நுணுக்கமாக சிற்பி வடித்திருப்பார். இதை அவர் சொல்லி முடித்தவுடன் நாங்கள் எண்பது பேர் கொண்ட கலைக்கல்லூரி கும்பல் நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்த சிற்பிக்கு ஆரவாரம் செய்து கைதட்டினோம். எங்கள் கல்லூரி நாட்களில் மட்டுமே கிடைக்கக் கூடிய சில அரிதான அனுபவங்களில் ஒன்று அது. எங்களில் பெரும்பாலானவர்கள் பெரிய கலைக் குடும்ப பின்னணி கொண்டவர்கள் அல்ல. இரு வருடங்களாக  தொடர்ந்து அடிப்படையான கலைக் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள். தொடர்ந்து மற்றவர்கள் படைப்புகள் செய்வதைப் பார்க்கிறோம். நாமும் செய்து பார்க்கிறோம். அச்சூழலில் இருக்கிறோம். அதனால் அதன் அருமை தெரிய வந்ததால் தான் எங்களால் அப்படி கைதட்ட முடிந்தது. மனநிலை மாற்றம் என்பது எளிதில் நிகழும் என்று நினைக்கிறேன்.

வெள்ளை தாள்களின் மேல் வரையப்படும் கருப்புக் கோடுகளை இந்த இரு நிறக்கலவையை இப்போது மிகவும் விரும்புகிறேன். அதிலேயே மூழ்கி இருக்க பிடித்திருக்கிறது. அதனாலேயே வெண்முரசிலிருந்து நான் பெற்ற இந்த ஒளி-இருள் சமநிலை படிமமும் என்னில் மேலும் வளருமென்று நினைக்கிறேன். இந்தியா முழுவதும் மறுபடியும் சுற்றி பல கோவில்களை கட்டிடங்களை சிற்பங்களை எல்லாம் பார்க்க வேண்டும். இது எப்படியெல்லாம் என்னில் மாறி வரும் என்று தெரியவில்லை… ஆனால் எப்படியோ எங்கேயோ என் வருங்காலப் படைப்புகளில் எதிரொலிக்கும் என்றே நினைக்கிறேன்….

பணிவன்புடன்,
ஜெயராம்

முந்தைய கட்டுரைஜோனாதன் லிவிங்ஸ்டன் ஸீகல்
அடுத்த கட்டுரையசோதை – அருண்மொழிநங்கை