கர்ணனும் பீஷ்மரும்- கடிதம்

இனி நான் உறங்கட்டும்

ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் பி.கே.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘இனி நான் உறங்கலாமா’ நாவலை படித்தேன். அந்த நாவலில் என்னை கவர்ந்த ஒரு பகுதி கர்ணன் பீஷ்மரின் படுகளத்துக்குச் சென்று அவரைச் சந்திக்கும் இடம். உருக்கமான இடம் அது. பத்தாவது நாளோடு முடிந்த திசைதேர்வெள்ளம் கூட இப்படி ஒரு  நாடகத்தனமான நிகழ்வில் முடியும் என்று எதிர்பார்த்தேன். துண்டிகன் அவன் சடலம் எரிபட வரிசையில் காத்து நிற்கும் முடிவு வேறு தளத்தில் இருந்தது. காலத்தின் நீளத்தை போரின் அபத்தத்தை உணர்த்தும் விதமாய்.  டால்ஸ்டாய் நாவலில் வரக்கூடிய நிகழ்வு போல. நாடக உச்சங்கள் உன்னதங்கள் போருக்கான தர்க்கங்கள் சால்ஜாப்புகள் எல்லாம் பின்னால் சென்றுவிட்டது. போர் என்று வந்துவிட்டால் அர்த்தமில்லாத மரணமும், இயந்திரத்தனமான மறுகரை எய்தலும் தானா. விதி குறித்த பாதையில் சென்று தலை குப்பிற விழுவதைத்தவிர வேறு வழியில்லையா, போன்ற கேள்விகள் மட்டும் சோர்வுடன் எஞ்சியது.

வெண்முரசில் அற்புதமாக வந்திருக்கும் பாத்திரம் சிகண்டி. மற்ற மறுஆக்கங்களில் சின்ன பாத்திரமாகவே எழுதியிருப்பார்கள். அம்பையின் மறுவடிவமாக. இங்கு அம்பைக்கும் பீஷ்மருக்கும் மகன் என்ற உருவகம் அந்த பாத்திரத்துக்கு அசாத்திய விரிவை அளிக்கிறது. இறுதியில் கங்கையும் அம்பையும் பீஷ்மரை தாயும் மருமகளுமாகத் தாங்கிக் காவல் நிற்க சிகண்டி மட்டும் தன்னந்தனியாக சுடுகாட்டில் நிற்கும் இடம் நிலைகுலைத்துவிட்டது. இத்தனை நாள் வஞ்சமும் இவ்வளவுதானா என்று.

வெண்முரசு தளத்தில் ‘சிகண்டி’, ‘பீஷ்மர்’ என்று பாத்திரப்பெயர்களை தேடினால் அவர்கள் தோன்றக்கூடிய அத்தியாயங்கள் வரிசையாக கிடைக்கின்றன. அவற்றை மட்டும் சேர்த்து படித்தால் ஒரு தனி நாவலாகவே உருவாகி வருகிறது. நேற்று அப்படி பீஷ்மரின் கதையை மட்டும் முதற்கனல் முதல் படித்துக்கொண்டு வந்தேன். பீஷ்மர் எவ்வளவு பெரிய பாத்திரமாக பொருள்கொள்கிறார் என்று நினைத்துப்பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. இந்த புதினத்தை எங்கள் மொழியில் எழுதிக்கொண்டிருப்பதற்காக மிக்க நன்றி சார்.

அன்புடன்

பாலகுமார்

அன்புள்ள பாலகுமார்

ஒவ்வொரு ஆசிரியரும் தொன்மங்களை மறுபுனைவாக்கம் செய்யும்போது அவர்களுடைய வாழ்க்கைத் தரிசனத்துக்கு ஏற்ப அவை மறுவடிவம் கொள்கின்றன. அவ்வகையில் பார்த்தால் பி.கே.பாலகிருஷ்ணனின் நாவல் ஓர் இருத்தலியல் நாவல். வெண்முரசில் அப்படி ஒரு ஐரோப்பிய நோக்கு இல்லை. அது ஒட்டுமொத்தப் பார்வைக்காக முயல்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைமூன்றாவது தனிமை
அடுத்த கட்டுரைஅரவிந்த் கண் மருத்துவக் குழுமம் – ஒரு கடிதம்